ஃபாத்திமுத்து சித்தீக்
குடும்ப வாழ்க்கையில் ஆணும் பெண்ணும் மனப்பூர்வமாக சம்மதித்து, திருமணத்தில் இணைந்து, மனமொத்த தம்பதியராய் ‘ஒருவர் மற்றவருக்கு ஆடையாய் வாழும்போதுதான் இல்வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக அமைகிறது’ என்று அறிவுறுத்துகிறது இஸ்லாம். இதுவே தாம்பத்திய மாளிகையின் அடிக்கல் என்றாலும் அது மிகையில்லை. இதனைச் சற்று விரிவுபடுத்திப் பார்த்தால்தான் அதன் உயர் தாத்பர்யம் சரிவரப் புரியும்.
ஆடைபோல
அதாவது, உடலுக்கு அத்தியாவசியமான ஆடையைப் போல ஆணுக்குப் பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் துணையாக ஒட்டுதலாக இருக்க வேண்டும். உடல்வாகிலுள்ள புறத் தோற்றக் குறைகளை ஆடை மறைத்து அழகு தருவது போல கணவன் – மனைவியரின் வெளித்தோற்றக் குறைகளை அடுத்தவர்கள் உணராதவாறு ஒருவருக்கொருவர் ஆதரவாகவும், ஆதாரமாகவும், பிறர் முன் தன் துணையை விட்டுக்கொடுக்காதவராகவும் இருந்து பாதுகாக்க வேண்டும்.
இல்லறமாம் நல்லறம் நடத்தும் கணவன் – மனைவி, எல்லா சீதோஷ்ண நிலையிலும் அதாவது குளிர், வெயில், காற்று… க்கு பாதுகாப்பாக எப்போதும் மனித உடலில் ஆடை நீங்காதிருப்பது போல கணவன் – மனைவியர் உயர்வு – தாழ்வு, நல்லவை – கெட்டவை, வறுமை – செம்மை, இன்பம் – துன்பம்… போன்ற எல்லாப் படித்தரங்களிலும் மனமொன்றி இணைந்து செயல்பட வேண்டும் ஒருவர் மானத்தை மற்றவர் காக்கும் விதமாக! இதன்படி, இன்று எத்தனை குடும்பங்களில் தம்பதியர் நடந்துகொள்கின்றனர்?
கணவனின் குறை, கறைகளைப் பிறர் முன்னிலையில் அலசோ அலசென்று மனைவி அலசிப் பிழிகிறாள். மனைவியின் குறைகளை, குற்றங்களைக் கணவன் அலசி அலசி ஆயாசப்படுகிறான். இதுவே குடும்ப மாளிகையில் விரிசல் ஏற்பட முதல் காரணமாகிறது.
நீயா நானா?
அடுத்தது நீயா, நானா? விவாதம்! இறைவன் பெண்களை இயற்கையாகவே பலவீனமாகப் படைத்ததோடு, ஆண்களே பெண்களின் நிர்வாகிகளாக இருப்பதை இறைமறையில் தௌ;ளத்தெளிவாகத் தெரிவித்த பிறகும், ‘நீயா? நானா?’ போட்டி தேவையில்லாத ஒன்று. ஆணைச்சுமக்கும் கர்ப்பப்பைதான் பெண்ணையும் சுமக்கிறது… ‘அதனால், ‘ஆணும் பெண்ணும் சரி சமம்தான்’ என்று விதண்டாவாதம் புரிகிறார்கள் நாகரீக நங்கைகள். இப்படி சம உரிமை, சமத்துவம் பேசும் இவர்கள் வேலி தாண்டுவதிலும் சமத்துவத்தை எண்ணக் கூடாது. ஒரு ஆண் தவறு செய்தாலும் பெண் தவறு செய்தாலும் அவமானத்தைச் சுமப்பது என்னவோ பெண்கள்தான்! பெண்களின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்ட பெண் போலீஸாருக்கே இன்று பாலியல் கொடுமைகள்!
ஆண், பெண் சமம்…. ?
‘பெண்கள் பலவீனமானவர்கள்’ என்பதைப் புரிந்துகொண்டு சமுதாயத்தில் உங்களுக்கான உரிமைகளைக் கேட்டுப் பெறுங்கள் என்றுரைத்த பிரபல மனவியல் நிபுணர் காலம் சென்ற திரு.மாத்ருபூதம் அவர்கள் ‘இன்றைய பெண்கள் சமஉரிமை கோருவதில் ஒருசில கட்டுப்பாடுகள் வேண்டும்… அனைத்திலும் சமஉரிமை கோருவது தவறு’ என்று ஆணித்தரமாக பதிவு செய்தார்.
இதே கருத்தை வேறு விதமாக ஆணுடன் சமத்துவம் கோரும் முறையீட்டில் பெண்களின் அந்தஸ்து தாழ்ந்து போகிறது. சில ஆண்டுகளாக பெண்களின் அந்தஸ்தை சரியாகப் புரிந்துகொள்வதில் எங்கோ நாம் தவறியுள்ளோம்…’ என்று சுமார் பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி திரு.ரங்கநாத் மிஸ்ரா அவர்கள் தெரிவித்த கருத்து ‘ஆணும் பெண்ணும் சரிநிகர் சமம்’ என்ற கோஷமிடும் ‘பெண்களின் பிரதிநிதிகளிடையே பெரும் புயலையே கிளப்பிவிட்டது.
‘சமத்துவம்’, ‘சம அந்தஸ்து’ ஆகிய இரு வார்த்தைகளிடையேயுள்ள சரியான உட்பொருளை உணர்த்தும் இஸ்லாம், பெண்களுக்கு பாதுகாப்பும் கண்ணியமும் அளிக்கக்கூடிய அத்தனை அடிப்படை உரிமைகளையும் அளித்துள்ளது. பெண்களுக்கு உரிமைகள் எதற்கு? கடமைகள் மட்டுமே போதுமே! என்றிருந்த காலகட்டத்திலேயே பெண்களின் கூச்ச சுபாவத்தையும், மென்னுணர்வுகளையும் புரிந்த நிலையில் அவர்களுக்குத் தேவையான முக்கிய உரிமைகள் அனைத்தையும் முதன் முதலில் ஆக்கரீதியாகவும், சட்ட ரீதியாகவும் தந்தது இஸ்லாம் மட்டுமே! அதாவது, இறைவனை வணங்குவதில், கல்வி கற்பதில், மணமுடிப்பதில், தனக்குரிய சொத்துரிமைகளைப் பெற்று, பரிபாலிப்பதில்… பெருக்குவதில் என்று ஆணுக்கு நிகரான உரிமை பெண்ணுக்கு உண்டு.
அதேசமயம் சகட்டுமேனிக்கு ‘சமஉரிமை’ பேச பெண்ணின் உடலமைப்பும் மனநிலையும் ஒத்துழைப்பதில்லை என்பது அறிவியல் கூற்று. அவரவர் உடற்கூறின்படி ஆணும் பெண்ணும் அவரவருக்குரிய பணிகளைத் திறம்படச் செய்து ஒருவரையொருவர் சார்ந்து நிற்பதே நல்லதொரு குடும்ப வாழ்க்கை. குழந்தைப் பேறும், வளர்ப்பும், பணிவிடைகளும் பெண்களுக்கு மட்டுமே இறையளித்த அன்பளிப்பு. ஆண் தனித்து நின்று பெருமைப்பட முடியாது… பெண் தனித்துநின்று கவுரவமடையமுடியாது.
ஆணும் பெண்ணும் பரஸ்பர அன்புடன், தாம்பத்தியம் நடத்தும்போதுதான் இல்வாழ்க்கை பூரணப்படுகிறது. அழகிய குடும்ப வாழ்க்கையில் எதுவுமே ‘எழுதிய சட்டம்’, ‘எழுதாத சட்டம்’ என்றில்லை. அவரவர் வசதி வாய்ப்பு தேவைகளைப் பொறுத்தது என்பதற்கு இஸ்லாமிய வரலாறு நெடுக பற்பல முன்னுதாரணங்கள் உள்ளன. ஓரிரு முன்னுதாரணங்களை மட்டும் காண்போம்.
ஒரு முறை ஸஹாபாக்கள், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ‘முஸ்லீமல்லாதோர் தங்கள் தலைவர்களுக்கும், அரசர்களுக்கும் ஸஜ்தா செய்கிறார்கள்… எங்கள் தலைவராக உள்ள தங்களுக்கு நாங்களும் ஸஜ்தா செய்ய அனுமதி தர வேண்டும்’ என்று விண்ணப்பித்தார்கள். அதற்கு கோமான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் ஸஜ்தா செய்யக்கூடாது. அப்படி யாருக்காவது ஸஜ்தா செய்யலாம் என்றிருந்தால், பெண்கள் தங்கள் கணவன்மார்களுக்கு செய்ய வேண்டும்’ எனக் கட்டளையிட்டிருப்பேன் என்றார்கள். இன்றைய நாகரீக மங்கைகள் இதன் உட்பொருளை உணர்ந்து நடப்பார்களா?
நியாயத் தீர்ப்பு
ஹளரத் அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கும் ஃபாத்திமா ரளியல்லாஹு அன்ஹா அவர்களும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம், ‘புதுமணத்தம்பதிகளாக வந்து தாங்கள் துவக்கி நடத்தப்போகும் குடும்ப வாழ்க்கையில் யாருக்கு என்ன பொறுப்பு?’ என்று கேட்டார்கள். சற்றும் தயக்கமின்றி ‘வீட்டுக்கு உள்ளேயுள்ள வேலைகள் ஃபாத்திமா ரளியல்லாஹு அன்ஹா அவர்களையும், வீட்டுக்கு வெளியேயுள்ள வேலைகள் அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்களையும் சேர்ந்தது’ என்றார்கள் இரத்தினச் சுருக்கமாக!
இந்த நியாயமான தீர்ப்பை மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டு பிள்ளைகளைப் பராமரிப்பது, சமைப்பது, கணவனின் தேவைகளைக் கவனிப்பது உட்பட அத்தனை வீட்டு வேலைகளையும் ஃபாத்திமா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் கவனித்துக்கொண்டாலும், அவ்வப்போது ஏற்படக்கூடிய கூடுதல் வேலைகளில் அவர்களுக்கு அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் உதவுவதும் உண்டு. அதனை ஈடு செய்வது போல் அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் போர்க்களத்தில் ஈடுபட்டிருந்தபோதும், பயணம் சென்றிருந்தபோதும் வெளி வேலைகளையும் சேர்த்து செய்வது ஃபாத்திமா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் பழக்கமாக இருந்தது.
களைத்தவர் யார்?
இன்னொரு சமயம் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம் திருமகளார் ஃபாத்திமா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் வீட்டிற்குச் சென்றிருந்தபோது, கணவன் – மனைவி ஆக இருவருமாக சேர்ந்து வீட்டு வேலைகளைச் செய்வதைப் பார்த்தபோது ‘உங்களில் மிகக் களைத்திருக்கிறவர் இடத்தில் நான் உதவ ஆசைப்படுகிறேன்…’ என்றார்கள்.
உடனே அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் முன்வந்து, ‘ஃபாத்திமாதான் களைத்திருக்கிறார்’ என்று சொல்லவே, திருமகளாரை ஓய்வெடுக்கச் சொல்லிவிட்டு மீதி வேலையைத் தாமே செய்து கொடுத்தார்கள் பெருமானார் அவர்கள்.
இதுமட்டுமின்றி மார்க்க விஷயங்களில் பெண்கள் சுயமாக சிந்தித்து முடிவு செய்ய ஆண்கள் ஒது;துழைக்க வேண்டுமே தவிர, தங்கள் சுய விருப்பு வெறுப்புகளைத் திணிக்கக் கூடாது என்பது இங்கு கவனிக்கத்தக்கது.
குடும்ப வாழ்க்கையில் அடுத்ததாக, பெண்களின் பங்கு தன்னலம் துறந்த தியாகம். ஒரு பெண் மணமாகி கணவன் வீட்டுக்குச் செல்லும்போது நேர் மறை எண்ணங்களோடும், திறந்த மனதுடனும், கணவன் வீட்டாரைத் தன் வீட்டாரைப் போலவே பாவித்து நடக்கும் மனப்பான்மையோடும் இயங்கினால் எந்த கஷ்டமுமே இல்லை. ஜன்னல், கதவுகளையெல்லாம் இறுக அடைத்துவைத்துக் கொண்டு ‘ஒரே புழுக்கமாக இருக்கிறது’ என்பது போல், மனதுக்குள் முன்கூடடியே தவறான அபிப்ராயத்தோடும், புலிக்கூண்டுக்குள் நுழைவது போலும் பாவித்தால் சந்தோஷம் தூரவிலகியோடும்தானே?
அந்நியோனயமாகப் பழகி இயங்கினால், புகுந்த வீட்டார் எவ்வளவு மோசமானவர்களாக இருந்தாலும் திருந்தாமலிருக்கமாட்டார்கள். அன்புக்கு அடிமையாகாதவர் யாருமிலர். மொத்தத்தில் ‘ஆணைக்கட்டி வாழும் அப்பன் வீட்டைவிட பூனை கட்டி வாழும் புருஷன் வீடு உசத்தி’ என்பதை ஒவ்வொரு புதுமணப்பெண்ணும் மனப்பூர்வமாக உணர்ந்து செயல்பட வேண்டுமே தவிர, பிறந்த வீட்டுப் பெருமை, வசதிகளை அடிக்கடி ஒலிபரப்பி ஆயாசப்படக்கூடாது! மருத்துவ மூலிகைகள் மலை உயரத்தில் விளைந்தாலும் மருத்துவனின் உரலில் இடிபடும்போதுதான் உடலை குணப்படுத்தும் மருந்தாக அது பயனளிக்கிறது. பெருமையடைகிறது.
புகுந்த வீட்டாரின் பெயரை, குடும்ப கவுரவத்தைத் தாங்கும் தூணாகவும், அதைக் காக்கும் அரணாகவும் பெண்கள் வாழ முயல வேண்டும். நடைமுறையில் அப்படியில்லை என்பதாலோ என்னவோ, ‘திருமணமான பெண்கள் அனைவருமே மனைவியாக மாறிவிடுவதில்லை’ என்கிறார் அறிஞர் மெர்வின் என்பார்.
‘ஒரு பெண் இரவும் பகலுமாக இறைவணக்கத்தில் ஈடுபட்டு எத்தனையெத்தனை நன்மைகளைத் தேடிக்கொண்டாலும், தன் கணவனுக்கு செய்ய வேண்டிய கடமைகளைப் புறக்கணித்துவிடாமல், அவற்றைக் குறைவின்றி செய்யாதவரை இறைக்கடமைகளை நிறைவேற்றியவளாகமாட்டாள்’ என்பது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருவாக்கு.
படிப்பினைப் பெருவோமாக!
அன்புடன்
ஃபாத்திமுத்து சித்தீக்