”என் கருணை என் கோபத்தை மிஞ்சிவிட்டது”
பிள்ளைகள்மீது தாய்க்கும் தகப்பனுக்குமுள்ள அன்பு, தாய் தந்தையர் மீது பிள்ளைகளுக்குள்ள அன்பு, கணவன்மீது மனைவிக்குள்ள அன்பு, மனைவியின் மீது கணவனுக்குள்ள அன்பு, சகோதரன் மீது சகோதரிக்குள்ள அன்பு, சகோதரி மீது சகோதரனுக்குள்ள அன்பு, நண்பர்களுக்கிடையே உள்ள அன்பு என்று அன்பின் வகைகள் பல இருந்தாலும், இவையனைத்தையும் விட மிகப்பெரும் அன்பு அனைவரையும் படைத்த அல்லாஹ் தனது படைப்பினங்கள்; மீது கொண்டுள்ள அன்புதான். அல்லாஹ் தன் படைப்பின் மீது கொண்டுள்ள அன்புக்கு ஈடான அன்பு வேறெதுவும் கிடையாது. ஆம்!
‘அல்லாஹ் படைப்பினங்களை படைத்தபோது தன்னிடமுள்ள ‘லவ்ஹுல் மஹ்ஃபூள்’ எனும் அவனது ஏட்டில் ‘என் ரஹ்மத் (கருணை) என் கோபத்தை மிகைத்து விட்டது’ என்று எழுதியுள்ளான். இந்த வார்த்தைகள் அவனுக்கு முன்னால் அர்ஷின் மீது எழுதப்பட்டுள்ளது’ என்று ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்’ (அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்)
‘அல்லாஹ்விடம் நூறு அருள்கள் உள்ளன. அவற்றில் ஒன்றை மட்டும் ஜின்கள், மனிதர்கள், மிருகங்கள், புழுப் பூச்சிகளுக்கிடையே இறக்கி வைத்துள்ளான். அந்த ஒரு பங்கின் காரணமாகத்தான் ஒருவர் மற்றவரிடம் மென்மையுடனும், இரக்கத்துடனும் நடந்து கொள்கின்றனர். அதன் காரணமாகவே காட்டு விலங்குகள், தமது குட்டிகளிடம் பாசம் கொள்கின்றன. மீதமுள்ள தொண்ணூற்றொன்பது அருள்களை கியாமத் நாளில் தனது அடியார்களின் மீது பொழிவதற்காகத் தன்னிடம் வைத்துள்ளான்’ என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: முஸ்லிம்)
ஸுப்ஹானல்லாஹ்! அல்ஹம்துலில்லாஹ்! அல்லாஹு அக்பர்!
அல்லாஹ்வுக்குத்தான் தனது படைப்பினங்களின்மீது எவ்வளவு கருணை! அவனுடைய அருளின் ஒரு பங்கே இவ்வுலகில் நம்மை திக்குமுக்காடவைக்கப் போதுமானதாக இருக்கும்போது மீதமுள்ள தொண்ணூற்றொன்பது பங்கு அருளை மறுமையில் தருவதாக வாக்குறுதியளித்திருக்கிறானே இந்த கருணையை, இந்த அன்பை, முஹப்பத்தை என்னவென்று சொல்வது! சத்தியமாக இதனை வார்த்தையில் வடிக்க முடியுமா சொல்லுங்கள்?
‘அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது’ என்று தனது திருமறையில் மனிதர்களைப் பார்த்து கூறுகிறான். திருக்குர்ஆனின் பல இடங்களில் அல்லாஹ் சத்தியமிட்டு பல விஷயங்களை தெரிவிக்கிறான். தன் படைப்பான மனிதன் தனது வார்த்தைகளை நம்ப வேண்டும் என்பதற்காகத்தானே சத்தியமிட்டுக் கூறுன்கிறான்.
சாதாரணமாக ஒரு முதலாளி தனது வேளையாளிடம் ஒரு உத்தரவை இடும்போது ‘இந்த வேளையை செய்தால் உனக்கு இவ்வளவு சம்பளம் தருவேன்’ என்று சொல்வது இயற்கை. அதே முதலாளி தனது வேளையாளிடம் ‘நீ இதை செய்தால் ‘சத்தியமாக’ உனக்கு இந்த சம்பளத்தைத் தருவேன் என்று சத்தியமெல்லாம் அடிக்க மாட்டார். முதலாளி சாதாரணமாகச் சொன்னலே வேலையாளுக்கு அந்த வார்த்தைகள் போதுமானது. ஆனால் முதலாளிகளுக்கெல்லாம் முதலாளியாகிய ரப்புல் ஆலமீனாகிய அல்லாஹ்வோ தனது அடியானிடம் சத்தியமிட்டுக் கூறுவதன் மூலமாவது தனது வாக்குறுதிகளை அடியான் நம்ப வேண்டும் என்று நாடுகிறான். இதை எண்ணும்போது அவனது கருணையை வியக்காமல் இருக்க முடியவில்லை.
ஒரு முதலாளி 10 ரூபாய் கொடுக்க வேண்டிய வேலைக்கு 20 ரூபாய் கொடுப்பதாகச் சொன்னால் அந்த வேலையாளுக்கு ஏற்படும் மகழ்ச்சியை சொல்ல வேண்டியதில்லை! ஆனால் அல்லாஹ்வோ அடியானைப் பார்த்து அவன் செய்கின்ற நற்காரியங்களுக்கு ஒன்றுக்குப் பத்தாக, எழுபதாக, எழுநூறாக என்பதோடு, கணக்கற்றதாக அல்லவா கூலி தருவதாக வாக்குறுதியளிக்கின்றான்! அதுவும் தனது அடியான் நம்ப வேண்டும் என்பதற்காக சத்தியம் வேறு அடித்துச் சொல்கிறான். இப்பொழுது சொல்லுங்கள் அவனது கருணைக்கும் அன்புக்கு ஈடு இணை உண்டா?!
‘ஒருமுறை ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சமூகத்தில் கைதிகள் சிலர் கொண்டு வரப்பட்டனர். அவர்களில் ஒரு பெண்ணும் இருந்தாள். அவள் தனது குழந்தையைக் காணாது அங்குமிங்கும் தேடிக் கொண்டிருந்தாள். குழந்தை கிடைத்ததுமே அதை வாரியெடுத்து தன் வயிற்றோடு அணைத்துக் கொண்டு அதற்கு பாலூட்டினாள்.
இக்காட்சியக்கண்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘இப்பெண் தன்னுடைய குழந்தையை நெருப்பில் எறிந்து விடுவாள் என்ற நீங்கள் நினைக்கிறீர்களா?’ என்று எங்களிடம் கேட்டார்கள். ‘அல்லாஹ்வின்மீது அணையாக எறியமாட்டாள். அவள் நெருப்பில் எறியாமல் இருப்பதற்கும் வல்லமை பெற்றவள்’ (எறிய வேண்டும் என்ற எவ்வித நிர்பந்தமும் இல்லை) என்று கூறினோம்.
இந்தப்பெண் தன் குழந்தையிடம் வைத்திருக்கும் பாசத்தைவிடப் பன்மடங்கு பாசத்தை அல்லாஹ் தன் அடியார்களிடம் வைத்துள்ளான்’ என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: முஸ்லிம்)
ஹதீஸ் கிதாபை புரட்டும்போது ஒரு ஆச்சர்யமான ஹதீஸ் கண்ணில் பட்டது.
‘அல்லாஹ் (தனக்கு) மாறு செய்பவர்களுக்காகத் தயார் செய்து வைத்திருக்கும் தண்டனைகளை ஒரு முஃமின் சரியாகத் தெரிந்து வைத்துக் கொண்டால், ‘எவருக்கும் சொர்க்கம் கிடைக்காதோ!’ என்று கருதுவான். மேலும் அல்லாஹ்வின் அருளைப்பற்றி ஒரு காஃபிர் (இறைமறுப்பாளர்) சரியாகத் தெரிந்து கொண்டால், ‘எவரும் சொர்க்கம் கிடைப்பதை விட்டும் நிராசை கொள்ள மாட்டான்’ (நம்பிக்கை இழக்க மாட்டான்) என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: முஸ்லிம்)
‘எவன் கைவசம் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உயிர் உள்ளதோ அவன் மீது ஆணையாக! யூதரோ, கிறிஸ்தவரோ, யாராக இருப்பினும் நான் ‘நபி’ என்பதை கேள்விப்பட்டு நான் கொண்டு வந்த மார்க்கத்தை ஏற்றுக்கொள்ளாமல் (அதே நிலையிலேயே) மரணிக்கிறாரோ, அவர் நிச்சயமாக நரகவாசிகளைச் சார்ந்தவர்’ என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: முஸ்லிம்)
Posted by: Abu Safiyah