வயலை நம்பி!
நேற்றைய ஏக்கத்தைத் தூக்கிப் போட்டு
நிம்மதியோடு இருக்கச் சொன்னோரே…..!
சேற்று வயலில் இருப்போரின்
சேதியைக் கொஞ்சம் கேட்பீரோ…?
காட்டை வெட்டி ஒரு உழவன்
களனி செய்யப் பார்க்கின்றான்
நெல் நிலத்தை விதைத்திடவே
புல்நிலமொன்றைப் புதைக்கிறான்
வாடும் இந்த ஏழைக்கு
வயலில் மட்டும் நம்பிக்கை
ஏர் பிடிக்கும் கைகளில் தான் -அவன்
எதிர்காலத்தின் தும்பிக்கை
என்ன பூமி இது -இவன்
ஏழையென்று தானோ..-அவன்
ஏரை ஏற்க மறுக்கிறதோ
சேறுகளை வாரி வாரி -தன்
சினத்தைக் கொட்டித் தீர்க்கிறதோ ..?
இயந்திரத்தைக் கண்டாலே
இளகிப் போகும் நிலமே..நீ..!-உன்னோடு
பழகிப் போன உழவனிற்கு
இளகிப் போக மாட்டாயோ ..?
மனிதனைப் போலே உனது மனம்
மாறியதெப்படி சொல்வாயோ ..?
களைப்பாறவே நேரமின்றி -அவன்
களைத்துக் களைத்துப் போவதைப் பார்..
உழைத்துக் கொள்ளத் துடிப்பவனோ
உழவனை நம்பி வாழுகிறான்-உயிர்
பிழைத்துக் கொள்ள மட்டுந்தான்
உழவனும் உன்னை நாடுகிறான் ..
பையில் இருக்கும் விதை நெல்லை
பையப் பைய வீசுகிறான் -அவை
சேற்றில் கொஞ்சம் புதைந்தாலும்
நாற்றாய் வெளிவரத் துடிக்கிறதே …
எத்தனை நெல்மணி வீசினாலும்
எல்லாம் விழுந்தன ஏக்கத்திலே .!.
தாக்கம் ஒன்றைக் கண்டதனால் -அவன்
தானும் விழுந்தான் துக்கத்திலே ! ..
நாற்றாய் நாளை வெளிவருமோ.. ..
நன்றி கெட்டுப் போய்விடுமோ . .
ஆற்றின் பெருக்கால் அழிந்திடுமோ -அதை
அடை மழை வந்து அமைத்திடுமோ!
வரட்சி வந்து வாட்டிடுமோ ..
வறுமைப் புரட்சியைத் தந்திடுமோ
பொறுமை இழந்த புயல் காற்று
பெரும் சூறைக் காற்றாய் சூழ்ந்திடுமோ ..
எத்தனை ஏக்கம் விழிகளிலே -இவன்
எதைத்தான் விதைத்தான் வயலினிலே..
ஏக்கத்தைக் கலந்து விதைத்தவனின்
தாக்கத்தை யாரும் அறிவீரோ ..!
சேற்றுக்குள் இவர்கள் கால்வைக்க..
சோற்றுக்குள் நாம் கை வைப்போமே..
ஆற்றுக்குள் ஆடும் தோணியைப் போல்-அவர்
அலைமோதும் ஏக்கத்தை யாரறிவார்.?
அன்புடன்
இளங்கவிஞர், ஈழபாரதி
நன்றி: அபிநயவனம்