சென்னை: ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்வது முஸ்லீம்களின் 5 கடமைகளில் ஒன்று. இந்தியாவிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த புனிதப் பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்வருடம் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொண்டு நாடு திரும்பிய தமிழகப் பயணிகள் சிலருடைய உடைமைகள் இன்னமும் விமானத்தில் வந்து சேரவில்லை. இதனால் அவர்கள் கடுமையான அலைக்கழிக்கப்புக்கு ஆளாகி மன உளைச்சலில் வேதனைப்படுகின்றனர்.
ஜித்தாவில் உள்ள ஹஜ் பயணிகளுக்கான சிறப்பு விமான முனையம் மூடுவதற்கு இன்னும் மூன்று தினங்களே உள்ள நிலையில், இதுகுறித்து புகார் தெரிவித்தபோதும் தமிழக அதிகாரிகள் அலட்சியம் காட்டுகின்றனர் என பாதிக்கப்பட்ட பயணிகள் கூறுகின்றனர்.
இந்த ஆண்டும் 1.78 லட்சம் பேர் புனிதப் பயணம் மேற்கொண்டனர். தமிழகத்திலிருந்து மட்டும் 9 ஆயிரம் பேர் பயணித்தனர். இதில் தமிழ்நாடு ஹஜ் கமிட்டி சார்பில் மட்டும் 4 ஆயிரத்து 467 பேர் அனுப்பப்பட்டனர். இவர்களுக்கு உதவுவதற்காக மத்திய ஹஜ் கமிட்டி மற்றும் தமிழக ஹஜ் கமிட்டி சார்பில் 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள், பயணிகளுடன் விமானத்தில் அனுப்பப்பட்டும் இந்த நிலை!
தமிழகத்தைப் பொருத்தவரை தமிழ்நாடு ஹஜ் சொசைட்டி, புனிதப் பயணிகளுக்கான உதவிகளை தன்னார்வ நோக்கத்தோடு செய்து வருகிறது.
இவர்கள் அனைவரும் மக்காவுக்கு அருகில் உள்ள ஜித்தா ஹஜ் சிறப்பு விமான நிலையத்தில் தரையிறங்கி, அங்கிருந்து மக்காவுக்குப் பயணம் செய்வர். இதுபோல் புனிதப் பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பும்போதும், ஹஜ் சிறப்பு விமான நிலையத்திலிருந்து புறப்படுவர். இவர்களுடைய பொருள்கள் அனைத்தும் அந்தந்த விமானங்களிலேயே, ஏற்றப்பட்டு அனுப்பப்படும்.
பயணம் மேற்கொண்ட அனைவரும் நவம்பர் 30-ம் தேதி நாடு திரும்பினர். இந்த நிலையில் தமிழகம் வந்து சேர்ந்த பயணிகளில் 150-க்கும் மேற்பட்டோருக்கு அவர்களது பொருள்கள் வந்து சேரவில்லை. இதனால், சில பயணிகள் விமானத்தில் அணிந்து வந்த ஆடையைக் கூட இரண்டு தினங்களுக்கும் மேலாக மாற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து புகார் தெரிவித்தும், தமிழக அதிகாரிகள் அலட்சியம் காட்டுகின்றனர் என பயணிகள் புகார் தெரிவித்தனர்.
ஹஜ் புனிதப் பயணிகளுக்கான பொருள்களை பாதுகாப்பாக எடுத்து வருவதற்கு வழி செய்வது, மற்ற வசதிகளை செய்து தருவது உள்ளிட்ட அனைத்துக்கும் தமிழ்நாடு ஹஜ் கமிட்டிதான் பொறுப்பு. ஆனால், நாடு திரும்பிய 150 பயணிகளின் பொருள்கள் அனைத்தும் ஜித்தாவில் உள்ள ஹஜ் விமான நிலையத்திலேயே கிடக்கின்றன. இந்த விமான நிலையம் வரும் 21-ம் தேதி மூடப்பட்டு விடும். மீண்டும் அடுத்த ஆண்டு ஹஜ் புனிதப் பயணத்தின் போதுதான் திறக்கப்படும். இதுகுறித்து உரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தபோதும், அவர்கள் அலட்சியம் காட்டுகின்றனர்.
இதனால், புனிதப் பயணம் மேற்கொள்பவர்கள் எடுத்து வந்த ”ஜம் ஜம் நீர்”, மாற்று ஆடைகள் என அனைத்தும் அந்த விமான நிலையத்திலேயே சிக்கியுள்ளது என்றார்.
இதுகுறித்து தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவர் அபூபக்கர் கூறியது: பாதிக்கப்பட்ட புனிதப் பயணிகளின் பொருள்களை எடுத்துவருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதற்கு கட்ட வேண்டிய பணமும் கட்டப்பட்டு விட்டது. எனவே, அடுத்த இரண்டு தினங்களில் அவர்களின் பொருள்கள் அனைத்தும் வந்துவிடும் என்றார்.
இந்த நிலையில் தமிழ்நாடு ஹஜ் கமிட்டி செயலர் அலாவுதீன் கூறுகையில், “பாதிக்கப்பட்ட ஹஜ் பயணிகளின் பொருள்களை, பணம் கட்டாமல் அங்கிருந்து கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. அந்த நாட்டில் உள்ள இந்தியத் துணைத் தூதர் மூலம், இவர்களுடைய பொருள்கள் பாதுகாப்பான இடத்துக்கு எடுத்துச் செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, ஒரு வாரத்துக்குள் பொருள்கள் வந்து சேர்ந்துவிடும்’ என்றார்.
எதிர்காலத்தில் இதுபோன்ற சிக்கல்கள் நேரிடாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஹஜ் கமிட்டி எடுக்க வேண்டியது அவசியம்.