ஒற்றனை ஒழித்துக்கட்டிய ஓர் வீராங்கணை!
ஸஃபிய்யாஹ் பின்த் அப்துல் முத்தலிப் ரளியல்லாஹு அன்ஹா அவர்களுக்கு எந்த உருவமும் மங்கலாகத் தெரியும் அந்த அதிகாலையில் இப்படிப்பட்ட சந்தேகம் எழுந்ததில் ஆச்சரியமில்லைதான்.
‘நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் மற்ற தோழர்களும் மதீனா நகரின் எல்லையில் தோண்டப்பட்டிருக்கும் அகழின் உட்புறத்தில் போருக்காக அணிவகுத்திருக்க ஓர் ஆண் உருவம் மட்டும் இங்கே எப்படி? அது யாராக இருக்கும்?’ என்கின்ற சந்தேகம் அவர்களுக்கு!
ஏன்? இந்த சந்தேகம்? என்ன நிகழ்வு? பார்ப்போமே!
போர் என்றால் நகரத்தை விட்டு விலகி மைதானம் போல் திறந்த வெளியில் தமக்கு சகலவிதத்திலும் தோதுவான ஓரிடத்தில் தான் நடத்துவது வழக்கம். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழக்கமும் அதுவாகத்தான் இருந்தது. இது தவிற இன்னும் கூடுதலாக போருக்கான சில விதிமுறைகளும் அவர்களிடம் உண்டு.
0 பெண்கள், முதியோர், சிறுவர், புறமுதுகிட்டு ஓடுவோர், போரின்போது சரணடைபவர் ஆகியோரை தாக்கக்கூடாது.
0 தோட்டங்கள், மக்களுக்கு பயன்படும் பொது இடங்கள் சிதைக்கப்படலாகாது.
0 எதிரிகளே ஆரம்பிக்காதவரை போரைத் தொடங்கலாகாது.
0 போருக்கு முந்தைய நிமிடம் கூட சமாதானத்திற்கு முயற்சிப்பது.
எதிரிகள் வெகு அருகில் நெருங்கி விட்டதால் நகரை விட்டு நீண்ட தூரம் பயணிப்பதென்பது முடியாத காரியம். ஆகவே, ஸல்மான் ஃபார்ஸி ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் ஆலோசனையின் பேரில் மதீனாவைச் சுற்றி அகழ் தோண்டப்பட்டு, அதை மீறி வருபவர்களுடன் போரிடலாம் என்ற எண்ணத்தில் மதீனாவின் எல்லைக்கு எல்லா முஸ்லீம்களும் வந்து விட்டனர்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எல்லா முதியோர், சிறுவர், பெண்களையும் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்திவிட்டு தமது குடும்பப் பெண்களை ஹஸ்ஸான் இப்னு ஸாபித் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்குச் சொந்தமான ஒரு கோட்டையில் தங்க வைத்திருந்தனர்.
இப்போது முதல் பாராவின் விஷயத்தை தொடர்வோம். ஸஃபிய்யாஹ் பின்த் அப்துல் முத்தலிப் ரளியல்லாஹு அன்ஹா அவர்களுக்கு என்ன சந்தேகம்? ஏன்? எதற்கு?
0 எல்லா ஆண்களும் போர்க்களத்தில் இருக்க திடீரென்று முளைத்தது போல் வந்திருக்கும் ஆளுக்கு இங்கு என்ன வேலை?
0 பகலில் வராமல் இந்த இருள் சூழ்ந்த நேரத்தில் வந்திருப்பதின் நோக்கம் என்ன?
0 கோட்டையின் முன்புறம் வராமல் பின்புறமாக தயங்கித் தயங்கி வருவது ஏன்?
போர் நேரத்தில் இப்படியெல்லாம் நடந்தால் அறிவுள்ளவர்கள் என்ன முடிவை எடுப்பார்களோ அதே முடிவைத்தான் ஸஃபிய்யாஹ் ரளியல்லாஹு அன்ஹா அவர்களும் எடுத்தார்கள்.
‘அவன் ஓர் ஒற்றன்’
அவனை அடையாளம் கண்டாயிற்று!
ஸஃபிய்யாஹ் ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் கோட்டையிலுள்ள எல்லா பெண்களையும் உஷார் படுத்த, அங்கு ஒரே கூச்சல், குழப்பம், பயம். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட எதிரி, அங்கு பாதுகாப்புக்கு ஆண்கள் எவரும் இல்லையென்பதை உறுதிபடுத்திக் கொண்டு சிறுபடையுடன் அங்கு வந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் குடும்பப் பெண்களை சிறைபிடித்து… – என்பது போன்ற எந்த நிகழ்வும் நடைபெறவில்லை. அதற்குக் காரணம் ஸஃபிய்யாஹ் ரளியல்லாஹு அன்ஹா அவர்கள். எப்படி?
அவன் ஒற்றன் என்பதை அறிந்து கொண்டதும் அவனுக்குத் தெரியாமலேயே பின் தொடர்வதற்கு ஆயுதங்களை எடுத்துக் கொண்டார்கள். எதிரி ஒருவனை, அதுவும் ஒற்றனை பின் தொடர்வதற்கு அசாத்திய துணிச்சலும், வீரமும், விவேகமும் வேண்டும்.
அவன் நிச்சயமாக ஒற்றன் என்பதை உறுதி செய்து கொண்ட ஸஃபிய்யாஹ் ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் பின் தொடர்ந்து சென்று தன்னிடமிருந்த கட்டையால் பலம் கொண்ட மட்டும் அவனின் பின்னந்தலையில் தாக்கினார்கள். அடுத்த நிமிடம் தரையில் சாய்ந்தான் ஒற்றன்.
ஸஃபிய்யாஹ் ரளியல்லாஹு அன்ஹா அவர்களுக்கு மீண்டும் சந்தேகம்! ‘அவன் எழுந்து விட்டால்?!’ மீண்டும் தாக்கினார்கள். அவன் கதைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்கள். (சூழ்நிலையை சிறது மனக்கண்முன் கொண்டுவந்து பாருங்கள்…) அதோடு விட்டார்களா?
மீண்டும் அவர்களுக்கு சந்தேகம். ‘இவனின் சகாக்கள் யாரேனும் இவனுக்காக காத்திருந்தால்?’ ஒற்றனின் தலை கொய்யப்பட்டு அவன் வந்த வழியே வீசப்பட்டது.
நண்பனின் தலையைக் கண்ட மற்ற ஒற்றர்கள், ‘முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கோட்டையில் தகுந்த பாதுகாப்பை ஏற்படுத்தி விட்டுத்தான் சென்றிருக்கிறார்’ என்றெண்ணி திரும்பச் சென்றனர்.
ஸஃபிய்யாஹ் ரளியல்லாஹு அன்ஹா அவர்களுக்கு சந்தேகம் வரவில்லையெனில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குடும்பப்பெண்களின் நிலை சற்று கடினமாகியிருக்கும். இந்த சம்பவத்தில் அவர்களின் சந்தேகம் மட்டுமே வெற்றிக்கு காரணமல்ல. சந்தேகத்தோடு துணிவு, விவேகம், வீரம், கவனம், தீர்க்கமான முடிவு, பதற்றமின்மை, பிறரை திசை திருப்பும் சாமர்த்தியம், செயலை முழுமையாக முடித்தல் போன்ற அம்சங்களால் வெற்றி சாத்தியமானது. இவையெதுவும் நடைபெறாத பட்சத்தில் முஸ்லீம்களுக்கு பெண்களை மீட்பதற்கென்றே ஒரு போர் நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கும்.
இந்த வீராங்கனை யார் எனில் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தந்தையான அப்துல்லாஹ் அவர்களின் உடன்பிறந்த சகோதரி ஆவார். பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்வில் இன்னொரு ஸஃபிய்யாஹ் ரளியல்லாஹு அன்ஹாவும் இடம்பெறுவார். ஆம்! அவர் ஸஃபிய்யாஹ் பின்த் ஹுயை ரளியல்லாஹு அன்ஹா அவர்களாவார். யூதகுலத்தைச் சேர்ந்த இவர் ஹிஜ்ரி 7 –ல் நடைபெற்ற கைபர் போரில் கைதியாக்கப்பட்டு இஸ்லாத்தை ஏற்று பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மனைவியாக ஆனவர்.
– P.M. வாஹியார், “சிந்தனைச் சரம்” மாத இதழ்