கலப்படமற்ற அன்பு
மவ்லவி, S. லியாகத் அலீ மன்பஈ
[ எல்லா அன்பிலும் சுயநலம் உண்டு. உலகில் எத்தனை வகையான நேசம் இருப்பினும் அவற்றிற்கெல்லாம் மிக உயர்ந்தது அல்லாஹ்வுக்காக நேசிப்பதுதான். ஏனெனில், இந்த நட்பில் மட்டும்தான் சுயநலம் என்ற கலப்படம் இருக்காது.
எவ்வித உலகியல் நோக்கமுமின்றி நம்மைப் படைத்திட்ட அல்லாஹ்வுக்காக மட்டுமே யாரையும் நேசிப்பது – பெற்றோரையும் மனைவி மக்களையும் உற்றாரையும், உறவினரையும் மட்டுமின்றி மனித இனம் முழுவதையும், பிற உயிரினங்கள் அனைத்தையும்கூட இந்த வரையறைக்குள் நாம் கொண்டு வந்துவிட்டால், அது கலப்படமற்ற அன்பாக மிளிரும்.]
உலகில் மனித இனம் மட்டுமல்ல. எல்லா உயிரினங்களும் ஒன்றையொன்று நேசிப்பதும், பாசத்தைப் பகிந்து கொள்வதும், காதலில் தோய்ந்து கனிந்துருகுவதும் முற்றிலும் இயல்பான விஷயங்களே.
பெற்றோர் தம் பிள்ளைகளிடம் காட்டும் பாசமும், பரிவும் சகோதர சகோதரிகளிடையே காணப்படும் இரத்த பாசமும், கணவன் மனைவியிடையே தோன்றும் பந்த பாசமும் வியப்புக்குரியவை அல்ல.
ஆனால், இவை போன்ற எந்த உறவுமின்றி – முதலாளி, தொழிலாளி என்பது போல் பொருள் ரீதியான தொடர்புமின்றி நன்றியுணர்வுமின்றி, இப்படிப்பட்ட எந்த காரணமும் காரியமும் இல்லாமல் அல்லாஹ்வுக்காக மட்டுமே ஒருவர் இன்னொருவரை நேசிப்பது எவ்வளவு உயர்வானது என்பதை எடுத்துக்காட்டுகின்ற முறையில் ஏந்தல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இப்படியொரு நிகழ்ச்சியை இயம்பினார்கள். இந்த செய்தியை அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்க, ஸஹீஹ் முஸ்லிமில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
‘ஒருவர் தன் ஊரிலிருந்து புறப்பட்டு இன்னொரு கிராமத்ததை நோக்கிச் சென்றார். அங்கே வாழும் தன் நண்பரைப் பார்க்கவே அவரது பயணம் துவங்கியது. அவர் வரும் வழியில் குறிப்பிட்ட ஓர் இடத்தில் ஒரு மலக்கை (மனித வடிவத்திலே) காத்திருக்குமாறு அல்லாஹ் உத்தரவிட்டான். அதன்படி அந்த வானவர்; தயாராக இருந்தார். இதோ அவரும் அருகே வந்து சேர்ந்தார். அவரின் பக்கத்திலே போய் இவர் கேட்கிறார்.
‘நண்பரே! எங்கே இந்தப் பக்கம்?’
‘அதோ அந்த கிராமம் நோக்கிச் செல்கிறேன்;’ – வந்தவர் சொல்கிறார்.
‘அங்கே உமக்கு என்ன வேலை?’
‘ஒன்றுமில்லை! எனது நண்பர் அங்கே வாழ்கிறார், அவரைச் சந்திக்க வேண்டும், அதற்காகத்தான்!’
‘நண்பர் என்றால் எந்த அடிப்படையில் அவரிடத்தில் நட்பு கொண்டிருக்கின்றீர்கள்? உமக்கு அவரிடம் ஏNதுனும் உதவி – உபகாரம் இருக்கிறதா? அவர் உமக்கு ஏதும் கடன் பட்டிருக்கிறாரா? அதைக் கேட்கப்போகின்றீரா?’
‘அதெல்லாம் ஒன்றமில்லை. எங்களுக்கிடையே எந்த உபகாரமும் ஒத்தாசையும் இல்லை. எனினும் அல்லாஹ்வுக்காக அவரை நான் நேசிக்கின்றேன். அவரும் என்னை அப்படித்தான் நேசிக்கின்றார்.’
இப்பொழுது மனித ரூபத்தில் இருக்கும் அந்த வானவர் சொன்னார், “எந்த அல்லாஹ்வுக்காக மட்டுமே நீர் அவரை நேசிக்கின்றீரோ அந்த அல்லாஹ் உம்மை நேசிக்கின்றான்’ என்ற நற்செய்தியை உமக்குச் சொல்வதற்காகவே வல்ல ரஹ்மான் இங்கு என்னை அனுப்பியுள்ளான். அல்லாஹ்வின் அன்பு உம்மீது மிக வலுவானதாகவும், அபரிமிதமாகவும் இருக்கிறது” என்றார்.
இதில் நாம் அறிந்து கொள்ள வேண்டிய உண்மைகள் பல உள்ளன.
எல்லா அன்பிலும் சுயநலம் உண்டு. உலகில் எத்தனை வகையான நேசம் இருப்பினும் அவற்றிற்கெல்லாம் மிக உயர்ந்தது அல்லாஹ்வுக்காக நேசிப்பதுதான். ஏனெனில், இந்த நட்பில் மட்டும்தான் சுயநலம் என்ற கலப்படம் இருக்காது.
பெற்றோர் தம் மக்களை நேசிப்பது உண்மைதான். அந்த பாசத்தின் பின்னணியில் தங்கள் முதுமையில் அவர்கள் நம்மைக் காப்பாற்றுவார்கள் என்ற எதிர்பார்ப்பு மறைந்திருக்கிறது. அவர்களுக்குத் திருமணம் செய்து வைத்தபின் பாசம் முன்பிருந்ததைவிட குறையவே செய்கிறது. ஏனெனில் பிள்ளைகளுக்கு பாசத்தை பங்குபோட இன்னொரு புது உறவு கிடைத்துவிடுகிறது.
மனைவியின்மீது கணவனின் நேசமும், கணவன்மீது மனைவியின் நேசமும் இதுபோன்றதுதான். தன்னையன்றி வேறொருவன்மீது தன் மனைவி அன்பு செலுத்துவதாகக் கணவன் உணர்ந்தாலோ, தன்னைப்போலவே மற்றொரு பெண்ணிடம் தன் கணவன் பழகுவதாக மனைவி அறிந்தாலோ அந்தத் தம்பதிகளிடையே விரிசலும் விரோதமம் வளர்வதும் இதனால்தான். எனவேதான் கலப்படமற்ற அன்பு என்பது அல்லாஹ்வுக்காக மட்டுமே அமையும். இதைத்தான் கீழ்க்காணும் நபிமொழி உணர்த்துகிறது.
‘அல்லாஹ்வுக்காகவே அன்பு கொண்ட இருவர் – நாளை மறுமையில் வேறு நிழலே இல்லாத (அன்றைய கடும் வெப்பத்திலிருந்து பாதுகாத்து ஒரே நிழல் மட்டுமே இருக்கும்) அந்த அர்ஷின் நிழலில் அவ்விருவருக்கும் இடம் உண்டு’ என்று ஏந்தல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
எல்லோரையும் நேசிப்போம்
எவ்வித உலகியல் நோக்கமுமின்றி நம்மைப் படைத்திட்ட அல்லாஹ்வுக்காக மட்டுமே யாரையும் நேசிப்பது – பெற்றோரையும் மனைவி மக்களையும் உற்றாரையும், உறவினரையும் மட்டுமின்றி மனித இனம் முழுவதையும், பிற உயிரினங்கள் அனைத்தையும்கூட இந்த வரையறைக்குள் நாம் கொண்டு வந்துவிட்டால், அது கலப்படமற்ற அன்பாக மிளிரும்.
அல்லாஹ்வுக்கு மாற்றமாக நம்மைப் பெற்றோரோ மனைவி மக்களோ நிர்பந்திக்க முடியாது. அல்லாஹ்வா? படைப்பினமா? என்ற கேள்வி நம் முன் எழுந்தால், அல்லாஹ்தான் என நாம் முடிவு செய்து விடுவோம். பாவத்திலிருந்து தப்புவோம். இதற்கு அந்த கலப்படமற்ற இறையன்பு நமக்கு வழிகாட்டும்.
ஈமானில் முழுமை பெற்றவரிடம் மூன்று தன்மைகள் இருக்கும்
1. அல்லாஹ்வும் அவன் தூதரும் மற்ற அனைவரையும்விட அவனுக்கு மிகப் பிரியமாக இருப்பது.
2. யாரையும் அல்லாஹ்வுக்காக மட்டுமே நேசிப்பது.
3. நெருப்பில் தான் எறியப்படுவதுபோல் இறைநிராகரிப்பைப் பற்றி அஞ்சுவது. (நபிமொழி)
நன்றி: மனாருல் ஹு தா, டிசம்பர் 2003.