தொழுவதற்குத் தடை செய்யப்பட்ட பகுதிகள்
அபூ பாஸிம்
நெல்லை எக்ஸ்பிரஸ் 6.30 க்குப் புறப்படும் என அறிவிப்பாளினி மெல்லிய குரலில் அறிவித்தார்.
ஹஜ்ஜுக்குச் செல்லும் நபரை வழியனுப்ப திரண்டிருந்த கூட்டம் இமாமை ஏறிட்டது.
இமாம் புரிந்து கொண்டார். மஃக்ரிப் தொழுகை 6.15 க்கு. ஆனால் இங்கே பிளாட்ஃபாரத்திலேயே ஜமாஅத்தாக தொழுதிடலாம். இமாம் முன்னால் நின்றார். பின்னால் கூட்டம் அணிவகுத்தது. சுருக்கமாக ஓதி தொழ வைத்துவிட்டு திரும்பிப் பார்த்தார் இமாம்.
பத்து பேர்களோடு துவங்கிய தொழுகை ஐம்பது, அறுபது பேர்களாய் பெருகியிருந்தது. பிளாட்ஃபார்ம் பிதுங்கி வழிந்தது. பயணிகள் செல்ல வழிதெரியாமல் தொழுது முடிக்கட்டும் என அங்கேயே பொறுமையுடன் காத்திருந்தனர்.
இமாமுக்கு மனதில் நெருடல்.
”அன்பான மக்களே!
நம் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எல்லா சந்தர்ப்பங்களுக்கும் பொருந்தும் மாதிரி அழகான வழிகளைக் காட்டியுள்ளார்கள். அதில் ஒன்று எங்கே தொழ வேண்டும், எங்கே தொழக் கூடாது என்பது.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்,
‘ஏழு இடங்களில் தொழுவது தடை செய்யப்பட்டுள்ளது;
1. அசுத்தம் கொட்டப்படும் இடம்,
2. ஆடு, மாடுகளை அறுக்கும் இடம்,
3. மண்ணறை,
4. வழிப்பாதை,
5. ஒட்டகக் கொட்டகை,
6. குளியலறை,
7. கஃபாவின் மாடி
(அறிவிப்பாளர்: இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதீ)
‘மக்கள் செல்லும் வழிப்பாதையில் தொழக்கூடாது என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்லியிருக்க நீங்கள் போக்குவரத்தை நிறுத்தும் முறையில் இங்கே அடைத்துக் கொண்டு தொழுகிறீர்கள். இதைப் பார்க்கும் மக்கள் உங்களை வெறுப்பார்கள். பிறகு உங்கள் மார்க்கத்தை வெறுப்பார்கள்.”
இமாமின் பேச்சைக் கேட்டதும் மக்கள் அவசர அவசரமாய்க் கலைந்து வழியேற்படுத்திக் கொடுத்தனர். கூட்டத்தை விலக்கிக்கொண்டு ஒருவர் முன்வந்தார். இமாமின் கையைப் பற்றினார்.
‘ஹலோ! என் பெயர் சிலராசன். மதங்களின் பெயரால் நடக்கும் அநியாயங்களை அருமையான முறையில் சுட்டிக்காட்டினீர்கள். நன்றி’
‘இது என்னுடைய கடமை’ என்றார் இமாம் அடக்கமாக.
நன்றி: சிந்தனை சரம் செப்டம்பர் 2010