”ஆர்.எஸ்.எஸ்ஸின் முஸ்லிம் துவேஷம், நாசிகளின் யூத விரோதத்திற்கு சமம்” – திக் விஜய்சிங்
புதுடெல்லி: ஆர்.எஸ்.எஸ்ஸின் முஸ்லிம் துவேஷம் ஜெர்மன் நாசிகளின் யூத விரோதத்திற்கு சமமானது என அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளர் திக் விஜய்சிங் தெரிவித்தார்.
இந்தியாவில் பயங்கரவாதத்தின் விதையை விதைத்தது 1989 ஆம் ஆண்டு பா.ஜ.க தலைவர் எல்.கே.அத்வானி நடத்திய ரத யாத்திரையும், தொடர்ந்து 1992 ஆம் ஆண்டு நடந்த பாப்ரி மஸ்ஜித் இடிப்புமாகும் என திக்விஜய்சிங் கூறினார்.
83-வது அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி வாசித்த தீர்மானத்திற்கு ஆதரவாக உரை நிகழ்த்தும்பொழுது ஆர்.எஸ்.எஸ்ஸிற்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார் திக்விஜய்சிங்.
1930களில் ஹிட்லரின் நாசிக் கட்சி யூதர்களுக்கெதிராக கட்டவிழ்த்துவிட்ட அக்கிரமங்களுக்கு சமமான அளவில் தேசியவாதத்தின் திரைமறைவில் அதிகாரத்தை கைப்பற்ற ஆர்.எஸ்.எஸ் நாசிகளின் பாணியை முஸ்லிம்களுக்கு எதிராக பயன்படுத்துகிறது.
ஹிந்துக்கள் மற்றும் முஸ்லிம்களிடையே பிரிவினையின் விதை விதைக்கப்பட்டது அத்வானி நடத்திய ரத யாத்திரையாகும். இந்திய வரலாற்றில் மிகவும் இருண்ட அத்தியாயம்தான் பாப்ரி மஸ்ஜித் தகர்ப்பு சம்பவம். அத்வானி நடத்திய ரதயாத்திரை இந்தியாவில் தீவிரவாதம் தலைத்தூக்க காரணமானது.
சிசு மந்திர் பள்ளிக்கூடங்களில் புதிய தலைமுறையின் உள்ளங்களில் முஸ்லிம் விரோதத்தை வளர்த்தும் ஆர்.எஸ்.எஸ்ஸின் கொள்கை அபாயகரமானதாகும். ராணுவத்திலும், காவல்துறையிலும், அதிகார மையங்களிலும் ஆர்.எஸ்.எஸ் தனது ஆட்களை ஊடுருவச் செய்துள்ளது.
முஸ்லிம்களெல்லாம் பயங்கரவாதிகள் அல்ல எனவும், ஆனால் பயங்கரவாதிகள் எல்லாம் முஸ்லிம்கள் என்ற பா.ஜ.கவின் வாதம் கண்டிக்கத்தக்கது. அதேவேளையில், எல்லா ஹிந்துக்களும் பயங்கரவாதிகள் அல்ல என்றும், தீவிரவாதத்தின் பெயரால் கைதுச் செய்யப்பட்ட அனைத்து ஹிந்துக்களும் ஆர்.எஸ்.எஸ் காரர்கள் என்று கூற இயலாதா? திக் விஜய்சிங் கேள்வி எழுப்பினார்.
அதிகாரவர்க்கம், காவல்துறை, ஏன் ராணுவத்திலும் கூட ஆர்எஸ்எஸ் அமைப்பினர் ஊடுறுவியுள்ளனர்.
ஆர்எஸ்எஸ், பாஜகவின் வன்முறை மற்றும் துவேஷக் கொள்கைகள் நாட்டுக்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. அடுத்த பெரும் சவால்கள், கம்யூனிஸ்டுகளும், பிராந்திய அரசியல் தலைவர்களும் என்றார் திக்விஜய் சிங்.
தீவிரவாதம்: ஆர்.எஸ்.எஸ்ஸின் பங்கினைக் குறித்து விசாரணை தேவை – காங்கிரஸ்
புதுடெல்லி:இந்திய தேசத்தில் அண்மையில் நடந்த குண்டுவெடிப்புகளில் ஆர்.எஸ்.எஸ்ஸின் பங்கு வெட்டவெளிச்சமான சூழலில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் துணை அமைப்புகளின் பயங்கரவாதத் தொடர்புக் குறித்து விசாரணை நடத்தவேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி 83-வது அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆர்.எஸ்.எஸ் தேசத்தின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகும். இதனை புறக்கணிக்கக் கூடாது என அந்த தீர்மானத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
தீவிரவாதம் எந்த மதத்திலிருந்து வந்தாலும் அதனை உறுதியாகவும், பயன் தரத்தக்க வகையில் எதிர்கொள்ள வேண்டும் என தீர்மானம் வலியுறுத்தியுள்ளது.
முதல்முறையாக பயங்கரவாதத்தின் பெயரால் காங்கிரஸ் ஆர்.எஸ்.எஸ்ஸின் பெயரை வெளிப்படையாக கூறுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
பா.ஜ.க மற்றும் அதன் சகோதர அமைப்புகளான ஆர்.எஸ்.எஸ், விசுவ ஹிந்து பரிஷத் உள்ளிட்டவைகள் வெறுப்பையும், வன்முறையையும் பிரச்சாரம் செய்துவருகின்றன. இது தேசத்தின் ஒருமைப்பாட்டிற்கு அச்சுறுத்தலாகும். தேசத்தை தகர்ப்பதற்கு இவர்கள் முயல்கின்றார்கள். பயங்கரவாத செயல்பாடுகளில் இவர்களின் தொடர்பை கண்டறிவதற்காக தீவிர விசாரணை தேவை.
இந்திய ஜனநாயகத்தின் உயிர்நாடி மதசார்பற்ற கொள்கையாகும். சுதந்திர போராட்டம் நடந்ததும் மதசார்பற்ற கொள்கையின் அடிப்படையிலாகும். ஆர்.எஸ்.எஸும், பா.ஜ.கவும் வன்முறையை கட்டவிழ்த்து விடுவதன் மூலம் மதசார்பற்றக் கொள்கைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றனர்.
2002 ஆம் ஆண்டு குஜராத் கலவரத்திற்கு காரணமான அனைவரையும் விசாரணைச் செய்யவேண்டும். சிறுபான்மை மக்கள் தாக்கப்படும் சூழலில் கலவரத் தடுப்பு மசோதாவை கொண்டுவந்த மத்திய அரசின் நடவடிக்கை பாராட்டத்தக்கது. இவ்வாறு அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
கர்காரேக்கு ஹிந்துத்துவா அச்சுறுத்தல்: எனது அறிக்கையில் நான் உறுதியாக இருக்கிறேன் – திக் விஜய்சிங்
புதுடெல்லி: கர்காரேக்கு ஹிந்துத்துவா அமைப்புகள் விடுத்த மிரட்டல் தொடர்பாக நான் கூறிய கருத்தில் இன்னமும் உறுதியாக இருக்கிறேன் என திக்விஜய் சிங் தெரிவித்துள்ளார்.
“நான் எதனைக் கூறினேனோ அதில் இன்னமும் உறுதியாக இருக்கிறேன். எனது நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமுமில்லை.” செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளிக்கவே திக்விஜய் சிங் இதனை தெரிவித்தார்.
மஹாராஷ்ட்ரா ஏ.டி.எஸ் தலைவர் ஹேமந்த் கர்காரே மும்பைத் தாக்குதலின்போது மர்மமான முறையில் கொல்லப்படுவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு தனக்கு தீவிர ஹிந்துத்துவா அமைப்புகளிடமிருந்து உயிருக்கு மிரட்டல் விடப்பட்டுள்ளதாக தன்னிடம் தொலைபேசியில் தெரிவித்தார் என திக்விஜய்சிங் தெரிவித்திருந்தார்.
இவர் கூறிய கருத்திற்கு சங்க்பரிவார அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. ஆனாலும், திக்விஜய்சிங் தனது கருத்தை வாபஸ் பெறவில்லை. எல்.கே.அத்வானி போன்றவர்கள் பிரக்யாசிங் தாக்கூரைச் சென்று சந்தித்தால் எவரும் ஒன்றும் கூறமாட்டார்கள். ஆனால், நான் எவரையும் சென்று சந்தித்தால் என்னை முஸ்லிம் ஆதரவாளன் என்றும், தேசத்துரோகி என்றும் முத்திரைக் குத்துவார்கள். இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.
“நீங்கள் வெளியிட்ட அறிக்கையைக் குறித்து காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோருடன் கலந்தாலோசித்தீர்களா?” என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில், திக் விஜய்சிங், அவர்களின் ஆசி இருப்பதால் எனக்கு மகிழ்ச்சியே என தெரிவித்தார்.
நன்றி: செய்தி – பாலைவனத்தூது & தேஜஸ் மலையாள நாளிதழ்