இறைமறையும் இலக்கியமும்
உலகப் பொதுமறையாகத் திகழும் அல்குர்ஆனின் இலக்கிய நயம் பற்றி யாவரும் அறிவர். இலக்கிய நூல் என்பது எத்துறையைச் சார்ந்தவரும் எக்கோணத்தில் சிந்தித்தாலும் கருத்துக்களைத் தந்து கொண்டேயிருக்க வேண்டும். நீரூற்று போல் இலக்கியக் கருத்துக்கள் ஊரிக்கொண்டிருக்க வேண்டும். பல்வேறு இலக்கியச் சட்டங்களை உட்கொண்டிருக்க வேண்டும். அப்படியொரு நூலைத்தான் இலக்கிய நூல் என்ற கூற முடியும். அதற்கு தகுதி வாய்ந்த ஒரே நூல் அல்குர்ஆன் மட்டுமே.
பல்வேறு மொழிகள் உலகில் பரவியிருந்தாலும் அல்லாஹ் அரபி மொழியைத் தேர்ந்தெடுத்த காரணம் என்ன? பொதுவாக மற்ற மொழிகளைவிட அரபு மொழி வளம் நிறைந்த மொழியாகும். அதன் வடிவம் சொல்லமைப்பு வல்லின மெல்லின எழுத்துக்களின் ஓசை கேட்போரை வியக்க வைக்கும்.
இலக்கியத்தில் முதிர்ந்த அறிவிற்சிறந்த நுண்ணறிவுமிக்க அரபி கவிஞர்கள் பலரிடையே உரைநடையாகவும் இல்லாமல் கவிதையாகவும் இல்லாமல் புதுக்கவிதை வடிவில் அல்லாஹ் தன் திருமறையை இறக்கினான். அதனை செவியுற்றோர் அனைவரும் திகைத்தனர். வியப்பில் ஆழ்ந்தனர். இலக்கியங்களில் விஞ்சிய அவர்கள் இதுபோன்றதொரு சிறிய வசனத்தை கொண்டுவர இயலாமலாகிவிட்டார்கள்.
இலக்கியச்சுவைமிக்க எத்தனையோ வசனங்களை திருக்குர்ஆனில் காணலாம். அல்லாஹ் தனது திருமறையில் ‘அந்தப் பெண்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அப்பெண்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள்’ (அல்குர்ஆன், ஸூரத்துல் பகரா : 187) என்று கூறுகிறான்.ஆடையில்லா மனிதன் அரை மனிதன். உலகில் வாழக்கூடிய ஒவ்வொரு மனிதனுக்கும் ஆடை அவசியம். ஏனெனில் ஒவ்வொருவரும் வெட்க சுபாவத்துடன் படைக்கப்பட்டுள்ளனர். அதேபோல உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனும் ‘பெண்’ என்ற ஆடையின்பால் தேவைப்படுகிறான்.
ஏனெனில் மனிதர் யாவரும் ஆசை, இச்சை எனும் இயல்புடனேயே படைக்கப்பட்டுள்ளனர். எனவே கண்டிப்பாக அவனுக்கு பெண் என்ற ஆடை தேவைப்படுகிறது. அதுபோலவேதான் பெண்களுக்கும் ஆணுடைய தேவை அவசியம். இந்த கருத்தைத்தான் அல்லாஹ் தன் திருமறையில் ஒருவர் மற்றவருக்கு ஆடை என்று இலக்கிய நயத்துடன் சூசகமாக சொல்லிக்காட்டுன்கிறான்.
ஆடை மனிதனுக்கு அழகு தருகிறது. அது ஒவ்வொருவருடனும் இணைந்தே இருக்கிறது. அது போல் கணவன் மனைவி இருவரும் பின்னிப்பிணைந்து ஒன்றினைந்து ஆடையைப் போல் இணைபிரியாமல் வாழ வேண்டும்.
துணியாலான ஆடையைத்தான் நாம் அணிகின்றோம். துணி தயாராவதற்கு நூல் தேவை. நூல் குறுக்கும் நெடுக்குமாக நெருக்கமாகப் பின்னப்பட்டே துணி தயாராகிறது. அந்த துணியிலிருந்தே ஆடை தயாராகிறது. எப்படி ஒரு ஆடை தயாராவதற்கு நூலை பின்னிப்பிணைந்து இணைக்கின்றோமோ அதுபோல் கணவன் மனைவியும் ஒருவருக்கொருவர் பின்னிப்பிணைந்து நெருக்கமாக வாழ வேண்டும் என்பதை நாசூக்காக இத்திருவசனம் சுட்டிக்காட்டுகிறது. அதுமட்டுமின்றி நூலை பின்னிப்பிணைந்து நெய்தால் தான் அது ஆடையாக உருமாறும். இல்லையெனில் அது வெறும் நூல் மட்டுமே! அதுபோல கணவன் மனைவி நெருக்கமாக வாழ்ந்தால் தான் வாழ்க்கை. இல்லையெனில் அது வீண்.
ஒவ்வொரு மனிதனும் தன் வசதிக்கேற்ப, தகுதிக்கேற்ப தன் சுயவிருப்பப்படி ஆடையை தேர்ந்தெடுக்கின்றான். தரமற்ற ஆடையை நீக்கிவிடுகின்றான். இது போல் தான், ஒவ்வொரு மனிதனும் தனக்கு விருப்பமான, தன் தகுதிக்கேற்ற பெண்ணைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
ஒரு மனிதன் தீயவழியில் செல்லாமல் தடுக்க அவனது ஆடை உதவுகிறது. காவலர் தன் சீருடையுடன் வெளிப்படையவாக மது அருந்த முடியாது. இராணு வீரர் சீருடையுடன் அந்நிய வேலை செய்ய முடியாது. ஓர் ஆலிம் ஜிப்பா தலைப்பாகையுடன் இஸ்லாத்திற்குப் புறம்பான காரியங்களில் ஈடுபட முடியாது. இப்படி ஆடையே ஒரு மனிதன் தவறிலிருந்து தவிர்த்துக்கொள்ள காரணமாகிறது.
ஒரு மனிதன் மணமுடித்தபின் தீய காரியங்களில் ஈடுபடமாட்டான். எனவேதான் மணமுடிக்க கட்டளையிடப்படுகின்றான். தன் மனைவி மூலம் விபச்சாரம் போன்ற தீய காரியத்திலிருந்து தவிர்ந்து கொள்கிறான். இதுபோல் ஒரு மனிதன் தன் சீருடையின்றி தவறில் ஈடுபடும்போது மனிதர் எவரும் அவனைக் கண்டுகொளவதில்லை, பெரிதுபடுத்துவதும் இல்லை. சீருடை அணிந்துகொண்டு தவறிழைத்தால் மக்களால் ஏளனம் செய்யப்படுகிறான்.
இதுபோன்றே மனைவி என்ற சீருடை இல்லாதவன் விபச்சாரத்தில் ஈடுபட்டால் நூறு சவுக்கடி என்றும் மனைவி இருந்தும் விபச்சாரத்தில் ஈடுபட்டால் கல்லடித்து கொல்லவேண்டும் என்றும் இஸ்லாம் கூறுகிறது. இதுதான் சீருடையின் இரகசியம்.
ஒருவர் ஆடையை மற்றொருவர் அணிய முடியாது. மீறி அணிந்தால் ஆடைக்குறியவன் கோபப்படுவான். அதுபோல் தன் மனைவியை அடுத்தவன் அனுபவிப்பதை எந்த கணவனும் ஏற்றுக் கொள்ளமாட்டான். ஒருவன் தன் ஆடையைவிட்டு அடுத்தவன் ஆடையை நோக்க காரணம் என்ன? எப்போது அடுத்தவர் ஆடையின்மீது ஒருவனுக்கு ஆசைவரும்? தன் ஆடை மூலம் தன் தேவை பூர்த்தியாகாத போதுதான் அடுத்தவர் ஆடைமீது மோகங்கொள்வான். தன் ஆடை மூலம் தன் தேவை பரிபூர்ணமாகிவிட்டால் அடுத்தவர் ஆடையை நினைக்கவும் மாட்டான்.
இதுபோன்றே ஒரு கணவனுக்கு கிடைக்க வேண்டிய சுகம் தன் மனைவியிடம் கிடைத்துவிடும்போது அடுத்த பெண்ணை ஏறிட்டுக்கூட பார்க்க மாட்டான். அதே போல் ஒரு மனைவிக்கு கிடைக்க வேண்டிய சுகம் தன் கணவனிடத்தில் கிடைத்துவிட்டால் அடுத்த ஆடவனை மனதில் நினைக்க மாட்டாள்.
இப்படி ஒரு வசனத்தை வைத்து ஏராளமான கருத்துக்களை நாம் உணர முடியும். இது ஒரு சாம்ப்பிள் தான். சிந்திக்க சிந்திக்க கருத்துக்கள் வந்து கொண்டே இருக்கும்.
முன்பே சொன்னது போல், ஆடை மனிதனுக்கு அழகு தருகிறது. அது ஒவ்வொருவருடனும் இணைந்தே இருக்கிறது. அது போல் கணவன் மனைவி இருவரும் பின்னிப்பிணைந்து ஒன்றினைந்து ஆடையைப் போல் இணைபிரியாமல் வாழ வேண்டும். அல்லாஹ் நல்லருள் புரிவானாக.
நன்றி: மனாருல் ஹுதா, நவம்பர் 2000