அஸ்ஸலாமு அலைக்கும், அன்புள்ள சகோதரர்களே!
நம்மவர்களிடையே இணைய தளத்தை – வலைப்பூவை சமூகத்திற்கு பயன்தரும் – ஆரோக்கியமான அரசியல் விவாதங்களுக்கு பயன்படுத்தும் முறை கொஞ்கம் கொஞ்சமாக சீரழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
சீரழிப்பவர்கள் யார் தெரியுமா? முஸ்லிம்களாக – மூமின்களாக – தவ்ஹீதுவாதிகளாக – கழகக்கண்மனிகளாக – கொள்கைச்சகோதரர்களாக – தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளும் சில சகோதரர்கள்தான்!
கருத்து வேறுபாடுகள் இருப்பது மனித இயல்பு – அதனால்தான் இஸ்லாம் சகிப்புத்தன்மையை இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்றாக உயர்த்திக் கூறுகிறது. மாற்றுமதத்தவரிடமும் – பிராணிகளிடம் கூட அன்போடு – கருனையோடு நடக்க அறிவுறுத்திய அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அறிவுரையை – இயக்கத்தின் மீதுள்ள அதீதப்பற்றும் – இயக்கத்தலைமையிடம் ‘நல்ல பெயர்’ வாங்கவேண்டும் என்ற அவாவும் – அலட்சியப்படுத்த காரணமாகிவிட்டது..
தற்பொழுது நடப்பது என்ன? அதீத இயக்கப்பற்றுள்ளவர்களையோ அல்லது அவர்களின் தலைவர்களை யாராவது விமர்சனம் செய்தால் – விமர்சனம் செய்பவர்களை தரம் தாழ்ந்த – கேவலமான வார்த்தைகளால் – அசிங்கப்படுத்தி ஒன்று அவர்களை அடுத்த முறை விவாதம் நடத்த விடாமல் செய்வது அதையும் மீறி நின்றால் அடுத்தது அந்த பக்கம் தலை வைத்து படுக்காமல் ஓடிவிடுவது. இந்த இரண்டு நிலையில் ஒன்றைதான் சில சகோதரர்கள் கடைப்பிடித்து வருகின்றனர்.
அதுமட்டுமல்ல, தான் சார்ந்த இயக்கத்திலுள்ளவர்களை மட்டும் புரட்சியாளர்களாகவும் – உண்மையாளர்களாகவும் – மாற்று இயக்கத்தினரை ‘வெத்து வேட்டுக்களாகவும்’ ‘போலிகளாகவும்’ கருதும் மணப்பாங்கையும் இயக்கப்பற்று வளர்த்துவிட்டது..
எது விவாவதம்? வெறுப்பை உமிழும் நெருப்பு வார்த்தைகளை எழுதுவது பேசுவது – ஜாஹிலியா கால ‘பிசாதுகளை’ பரப்புவது கூட தற்பொழுது ‘விவாதம்’ என்ற அந்தஸ்த்து பெற்றிருக்கிறது. நான் இரண்டு கண்களை இழந்தாலும் பரவாயில்லை – என் எதிரி ஒரு கண்ணையாவது இழக்கவேண்டும் என்ற எண்ணத்தில் பேசப்படும் – ஆபாசமான – இரட்டை அர்த்த – நக்கல் நரகல் நிறைந்த – வசவுகளும் விவாதம் என்ற அழைக்கப்படுகிறது. கொடுமையிலும் கொடுமையல்லவா இது!
தனிமனித தாக்குதல் மூலம் – பிறரை அவமானப்படுத்துவதையும்- அசிங்கப்படுத்துவதையும் முழுநேரப்பணியாக சில சகோதரகள் செய்துவருகிறார்கள். இன்னும் சிலர் ‘தவ்ஹீது’ தாதாக்களாக அவதாரமெடுத்து, எழுத்து வன்முறை மூலம் – விமர்சிப்பவர்களை தனிமைப்படுத்தி ‘ஸ்பெஷலாக’ கட்டம் ‘கட்டி’ – கவனித்து வருகிறார்கள்.
பொறாமை கொள்ளாதீர்கள், போட்டிப் போடாதீர்கள், ஒருவருக்கு ஒருவர் உற்ற சகோதரர்களாக இருங்கள். மற்றொரு முஸ்லிமுக்கு அநீதி இழைக்காதீர்கள் –
கொடுமை செய்யாதீர்கள் – மற்றொரு முஸ்லிமை கேவலமானவனாக கருதாதீர்கள் என்ற நபிமொழிகளை – கட்டுரை எழுதி புத்தகம் விற்கவும் – ‘பயான்’ செய்து ‘சிடி/விசிடி’ விற்கவும் பயன்படுத்தியதோடு – நம் ‘தலைவர்கள்’ அன்றாட வாழ்வில் கடைபிடித்து இயக்க உறுப்பினர்களுக்கு முன்னுதாரனமாக நடந்திருந்தால் – ‘குழாயடிச்சண்டைகளுக்கு’ சவால்விடும் நம் குழுச்சன்டைகளை தவிர்த்திருக்கலாம்.
இறைவா! இயக்கப்பற்றிலிருந்து விடுவித்து இறைப்பற்றாளர்களாக மாற்றுவாயாக!
இறைவா! எங்கள் மனதில் இயக்க அச்சத்தை போக்கி – இறையச்சத்தை உண்டாக்குவாயாக!
இறைவா! எங்கள் உள்ளங்களில் சகோதரத்துவத்தையும் – சகிப்புத்தன்மையையும் வளர்ப்பாயாக! .ஆமின்.
தோழமையுடன்,
பிறைநதிபுரத்தான்
source: http://pirainathi-puram.blogspot.com