வலது கரங்கள் சொந்தமாக்கிய பெண்கள்!
அஃப்ஸலுல் உலமா உவைஸ்
திருமணம் செய்யக்கூடாத பெண்களை வகைப்படுத்தி எந்த வேதமாவது சொல்லியுள்ளதா? என்றால் திருக்குர்ஆனைத் தவிர வேறெதுவும் இல்லை. பதினேழு பேரைத் திருமணம் முடிக்கக்கூடாது என்று திருக்குர்ஆன் ஒரே வசனத்தில் சொல்லிக் காட்டுகிறது.
மேலும் அல்லாஹ் பதினெட்டாவதாக ஒரு வகையாரையும் சொல்லிக் காட்டுகிறான். அதுதான் ‘வல்’ முஹ்ஸனாத்’ கற்பு பாதுகாக்கப்பட்ட பெண்கள் என்பது இதன் நேரடிப் பொருள்.
இந்த இடத்தில் ஏற்கனவே திருமணமாகிக் கணவனுள்ள பெண்கள் எனப் பொருள். நம் மொழியில் சொல்வதானால் அடுத்தவர் மனைவி. இவர்களும் கற்பை இன்னொருவனின் வேலியைக் கொண்டு அடைத்துக் கொண்டவர்கள். மற்றொருவன் அந்த வேலியை உடைத்துக் கொண்டு போக முடியாத பெண்கள்.
இந்தப் பெண்களும், அந்தக் கணவரால் விவாக விலக்குச் செய்யப்படும் வரை, தலாக்’ சொல்லப்படும் வரை, சொல்லப்பட்ட தலாக்கிற்கு ‘இத்தா’ இருந்து முடிக்கும் வரை அவளை வேறொருவன் மணக்கக்கூடாது. அப்படிச் செய்தால் அது விபச்சாரமே.
போர்க்கைதியான பெண்களின் நிலை:
போர் முடித்து வெற்றி கொண்ட போது, போர்க் கைதிகளாக சில பெண்கள் கிடைத்தார்கள். அவர்கள் ஏற்கனவே திருமணமாகி கணவன் உயிரோடு உள்ளவர்கள். ஆகவே அப்பெண்களை எப்படி உடலுறுவு கொள்வது என்று யோசித்த பொழுது, நபித்தோழர்கள், நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் அந்த சந்தேகத்தை வெளியிட்டார்கள். சில பெண்கள் கேட்கவும் சொன்னார்கள்.
அப்போதுதான் அல்லாஹ் கீழ்க்கண்ட வசனத்தை இறக்கியருளினான்.
‘வல் முஹ்ஸனாத்து மினன்னிஸாஇ இல்லாமா மலக்கத் அய்மானுக்கும்’
(‘உங்களுடைய வலது கரங்கள் சொந்தமாக்கிய ஒன்றைத்தவிர கணவனுள்ள பெண்கள் உங்களுக்கு ஹராமாக்கப்பட்டது (தடுக்கப்பட்டது)’.
வலதுகரங்கள் சொந்தமாக்கினவர்கள்தான் இப்போர்க் கைதிப் பெண்கள். வெற்றி கொண்டவர்களுக்கு இக்கைதிப் பெண்கள் சொந்தமாகி விடுவதை, ‘மா மலகத் அய்மானுக்கும்’ என்று இங்கு எடுத்துச் சொல்லப் படுகிறது.
இந்த இறைவசனம் இறங்கிய பிறகும் கைதிகளான அப்பெண்களுக்கு வெற்றியாளர்களின் தயக்கம் தெரிய வந்தது. உடனே அப்பெண்கள், ‘தயங்க வேண்டாம்! நாங்கள் தயார்! எங்கள் கணவன்மார்கள் எங்களுக்கு இனி வேண்டாம். அவர்கள் பக்கம் நாங்கள் திரும்ப மாட்டோம்! எங்களை நீங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள்!’ என்று தாங்களாகவே முன்வந்து தங்களை ஒப்படைத்தார்கள்.
வெற்றியாளர்கள் அவர்களைத் தங்களது வலது கரங்களால் ஏற்றுக் கொண்டனர். அதாவது திருக்குர்ஆன் சொன்னது போல, வலது கரங்கள் சொந்தமாக்கியன. அதற்கு அடையாளமாக ஒப்புக்கொண்ட மஹரைக் கொடுத்தனர். இப்பெண்களை மறுமணம் செய்ய வேண்டியதில்லை. அப்படியே வைத்துக் கொள்ளலாம்.
மாரியா கிப்தியா என்ற பெண்மணி நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அடிமைப் பெண்ணாக இருந்தார்கள். எகிப்தியப்பெண் அவர். கிப்தியா என்பது அடைச்சொல். இவர்களோடு பெருமார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இருந்தபோதுதான் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் மகளார், பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மூன்றாவது மனைவி வந்து, சண்டை போட்டார்.
மனைவியை சமாதானப்படுத்துவதற்காக, இனிமேல் இவள் (மரியா கிப்தியா எனும் அடிமைப்பெண்) எனக்கு ஹராம் என்று பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்.
மேலும் அல்லாஹ் பதினெட்டாவதாக ஒரு வகையாரையும் சொல்லிக் காட்டுகிறான். அதுதான் ‘வல்’ முஹ்ஸனாத்’ கற்பு பாதுகாக்கப்பட்ட பெண்கள் என்பது இதன் நேரடிப் பொருள்.
உடனே அல்லாஹ், ‘உமக்கு ஹலாலாக்கின ஒன்றை நீர் ஏன் ஹராமாக்குகிறீர்? உம் மனைவிமார்களை திருப்திபடுத்துவதற்காக வேண்டி!’ என்று கண்டித்து இன்னொரு வசனத்தை இறக்குகிறான்.
அந்த அடிமைப்பெண்ணான மாரியா கிப்தியா மூலம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குப் பிறந்தவர் பெயர்தான் இப்ராஹீம்.
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மகனார் இப்ராஹீம் ரளியல்லாஹு அன்ஹு
நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பெயரை பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தற்செயலாகத்தான் வைத்தார்கள். ஆனால் அதில் வரலாற்றுப் பொருத்தமும் இருந்தது.
நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களும் ஒரு எகிப்திய அடிமைப்பெண்ணான ஹாஜரா அலைஹிஸ்ஸலாம் அவர்களைக் கொண்டுதான் இஸ்மாயில் அலைஹிஸ்ஸலாம் அவர்களை ஈன்றெடுத்தார்கள். அவர்களின் வழித்தோன்றலாகத்தான் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் பிறந்தார்கள். அந்தப் பெண்ணின் ஊர்தான் மக்கா. நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை விட்டுச்சென்ற பாலைவனம்தான் இந்த ஊர். பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்ததும் அதே மக்கா நகரில்!
அந்த எகிப்து பெண்ணின் வழிவந்த முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இன்னொரு எகிப்தியப் பெண்ணின் வழியாக ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தபோது வைத்த பெயர் இப்ராஹீம்!
அன்று இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் மனைவியாக ஒரு ஹாஜரா (அலைஹிஸ்ஸலாம்) என்ற எகிப்திய அடிமைப்பெண். இன்று ஒரு இப்ராஹீமின் தாயாராக மாரிய கிப்தியா என்ற ஒரு எகிப்திய அடிமைப்பெண். எவ்வளவு பொருத்தம்!
இரண்டு பெரிய நபிமார்கள் அடிமைப்பெண்கள் மூலம் குழந்தை பெற்றெடுத்தார்கள். அடிமைப்பெண்கள் மூலம் குழந்தை பெறலாம் என்பது அன்றைய சட்டம். இன்று அடிமைப்பெண்ணும் கிடையாது, இச்சட்டமும் கிடையாது. அதனால்தான் அல்லாஹ் ‘வல் முஹ்ஸனாத்’ என்ற சொல்லைப் பொதுவாகப் போடுகிறான்.
கைதி என்றும் சொல்லாமல், அடிமைப்பெண்கள் என்றும் சொல்லாமல், கற்புநெறி பெற்ற பெண்கள்! எவ்வளவு அழகான ஒரே சொல்! திருமணமாகிவிட்டால், ஒருவனிடம் அவளுடைய கற்பு அடைக்கப்பட்டுவிடுகிறது.
இதே வசனத்தில் ‘முஹ்ஸினீன ஙைர முஸாஃபிஹீன்’ என்று ஆண்களை திருக்குர்ஆன் அடையாளம் காட்டுகிறது. கற்பு பிறழாத ஆண்கள் என்பதை ‘முஹ்ஸினீன்’ என்று இந்த இடத்தில் இறைவன் சுட்டும் பொழுது அதே ‘முஹ்ஸனாத்’தை ‘முஹ்ஸனீன’ என்கிறான். அது எப்படி எனில் ‘ஙைர முஸாஃபிஹீன்’! அதாவது விபச்சாரமில்லாத ஆண்கள் என்று விவரிக்கிறான்.
வருத்தப்பட வைக்கும் விபச்சாரத்தை வருத்தமில்லாத வார்த்தையைக் கொண்டு அல்லாஹ் சொல்கிறான். இந்த சொல்லாடல் திருக்குர்ஆனுக்கே உரித்தான சொல்லழகு என்றுகூட சொல்லலாம். (நன்றி: ‘ஜமாஅத்துல் உலமா’ பிப்ரவரி 2007 இதழ்.)
www.nidur.info