தமிழகத்தில் 1.8 கோடிக்கும் அதிகமான ரேஷன் அட்டைகள் உள்ளன. அவற்றில் போலி அட்டைகளைக் கண்டறிந்து களையும் பணிகள் நடந்தன. போலியாகக் கருதப்பட்ட அட்டைகளுக்கு பொருட்கள் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளன. மேல்முறையீடு செய்தவர்களுக்கு அதன் உண்மையைத் தன்மையைப் பொறுத்து அட்டைகளுக்கு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், கடந்த ஆண்டுகளில் வழங்கப்பட்ட ரேஷன் அட்டையிலுள்ள தாள்கள் தீரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், புதிய அட்டை அச்சிட்டு வழங்கப்படும் எனக் கூறப்பட்டது. ஆனால், போலி ரேஷன் அட்டைகளைக் களையும் பணி முழுமை அடையாத காரணத்தால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டுள்ளது.
தாள்கள் இணைப்பு… புதிய அட்டைக்குப் பதிலாக ஏற்கெனவே உள்ள அட்டையில் கூடுதல் தாள்களை இணைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான உத்தரவை உணவு, கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலாளர் ஸ்வரண் சிங் கடந்த சில தினங்களுக்கு முன்பு பிறப்பித்தார்.
இதைத் தொடர்ந்து, கூடுதல் தாள்கள் அச்சிட்டப்பட்டு ஒவ்வொரு ரேஷன் கடைகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. உணவுப் பொருள் வழங்கல் உதவி ஆணையாளர் அலுவலர்களின் உதவியுடன் கூடுதல் தாள்களை ரேஷன் கடைகள் மூலம் விநியோகிக்கும் பணி திங்கள்கிழமை முதல் தொடங்கவுள்ளதாக உணவுப் பொருள் வழங்கல் துறை ஆணையாளர் கா.பாலச்சந்திரன் சனிக்கிழமை வெளியிட்ட செய்தியில் தெரிவித்துள்ளார்.
ஆனாலும், சென்னையில் அம்பத்தூர் உள்ளிட்ட சில இடங்களில் சனிக்கிழமையே இந்தப் பணி தொடங்கி விட்டது.
எந்த ரேஷன் அட்டைக்கு எந்தத் தேதியில் உள்தாள் இணைக்கப்படும் என்ற விவரம் சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளில் ஒட்டப்பட்டு இருக்கும் எனவும், குறிப்பிட்ட தேதியில் உள்தாள்கள் ஒட்டிக் கொள்ள இயலாத ரேஷன் அட்டைதாரர்களுக்கு இந்த மாதத்திலேயே தேதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
ரேஷன் கடைகளுக்கு வரமுடியாத முதியவர்களிடம் அத்தாட்சி சான்றை உறவினர்களோ அல்லது நண்பர்களோ பெற்று வந்தால் அதை ஏற்றுக் கொண்டு கூடுதல் தாள்களை விநியோகிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.