நேர்மறையாக வாழும் கலை
மவ்லானா, வஹீதுத்தீன் கான் ரஹ்மதுல்லாஹி அலைஹி
நவீன கால மனிதன் ஒரு புதிய காட்சியைக் காண்கிறான். ஒரு அமெரிக்கப் பத்திரிகை இதை ‘மதத்துக்குத் திரும்பதல்’ என்று பெயரிட்டுள்ளது. எல்லா மதத்துக்குரிய வழிபாட்டுத்தலங்களும் மக்களால் நிரம்பி வழிகின்றன. எல்லா நாடுகளிலும் இதுவே நடக்கிறது.
எப்படி இதை விளக்குவது? ஏனெனில், உண்மையான மத உணர்வு எங்கும் இல்லை. மதத்தின் அம்சங்களான அன்பு, சகிப்பத்தன்மை, அமைதி, நேர்மை மற்றும் பிறமனித விழுமியங்கள் சுத்தமாக இல்லாமல் போய்விட்டன.
‘மதத்துக்குத் திரும்பியிருக்கும்’ நிகழ்வானது தீவிரமான அலசலுக்கு உள்ளாக்கப்பட வேண்டிய ஒன்று. ஜப்பானிய பத்திரிகையாளர் ஒருவரை நான் சந்தித்தபோது அவரிடம் ‘உங்கள் நாடுதான் மிகவும் வளர்ச்சியடைந்த நாடு’ என்று கூறினேன். ஆனால் இதனால் அவர் மகிழ்ச்சியடைந்ததாகத் தெரியவில்லை.
ஏன்? என்று கேட்டபோது, ‘ஜப்பானின் வளர்ந்த நாகரீகம் என்பது ஒரு வர்த்தக நாகரீகம் தான்! மனிதன் பொருட்களைவிட உயர்வானவன் என்று உங்களுக்குத் தெரியும். அதுமட்டுமல்ல, வர்த்தக கலாச்சாரம் மட்டும் ஒரு மனிதனை மகிழ்ச்சியாக வைத்திருக்க முடியாது!’ என்று வருத்தத்துடன் கூறினார்.
நவீன கால மனிதன் மகிழ்ச்சியை அடைவதில் தோற்றுப்போய் விட்டான் என்பது உண்மை. அவன் தொடர்ந்த அழுத்தத்தில் வாழ்கிறான். நாகரீக வளர்ச்சியும், உலக வசதிகளும் மனிதனின் ஆன்ம தேவைகளை பூர்த்தி செய்யத் தவறிவிட்டன. மகிழ்ச்சியைத் தேடுவதுதான் மனிதனின் முக்கியத் தேடல். ஆனால், அது பூர்த்தி செய்யப்படாமலேயே இருக்கிறது. லவ்ஹீக (உலக) வாழ்க்கை மீது ஏற்பட்ட வெறுப்பினால்தான் தற்போது ஏற்பட்டிருக்கும் மத உணர்வு தோன்றியுள்ளது என்பதை என்னுடைய அனுபவம் எனக்கு உணர்த்துகிறது. இதற்கும் ஆன்மீக ரீதியான புரிதலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
நவீன தொழிற்புரட்சி உருவான ஆரம்பக் கட்டத்தில் மனிதன் மகிழ்ச்சியாக இருந்தான். உலகில் முக்கியமான மகிழ்ச்சியைத் தேடும் கனவை பின்தொடர்வதாக அவன் உணர்ந்தான். ஆனால், நடந்ததோ வேறு! நிறைய பொருள் ரீதியான வளர்ச்சியை மனிதன் அடைய அடைய அவனுக்குப் பிரச்சனைகள் அதிகரித்தன. குடும்பம் சிதைந்தது. வேலை நிலையற்றுப் போனது. தொழில்துறை பிரச்சனைகள், காற்று மாசுபாடு, உலக வெப்பமயமாதல், பொருளாதார நெருக்கடி, சமூகப் பிரச்சனைகள், போர் போன்றவையே கிட்டின.
கனடாவைச் சேர்ந்த ஓர் இளைஞரைச் சந்தித்தபோது, அவர் தனக்கு நல்ல வேலையும், அழகான வீடும் அங்கு இருப்பதாகக் கூறினார். ஆனால், ஏன் தன் நாட்டைவிட்டு இந்தியாவுக்கு வந்து கைத்தறி ஆடை அணிந்து வெறுங்காலில் நடக்க வேண்டும் என்று கேட்டபோது, ‘அங்கு நான் உடல்ரீதியாக வசதியாக உள்ளேன். ஆனால், இங்கு ஆன்மீகரீதியாக நான் வசதியாக இருக்கிறேன்!’ என்றார். ஆனால், சிலகாலத்தில் அந்த வெள்ளைக்கார இளைஞர் மீணடும் எரிச்சலில் ஆழ்ந்துவிட்டார் என்பதைக் கண்டேன்.
இன்னொரு சுவாரசியமான சம்பவம். 1893 இல் சுவாமி விவேகானந்தர் சிகாகோவுக்குச் சென்றிருந்தபோது ஒருநாள் தைக்கப்படாத துணி அணிந்து கொண்டு தெருவில் நடந்து கொண்டிருந்தார். ஒரு அமெரிக்கப் பெண்மணி இவரைப் பார்த்தவுடன் தனது கணவரிடம், ‘இவர் நாகரீகமான ஜென்டில்மேன் போல தெரியவில்லை’ என்று கூறினார். இதைக் காதில் வாங்கிய சுவாமி விவேகானந்தர் அவரிடம் சென்று, ‘மேடம்! உங்கள் நாட்டில் தையல்காரர்தான் ஒரு மனிதனை ஜென்டில்மேன் ஆக்குகிறார். ஆனால், எங்கள் நாட்டிலோ பண்புகள் தான் ஒரு மனிதனை ஜென்டில்மேன் ஆக்குகிறது’ என்று கூறினார்.
நான் அமெரிக்கா சென்றிருந்தபோது ஒரு பேராசிரியரிடம் இதைக் கூறினேன்.
‘ஆமாம்! ஆனால் இதெல்லாம் பழைய காலத்தில். இப்போது இந்தியா அந்த பண்புகளை ஏற்றுமதி செய்கிறது. உள்நாட்டில் அதைப் பயன்படுத்துவதில்லை!’ என்று பதில் அளித்தார்.
மதம் என்பது என்ன? அது நேர்மறையாக வாழும் ஒரு கலை. எதிர்மறையான அனுபவங்களை நேர்மறையான அனுபவங்களாக மாற்ற மனிதன் முயற்சி செய்ய வேண்டும். இதுதான் அவன் நீண்டகாலமாகத் தேடிக்கொண்டிருக்கும் அமைதியையும், திருப்தியையும் தரமுடியும். (நன்றி: ”சிந்தனை சரம்” ஏப்ரல் 2009 இல் வெளியான கட்டுரை)