மவ்லவி ஆர்.கே. அப்துல் காதிர் பாகவி, பள்ளப்பட்டி
[ தமிழ்நாட்டில் வாழும் சில முஸ்லீம்கள் ஒரு பெண்ணை மணமுடித்தவுடன் அதுவரை அவள் பயன்படுத்தி வந்த அவளுடைய தந்தையின் இனிஷியலை தூர எறிந்து விட்டு, தான் பயன்படுத்தி வரும் தன்னுடைய பெயருக்கு முன்னுள்ள முதல் எழுத்தை அல்லது தன்னுடைய இனிஷியலை அவளுடைய பெயருக்கு முன் திணித்துவிடுவதை நாகரீகமாகக் கருதி செயல்பட்டு வருகின்றனர்.
அதற்கு, இவர்கள் ‘ஒரு பெண்ணுக்குத் திருமணம் ஆகிவிட்டால் அவள் கணவனுக்குத் தான் சொந்தம். அவள் தந்தைக்கு அவள் மீது எந்த உரிமையம் இல்லை’ என்று தெரிந்தோ தெரியாமலோ கருதிக் கொள்கின்றனர். இது தவறாகும்.
அடுத்து, பெண்களில் சிலர் தம் பெயர்களுக்குப் பின்னால் தம் கணவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டுக் கொள்வதை ஒரு நாகரீகமாக் கருதி பயன்படுத்தி வருகிறார்கள்.
தாங்கள் மணமாணவர்கள், இன்னாருடைய மனைவி என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொள்வதற்காக இப்படி செய்வதாக இருந்தால், அது ஏற்புடைய செயலாகக் கருத முடியாது.
காரணம், எந்த ஆணும் தன் பெயருக்குப் பின்னால் தன் மனைவியின் பெயரைக் குறிப்பிடுவதில்லை. ஆணுக்கு இப்படியொரு தேவை இல்லை என்கிற நிலையில் பெண்ணுக்கு மட்டும் அப்படியொரு தேவையைத் திணிக்க வேண்டுமா?
இது ஆண் பெண் சமத்துவம் பற்றிப் பேசும் இக்கால அறிவு ஜீவிகளின் சிந்தனைக்கு முரண்படுகிறதே!]
இன்றைய உலக வழக்கில் ஒவ்வொருவரும் தத்தம் பெயருக்கு முன் ‘இனிஷியல்’ – பெயருக்கு முன் முதல் எழுத்தை குறிப்பிட்டு வருகின்றனர். அது அவருடைய தந்தை பெயரின் முதல் எழுத்தாகும்.
இனிஷியல் இல்லாமல் மொட்டையாக பெயரைக் குறிப்பிடும்போது ‘இன்னார்’ என்று அறிந்து கொள்வதில் மற்றவர்களுக்கு சிரமம் ஏற்படக்கூடும். இன்னும் ஒரு படி கூடுதலாக சில பகுதிகளில் தம் வீட்டுப் பெயரை – வகையராவைக் குறிக்கும் முதல் எழுத்தையும், தந்தையுடைய பெயரின் முதல் எழுத்தையும் இணைத்து இனிஷியலாகப் பயன்படுத்துகின்றனர்.
பொதுவாக, அன்றாட நடைமுறைப் பழக்கத்தில் அரசு சம்பந்தப்பட்ட ஆவணங்களாகட்டும், தனிப்பட்டவர்கள் ஒருவருக்கொருவர் கொடுக்கல், வாங்கல் சம்பந்தமாக எழுதிக்கொள்ளும் பாண்டு பத்திரங்களாகட்டும் அல்லது இன்ன ஊரைச் சேர்ந்த இன்னார் மகன் இன்னார் என்றும், பெண்ணாக இருந்தால் இன்னார் மகள் இன்னாள், இன்னார் மனைவி என்றும் குறிக்கப்படுவதைக் காண்கிறோம்.
இந்த நடைமுறை ஏதோ உலகில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட ஒரு பொதுவான, எல்லோராலும் ஏற்கப்பட்ட ஒரு நடைமுறை என்று கருதி புனித இஸ்லாத்திற்கும் இதற்கும் எவ்வித சம்பந்ததும் இல்லை என்று நினைத்தால் அது தவறு.
ஆம்! ஒருவரைக் குறிப்பிடும்போது அவருடைய பெயருக்கு முன்னால் அவரது தந்தையின் பெயரைக் குறிப்பிடும் நடைமுறை நாகரீகத்தை 1400 ஆண்டுகளுக்கு முன் அண்ணலம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உலக மக்களுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார்கள்
‘உங்களுடைய தந்தையார்களுடைய பெயர்களுடன் இணைத்து உங்களுடைய பெயர்களைக் கொண்டு (அப்துல்லாஹ்வுடைய மகன் அப்துர்ரஹ்மானே! அப்துர்ரஹ்மானுடைய மகள் ஆயிஷாவே! என்று) நீங்கள் மறமையில் அல்லாஹ்வின் சந்நிதானத்தில் அழைக்கப்படுவீர்கள். ஆகவே, உங்களுடைய பெயர்களை அழகானதாக அமைத்துக் கொள்ளுங்கள்’ என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபுத்தர்தா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், நூல்: அஹ்மத், அபூதாவூத்)
எனவே, இப்பொழுது இருந்து வரும் இனிஷியல் நாகரீகம் அண்ணலம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கடைபிடிக்கச் சொன்ன நாகரீகம் தான் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். இதன் மூலம் ஒரு முஸ்லீம் ஆணோ, பெண்ணோ தன்னுடைய தந்தை பெயரின் முதல் எழுத்தையே தன் இனிஷியலாகப் பயன்படுத்த வேண்டும்.
இந்த நாகரீகம் அரபு நாடுகளிலும் மற்ற முஸ்லீம் நாடுகளிலும் ஏன் சொல்லப்போனால் உலகின் பல நாடுகளில் பயன்படுத்தப்பட்டே வருகிறது. அதே சமயம் நமது தமிழ்நாட்டில் ஒரு பெண்ணுக்குத் திருமணமானவுடன் தன் பெயருக்கு முன் கணவனின் பெயரில் வரும் முதல் எழுத்தையே இனிஷியலாகப் போட்டுக் கொள்கிறார்கள். ஆனால் சவூதி போன்ற முஸ்லீம் நாடுகளிலோ ஒரு பெண் குமரியானாலும், திருமணமாகி ஒருவரின் மனைவியானாலும் அவர் தந்தையின் வாரிசாகவே அழைக்கப்படுகிறார்.
துரதிர்ஷ்டவசமாக, தமிழ்நாட்டில் வாழும் சில முஸ்லீம்கள் ஒரு பெண்ணை மணமுடித்தவுடன் அதுவரை அவள் பயன்படுத்தி வந்த அவளுடைய தந்தையின் இனிஷியலை தூர எறிந்து விட்டு, தான் பயன்படுத்தி வரும் தன்னுடைய பெயருக்கு முன்னுள்ள முதல் எழுத்தை அல்லது தன்னுடைய இனிஷியலை அவளுடைய பெயருக்கு முன் திணித்துவிடுவதை நாகரீகமாகக் கருதி செயல்பட்டு வருகின்றனர். அதற்கு, இவர்கள் ‘ஒரு பெண்ணுக்குத் திருமணம் ஆகிவிட்டால் அவள் கணவனுக்குத் தான் சொந்தம். அவள் தந்தைக்கு அவள் மீது எந்த உரிமையம் இல்லை’ என்று தெரிந்தோ தெரியாமலோ கருதிக் கொள்கின்றனர். இது தவறாகும்.
காரணம், ‘உங்கள் தந்தைமார்களுடைய பெயர்களுடன் இணைத்து உங்களுடைய பெயர்களைக் கொண்டு மறுமையில் நீங்கள் அழைக்கப்படுவீர்கள்’ என்ற நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய அறிவிப்பு ஒரு பெண்ணைப் பெற்றெடுத்த தந்தைக்கு அவளை மணமுடித்து வைத்த கையோடு அவரது சொந்தமும் பந்தமும் முற்றுப்பெருவதில்லை. (தண்ணீர் தெளித்து விடும் உறவல்ல இது!) மாறாக அவள் உயிரோடு வாழும் காலம் மட்டுமல்ல, மறுமையிலும் பெற்றவரின் சொந்தமும், பந்தமும் தொடர்கிறது என்பதை உறுதிப்படுத்துகிறது.
தவிர, தன் கணவனின் இனிஷியலில் உலா வந்து கொண்டிருக்கும் ஒரு மனைவி தன் கணவன் இறந்து விட்டாலோ அல்லது விவாவகரத்து ஆகிவிட்டாலோ தொடர்ந்து ;ணஅவனது இனிஷியலில் உலா வர முடியாது. பிறகு வேறொருவரை மணமுடித்து அந்த கணவனின் இனிஷியலில் … இப்படியே நிரந்தரமில்லாத இனிஷியலில் ஒரு பெண்ணை உலா வரச் செய்வது கொஞ்சமும் நாகரீகமல்ல.
கணவனை இழந்த பெண் மறுமணம் முடிக்கக்கூடாது என்று சட்டம் வகுத்துள்ளவர்களுக்கு வேண்டுமானால் இது சரியாகத் தெரியலாம். ஆனால், பெண்ணுக்கு மறுமணம் குறித்து முழு சுதந்திரம் வழங்கியிருக்கும் இஸ்லாம் – திருமணத்தை ஒரு ஒப்பந்தமாக எடுத்துரைக்கும் இஸ்லாம் வகுத்துள்ள் சட்டங்கள் எந்த அளவு நேர்மையானது, சரியானது என்பதை இதன் மூலம் விளங்கலாம்.
ஒரு ஆணுக்கு அவரது தந்தையின் பெயர் முதல் எழுத்து – இனிஷியல் நிரந்தரமாக இருப்பது போன்றே ஒரு பெண்ணுக்கும் அவளது தந்தையின் பெயர் முதல் எழுத்து – இனிஷியலே நிரந்தரமாகும். எனவேதான் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆணுக்கு ஒரு நியதி பெண்ணக்கு ஒரு நியதி என்று பாரபட்சம் காட்டாமல் ஆணோ – பெண்ணோ அவரவர் தந்தையின் பெயர் முதலெழுத்தை இனிஸியலாகப் பயன்படுத்த வழிகாட்டி, அதன் மூலம் அழகான முன்மாதிரியை, நல்லதோர் நாகரீகத்தை உலக மக்களுக்கு உணர்த்தியுள்ளார்கள்.
அடுத்து, பெண்களில் சிலர் தம் பெயர்களுக்குப் பின்னால் தம் கணவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டுக் கொள்வதை ஒரு நாகரீகமாக் கருதி பயன்படுத்தி வருகிறார்கள். தாங்கள் மணமாணவர்கள், இன்னாருடைய மனைவி என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொள்வதற்காக இப்படி செய்வதாக இருந்தால் அது ஏற்புடைய செயலாகக் கருத முடியாது. காரணம், எந்த ஆணும் தன் பெயருக்குப் பின்னால் தன் மனைவியின் பெயரைக் குறிப்பிடுவதில்லை. ஆணுக்கு இப்படியொரு தேவை இல்லை என்கிற நிலையில் பெண்ணுக்கு மட்டும் அப்படியொரு தேவையைத் திணிக்க வேண்டுமா? இது ஆண் பெண் சமத்துவம் பற்றிப் பேசும் இக்கால அறிவு ஜீவிகளின் சிந்தனைக்கு முரண்படுகிறதே!
புனித இஸ்லாத்தில் எந்தப் பெண்ணின் மீதும், அவளது திருமணத்திற்குப் பின் அவளது கணவனின் பெயரைத் தன் பெயருக்குப் பின்னால் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று விதி எதுவும் இல்லை என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.
புனித ஷரீஅத் ஏற்படுத்தியுள்ள இந்த அழகான நடைமுறையைப் புரிந்து விளங்கி, ஏற்று நடக்க எல்லாம் வல்ல அல்லாஹ் நல்லருள் புரிவானாக! (நன்றி: ஜமாஅத்துல் உலமா பிப்ரவரி, 2007 இதழில் வெளியான கட்டுரை இது)