Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

ஹிஜ்ரத் தரும் படிப்பினைகள்

Posted on December 17, 2010 by admin

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்காவை விட்டு மதீனாவை நோக்கிப் பயணப்பட்டு, மக்காவில் உருவாக்கிய பத்தரை மாற்று தங்கங்களான, உத்தம தோழர்களைக் கொண்டு உலகம் கண்டிராத ஒரு சமூத்தை உருவாக்கி அதன் மூலம் இறையாட்சியை ஏற்படுத்துவதற்கு ஒரு நிலம் தேடிப் புறப்பட்டு 1431 ஆண்டுகள் கடந்து விட்டன. இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எந்த நோக்கத்திற்காக மக்காவை விட்டு மதீனா நோக்கிச் சென்றார்களோ அந்த நோக்கம், இன்றைக்கும் உணரப்படாத நிலை முஸ்லிம்களிடத்திலே காணப்படுவது வேதனைக்குரியது.

இஸ்லாமியப் புத்தாண்டு கொண்டாடுவதற்கல்ல!

கிறிஸ்தவர்களும், யூதர்களும் மற்றுமுள்ள மதத்தவர்களும் தங்களது புத்தாண்டை மிகவும் கோலாகலமாகக் கொண்டாடி வருவது போன்று, நாமும் கொண்டாடுவதற்காக இந்த புத்தாண்டு வருவதில்லை. மாறாக, நம்மீது மிகப் பெரியதொரு சுமையைத் தாங்கி வருகின்றது என்பதை அனைத்து முஸ்லிம்களும் உணர்ந்து கொள்ள வேண்டும். வெறுமனே புத்தாண்டு வாழ்த்துக்கள், அல்லது நாம் வசிக்கும் அரபு நாடுகளிலே கூறுவது போல ‘குல்லு ஆம் வ அன்தும் பி ஃஹைர்’ என்று சொல்வதற்காக மட்டும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஹிஜ்ரத் நடைபெறவில்லை.

மாறாக, இஸ்லாத்தை வாழ்விப்பதற்கு ஒரு நிலம் தேவை. அந்த இஸ்லாத்தைப் பூரணமாகப் பின்பற்றுகின்ற மனிதர்கள் தேவை என்ற அடிப்படையில் தான் மக்காவை விட்டு மதீனாவுக்கு இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் புறப்பட்டார்கள். எந்த நோக்கத்திற்காக அவர்கள் பயணப்பட்டார்களோ, அந்த நோக்கத்தை அவர்கள் அடைந்து சாதனைகளைச் சாதித்தும் காட்டினார்கள். அந்த சாதனையைத் தான் இஸ்லாமிய சமூகம் என்று வரலாற்றின் பக்கங்கள் இன்றளவும் அழைத்துக் கொண்டிருக்கின்றன.

இன்றைக்கு அந்தச் சமூகம் எங்கே என்று தேடிப்பிடிக்கக் கூட நாதியற்ற சமூகமாக இந்த முஸ்லிம் சமூகம் மாறி விட்டது. வேரை மறந்த மரங்கள் வாழ்வது கடினம். எந்த சமுதாயம் தன்னுடைய வேரைத் தொலைத்து விட்டதோ, அந்த சமுதாயம் விரைவில் தன்னையும் தொலைத்து விடும் என்பது மரபு. தன் கடந்த கால வரலாற்றை மறந்த சமூகம் எதிர்கால வரலாற்றை படைக்க முடியாது எனும் கூற்றுக்கேற்ப ஹிஜ்ரத்தின் சுருக்கமான வரலாற்றையும் அதிலிருந்து பெற வேண்டிய படிப்பினைகளையும் பார்வையிடுவோம்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இப்பூமிக்கு கொண்டுவந்த தீன் வெறுமனே தனி மனிதர்களை உருவாக்குவது மாத்திரமல்ல, மாறாக தனி மனிதர்களையும், அவர்களின் வழியாக குடும்பங்களையும், சமூகத்தையும் இஸ்லாமிய அடிப்படையில் சமைப்பதுமே ஆகும். மக்காவில் இருந்து தனிப்பட்ட கிரியைகளை செய்வதற்கு ஓரளவு சுதந்திரம் இருந்த போதிலும் தீன் முழுமையாய் நிலைநாட்டப்பட அச்சூழல் போதுமானதாக இல்லாததால் நபிகள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்

அவர்கள் மக்காவிலிருந்து மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்ய நாடினார்கள்.

முதலாவதாக அபூஸலமா ரளியல்லாஹு அன்ஹு அவர்களும், அவரை தொடர்ந்து உமர் ரளியல்லாஹு அன்ஹு உள்ளிட்ட பிற ஸஹாபாக்களும் ஒவ்வொருவராக ஹிஜ்ரத் செய்ய ஆரம்பித்தனர். கொஞ்சம் கொஞ்சமாக மக்காவை விட்டு வெளியேறிய முஸ்லிம்கள் இன்று மதீனாவில் ஒன்று கூடி ஒரு சமுதாய அமைப்பைத் தோற்றுவித்துக் கொண்டிருப்பது குறைஷிகளுக்கு மிகப் பெரிய கலக்கத்தை ஏற்படுத்தியது மட்டுமின்றி;, அதனை எந்த வகையில் தடுத்து அழிப்பது என்பது பற்றியும், இன்னும் அதன் மூல வேர் நம்முடன் தான் இருக்கின்றது, இந்த மூல வேரை அழித்து விட்டால், முழு மரமும் சாய்ந்து விடும் என்பதை மனதில் கொண்டு, இதற்கான சதியாலோசனைக் கூட்டம் ஒன்றை ‘தார் அந்நத்வா’ என்ற இடத்தில் கூட்டினர்.

இன்றைக்கு நாம் சந்தித்துக் கொண்டிருக்கின்ற பிரச்னைகளில் இருந்து முற்றிலும் நாம் நீங்க வேண்டுமென்றால், முஹம்மதைக் கொல்வதைத் தவிர வேறு வழியில்லை. அவரைக் கொல்வதன் மூலமே நாம் இந்தப் பிரச்னையிலிருந்து முற்றிலும் விடுபட முடியும் என்று அந்தக் கூட்டத்தில் தீர்மானமாகியது. இந்தக் கொலையின் மூலம் வரும் எதிர்ப்புகள் மற்றும் இரத்த இழப்பீட்டுக்குப் பழிக்குப் பழி ஆகியவற்றிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கு, ஒவ்வொரு குலத்தாரிடமிருந்தும் ஒவ்வொரு பிரதிநிதிகளை நியமித்து, அவர்களைக் கொண்டதொரு கொலைப் படை ஒன்றை உருவாக்குவது என்று அந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

ஆனால் இறைவன் நபிகளாருக்கு இத்திட்டத்தை அறிவித்து கொடுத்து நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட அமானித பொருட்களை உரியவர்களிடம் திருப்பி கொடுப்பதற்காக அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்களை தன் படுக்கையில் படுக்க வைத்துவிட்டு அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுடன் மக்காவை துறந்து மதீனாவை நோக்கி கிளம்புகின்றார்கள். குறைஷிகள் காவல் காத்து கொண்டிருக்கும் நிலையிலேயே வீட்டின் தலை வாயிலின் வழியாகவே அல்லாஹ்வின் உதவியால் எதிரிகள் பார்க்கா வண்ணம் அவர்கள் முன்னாலேயே வெளியேறிச் சென்றார்கள். பின் தன் தோழருடன் சில நாட்கள் வேறு பாதையில் பயணம் சென்று கூபாவில் தங்கி பின் மதீனாவை வந்தடைந்தார்கள் என்பது தான் நபிகளாரின் சுருக்கமான ஹிஜ்ரத் வரலாறு. இதிலிருந்து நாம் பெற வேண்டிய படிப்பினைகளை ஒவ்வொன்றாய் சுருக்காமாய் நோக்குவோம்.

திட்டமிடல்

ஹிஜ்ரத் எதேச்சையாக நடந்த ஒன்றல்ல, மாறாக அது முழுக்க முழுக்க சரியான திட்டமிடலுடன் நடந்தது என்பதை நபியவர்கள் தாம் புலம் பெயரவிருப்பதை அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு தவிர மற்ற யாருக்கும் தெரியாமல் ரகசியமாய் வைத்திருந்தது, பயணத்தின் போது எதிரிகளை ஏமாற்ற மக்காவிலிருந்து மதீனாவுக்கு வழமையாய் செல்லும் பாதையில் அல்லாமல் வேறு பாதையில் சென்றது, உணவு கொண்டு வரும் பொறுப்பை அஸ்மா பின்த் அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு

அவர்களிடம் ஒப்படைத்தது என பல்வேறு நிகழ்வுகளை குறிப்பிடலாம். இலக்கில்லாமல் செல்லும் இன்றைய சமூகம் திட்டமிடலின் முக்கியத்துவத்தை உணர்ந்து தன் பாதையை திட்டமிட்டு செயல்பட வேண்டும்.

அல்லாஹ்வின் உதவி

திட்டமிடலில் கவனம் செலுத்திய போதும், அல்லாஹ்வின் உதவியை அதிகம் எதிர்பார்த்த நபிகளாரின் ஹிஜ்ரத்தின் போது அல்லாஹ் பல உதவிகளை செய்தான். உதாரணத்திற்கு தன்னை சுரகா என்பவர் துரத்தி வந்த போதும், எதிரிகளின் கண் முன்னே வந்த போதும், குகையில் நாம் இருவர் மாத்திரம் இருக்கிறோம் என்று அபுபக்கர் ரளியல்லாஹு அன்ஹு

கூறிய போது நம்மோடு அல்லாஹ் இருக்கிறான் என்று உறுதியாக கூறியது போன்ற சம்பவங்களின் மூலம் நம்மால் முடிந்த அனைத்து காரியங்களையும் செய்து, அல்லாஹ்வின் பால் பொறுப்பு சாட்டும் போது அவன் உதவ கூடியவனாக இருக்கிறான் என்பதை உணர வேண்டும்.

மஸ்ஜிதுந் நபவியின் பங்களிப்பு

இந்தப் பள்ளி அமைதியையும், மக்களை ஒருங்கிணைக்கக் கூடிய தளமாகவும், போர்ப் பாசறையாகவும், வெற்றித் தளமாகவும் திகழ்ந்தது. இறைத்தூதை பிற மக்களுக்கும், பிற நாட்டவர்களுக்கு அனுப்பி வைக்கக் கூடிய வெளியுறவுத்துறைச் செயலகமாகவும், இறைத்தூதைப் பெற்றுச் செல்வதற்காக இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பார்க்க வருபவர்களை வரவேற்கின்ற உள்துறைச் செயலகமாகவும் இந்தப் பள்ளி திகழ்ந்தது. இறைத்தூதைக் கற்றறிந்து கொண்டு, அதனைப் பிறருக்கும் போதிக்க வேண்டும் என்று ஆவல் கொண்ட மாணவர்களைப் பெற்றுக் கொண்ட பல்கலைக்கழகமாகவும், இரவும் பகலும் குர்ஆனைப் பற்றிச் சிந்திக்கக் கூடிய அதனைப் பற்றிய விவாதங்களில் ஈடுபடக் கூடிய கல்விக் கலாசாலையாகவும் இப்பள்ளி சிறப்புப் பெற்றது.

இன்னும் அன்ஸார்களும், முஹாஜிர்களும் தூர தேசங்களில் இறைத்தூதை எடுத்துச் வைக்கச் சென்ற நாட்களில் தங்களுக்கு நேர்ந்த அனுபவங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளக் கூடிய இடமாகவும் இப்பள்ளி திகழ்ந்தது. இன்னும் திண்ணைத் தோழர்கள் என்றழைக்கக் கூடிய இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தோழர்கள், தாங்கள் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் எதனைக் கற்றார்களோ, அதனை அப்பள்ளிக்கு வரக் கூடியவர்களுக்குக் கற்றுக் கொடுக்கக் கூடிய ஆசிரியர்களைப் பெற்ற பள்ளிக் கூடமாகவும் அப்பள்ளி திகழ்ந்தது. இஸ்லாமிய அழைப்பான ஜிஹாதிற்கு மக்களை அழைக்கும் பொழுது, தங்களது அனைத்து அலுவல்களையும் விட்டு விட்டு, உலக வாழ்க்கையின் அனைத்து சுகங்களையும் விட்டு, அந்த மறுமை வெற்றிக்கான அழைப்பாக அதனை ஏற்றுக் கொண்டு, உடனே மக்கள் கூடும் பாசறையாகவும் இந்தப் பள்ளி திகழ்ந்தது

புதிய ஓர் ஆண்டிற்குள் காலடி எடுத்து வைக்கும் நாம் மதீனத்து சமூகத்தில் பள்ளிவாசல் வகித்த பங்கை இன்றைய பள்ளிவாசல்கள் வகிக்கின்றனவா என்பது பற்றி சிந்தித்து விடை காண வேண்டும்.

சகோதரத்துவ கட்டுமானம்

ஹிஜ்ரத்தின் பின் நடைபெற்ற நிகழ்வுகளை உற்று நோக்கும் போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தான் கட்டி எழுப்பிய சமூகத்திற்கு முக்கியமான அடிப்படையாக கருதியது சகோதரத்துவமாகும். ஒரு முஃமின் கட்டடத்தை போன்றவன். அதன் ஒரு பகுதி அடுத்த பகுதிக்கு உரமூட்டும் எனும் ஹதீஸ{க்கு ஏற்ப நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்

உருவாக்கிய ஈமானிய சமூகத்தில் குறுகிய இன, வர்க்க, நிற வேறுபாடுகளோ அல்லது தேசிய, பிரதேச வாதங்களோ காணப்படவில்லை.

இஸ்லாமிய கொள்கையின் அடிப்படையில் ஒன்றுபடல் வேண்டும்

நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உருவாக்கிய சமூகம் தான் இன்று இஸ்லாத்தின் எதிரிகளால் முஸ்லீம்கள் மத்தியில் புகுத்தப்பட்ட இன, நிற, பிரதேச, தேசிய உணர்வுகளால் ஆட்சியையும், அதிகாரத்தையும் இழந்து, பண்பாடும் நாகரீகமும் சீர்குலைந்து நிற்கும் சமூகமாக மாறியுள்ளது. முஸ்லீம்கள் தாங்கள் இழந்த கண்ணியத்தை மீட்டெடுக்க முதலாவதாக தங்களுக்கிடையான வேறுபாடுகளை மறந்து இஸ்லாமிய கொள்கையின் அடிப்படையில் ஒன்றுபடல் வேண்டும்.

எனவே வரும் ஹிஜ்ரா நம்மை எதையும் திட்டமிட்டு செயல்படுபவர்களாகவும்,

அல்லாஹ்வின் உதவியை நாடி தம் வாழ்வை அமைத்து கொள்பவர்களாகவும்,

வெறும் தொழுகைக்காக மட்டுமின்றி முஸ்லீம்களின் எல்லா நிகழ்வுகளையும் ஒருங்கிணைக்கும் மிக முக்கிய கேந்திரமாக மீண்டும் நம் பள்ளிவாயில்களை செம்மைபடுத்துபவர்களாகவும்,

ஒரே இறைவன், ஒரே தலைவர், ஓரே மறை, ஓரே கிப்லாவை பின்பற்றும் நம் அனைவரும் நமக்குள் உள்ள சிறிய கருத்து வேறுபாடுகளுக்காக மோதிக் கொள்ளாமல்,

இஸ்லாமிய எதிரிகளின் சூழ்ச்சிகளுக்கு பலியாகாமல், ஒற்றுமையாய்,

மீண்டும் ஒரு மதீனத்து சமூகம் இம்மண்ணில் அமைய பாடுபடுபவர்களாகவும்,

அண்ணலார் இம்மார்க்கத்தை இம்மண்ணில் முழுமையாய் நிலை நாட்ட போராடியதைப் போல்,

நாமும் போராடுபவர்களாகவும் மாற்ற அல்லாஹ் உதவி செய்வானாக.

source: http://islamiyakolgai.blogspot.com/2010/12/blog-post.html

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

88 − 86 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb