M.அப்துல் வஹ்ஹாப் M.A.BTh., ரஹ்மதுல்லாஹி அலைஹி
இமாம் மாலிக் இப்னு அனஸ் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் பள்ளிச்சாலையிலே ஒருநாள் பாடம் சொல்லிக் கொண்டிருந்தார்கள். மிக பரபரப்போடும், கவலை தோய்ந்த முகத்தோடும் ஒரு மனிதர் அங்கு வந்து இமாம் அவர்களுக்கு அருகில் வந்து நின்றார். துயருடன் தம் அருகில் நின்ற அம்மனிதரைப் பார்த்ததும் பாடத்தை நிறுத்திவிட்டு ஆதரவோடு அம்மனிதரை விசாரித்தார்கள்.
‘இமாம் அவர்களே! நான் புறா வளர்த்து, விற்று வாழ்க்கை நடத்துபவன். புறாக்களை நன்றாகப் பழக்கி, அவற்றைச் சப்தமிடச் செய்து மக்களுக்குக் காட்டியும் நான் பொருள் சேர்ப்பதுண்டு. அவ்வாறு நான் பழக்கிய ஓர் புறாவை ஒருவனுக்கு விற்றேன். அவன் திரும்பி வந்து நான் சொல்லியபடி அது சப்தமிட்டுக் கூறவில்லை என்று சண்டையிட்டான். நான் அப்படி இருக்காது என்று வாதாடினேன்.
அவன் வம்புத்தன்மை அதிகமாகவே நானும் ஆத்திரத்தில் ‘நான் கூறியபடி அந்த புறா கூவாதிருக்குமானால் என் மனைவியை தலாக் சொன்னவனாவேன்!’ என்று சபதம் செய்து விட்டேன். இப்பொழுது என் நெஞ்சம் திடுக்கிடுகிறது. என் பிரிய மனைவியை பிரிய வேண்டியது தானா? இமாம் அவர்களே! நல்ல தீர்ப்பைத் தந்து என்னைக் காப்பாற்றுங்கள்! என்று கெஞ்சினார் அம்மனிதர்.
‘நாம் இவ்வளவு முதிர்ந்த வயதடைந்து விட்டோம். இவ்வித புதுமையான பிரச்சனை இதுவரை நம்முன்னே வந்ததில்லையே!’ என்று ஆச்சரியப்பட்ட இமாம் மாலிக் இப்னு அனஸ் ரஹ்மதுல்லாஹி அலைஹி யோசித்தார்கள். ஒரு வழியும் தென்படவில்லை.
‘நீர் ஆத்திரப்பட்டு செய்த செய்கையால் உம் மனைவி ‘தலாக்’ பெற்றதாகத்தான் முடிகிறது. வேறு மார்க்கமில்லையே, நான் என்ன செய்வது?’ என்று கனிவோடு பதிலளித்தார்கள்.
எவ்வளவோ ஆசையோடு அப்பள்ளிக்குள் நுழைந்த அம்மனிதர் கண்களில் நீர் முட்ட, கனக்கும் நெஞ்சத்தோடு அதைவிட்டு வெளியேறினார். தம் கவலையிலே தம் பின்னாலே பள்ளியிலிருந்து வெளிப்பட்ட ஒரு சிறுவரை அவர் கவனிக்கவில்லை. அதே சமயம் அந்த சிறுவர் அந்த மனிதரை நோக்கி, ‘நீங்கள் இமாம் அவர்களிடம் தீர்ப்புக்காக கொண்டவந்த பிரச்சனையில் எனக்கு ஓர் சந்தேகம் இருக்கிறது. அதைத் தெளிவாக்கினீர்களானால் என்னால் ஏதாவது வழிகாண முடியுமா என்று யோசிப்பேன்!’ என்றார் சிறுவர்.
சரியாகப் பதினான்கு வயது கூட நிரம்பப்பெறாத ஓர் இளைஞர் மூலம் தம் துயர் துடைக்க வழி கிடைக்கவா போகிறது என்று ஒரு நிமிடம் அம்மனிதர் தடுமாறி நின்றார். ஆனால் அச்சிறுவனின் முகத்தில் தோன்றிய அறிவொளி அவரைப் பேசக் கட்டாயப்படுத்தி இருக்க வேண்டும்.
‘சிறுவரே! உம் சந்தேகத்தைக் கேளும்’ என்றார் அம்மனிதர்.
‘புறாவைக் கூவப் பழக்கியதாகச் சொன்னீரே! நீர் விற்ற புறா கூவுவது அதிகமா, அல்லது கூவாமலிருப்பது அதிகமா?’
‘அது கூவுவதுதான் அதிகம்’
‘ஆனால் சில சமயங்களில் அது கூவாமலும் இருக்கலாமல்லவா?’
‘இருக்கலாம்’
‘சரி! உம் தலாக்குப் பிரச்சனைக்குத் தீர்ப்புத் தருகிறேன், உம் மனைவி தலாக்குப் பெற்றவராகமாட்டார்!’
சிறுவர் கூறிய வார்த்தைகள் அம்மனிதரைச் சிந்தை குளிரச் செய்தன. ஆனால், இந்தத் தீர்ப்புக் கூறியவர் பதினான்கு வயதுகூட நிரம்பப் பெறாத ஒரு பள்ளி மாணவர். அதைச் சரியான தீர்ப்பென்று ஏற்றுக்கொள்ள முடியுமா? என்று மனக்குழப்பத்தில் ஆழ்ந்தார் அம்மனிதர்.
அந்த சிறுவருடன் மீண்டும் மதரஸாவுக்குள் நுழைந்தார் அவர்;. தீர்ப்புப் பெற்றுச் சென்ற மனிதர் திரும்பி வந்தருப்பதைக் கண்ட இமாம் அவர்களுக்கோ வியப்பு.
‘இமாம் அவர்களே! எனக்குச் சாதகமாக தீர்ப்பு வழங்கியவர் இதோ உங்கள் மதரஸாவிலேயே இருக்கிறாரே, அவர் ஆதாரத்தையும் நீங்கள் கவனிக்க வேண்டும்!’ என்று கேட்டுக்கொண்டார்.
‘என் மதரஸாவிலா….? இங்கேயா….?’ என்று வியப்புடன் கேட்டார்கள் இமாம் மாலிக் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள்.
‘ஆம்! அதோ!’ என்று அச்சிறுவரைச் சட்டிக் காட்டினார் அம்மனிதர். இமாம் அவர்களின் ஆச்சரியம் அதிகரித்தது.
‘இளைஞனே! நீர் எந்த ஆதாரத்தை அடிப்படையாக வைத்து என் தீர்ப்புக்கு மாற்றம் உரைத்தீர்?’ என்று வினவினார் இமாம் மாலிக் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள்.
‘உம்முடைய புறா கூவுவது அதிகமா, கூவாதிருப்பது அதிகமா? என்று நான் அம்மனிதரிடம் கேட்டேன். ‘கூவுவது தான் அதிகம் என்றார். தம் புறா அடிக்கடிக் கூவியிருப்பதை நினைவில் வைத்து அவர் சபதம் செய்து விட்டார். எப்பொழுதோ அது ஒரு தடவை கூவாமலிருந்துவிட்டது என்பதை மட்டும் நாம் கருத்தில் வைத்துக் கொண்டு தீர்ப்பு வழங்குவது நியாயமாக இல்லை. இந்த ஆதாரத்தின் அடிப்படையிலேயே நான் தீர்ப்பைக் கூறினேன்’ என்று முறைப்படி வாதித்தார் அம்மாணவர்.
இமாம் அவர்களோ சிறுவரின் அவ்வாதத்தை ஏற்றுக்கொள்வதாக இல்லை. எனவே இளைஞர் தம் விளக்கத்தைக் கூறத் துவங்கினார்.
‘இமாம் அவர்களே! தாங்கள் அன்று ஒரு ஹதீது சொன்னீர்கள். ‘கைஸு என்பவரின் மகள் ஃபாத்திமா (ரளியல்லாஹு அன்ஹா) என்ற பெண்மணி நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து ‘யாரஸூலல்லாஹ்! என்னை அபூஜஃமின் (ரளியல்லாஹு அன்ஹு) என்ற உங்கள் தோழரொருவர் மணமுடிக்க வந்திருக்கிறார். அதே நோக்கத்துடன் முஆவியா (ரளியல்லாஹு அன்ஹு) என்னும் உங்களுடைய இன்னொரு தோழரும் வந்துள்ளார். இவர்களில் யாரை நிகாஹ் செய்வதென்று எனக்குப் புலனாகவில்லை’ என்றார்.
அதற்கு நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘பெண்மணியே! முஆவியா தண்டாயுதத்தை தம் தோளை விட்டுக் கீழே வைக்காத (வீரர்)’ என்று உரைத்தார்கள்.
ஆனால் அவர் உண்ணும் பொழுதும், உறங்கும்பொழுதும் தம் தண்டாயுதத்தைக் கீழே இறக்கித்தானே ஆக வேண்டும். நபிய்யுல் கரீம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பின் ஏன் அவ்வாறு கூறினார்கள்? தண்டாயதத்தை தாங்கி நிற்பது அவர் பழக்கம் என்பதைக் குறிக்கத்தான்! அதே போன்றுதான் இம்மனிதரும் தம் புறா கூவும் என்று கூறியபொழுது அதன் பழக்கத்தைத் தானே சுட்டினார். எப்பொழுதோ சிற்சில சமயங்களில் அது கூவாமலிருக்கிறது என்பது இம்மனிதரின் கூற்றை பொய்யாக்கி விடாது! ஆகவேதான் இவர் மனைவி தலாக்குப் பெற்றவராகமாட்டார் என்று தீர்ப்புச் சொன்னேன்!’ என்று நுண்ணிய முறையில் தம் கூற்றை விளக்கினார் அச்சிறுவர்.
இமாம் மாலிக் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் சிறுவரின் வாதத்திறமையையும், சிந்தனைச் சிறப்பையும் வாயார வாழ்த்தினார்கள். இத்தகைய ஆய்வத்திறனும், அறிவுப்பெருக்கும் கொண்டு அழகிய தீர்ப்பு வழங்கிய அந்த இளைஞர்தான் பிற்காலத்தில் மிகப்பெரும் சட்டமேதையாக, உலகம் போற்றும் நல்லறிஞராக விளங்கிய இமாம் ஷாஃபியீ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள்.
நன்றி: ‘பிறை’ மாத இதழ்