[டெல்லியிலுள்ள அமெரிக்க தூதரகத்திலிருந்து வாஷிங்டனிற்கு அனுப்பப்பட்ட சில தூதரக கடிதங்களை விக்கிலீக்ஸ் இணையத் தளம் வெளியிட்டுள்ளது.]
இந்தியாவில் வாழும் வாழும் முஸ்லீம்களுக்கு எதிராக அரசியல் மோதலையும், மத பதற்றத்தையும் உருவாக்கும் இந்து தீவிரவாத குழுக்களே இந்தியாவிற்கு பெரும் அச்சுறுத்தல் என்று காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல் காந்தி தன்னிடம் கூறியதாக இந்தியாவிற்கான அமெரிக்கத் தூதர் திமோதி ரோமர் வாஷிங்டனிற்கு செய்தி அனுப்பியுள்ளார்.
டெல்லியிலுள்ள அமெரிக்க தூதரகத்திலிருந்து வாஷிங்டனிற்கு அனுப்பப்பட்ட சில தூதரக கடிதங்களை விக்கிலீக்ஸ் இணையத் தளம் வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவிற்கான அமெரிக்கத் தூதர் திமோதி ரோமர், அமெரிக்க அயலுறவுச் செயலர் ஹில்லாரி கிளிண்டன் இந்தியாவிற்கு வந்திருந்தபோது அவருக்கு அளிக்கப்பட்ட விருந்தில் தன்னிடம் பேசியபோது ராகுல் காந்தி இவ்வாறு கூறியதாக அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
“பாகிஸ்தானில் இருந்து செயல்படும் பயங்கரவாத குழுக்கள் நடத்தும் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்க எங்கள் நாட்டில் வளர்க்கப்படும் தீவிரவாதம் கவலையளிக்கிறது, அதனை உடனடியாக கண்டுகொள்ள வேண்டிய கட்டாயமும் உள்ளது. லஸ்கர் இ தயீபா போன்ற இஸ்லாமிய குழுக்களுக்கு இங்கேயுள்ள முஸ்லீம் மக்களிடையே உள்ள சில சக்திகளின் ஆதரவு உள்ளது. ஆனால் முஸ்லீம் மக்களுக்கு எதிராக அரசியல் ரீதியான மோதலை ஏற்படுத்தும், மத பதற்றத்தை உருவாக்கும் தீவிரவாத இந்துக் குழுக்களே இந்த நாட்டிற்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளன” என்று ராகுல் தன்னிடம் கூறியதாக ரோமர் கூறியுள்ளார்.
நரேந்திர மோடியால் நாட்டில் ஏற்பட்ட பதற்றத்தையும் ரோமருடனான பேச்சில் ராகுல் வெளியிட்டதாகத் தெரிகிறது. சில தினங்களுக்கு முன் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர், திக் விஜய் சிங், இந்து தீவிரவாத குழுக்களினால் விளைந்த ஆபத்தை நாட்டுக்கு பகிரங்கப்படுத்தினார்.
டெல்லியிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் இருந்து அனுப்பப்பட்ட 4 ஆயிரத்திற்கும் அதிகமான கடிதங்களை விக்கிலீக்ஸ் இணையத் தளம் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.