ஃபிர்அவ்னை பணியவைத்த வெங்காயம்!
செங்கம் அன்வர் பாஷா
இன்றைக்கு ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம்: எகிப்தை ஆண்டுவந்த ஃபிர்அவ்ன், தன் வாழ்நாளிலேயே தன் இறப்பிற்குப் பின், தன் உடல் அடக்கம் செய்யப்படும் இடத்தின் மீது இணையற்ற கட்டிடம் கட்டிவைத்து விடவேண்டும் என்று விரும்பினான். அந்த கட்டிடம், அழியாத சின்னமாக பல்லாயிரம் ஆண்டுகள் நிலைத்து நிற்க வேண்டுமானால், என்ன செய்ய வேண்டுமென்று, ஜின்களைக் கொண்டு மறைவான தகவல்களை அறிந்து சொல்லும் வல்லுனர்களின் ஆலோசனைப்படி கட்டிடம் கட்டத் தொடங்கினான்.
வானத்தின் கிரகங்களின் பெயர்ச்சிகளாலும், பூமியின் சுழற்சியால் நிகழும் தீமைகளினாலும், அந்த நினைவுச்சின்னம் எவ்வித சேதத்திற்கும் உள்ளாகி விடாமல் இருக்க, மிகவும் பாதுகாப்பான முறையில், எல்லாவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் அந்த வல்லுனர்கள் செய்தனர்.
ஃபிர்அவ்ன் இறந்தபின் அந்த கட்டிடத்தில் அவனை அடக்கம் செய்யப்பட்ட பின்பு, அவன் உபயோகித்த எல்லா பொருட்களையும் அந்த கட்டிடத்தில் வைக்க வேண்டும் என்றும், அவனுக்கு இரவு பகலாக பணிவிடைப் புரிந்த வேலைக்கார அடிமைப்பெண்களையும் அங்கேயே புதைத்துவிட வேண்டும் என்றும் அவன் உயிருடன் இருக்கும்போதே முடிவு செய்யப்பட்டது. ஏனென்றால், ஃபிர்அவ்னின் மறுபிறவியில்(!) அந்த அடிமைப்பெண்களும், பொருட்களும் அவனுக்கு உபயோகமாக இருக்கும் என்று கருதப்பட்டது.
ஃபிர்அவ்ன், தன் கல்லறை அமையப்போகும் இடத்தின் மீது அழியாச் சின்னத்தை கட்டும் பணியில், ஒரு லட்சம் வேலையாட்களை அமர்த்தியிருந்தான். அவர்கள் இரவு பகலாக வேலையில் ஈடுபட்டிருந்தனர். ஆயிரக்கணக்கான மைல் தூரத்திலிருந்து எல்லாம் மலைகளை வெட்டி பெரிய பெரிய கற்கள் கொண்டு வரப்பட்டன.
கட்டிடம் சிறிது சிறிதாக பூமியின்மேல் எழும்பத்தொடங்கியது. இந்த ஒரு லட்சம் தொழிலாளர்களுக்கும் கூலியாக காலையிலும், மாலையிலும் ரொட்டி மட்டும் உணவாக அளிக்கப்பட்டு வந்தது. அங்கு வேலை செய்ய மறுக்கும் அடிமையை ஃபிர்அவ்னின் காவலர்கள், சவுக்கினால் அடித்து தோலை உரித்துவிடுவார்கள்.
இந்நிலையில் ஒருநாள், தொழிலாளர்கள் அனைவரும் வேலை செய்யாமல் ‘வேலைநிறுத்தம்’ செய்வதாக ஃபிர்அவ்னுக்கு செய்தி கிடைத்தது. இதைக்கேட்டு அதிர்ச்சியும், ஆத்திரமும் அடைந்த ஃபிர்அவ்ன், ‘திடீரென்று அவர்கள் அனைவருமே வேலைநிறுத்தம் செய்யக் காரணம் என்ன?’ என வினவினான்.
‘வேலையாட்களுக்கு காலையிலும் மாலையிலும் ரொட்டியும், உப்பும் அளிக்கப்பட்டு வருவதுடன் வெங்காயமும் சேர்த்து அளிக்கப்பட வேண்டும் என்று கேட்கிறார்கள். உணவுடன் வெங்காயம் அளிக்கப்படவில்லை என்றால், தங்கள் உயிரை விட்டுவிடுவோமே தவிர கட்டிடம் கட்டும் பணியில் ஈடுபட மாட்டோம் என்று உறுதியடன் கூறுகின்றனர்’ என்று அவனிடம் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதைக்கேட்டு திகைத்துவிட்ட ஃபிர்அவ்னுக்கு, தனக்கு அழியாப் புகழைத்தேடித்தரும் இந்த நினைவுச்சின்னம் எழுப்பும் பணியில், தொழிலாளர்களின் இந்த வேண்டுகோள் ஒன்றும் பெரிய விஷயமில்லையென்று தோன்றியது. உடனே, தொழிலாளர்களுக்கும் தவறாமல் வெங்காயம் அளிக்கப்பட வேண்டும்’ என்று கட்டளையிட்டான்.
இவ்வாறு உலகிலேயே முதன்முதலாக நடத்தப்பட்ட ‘வேலைநிறுத்தம்’ உடனே முடிவுக்கு வந்தது. எகிப்தைச் சேர்ந்த பழைய வரலாற்று ஆய்வாளர்கள், “இந்த வெங்காயம் இல்லாதிருந்தால், உலகில் தோன்றிய முதலாவது உலக அதிசயங்களான ‘பிரமிடுகள்’ தோன்றியே இருக்காது” என்று கூறியுள்ளனர். 480 அடி உயரம் கொண்ட கற்களாலான இந்த மாபெரும் கட்டிடம் கட்ட, மொத்தம் இருபது ஆண்டுகள் பிடித்தன. மனிதனால் உருவாக்கப்பட்ட இந்த கட்டிடத்திற்கு இணையாக அந்த காலகட்டத்தில் வேறு கட்டிடம் இருக்கவில்லை.
வெறும் தோல் தானா வெங்காயம்!
உலகம் முழுவதுமுள்ள எல்லா மக்களாலும் வெங்காயம் உபயோகப்படுத்தப்படுகிறது. வெங்காயம் இல்லாத சமயலே இல்லை என்று சொல்லுமளவிற்கு அது பலவகையில் சமைத்து உண்ணப்படுகிறது. ஐயாயிரம் ஆண்டு;ளுக்கு மேலான பழமை வாயந்த இந்த தாவரத்தினால் நமக்கு என்ன நன்மை கிடைக்கிறது என்று நாம் முழுமையாக அறிந்து கொள்ளாததுதான் வியப்பு!
பெரும்பாலானவர்கள், ‘வெங்காயத்தில் வெறும் தோல்தான் உள்ளது. சதைப்பகுதியே இல்லாத வெங்காயத்தை உரிக்க, உரிக்க கடைசியில் தோல்தான் எஞ்சியிருக்கும், இதில் பெரிதாக என்ன பலன் கிடைத்துவிடப் போகிறது?’ என்று எண்ணிக் கொண்டுள்ளனர். ‘உலகிலுள்ள அனைத்துவகைக் கீரைகளும், பூண்டுகளும் மறைந்து விட்டு வெறும் வெங்காயம் மட்டும் எஞ்சியருந்தால் கூட உலக மக்களுக்கு எவ்வித குறையும் ஏற்பட்டுவிடாது! ஏனெனில், அவ்வளவு சத்தும் வெங்காயத்தில் உள்ளது என்று உலக விஞ்ஞானிகளும், மருத்துவர்களும் கூறுகின்றனர்.
தொடரும் வெங்காயம் குறித்த ஆராய்ச்சி!
ஆரம்பத்தில் காட்டுவெங்காயம், நாட்டுவெங்காயம் என்று இரு வகைகள் மட்டும்தான் இருந்தன. ஆனால் இன்றோ, 2,500 க்கும் மேற்பட்ட ரகங்கள் ஆராய்ச்சியாளர்களால் இனம் காணப்பட்டுள்ளன. உலகின் முன்னேறிய நாடுகளில் வெங்காயம் குறித்த ஆராய்ச்சி இன்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. புதுப்புது வகையான ரகங்களும் வந்து கொண்டுதான் இருக்கின்றன. வெங்காயத்தில் புகழ் பெற்றவை வெள்ளை, சிகப்பு, மஞ்சள் நிறங்களாகும்.
உலகில் வெங்காயத்தின் பிறப்பிடம் ஆசியா கண்டத்தின் மையப்பகுதியாகும். ஆரம்பத்தில் இது உண்ணும் பொருளாகவே மதிக்கப்படவில்லை! இதன் பலன்கள் சிறிது சிறிதாக அறியப்பட்ட பின்புதான் இதன் அருமையை மக்கள் உணர ஆரம்பித்தனர். இதை சமையலில் சேர்த்துக் கொள்வதைவிட, ஆயிரக்கணக்கான மருந்துகள் தயாரிக்க அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. ஏராளமான பணம் செலவு செய்து தயாரிக்கப்படும் மருந்துகளில் குணமடையாத நோய்கள், வெங்காயத்திலிருந்து தயாரான மருந்துகளினால், மிக எளிதில் குணமடைந்து விடுகின்றன.
மகாகவி அல்லாமா இக்பாலும் வெங்காயமும்!
மகாகவி டாக்டர் அல்லாமா இக்பால் அவர்கள் ஒருமுறை டெல்லி சென்றிருந்தார். ‘மஸீஹுல் முல்க்’ என்று அழைக்கப்பட்ட நாடறிந்த வைத்தியர், ஹகீம் அஜ்மல் கான் அவர்களின் வீட்டில் தங்கியிருந்தார். அது குளிர்காலமாக இருந்தது. நடுஇரவில், அல்லாமா இக்பால் அவர்களுக்கு கடுமையான காது வலி. தன்னுடன் வந்திருந்த உதவியாளரை எழுப்பி ஹகீம் அஜ்மல் கானிடம் விஷயத்தை சொல்லச் சொன்னார். கேள்வி பட்ட ஹகீம் சாகிப் உடனே, ஒரு பாட்டிலில் சில மருந்துத்துளிகளை ஊற்றி ‘இந்த மருந்தை சிறிதளவு சூடேற்றி பிறகு அல்லாமா இக்பால் அவர்களின் காதில் விடவும்’ என்று சொல்லி அனுப்பினார். அதுபோலவே செய்யப்பட்டது. அடுத்த சிறிது நேரத்தில் காதுவலி நீங்கி அவர் சுகமாக தூங்க ஆரம்பித்து விட்டார்.
அடுத்த நாள் காலை ஹகீம் சாகிபிடம் ‘நீங்கள் அனுப்பிய மருந்தை காதில் போட்டவுடன் வலி மாயமாய் மறைந்து விட்டது. நிச்சயமாக அது அரிய மருந்தாகத்தான் இருக்க வேண்டும்’ என்று அல்லாமா இக்பால் பாரட்டும் போது, புன்முறுவல் பூத்த ஹகீம் அஜ்மல்கான், ‘அது ஒன்றும் பெரிய பொருளில்லை, வெறும் வெள்ளை வெங்காயத்தின் சாறுதான்’ என்றார்.
இரத்தக் கொதிப்பிற்கும், இதயநோய்க்கும், வெங்காயமும் பூண்டும் கண்கண்ட மருந்துகளாகும். மரணமடையப்போகும் மனிதனையும் பிழைக்க வைக்கும் சக்தி இவைகளுக்கு உண்டு என்கின்றனர் மருத்துவர்கள்.
இரவில் தூக்க மாத்திரை உபயோகிக்கும் பழக்கமுள்ளவர்கள், வெங்காயச் சாற்றின் கஷாயத்தை தொடர்ந்து சில நாட்கள் குடித்து வந்தால், தூக்கமில்லாமை அறவே நீங்கிவிடும். மாத்திரைகளக்கு வேளையே இருக்காது.
ஃபிரான்ஸின் தேசிய பானம் வெங்காய சூப்!
வெங்காயம் இரத்தத்தை சுத்தகரிக்கும் தன்மை கொண்டது. ஃபிரான்ஸில் ‘வெங்காயசூப்’ தேசிய பானமாகக் கருதப்படுகிறது. அந்த நாட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கு வெங்காயசூப் பரிமாறாத ஹோட்டல்களே இல்லை எனலாம். அங்கு வெங்காய சூப்பைக் கொண்டுதான் உணவு உண்ணத் தொடங்குகின்றனர். இதன் காரணமாக ஃபிரான்ஸில் மற்ற ஐரோப்பிய நாடுகளைவிட இதய நோய்கள் மிகவும் குறைவாக உள்ளது.
ஃபிரான்ஸில் 1912 ஆம் ஆண்டு தொடங்கி வெங்காயத்தைப் பற்றிய ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. அங்க இதுவரை 500 க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகள், நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இரண்டாவது உலகப்போரின்போது, ரஷ்யாவின் மருத்துவர்கள், போரில் காயமடைந்த வீரர்களின் காயங்களுக்கு பச்சை வெங்காயத்தைக் கொண்டு மருத்துவம் செய்தார்கள். காயத்தின் மீது வெங்காயம் வைத்து கட்டு போட்டு விடுவார்கள். இரண்டு நாட்களுக்குள்ளாகவே காயங்கள் ஆறி, குணமாகிவிடும்.
தொண்டைச்சதை வளர்ச்சி, கக்குவான் இருமல், சுவாசகாசம், நுரையீரல் பாதிப்பு, ஒவ்வாமை, நீரழிவு, தலைவலி, மூலம், குடல்புண் முதலிய நோய்களுக்கு பலவிதமான முறையில் அரிய நிவாரணியாக வெங்காயம் திகழ்கிறது.
விஷத்தைப் போக்கும் வெங்காயம்!
விஷ வண்டு கடித்தால் வெங்காயநீர் குணமாக்குகிறது. பாம்பு, தேள், பூரான் போன்ற விஷ ஜந்துக்களின் கடிகளுக்கு, கடிபட்ட இடத்தின் மீது வெங்காயச் சாற்றில், நவச்சாரம் கலந்த கலவையை தடவினால் சில நிமிடங்களிலேயே வலி நீங்கி குணமாகிவிடும்.
நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் காலத்தில், ‘பனீ இஸ்ராயீல்கள்’ வெங்காயத்தை மிகவும் விரும்பி உண்ட வந்தனர். மத்திய மேற்கு நாடுகள் அனைத்திலும் வெங்காயமும், பூண்டும், அரசன் முதல் ஆண்டி வரை அனைவரும் விரும்பி சாப்பிட்டனர்.
வெங்காயமும் முஸ்லீம் மன்னர்களும்!
அரேபியாவில் பேரிச்சம் பழத்திற்கு அடுத்தபடியாக, வெங்காயமும் பூண்டும் விருப்ப உணவாக உள்ளது. உலகின் பாதி நிலப்பரப்பு அப்பாஸிய கலீஃபாக்களின் கீழ் இஸ்லாமிய ஆட்சி இருந்த நேரத்தில், விதவிதமான வெங்காயங்களின் தரத்தைப் பற்றி ஆய்வுகள் நடைபெற்றன. அபூநஸர் ஃபாராபியும், அபூஅலீசீனா போன்ற உலகப் புகழ்பெற்ற மருத்துவர்கள் வெங்காயத்தின் அருமையைப்பற்றி விரிவாக எழுதியுள்ளனர்.
முஸ்லீம் மன்னர்கள் வெங்காயம், பூண்டு ஆகியவற்றில் காணப்படும் துர்நாற்றத்தைப் போக்கக்கூடிய வழிமுறைகளை கண்டுபிடிக்கும்படி தங்கள் ஆஸ்தான வைத்தியர்களை பணித்தனர். கலீஃபா ஹாரூன் அர்ரஷீது மற்றும் மாமூன் அர்ரஷீது ஆகியோரின் காலங்களில் வெங்காய முரப்பாக்களும், ஊறுகாய்களும், கலீஃபாக்கள் விரும்பி உண்ணும் ருசிமிக்க வெங்காயக் குழம்புகளும், வகை வகையாகத் தயாரிக்கப்பட்டன.
1596 ஆம் ஆண்டில், ஐரோப்பாவில் முதன் முதலாக நாட்டு மருந்துகளைப்பற்றி விரிவான ஒரு நூல் வெளியிடப்பட்டது. அதில் அரபி மற்றும் யுனானி நூல்களில் குறிப்பிடப்பட்டிருந்த மருத்துவ வகைகளைப் பற்றியும் சேர்க்கப்பட்டிருந்தது.
தலை வழுக்கைக்கு அருமையான மருந்து வெங்காயச்சாறு ஆகும். அதை தலையில் தொடர்ந்து தேய்த்து வந்தால், ரோமம் மறுபடியும் வளரத் தொடங்கும். வெறிநாய்க் கடிக்கு உடனடியாக குணம் காண வெங்காயம் ஒன்றே போதுமானது என்று அந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முகலாய மன்னர்களும், தங்கள் உணவு வகைகளில் வெங்காயத்தை பலவிதங்களில் சேர்த்துக் கொண்டனர். ‘ஒரு காலத்தில், எனக்கு உண்ண எதுவுமே கிடைக்காத நேரத்தில், வெறும் வெங்காயமும், தேனையும் கொண்டு என் பசியை ஆற்றிக் கொண்டேன். சுவை மிகுந்த உயர்ந்த உணவு வகைகளில் கிடைக்காத புத்துணர்ச்சியும் பலமும், அவை இரண்டும் எனக்குத் தந்தன’ என்று பேரரசர் பாபர் தனது சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார்.
மருத்துவ அகராதியில் (என்சை குளோபீடியா ஆஃப் மெடிஸன்) வெங்காயத்தைப் பற்றிய ருசிகரமான தகவல்களும், சமீபத்திய ஆராய்ச்சிக்குறிப்புகளும் பதிவாகியுள்ளன. அதில் சில குறிப்பகள் கிருமிகளை அழிக்கும் வல்லமை மற்ற காய்கறிகளை விட, வெங்காயத்தில் அதிகமாக உள்ளது. தொடர்ந்து வெங்காயம் உட்கொள்வதால் இரத்தத்திலுள்ள அமிலத்தன்மை நீங்கிவிடுகின்றது. அதிகமாகிவிட்ட இரத்த அழுத்தத்தை வெங்காயம் குறைத்து சம அளவில் வைக்கிறது. இதயத்திலுள்ள இரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்புகளை கரைத்து, மாரடைப்பு ஏற்படுவதை வெங்காயம் தடுத்து விடுகிறது.
இங்கிலாந்தில் உள்ள மருத்துவமனைகளில் இதய நோயாளிகளுக்கு, சிலநாட்கள் வரை வெங்காயம் கலந்த உணவுகளை அளித்து குணமாக்குகிறார்கள். இனிமையாக பாடுவதற்காக, பாடுகிறவர்களின் தொண்டை பக்குவப்படுவதற்கும் வெங்காயம் உதவுகிறது.
வெங்காய அன்பளிப்பு!
ஐரோப்பிய நாடுகளில் ஒருவர் மற்றொருவருக்கு வெங்காயத்தையே அன்பளிப்பாக அனுப்பி வைக்கும் பழக்கம் உள்ளது. (நாமும் இதைப்பின்பற்றி ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சைப்பழங்களை அன்பளிப்பாக கொண்டு செல்லும் பழக்கத்தோடு வெங்காயத்தையும் அன்பளிப்புப் பொருளாக கொடுக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம் – எல்லாம் ஒரு சேஞ்சுக்கத்தான் என்று சொல்வதைவிட மற்ற பழ வகைகளை விட வெங்காயம் விலை மலிவு(!) என்றாலும் பலன் அதிகமாயிற்றே! ஆரம்பத்தில் வினோதமாகப் பார்க்கப்பட்டாலும் போகப்போக பழக்கமாகிவிடும்.) அதோடு, ஐரோப்பிய நாடுகளில் வேலை செய்வதற்கு கூலியாகக்கூட வெங்காயம் கொடுக்கப்பட்டு வந்தது. இதிலிருந்தே வெங்காயத்தின் அருமையும் பெருமையும் அறிய முடிகிறது.
நாமும் அதை சரியான முறையில் பயன்படுத்தினால், நீண்டநாள் நோய்நொடி இல்லாமல் நிம்மதியாக வாழலாம். இறைவன் அருள்புரிவானாக.