[ எந்த ஒரு காரியத்தைச் செய்தாலும், ‘தீன் சேவை’ செய்தாலும் அல்லாஹ்வக்காக இக்லாஸாக செய்ய வேண்டும். அப்படிச் செய்யும் காரியங்களுக்குத்தான் வெற்றி கிட்டும், அல்லாஹ்விடம் நற்கூலி கிடைக்கும்.
அன்றி, அணுவளவு பெருமையோ, மனப்பூரிப்போ, ஒருவிதமான திருப்தியோ ஏற்பட்டால், நாம் செய்யும் காரியங்களுக்காக பூரண நன்மையை எதிர்பார்க்க முடியாது. அல்லாஹ்வுக்காக இல்லாமல் வேறொன்றை நாடி எந்தக் காரியத்தை செய்வதைவிடவும் செய்யாமல் இருப்பதே நல்லது.
‘மஆதே! நீர் இக்லாஸுடன் அமல் செய்வீராக! அப்படிச் செய்தால் கொஞ்ச அமலே உமக்குப் போதுமானதாகும்!’ என்று கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உபதேசித்துள்ளார்கள். இக்லாஸில்லாமல் ஆயிரமாயிரம் அமல்கள் செய்வதை விடவும், இக்லாஸுடன் செய்யப்படும் சொற்ப அமல்களே போதுமானது.
‘எவன் பிறருக்குக் காண்பிப்பதற்காக தொழுகின்றானோ அவன் முஷ்ரிக் (இணை வைப்பாளன்) ஆவான். இன்னும் பிறருக்குக் காட்டுவதற்காக நோன்பு வைக்கின்றவனும் முஷ்ரிக் ஆவான், பிறருக்கு காட்டுவதற்காக தர்மம் கொடுப்பவனும் முஷ்ரிக் ஆவான்’ என்றும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.
பிறர் பாராட்ட வேண்டும் என்னும் எண்ணம் உள்ளத்தில் தோன்றினாலும் உடனே ‘அஸ்தஃபிருல்லாஹ் லாஹவ்ல வலா குவ்வத்த இல்லாபில்லாஹ்’ ஓதி எண்ணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும்.]
இக்லாஸின்றி இல்மு பயன் தராது
அல்லாஹு தஆலாவிடம் இக்லாஸுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கிறது. இக்லாஸ் என்றால் வேறு எந்த நோக்கமும், நாட்டமும் இன்றி கலப்பற்றதாக அல்லாஹ்வுக்காகவே செய்யப்படுவதாகும். இக்லாஸ{க்கு தக்கவாறே அமல்களும் மதிப்பிடப்படுகிறது.
‘மனிதனைப் பாவத்திலிருந்து தடுப்பதே இக்லாஸ்’, என்பது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பொன்மொழியாகும். ‘சொல்லும் செயலும் ஒன்றாக இருப்பதுதான் இக்லாஸின் தத்துவம்’ என்று பெரியோர்கள் விளக்கம் தருகின்றனர்.
‘இல்மு’, விதை என்றும், ‘அமல்’ அதன் பயிர் என்றும், ‘இக்லாஸ்’ அதற்கு ஊற்றப்படும் தண்ணீர் என்றும் பெரியோர்கள் அழகுபட உவமைப்படுத்தி விளக்கியுள்ளார்கள்.
விதைக்கப்படும் வித்து நல்லவிதமாக முளைத்து, பயிராகி, காய்க்கனிகளைத் தர, எப்படி தண்ணீர் இன்றியமையாததோ, அதே போல் ‘இல்மு’ என்னும் மார்க்க அறிவு படைத்தவர்களிடம் ‘இக்லாஸ்’ இருந்தால் தான், அவர்களிடம் இம்மை மறுமையில் பயன்தரத் தக்க நல்ல அமல்கள் எனும் பயிரை எதிர்பார்க்க முடியும்.
தண்ணீர் இல்லாமல் விதை முளைத்து பயன் தாராது. அதுபோல ‘இக்லாஸ்’ இல்லாமல் ‘இல்மு’ பயன் தராது. ஆகவே, ‘இக்லாஸ்’ மிக மிக தேவையானதாகும்.
இதனால், முதலில் இக்லாஸைக் கற்போம் என்று நினைப்பதும் தவறாகும். தண்ணீர் மட்டுமிருந்தால் பயிர் முளைத்து விடுமா? விதையும் வேண்டும். அதுபோலவே, இல்மும் வேண்டும், இக்லாஸ{ம் வேண்டும்.
இக்லாஸின் உயரிய தத்துவங்களை விளக்கும் சில வரலாறுகளைப் பார்ப்போம்.
அல்லாஹ்வுக்காக செய்தால் வெற்றி நிச்சயம்
அக்கிரமக்கார அரசன் ஒருவன் இருந்தான். அவனுடைய மதுப்புட்டிகள் கப்பல் மார்க்கமாக வந்து கொண்டிருந்தன. அந்தக் கப்பலில் பெரியார் ஒருவரும் பயணம் செய்தார்.
அந்த மதுப்புட்டிகளைப் பார்த்ததும், ஆத்திரத்தினால் பொங்கி எழுந்தார். அவைகள் யாருடையது என்பது பற்றி அவர் சிந்திக்கவில்லை. உள்ளத்தில் எழுந்த உத்வேகத்தால், மார்க்க உணர்ச்சியால் தூண்டப்பட்டவராய், சிறிதும் தயக்கமின்றி, துணிந்து, அந்த மதுப்புட்டிகள் அனைத்தையும் உடைத்து எறிந்து விட்டார். கடைசியாக இருந்த ஒரேயொரு மதுப்புட்டியை மட்டும் உடைக்காமல் வைத்து விட்டார்.
கப்பலில் இருந்த மற்ற பிரயாணிகள் அந்த பெரியார் மதுப்புட்டிகளை உடைப்பதைப்பார்த்து ஆச்சரியப்பட்டு பிரமித்தவர்களாக பேசாமல் இருந்து விட்டனர். உடைக்காமல் தடுப்பதற்கு துணிச்சல் எவருக்கும் வரவில்லை. அந்த பெரியாரை மதுப்புட்டிக்குச் சொந்தக்காரனான கொடிய அரசன் என்ன செய்யப் போகிறானோ என்று ஒருவருக்கொருவர் முணுமுணுத்துக் கொண்டதோடு சரி!
செய்தி கொடுங்கோல் அரசனை எட்டியது. சும்மா இருப்பானா அவன்? பெரியார் அந்த அரசன் முன் கொண்டு வரப்பட்டார். அரசன் அவரிடம், ‘எல்லா மதுப்புட்டிகளையும் உடைத்துவிட்டு ஒரே ஒரு புட்டியை மட்டும் ஏன் உடைக்காமல் விட்டு விட்டீர்?’ என்று கேட்டான்.
அதற்கு அந்த பெரியார், ‘நான் ஒவ்வொரு மதுப்புட்டியையும் இஸ்லாமிய உணர்ச்சியால், உண்மையாகவே அல்லாஹ்வுக்காகவே என்ற இக்லாஸுடன், அல்லாஹ் – ரஸூலுக்கு, தீனுக்கு புறம்பான காரியத்தை ஒழிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் உடைத்தேன். அதே உணர்ச்சயுடன் எல்லா மதுப்புட்டிகளையும் உடைத்து விட்டு, கடைசியாக இருந்த ஒரு புட்டியைக் கையில் எடுத்தபோது, இன்று நாம் இஸ்லாத்திற்குப் புறம்பான காரியத்தை அழித்து நிர்மூலமாக்கி விட்டோம் என்ற பூரிப்பு, கல்பில் – உள்ளத்தில் ஏற்பட்டது.
இந்த பூரிப்பு ஏற்பட்டதும், உடனே நான் இதை நாம் நம்முடைய மன விருப்பத்திற்காக செய்கிறோமே தவிர, இக்லாஸாக அல்லாஹ்வுக்காக செய்யவில்லை என்று உணர்ந்தவுடன் கடைசி புட்டியை மட்டும் உடைக்காமல் வைத்து விட்டேன்’ என்று கூறினார்.
அரசன் கொடுங்கோலனாக இருந்தபோதும் அவருடைய கருத்தைப் புரிந்து கொண்டு அவரை ‘நிரபராதி’ என்று தீர்ப்பு வழங்கி விடுதலை செய்து விட்டான்.
நஃப்ஸுக்காக செய்யாதே!
எந்த ஒரு காரியத்தைச் செய்தாலும், ‘தீன் சேவை’ செய்தாலும் அல்லாஹ்வக்காக இக்லாஸாக செய்ய வேண்டும். அப்படிச் செய்யும் காரியங்களுக்குத்தான் வெற்றி கிட்டும், அல்லாஹ்விடம் நற்கூலி கிடைக்கும்.
அன்றி, அணுவளவு பெருமையோ, மனப்பூரிப்போ, ஒருவிதமான திருப்தியோ ஏற்பட்டால், நாம் செய்யும் காரியங்களுக்காக பூரண நன்மையை எதிர்பார்க்க முடியாது. அல்லாஹ்வுக்காக இல்லாமல் வேறொன்றை நாடி எந்தக் காரியத்தை செய்வதைவிடவும் செய்யாமல் இருப்பதே நல்லது.
இக்லாஸ் இருந்தால்தான் இப்லீஸை வீழ்த்த முடியும!
பனீ இஸ்ராயீல்களில் ஒரு ஆபிது இருந்தார். அவர் இரவு பகல் பாராமல் இபாதத்தில் ஈடுபட்டிருந்தார். அவரிடத்தில் சிலர் வந்து, இன்ன இடத்தில் ஒரு மரம் இருக்கிறது, அதை சில மக்கள் இறைவனாகப் பாவித்து வணங்கி வருகிறார்கள் என்று முறையிட்டனர்.
இதைக்கேட்டதும் அந்த ஆபிதுக்கு ஆவேசம் தாங்க முடியவில்லை. கோடாரியை எடுத்து தோளில் போட்டுக் கொண்டு அந்த மரத்தை வெட்டி வீழ்த்துவதற்காக விரைந்தார். வழியில் இப்லீஸ் (ஷைத்தான்) ஒரு கிழவனைப் போல் மாறுவேடம் தாங்கி அந்த ஆபிதைப் பார்த்து, ‘நீர் எங்கு போகிறீர்?’ என்று கேட்க, அந்த ஆபிது ‘இறைவனாகக்கருதி வணங்கப்படும் அதோ அந்த மரத்தை வெட்டி வீழ்த்தப் போகிறேன்’ என்றார்.
‘இதில் என்ன நன்மை இருக்கிறது? நீர் உமது பொன்னான இபாதத்தை விட்டு விட்டு இந்த வீணான காரியத்திற்காக செல்கிறீரே! திரும்பிப் போய் அல்லாஹ்வுடைய இபாதத்தை செய்வீராக! அது இதைவிடவும் நல்லதாக இருக்கிறது’ என்று கூறினான்.
‘இதுவும் ஒரு இபாதத்து (வணக்கம்) தான்’ என்று ஆபிது மறுமொழி பகர்ந்தார். ஆனால் ஷைத்தான் அவரைப் போக விடாமல் தடுத்து, ‘அந்த மரத்தை நீர் வெட்ட விடமாட்டேன்!’ என்றான். இருவருக்கும் சண்டை நடந்தது. ஆபிது இப்லீஸை கீழே தள்ளி அவன் நெஞ்சின் மேல் ஏறி உட்கார்ந்தார். தோற்றுப்போன இப்லீஸ், ‘ஆபிதே! என்னை விட்டு விடு, ஒரு வார்த்தை கூறுகிறேன்’ என்றான். ஆபிதும் அவனை விட்டு விட்டார்.
‘ஆபிதே! இந்த மரத்தை வெட்டும்படி அல்லாஹ் உம் மீது கடமையாக்கவில்லை. அதை வெட்டியே ஆக வேண்டும் என்றிருந்தால் அவன் நபிமார்களுக்கு கட்டளையிட்டிப்பான். ஆகையால் இதை வெட்ட வேண்டியது உமது வேலையல்லவே! எனவே வெட்ட வேண்டாம்!’ என்று மறுபடியும் கூறினான்.
‘இல்லை இல்லை நான் அதை வெட்டியே தீர்ப்பேன்’ என்றார் ஆபிது. இப்லீஸ் தடுத்தான். மறுபடியும் இருவரும் சண்டை போட்டுக் கொண்டனர். இந்த முறையும் ஆபிதே வெற்றி பெற்று இப்லீஸை கீழே தூக்கப்போட்டு மேலே ஏறி அமர்ந்து கொண்டார். இப்லீஸ் மறுபடியும் வேறொரு தந்திரத்தை கையாண்டான்.
‘ஆபிதே! நீர் ஒரு ஏழை மனிதராக இருக்கின்றீர், குடும்ப பாரமும் உமக்கு இருக்கிறது. உமக்குத் தேவையான உணவு முதலியவைகளைக்கூட மற்றவர்கள் தான் உமக்கு கொடுத்து உதவுகின்றனர். நீர் மட்டும் என் சொல்லைக் கேட்டு இம்மரத்தை வெட்டாமல் விட்டு விட்டால் நான் தினந்தோறும் தூங்கி விழித்ததும் உமது தலை மாட்டில் இரண்டு தீனார் தங்கக்காசுகளை வைப்பேன். அதன் மூலம் உமது தேவைகளை நிர் பூர்த்தி செய்து கொள்ளலாம். உறவினர்களுக்கும் கொடுத்து உதவலாம். ஏழை எளியோருக்கும் தர்மம் செய்யலாம். இப்படி எத்தனையோ நன்மையான காரியங்கள் செய்ய முடியும் அல்லவா?
இதுமட்டுமின்றி, இந்த மரத்தை வெட்டிப்போட்டாலும் ஒரே ஒரு நன்மைதானே உமக்குக் கிடைக்கும்! அதை வணங்குகிறவர்களுக்கும் பெரிதாக எந்த நஷ்டமும் ஏற்பட்டுவிடப்போவதில்லை. இந்த மரம் இல்லை என்றால் வேறு மரத்தை வணங்குவார்கள்’ என்று இப்லீஸ் தனக்கே உரித்தான சூழ்ச்சியுடன் கூறினான்.
இந்த வார்த்தைகளைக் கேட்டதும் ஆபிதும் மயங்கி விட்டார். ‘ஆம்! இவன் சொல்வதும் சரிதான். ஒரு தங்கக்காசை ஸதக்கா (தர்மம்) செய்து விட்டு, மற்றொரு தங்கக்காசை நம் செலவிற்கு வைத்துக் கொள்ளலாம்! மரத்தை வெட்டுவதை விடவும் இது நல்லதுதான், இதை வெட்டும்படி எனக்குக் கட்டளையிடப்படவில்லை’ என்று தனக்குள் கூறிக்கொண்டு ஆபிது அந்த இடத்தை விட்டு அகன்றார்.
இரண்டு நாட்கள் தொடர்ந்து (தூங்கி எழுந்ததும்) அவருடைய தலை மாட்டில் இரண்டு தங்கக்காசுகளைக் கண்டு எடுத்தார். ஆனால், மூன்றாவது நாள் அவருடைய தலை மாட்டில் ஒன்றும் காணப்படவில்லை. இதனால் கோபம் கொண்ட ஆபிது மீண்டும் கோடாலியைத் தூக்கிக் கொண்டு அந்த மரத்தை வெட்டப் புறப்பட்டார்.
வழியில் இப்லீஸ் முன்போலவே ஒரு கிழவனைப்போல் நடித்து அந்த ஆபிதை வழிமறித்து ‘எங்கே போகிறீர்?’ என்று கேட்டான். ‘மரத்தை வெட்டி வீழ்த்தப் போகிறேன்’ என்றார் ஆபிது.
‘அல்லாஹ்வின் மீது சத்தியமாக ஒருக்காலும் அந்த மரத்தை வெட்ட மாட்டீர்’ என்று இப்லீஸ் தடுத்தான்.
சென்ற முறை போலவே மறுபடியும் இருவருக்கும் சண்டை ஏற்பட்டது. ஆனால், இம்முறை இப்லீஸ் அந்த ஆபிதை தோற்கடித்து அவர் மீது ஏறி அமர்ந்து கொண்டு, ‘நீர் திரும்பிப் போய்விடும், இல்லையெனில் ஆட்டை அறுப்பதுபோல் உம் தலையைக் கொய்து விடுவேன்’ என்றான்.
ஆபிது இப்லீஸிடம், ;என்னை விட்டுவிடு நான் போய்விடுகிறேன், ஆனால் எனக்கொரு சந்தேகம்! சென்ற இரு முறையும் நான் உன்னை வெற்றி கொண்டேன், ஆனால், இம்முறை நீ என்னை வென்று விட்டாய். இதற்குக் காரணம் என்ன?’ என்று கேட்டார்.
‘முதல் இரண்டு முறையும் நீர் அல்லாஹ்வுக்காகவே என்னுடன் போராடினீர், அல்லாஹ்வின் திருப்பொருத்தத்திற்காகவே அந்த மரத்தை நீர் வெட்ட முயன்றீர். அல்லாஹ் உமக்கு வெற்றியைக் கொடுத்து என்னை உமக்குக் கீழ்ப்படுத்தினான். வேறு எந்தவொரு நாட்டமுமின்றி அல்லாஹ்வுக்காகவே இக்லாஸாக ஒருவன் அமல் செய்தால் எனது வல்லமை, சாமர்த்தியம் எதுவும் அவரிடம் பலிக்காது. அவர்களை என்னால் வழிகெடுக்க முடியாது. ஆனால், இம்முறை நீர் அல்லாஹ்வுக்காக என்ற நோக்கம் அறவே இல்லாமல், உமக்காகவும், தங்கக்காசுகளுக்காகவும் கோபங்கொண்டு என்னை எதிர்த்தீர். அதனால் தான் உம்மை எளிதாக தோற்கடிக்க முடிந்தது’ என்று இப்லீஸ் விளக்கமளித்தான். (நூல்: இஹ்யா)
இக்லாஸுடன் சொற்ப அமல் போதும்
எந்த ஒரு அமலையும் அல்லாஹ்வுக்காகவே, இக்லாஸாக (கலப்பற்ற நிய்யத்துடன்) செய்தல் வேண்டும். அப்பொழுதுதான் ஷைத்தானுடைய சூழ்ச்சியை விட்டும் வெற்றி பெற முடியும். நஃப்ஸ{க்காகவும், அல்லாஹ் அல்லாத ஒன்றை ஆசித்தும் அமல் செய்தால் ஷைத்தானுடைய மாயவலையில் சிக்குவது உறுதி.
இபாதத்துகளில் எந்த ஒரு நாட்டமும் கலக்காமல், அல்லாஹ்வுக்காகவே பரிசுத்தத்தன்மையுடன், உளத்தூய்மையுடன் செய்யப்படும் கலப்பில்லாத தீன் ஒன்றே அல்லாஹ்வுக்காக உள்ளது. அப்படிச் செய்யப்படும் அமல்களைத்தான் அல்லாஹ் ஏற்றுக் கொள்கின்றான்.
‘மஆதே! நீர் இக்லாஸுடன் அமல் செய்வீராக! அப்படிச் செய்தால் கொஞ்ச அமலே உமக்குப் போதுமானதாகும்!’ என்று கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உபதேசித்துள்ளார்கள். இக்லாஸில்லாமல் ஆயிரமாயிரம் அமல்கள் செய்வதை விடவும், இக்லாஸ{டன் செய்யப்படும் சொற்ப அமல்களே போதுமானது.
பிறருக்காக செய்பவன் முஷ்ரிக்
‘எவன் பிறருக்குக் காண்பிப்பதற்காக தொழுகின்றானோ அவன் முஷ்ரிக் (இணை வைப்பாளன்) ஆவான். இன்னும் பிறருக்குக் காட்டுவதற்காக நோன்பு வைக்கின்றவனும் முஷ்ரிக் ஆவான், பிறருக்கு காட்டுவதற்காக தர்மம் கொடுப்பவனும் முஷ்ரிக் ஆவான்’ என்றும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.
யாருக்காக எந்த அமல் செய்யப்பட்டதோ அது அவருக்கே உரியதாகும். அல்லாஹ் அல்லாத பிறருக்காக செய்யப்படும் அமலுக்குரிய கூலி அல்லாஹ்விடம் கிடைக்காது. மாறாக, வணக்கத்திற்குரிய ஒரே நாயன் அல்லாஹ்வுக்கு ஷிர்க் வைத்த (இணை கற்பித்த) குற்றத்திற்காக தண்டணை நிச்சயம் கிடைக்கும்.
ஆகவே எந்த நல்ல அமல்களையும் அல்லாஹ்வுக்காகவே செய்ய வேண்டும். பிறர் பாராட்ட வேண்டும் என்னும் எண்ணம் உள்ளத்தில் தோன்றினாலும் உடனே ‘அஸ்தஃபிருல்லாஹ் லாஹவ்ல வலா குவ்வத்த இல்லாபில்லாஹ்’ ஓதி எண்ணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும்.
அல்லாஹ்வுக்காகவே அமல் செய்க!
இந்த இடத்தில் இன்னொரு முக்கியமான விஷயத்தை நினைவில் கொள்ள வேண்டும். எந்த ஒரு அமலையும் இக்லாஸாக, அல்லாஹ்வுக்காக செய்ய வேண்டும் என்பதற்காக, யாருக்கும் தெரியாமல், இரகசியமாக, தனிமையில் தான் செய்ய வேண்டும் என்பது அர்த்தமல்ல. தனிமையில் செய்ய வேண்டிய இபாதத்துகளையும் செய்ய வேண்டும், பெரும்பாலானவற்றை இரகசியமாகவும் செய்ய வேண்டியிருக்கிறது.
உதாரணமாக, மஸ்ஜிதில் தொழுகையாளிகள் பலர் உட்கார்ந்திருக்கிறார்கள். நம் உள்ளத்தில் குர்ஆன் ஓத வேண்டும் என்ற நாட்டம் பிறக்கின்றது. மக்கள் நம்மைப் பார்த்து முகஸ்துதிக்காரன், பெருமைக்காக ஓதுகின்றான் என்று சொல்வார்களே என்ற காரணத்திற்காக குர்ஆன் ஓதாமல் விட்டுவிடுவதும் குற்றமாகும். இது ‘ரியா’வைச் சார்ந்தது.
அதே நேரத்தில் மக்கள் நம்மைப் பாராட்ட வேண்டும், முத்தகீ – அல்லாஹ்வுக்கு பயப்படக்கூடிய நல்லடியார் என்று சொல்ல வேண்டுமென்பதற்காக குர்ஆன் ஓதினால், அது மக்களுக்காக ஓதப்பட்டதாகும். அல்லாஹ்வுக்காக அல்ல என்பதாகிவிடும். இது ‘ஷிர்க்’ ஆகும்.
எந்த ஒரு அமலையும் மக்கள் பார்க்கின்றார்களே என்று விட்டு விடக்கூடாது. மக்கள் நம்மைப் பாராட்ட வேண்டும் என்கின்ற காரணத்திற்காக செய்யவும் கூடாது.
மறுபடியும் நினைவில் கொள்ளுங்கள்:
எந்த ஒரு அமலையும் மக்கள் பார்க்கின்றார்களே என்று விட்டு விடக்கூடாது. மக்கள் நம்மைப் பாராட்ட வேண்டும் என்கின்ற காரணத்திற்காக செய்யவும் கூடாது.
இரண்டுக்கும் மத்தியில், எதையும் அல்லாஹ்வுக்காகவே செய்ய வேண்டும், அல்லாஹ்வுக்காவே விட்டுத் தவிர்க்க வேண்டும். இதுதான் இக்லாஸாக செய்யப்பட்டதாகும். (நன்றி: ‘‘ஃபத்ஹுல் இஸ்லாம்” 1968 மே மாத இதழில் வெளியான கட்டுரை)