விலை மதிப்பற்றவர்கள் பெண்கள்
ஃபாத்திமுத்து ஸித்தீக்
[ ஒரு சமூகத்தின் உயர்வும் தாழ்வும் பெண்களுக்கு அளிக்கப்படும் கவுரவத்தையும், கண்ணியத்தையும் பொறுத்தே அமைகிறது. ஷரீஅத் சட்டம் பின்பற்றப்படும் இஸ்லாமிய நாடுகளில் பெண்கள் தலைநிமிர்ந்து நடக்கிறார்கள்.
எந்த மணமகன் அதிக மஹர் தந்து மணமுடிக்கிறானோ அவனைத் தேர்ந்தெடுக்கும் கவுரவம் பெண்களுக்கு இருக்கிறது அங்கு. இதனால் மனைவிமார்களை காலமெல்லாம் பூப்போன்றும், கண்ணின் இமையாகவும் வைத்து வாழ்க்கை நடத்துகிறார்கள். ]
ஆயிரமாயிரம் ஏழைப்பெண்கள் நம் சமூகத்தில் இன்று கண்ணீரோடும், எதிர்பார்ப்புகளோடும் முதிர்கன்னிகளாய் உள்ளனர். கல்வியறிவும், உலக ஞானமும் அதிகமில்லாதிருந்த காலத்தில் முதிர்கன்னிகள் இரண்டாந்தாரம், மூன்றாந்தாரம் என்று வயதானவர்களுக்கு வாழ்க்கைப்பட்டாலும் பெரும்பாலும் அவலவழ்க்கையே நடத்தினார்கள்.
விழிப்புணர்ச்சிப் பெற்ற இன்றைய படித்த பெண்கள் அதை விரும்புவதில்லை. இதற்கு முக்கிய காரணம், பெண்ணை மணக்க பெருவிலை கேட்கும் மணமகனும், அவனைச் சேர்ந்தவர்களும், அவர்களுக்குத் துணை போகும் சமூகமும் அதன் தலைவர்களுமே!
இறைக்கட்டளை சரிவரப் புரிந்தும் அவற்றை அமல்படுத்த கட்டாயப்படுத்தாத மார்க்க அறிஞர்களும் இதற்கு தீர்வளிக்கவில்லை சரியான விதத்தில்!
பெண்ணுக்கு பெருமையளிக்கும் விதமாக மணக்கொடை (மஹர்) அளித்து மணம் முடிக்கச்சொன்ன ஷரீஅத் சட்டநெறிமுறையிலிருந்து வெகுதூரம் விலகி சகோதர இனத்தவரின் பழக்கவழக்கங்களை காப்பியடிப்பதாலும், பேராசைக் குணத்தாலும் பெருநஷ்டப்பட்டு நிற்கின்றார்கள்.
ஏழை மக்களும், நடுத்தர வர்க்கத்தினரும்தான் வரதட்சணைக் கொடுமைக்கு அதிகமாக ஆளாகிறார்கள். பணக்காரர்களுக்கு பிரச்சனையேதும் இருக்காது என்றுகூட நினைக்க முடியாது. ஏழைகளுக்கு செலவு ஆயிரக்கணக்கிலும், மத்தியவர்க்கத்துக்கு இலட்சக்கணக்கிலும் என்றால் உயர்மட்டத்தவருக்கு கோடியில்!
அதேபோன்றுதான் அடிமட்டத்தில் சைக்கிள், டி.வி.எஸ், கார் என்றால் அதற்கு மேல் வோல்டாஸ், ஒபெல், மெர்ஸிடஸ், கான்டெஸா என்று படிப்படியாக ஏறும். எது எப்படியிருந்தாலும், வரதட்சணை என்பது அடிப்படையில் பெண்களுக்கு எதிரான பெருங்கொடுமைதான். அநீதிதான் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
‘வரதட்சணை என்பது பெண்களுக்கு இழைக்கப்படும் ஒருவகையான வன்முறை’ என்று கூறும் தேசீய மனித உரிமைக் கமிஷனின் உறுப்பினர் ஒருவர், வரதட்சணை பாக்கிற்காக உயிரோடு எரிக்கப்படும் கொடுமைக்கு பெண்கள் ஆளாகும் அனாச்சாரம் உலகத்தில் வேறு எங்குமே கிடையாது என்கிறார்.
சமீபத்தில் அகில இந்தியக் குடியரசுப் பெண்கள் அமைப்பும், பெண்கள் முன்னேற்றம், வளர்ச்சி சம்பந்தப்பட்ட அமைப்பும் சேர்ந்து நாடு முழுவதுமாக பத்தாயிரம் குடும்பங்களைத் தெரிவு செய்து ஆய்வு நடத்தினார்கள். அப்போது வரதட்சணை சமூகத்துக்கு சமூகம் மாறுபடுவதை கண்டார்கள்.
இந்தியாவிலேயே மிக அதிகமான அளவில் வரதட்சணைக் கொலைகள் நடப்பது கர்னாடகா மாநிலத்தில் தான். இங்கு மாதத்தில் மரணிக்கும் ஐம்பது பெண்களில் 22 பேர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். 13 பேர் ஸ்டவ் வெடித்தும், 10 பேர் வேறு ஏதாவது காரணத்துக்காகவும், 5 பேர் வரதட்சணைக்காகவும் கொலை செய்யப்படுவதாக பெண்கள் அமைப்பு ஒன்று கூறுகிறது. (இது 2003 ஆம் வருட கணக்கு, 2010 இல்…. !)
நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பெண்களே ஒரு சமுதாயத்தின் கண்கள் என்ற அளவில் பெரும் அக்கறையெடுத்தார்கள். பெண்கள் சமூக பாதுகாப்பு பெறக்கருதி தாராளமாக மணக்கொடை (மஹர்) தந்து மணம் புரியும்படி வலியுறுத்தினார்கள். இதையே இஸ்லாமிய சட்டமாகவும் பிரகடனம் செய்தார்கள்.
‘இந்த ஷரீஅத் சட்டம் பின்பற்றப்படும் இஸ்லாமிய நாடுகளில் பெண்கள் தலைநிமிர்ந்து நடக்கிறார்கள். எந்த மணமகன் அதிக மஹர் தந்து மணமுடிக்கிறானோ அவனைத் தேர்ந்தெடுக்கும் கவுரவம் பெண்களுக்கு இருக்கிறது அங்கு. இதனால் மனைவிமார்களை காலமெல்லாம் பூப்போன்றும், கண்ணின் இமையாகவும் வைத்து வாழ்க்கை நடத்துகிறார்கள். இதுவே இஸ்லாமியத்திருமணம், அழகிய குடும்ப வாழ்க்கை.
ஒரு சமூகத்தின் உயர்வும் தாழ்வும் பெண்களுக்கு அளிக்கப்படும் கவுரவத்தையும், கண்ணியத்தையும் பொறுத்தே அமைகிறது. அதனால், வீட்டுக்கு வீடு, தெருவுக்குத் தெரு, ஊருக்கு ஊர் – எனும் அளவில் கைக்கூலி வாங்க மாட்டோம், கைக்கூலி தரமாட்டோம் என்று கட்டுப்பாடாக செயல்பட வேண்டும். இந்த சமூக நோயை வேரோடு ஒழிக்க அனைவரும் பாடுபட வேண்டும்.