[‘நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தொழுகையைப் போன்று ஹளரத் அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை விடச் சிறப்பாகத் தொழக் கூடியவர் எவரையும் நான் பார்த்ததில்லை’ என்று அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்.]
அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் தந்தை பெயர் மாலிக் இப்னு நள்ர். தாயார் உம்மு ஸுலைம் ரளியல்லாஹு அன்ஹா ஆவார்கள். பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு பணிவிடை செய்வதற்காக அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை பத்து வயதிலேயே அவர்களின் தாயார் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சமூகத்தில் ஒப்படைத்தார்கள்.
சுமார் பத்து ஆண்டுகள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு பணிவிடை செய்யும் பாக்கியத்தைப் பெற்றார்கள். இந்த நீண்ட காலங்களில் ஒருமுறையேனும் நீங்கள் ஏன் இதைச் செய்தீர்கள் என்றோ, ஏன் இதைச் செய்யவில்லை என்றோ நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களைக் கேட்டதில்லை. ‘இறைவன் நாடியது நடந்தது, நாடாதது நடைபெறவில்லை என்றே கூறுவார்கள்’ என்று பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பற்றி அனஸ் ரளியல்லாஹு அன்ஹு நினைவு கூறுவார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அன்னாருக்காக அதிகம் துஆ செய்துள்ளார்கள். ஒரு முறை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம், ‘யா ரஸூலல்லாஹ்! அனஸ் உங்களுக்கு பணிவிடை செய்பவராக உள்ளார். நீங்கள் அவருக்காக துஆ செய்யங்கள்’ என்று வேண்டினார்கள். உடனே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘யா அல்லாஹ்! இவரது செல்வத்தை அதிகப்படுத்துவாயாக! இவரது பிள்ளைகளை அதிகப்படுத்துவாயாக! நீ இவருக்கு வழங்கியதில் பரக்கத் செய்வாயாக!’ என்று துஆச் செய்தார்கள்.
ஹளரத் அனஸ் ரளியல்லாஹு அன்ஹு கூறுகிறார்கள், ‘நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் துஆவினால் அல்லாஹ் எனது பொருட் செல்வத்திலும், பிள்ளைச் செல்வத்திலும் மிகப்பெரிய அபிவிருத்தியை ஏற்படுத்தி விட்டான்.’ ஆம், அவர்களது பிள்ளைகள் நூறைத் தாண்டி இருந்தார்கள். இப்னு ஹஜர் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள், அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு 125 பிள்ளைகள் இருந்ததாக குறிப்பிடுகிறார்கள்.
ஹளரத் அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு அல்லாஹ் கொடுத்த பொருட் செல்வமும், பிள்ளைச் செல்வங்களும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நபித்துவத்தை பறைசாற்றும் அடையாளங்களில் ஒன்றாகும் என இமாம் நவவீ ரஹ்மதுல்லாஹி அலைஹி குறிப்பிடுகிறார்கள்.
மேலும் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் துஆவின் பரக்கத்தால் ஹளரத் அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் தோட்டமும் வருடத்தில் இரண்டு முறை மகசூலை (கனிகளை) கொடுத்தது. அவர்களது தோட்டத்திலிருந்த ஒரு பூவிலிருந்து எந்நேரமும் கஸ்தூரி வாசம் வந்து கொண்டிருந்தது.
சில ஹதீஸ் விரிவுரையாளர்கள், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களது துஆவில் அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்காக அல்லாஹ்விடம் அதிக பொருளையும், பிள்ளைகளையும் மட்டுமின்றி அவற்றில் பரக்கத்தையும் வேண்டியதால் தான் அச்செல்வங்கள் அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு குழப்பமாக மாறிவிடாமல் அல்லாஹ்வின் அருட்கொடையாகவே அமைந்தது. எனவே எவரேனும் ஒருவர் உலக சம்பந்தப்பட்ட விஷயங்களை கேட்பாரெனில் அத்துடன் பரக்கத்தையும் சேர்த்து கேட்பது ‘முஸ்தஹப்’பாகும் என்று கூறுகிறார்கள்.
அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அன்பிற்குரியவராக வாழ்ந்தார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வண்ணம் செல்லமாக, ‘இரு காது உடையவரே!’ என்று அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை அழைப்பதுண்டு.
ஹளரத் அபூ பக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தங்கள் ஆட்சிக் காலத்தில் அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை பஹ்ரைன் நாட்டிற்கு கவர்னராக அனுப்ப நாடியபோது ஹளரத் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் ஆலோசனை செய்தார்கள். அப்பொழுது உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், ‘அவர் எழுதப் படிக்கத் தெரிந்த நல்ல அறிவுள்ள வாலிபராவார். மேலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சகவாசத்தால் இறையச்சத்தையும், உலகப் பற்றற்ற தன்மையையும் பெற்ற உத்தமராவார். கவர்னர் பதவிக்கு மிகவும் பொருத்தமானவர்’ என்று நற்சான்று பகிர்ந்தார்கள்.
‘நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தொழுகையைப் போன்று ஹளரத் அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை விடச் சிறப்பாகத் தொழக் கூடியவர் எவரையும் நான் பார்த்ததில்லை’ என்று அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்.
‘ஊரிலும், பயணத்திலும் மிக நல்ல முறையில் தொழக்கூடியவராக அனஸ் ரளியல்லாஹு அன்ஹு இருந்தார்கள்’ என்று இப்னு ஷீரின் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகிறார்கள்.
சுமார் 2200 க்கும் மேற்பட்ட நபிமொழிகளை அறிவித்திருப்பதன் மூலம் ஆயிரம் ஹதீஸ்களை அறிவித்தவர்களின் பட்டியலில் அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, ஆயிஷா சித்தீக்கா ரளியல்லாஹு அன்ஹா ஆகியோருக்கு அடுத்து மூன்றாம் இடத்தைப் பெறுபவர்கள் அனஸ் இப்னு மாலிக் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள்.
ஹளரத் அனஸ் இப்னு மாலிக் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தங்களின் 103 ஆவது வயதில் ஹிஜ்ரி 93 – ல் பஸராவில் மரணித்தார்கள்.
மவ்லவி எம்.எம்.இப்ராஹீம் ஹளரத், மதரஸா காஷிஃபுல் ஹுதா, சென்னை -77.
நன்றி: மனாருள் ஹுதா , ஜூன் – ஜூலை 2002