2ஜி – ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் 2001 முதல் விசாரிக்க உத்தரவு – விசாரணையை கண்காணிக்க போவதாகவும் சுப்ரீம் கோர்ட் அறித்துள்ளது, ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் இது யாரும் எதிர்பாராத திருப்பமாகப் பார்க்கப்படுகிறது.
அடுத்த தலைமுறைக்கான தொலைத் தொடர்பு அலைக்கற்றை எனப்படும் 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் கடந்த 2007-ம் ஆண்டு தொடங்கி பெரும் முறைகேடுகள் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முதலில் வருபவருக்கு முதல் ஒதுக்கீடு என்ற வகையில், 119 நிறுவனங்களுக்கு சந்தை மதிப்பை விட மிக மிகக் குறைந்த விலைக்கு அலைக்கற்றைகளை ஒதுக்கியதால், அரசுக்கு ரூ. 1.76 கோடி நஷ்டம் ஏற்பட, துறையின் அமைச்சராக இருந்த ராஜா காரணமாக இருந்துள்ளார் என தலைமைக் கணக்கு அதிகாரி அறிக்கை தர நாடே அதிர்ந்தது.
இந்த விவகாரத்தை ஆராய்ந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பொதுநல அமைப்பு வழக்கு தொடர்ந்தது. இதைத் தொடர்ந்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால் இந்த விசாரணையில் அசாதாரண மந்தம் நிலவியதாக உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்து, விசாரணையைத் துரிதப்படுத்த உத்தரவிட்டது.
பிப்ரவரி 10-ம் தேதிக்குள்…
விசாரணையின் போக்கு திசைமாறிவிடக் கூடாது என்ற நோக்கிலும், குற்றவாளிகளை தப்பவிடக்கூடாது என்ற நோக்கிலும், சிபிஐயின் இந்த விசாரணையை கண்காணிக்க முடிவு செய்துள்ளதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
இதுவரை நடந்த விசாரணைகள், அதில் கண்டுபிடிக்கப்பட்ட உண்மைகளை சீலிட்ட கவரில் வைத்து பிப்ரவரி 10-ம் தேதிகத்குள் சிபிஐ மற்றும் அமலாக்கப் பிரிவு சமர்ப்பிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
மேலும் வாஜ்பாய் ஆட்சிக் காலத்திலிருந்து இந்தத் துறையில் நடந்த அனைத்து விஷயங்கள் குறித்தும் விசாரிக்கப்பட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
உச்சநீதிமன்றம் இன்று பிறப்பித்த முக்கிய உத்தரவுகள் விவரம்
o 2ஜி ஸ்பெக்ட்ரம் தொடர்பான விசாரணையின் கால கட்டம் 2001 முதல் 2008 ஆக இருக்க வேண்டும்.
o சிபிஐயும், அமலாக்கப் பிரிவும் தங்களது விசாரணை நிலவர அறிக்கையை 2011ம் ஆண்டு பிப்ரவரி 10ம் தேதி மூடி சீலிடப்பட்ட கவரில் வைத்து உச்சநீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும்.
o 2ஜி ஏலத்தில் பங்கேற்ற நிறுவனங்களுக்கு பொதுத்துறை வங்கிகள் அளித்த கடன் குறித்த விவரங்கள் விரிவாக விசாரிக்கப்பட வேண்டும். இந்த ஊழலில் வங்கிகளுக்குப் பங்கு உள்ளதா என்பதும் விசாரிக்கப்பட வேண்டும்.
o உரிம ஒப்பந்தத்தில், எந்தெந்த தொலைத் தொடர்புத்துறை அதிகாரிகள் கையெழுத்திட்டுள்ளனர் என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.
o உரிமம் பெற தகுதியற்ற நிறுவனங்கள் மீது டிராய் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை கண்டறிய வேண்டும்.
o 2ஜி உரிமம் வழங்கியதில் பெருமளவில் முறைகேடுகள் நடந்துள்ளது என்று மனுதாரரான மூ்த்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் கூறியுள்ள குற்றச்சாட்டுக்களில் இந்த பெஞ்ச் திருப்தி அடைகிறது. குற்றம் நடந்ததற்கான பூர்வாங்கம் இருப்பதாகவும் உணர்கிறது.
o 2ஜி ஏலம் தொடர்பான வழக்கு விசாரணையில் சிபிஐ பின்வாங்கியது, பதுங்கியது, தாமதம் செய்தது என்ற பூஷனின் குற்றச்சாட்டையும் இந்த கோர்ட் ஏற்கிறது.
o இந்த விவகாரத்தை சிபிஐ விசாரணைக்கு விட வேண்டும் என்று கோரி மனுதாரர்கள் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்காமல் டெல்லி உயர்நீதிமன்றம் நிராகரித்தது, தவறாகும் என்று இந்த கோர்ட் கருதுகிறது.
o தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையரின் அறிக்கை மற்றும் பல்வேறு ஆவணங்களின் அடிப்படையில் இந்த ஏலம் முற்றிலும முறைகேடாக நடந்திருப்பதையும் இந்த கோர்ட் உறுதிப்படுத்துகிறது.
o சிபிஐ மற்றும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் நடத்தவுள்ள விசாரணையின்போது இந்த 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு நடைமுறையால் நாட்டுக்கு எவ்வளவு நஷ்டம் ஏற்பட்டது என்பதையும் தெளிவாக கண்டுபிடிக்க வேண்டும்.
o நீரா ராடியா பேசிய பேச்சுக்கள் அடங்கிய தொலைபேசி உரையாடல் பதிவுகள் அனைத்தையும் வருமான வரித்துறை உடனடியாக சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும்.
பாஜக ஆட்சி மோசடிகளும் அம்பமாகும்
2001 முதல் விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது பாஜகவுக்கு பெரும் பாதகமாக அமையும். 2001 முதல் நடந்த நடைமுறைகள் விசாரிக்கப்படும்போது பாஜக ஆட்சிக்காலத்தில் அமைச்சர்களாக இருந்த அருண் ஷோரி, பிரமோத் மகாஜன் ஆகியோர் எடுத்த முடிவுகள், அவர்கள் கடைப்பிடித்த நடைமுறைகள், அதனால் ஏற்பட்ட நஷ்டங்களும் அம்பலத்திற்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
மொத்தத்தில் நாட்டின் இரு பெரும் கட்சிகளான காங்கிரஸும், பாஜகவும், 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் எந்த அளவுக்கு களங்கப்படப் போகின்றன என்பதை வரும் நாட்களில் நாடு அறிய வரும்.
”எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே…..” எனும் பாடலுக்கு விரைவில் பதில் கிடைத்தால் நாட்டிற்கு மகிழ்ச்சிதான்.