ஷஃபாஅத் ஓர் நற்பாக்கியம் (1)
மவ்லவி, ஓ.எம்.அப்துல் காதிர் பாகவி
[ ‘நல்ல மனிதன் செய்திருக்கும் நல்லமல்கள் சுவனத்துக்கு உரிமை பெற போதுமானதாக இருக்காது. அல்லாஹ்வின் அருட்கொடைகளை நீர் எண்ணினாலும் எண்ணி மாளாது.’ என்று திருக்குர்ஆனின் (14:34), (16:18) வசனங்கள் கூறுகின்றன. எண்ணியே முடிக்க முடியாதபோது, அவ்வனைத்துக்கும் நன்றி செய்ய எவ்வாறு முடியும்? எனவே எவரும், இறைவனுக்கு முழுக்க நன்றி செலுத்தியிருக்க முடியாது. அல்லாஹ்வின் தயவும், தாராளத் தன்மையும் இல்லையாயின் சுவனம் செல்ல முடியாது.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள், ‘அன்று சிலர் அல்லாஹ்வின் அருளால் சுவனம் செல்வார்கள். சிலர் ஷஃபாஅத்தால் சுவனம் செல்வார்கள்.’ (அறிவிப்பாளர்: ஹளரத் இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: தப்ரானி, பைஹகி)]
‘நல்ல காரியத்தில் சிபாரிசு செய்பவருக்கு அதன் பாக்கியத்தில் பங்குண்டு. தீய காரியத்தில் சிபாரிசு செய்பவருக்கு அதன் தீமையில் பங்குண்டு. அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் கண்காணிப்பவனாக உள்ளான்.’ (அல் குர்ஆன் 4 : 85)
அரிசிக்கடன் முதல அரசியல் சலுகை வரை அனைத்தும் இன்று சிபாரிசைக் கொண்டே நடைபெறுகிறது. காரியம் ஆக வேண்டும் என்றால் எவரையாவது சிபாரிசு பிடித்துத்தான் ஆகவேண்டியுள்ளது.
நம்மால் முடியுமானால், தாராளமாக சிபாரிசு செய்ய முன் வரவேண்டும். அதற்கு நன்மையும் கிடைக்கும். அதை விடுத்து தீய காரியத்துக்கு நாம் சிபாரிசு செய்வோமேயானால் அந்த தீமையின் பாதிப்பு எப்படியாவது நம்மை வந்து சேரும்.
உதாரணத்திற்கு நமது தேர்தல் முறையை எடுத்துக் கொள்வோம். வாக்கு சீட்டின் பொருள் என்ன? ‘உங்களை ஆள்வதற்கு யாருக்கு நீங்கள் சிபாரிசு செய்கிறீர்கள்?’ என்று கேட்பதாகும்.
வாக்களிக்கும்போது நல்ல மனிதர்களுககு நாம் சிபாரிசு செய்தால் நாம் நற்பயனை அடைவது கண்கூடு. தீயமனிதர்களுக்கு சிபாரிசு செய்யும்போது தீயவிளைவை நாம் சந்திக்கத்தான் செய்கிறோம்.
நல்ல சிபாரிசு
நல்ல சிபாரிசு என்பது ஒரு நல்ல அமல் என்பதை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விளக்கியுள்ளார்கள்.
‘ஒரு சமயம் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பள்ளிவாசலில் நின்று கொண்டிருந்தார்கள். ஒரு ஏழை அவர்களின் உதவியை நாடி நின்றார். தன் அருகில் இருந்த ஒரு தோழரைப் பார்த்து அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘நண்பரே! இவருக்கு நான் கொடுப்பதற்கு நீங்கள் சிபாரிசு செய்யுங்கள்’ என்றார்கள். அந்த நண்பர் சிரித்து விட்டார். ‘யா ரஸூலல்லாஹ்! அவர் தனது தேவையை தங்களிடம் கேட்டுவிட்டார். நீங்களோ இல்லையென்னு சொல்ல மனம் இல்லாதவர்கள். எனவே நிச்சயம் நீங்கள் அவருக்குக் கொடுக்கப் போகிறீர்கள். உங்கள் இருவருக்கிடையில் நான் வேறு சிபாரிசு செய்ய வேண்டுமா?’ என அந்த நண்பர் விணவினார்.
‘இல்லை! நண்பரே! சிபாரிசு நீங்கள் செய்யும்போது, நான் கொடுப்பதால் எனக்குக் கிடைக்கும் நன்மை அளவு உங்களுக்கும் கிடைக்கும்’ என அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பதிலளித்தார்கள். அந்த நன்மையின் வாக்களிப்பு நம்பகத்தனமானதுதான் என்பதை விளக்குவதற்காக ‘அல்லாஹ் தன்னுடைய தூதரின் நாவின் வழியாக, தான் விரும்பும் ஆணையை வெளிப்படுத்துகிறான்’ என்று கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூ மூஸா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி)
இவ்வுலக காரியங்களில் பிற மனிதர்களுக்கு சிபாரிசு செய்வதால் நன்மை கிடைப்பதைப் போன்றே பிற மனிதர்களுக்காக நாம் துஆ செய்வதும் நன்மை பயக்கக்கூடியதே! அதுவும் ஒருவகை சிபாரிசு தான் என்பதை அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் விளக்கியுள்ளார்கள்.
தனது சகோதர முஸ்லீமுக்காக, அவர் இல்லாத வேளையில் துஆ செய்தால், அந்த துஆ நிச்சயம் ஏற்றுக்கொள்ளப்படும். துஆ செய்யும் உமக்கு அது போன்ற பாக்கியம் கிடைக்கும்’ என வானவர் கூறுவார். (அறிவிப்பாளர்: ஹளரத் அபூ தர்தா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்)
இந்த நபி மொழியின் கருத்துக்கிணங்க நமது தேவைகள் நிறைவேற்றப்படுவதற்கு சிறந்த வழி, இரண்டு நபர்கள் ஒன்று சேர்ந்து கொண்டு ஒருவர் மற்றவருக்காக துஆ செய்வதாகும்.
தீய சிபாரிசு
சிபாரிசு செய்வதன் மூலம், பாவத்துக்கும் பழிக்கும் துணை போவதை அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கடுமையாக எச்சரித்துள்ளார்கள்.
‘யூதப்பெண்ணொருத்தி திருடிவிட்டாள். அந்தக் குற்றம் நிரூபணமாகிட்டது. அவள் செல்வக் குடும்பத்தைச் சார்ந்தவள். அவளைக் கைவெட்டிலிருந்து தப்பிவிக்க வேண்டும் என்பதற்காக, அவளின் குடும்பத்தார் ஹளரத் உஸாமா பின் ஸைத் ணுயனை ரளியல்லாஹு அன்ஹு அவர்களை சிபாரிசு செய்யக் கோரினார்கள். அவரும் அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் பரிந்துரை செய்தார்.
அப்போது அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கடுமையாக சினம் கொண்டார்கள். ‘அல்லாஹ்வின் தண்டனைக்குரிய குற்றங்களுள் ஒரு குற்றத்திலா நீர் சிபாரிசு செய்கிறீர்! உங்களுக்கு முன் வாழ்ந்தவர்கள் அழிந்தொழிந்து போனதெல்லாம் இதுபோன்ற நடவடவடிக்கையால் தான். அவர்களில் சிறப்பானவர் திருடினால் பேசாமல் விட்டுவிடுவார்கள். வசதியற்றவர் திருடினால் தண்டணையை நிறைவேற்றுவார்கள். என் ஆன்மாவை தன் கைவசம் வைத்திருக்கும் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுக் கூறுகிறேன் முஹம்மதுவின் மகள் ஃபாத்திமா திருடினாலும் அவள் கையையும் வெட்ட நான் தயங்க மாட்டேன்’ என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, நூல்: புகாரி)
அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சிபாரிசு
நல்ல சிபாரிசு பற்றி நாம் ஆய்வு செய்கின்றபோது, நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு நாம் பெரிய அளவில் நன்றிக்கடன் பட்டிருப்பது தெரியவருகிறது. நமது பிழைகள் பொறுக்கப்படுவதற்கு அவர்கள் சிபாரிசு செய்யமாறு ஐந்து இடங்களில் இறைவன் ஆணையிடுகின்றான். மற்றொரு இடத்தில் ஸலவாத்தும் சொல்லச் சொல்கிறான்.
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சிபாரிசு நமக்குத் தேவை என்பதை அந்த ஆணைகள் அறிவிக்கின்றன. இது அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நமக்குச் செய்யும் உயர்தரமான சிபாரிசு ஆகும்.
‘அவர்கள், தங்களுக்கே அநியாயம் செய்து கொண்டார்களாயின், உம்மிடம் அவர்கள் வரவேண்டும். (உம் முன்னால் வைத்து) அவர்கள் அல்லாஹ்விடம் பிழை பொறுக்கத் தேட வேண்டும். அவ்வாறானால், அவர்கள் அல்லாஹ்வை மன்னிப்பவனாகவும், கருணை புரிபவனாகவும் காணுவார்கள்.’ (அல்குர்ஆன் 4:64)
‘அவர்களை நீங்கள் மன்னித்து விடுங்கள். அவர்களுக்காக இறை மன்னிப்பையும் தேடுங்கள். காரியங்களில் அவர்களின் ஆலோசனையையும் கேளுங்கள்.’ (அல்குர்ஆன் 3:159)
‘(உங்கள் சபையில் அமர்ந்திருக்கும் போது); அவர்கள் தங்கள் தேவைக்காக சென்றுவர அனுமதி கோருவார்களாயின், அவர்களில் நீங்கள் விரும்புவோருக்கு அனுமதி வழங்குவீர். அவர்களுக்காக அல்லாஹ்விடம் பிழை பொறுக்க பிரார்த்தனை செய்திடுவீர். நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்போனும், அருள்புரிவோனுமாக உள்ளான்.’ (அல்குர்ஆன் 24:62)
‘அறிந்து கொள்வீர்! வணக்கத்துக்குரியவன் அல்லாஹ்வைத் தவிர எவருமில்லை. உமது குற்றத்துக்காகவும், அனைத்து முஃமினான ஆண்கள், பெண்களுக்காகவும் பிழை பொறுக்கத் தேடுங்கள். நீங்கள் உலா வரும் இடத்தையும், ஒதுங்கும் இடத்தையும் அல்லாஹ் நன்கறிவான்.’ (அல்குர்ஆன் 47:19)
‘அந்தப் பெண்களிடம் உடன்படிக்கை செய்யுங்கள். அவர்களுக்காக அல்லாஹ்விடம் பிழை பொறுக்கத் தேடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்போனும், அருள் புரிவோனுமாவான்.’ (அல்குர்ஆன் 60:12)
‘அவர்களின் செல்வங்களிலிருந்து ஜகாத் தொகையை எடுத்துக் கொள்வீர். அது அவர்களைத் தூய்மைப்படுத்தும், அவர்களின் செல்வங்களையும் சுத்தப்படுத்தும். அவர்களின் மீது ஸலவாத்தும் கூறிடுவீர். உமது ஸலவாத் அவர்களுக்கு அமைதியைத் தரவல்லதாகும். அல்லாஹ் செவியேற்பவனும், அறிந்தவனுமாவான். (அல்குர்ஆன் 9:103)
மறுமையில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஷஃபாஅத்
மறுமையில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செய்யவிருக்கின்ற ஷஃபாஅத் என்பதும் ஒரு தலை சிறந்த சிபாரிசு ஆகும்.
ஆனால் அத்தகைய ஷஃபாஅத் மறுமையில் கிடையாது என்ற சிலர் மறுத்துரைப்பார்கள்.
‘அந்த நாளை பயந்து கொள்ளுங்கள். எந்த ஆன்மாவும், எந்த ஆன்மாவுக்கும் எதையும் தடுத்து விட முடியாது. அந்த ஆத்மாவிடமிருந்து சிபாரிசும் ஏற்றுக் கொள்ளப்படாது. ஈட்டுத்தொகையும் பெறப்பட மாட்டாது. அவர்கள் உதவியும் செய்யப்பட மாட்டார்கள்..’ (அல்குர்ஆன் 2:48)
இவை போன்ற வசனத்தை ஆதாரமாகக் கொண்டே அவர்கள் அவ்வாறு ஷஃபாஅத் கிடையாது என்று கூறுவார்கள். ஆனால் ஷஃபாஅத் உண்டு என்பதாக அதே திருக்குர்ஆனின் எட்டு வசனங்கள் கூறுகின்றன. எனவே ஷஃபாஅத் கிடையாது என்று காணும் வசனம் இறை மறுப்பாளர் சம்மந்தப்பட்டதாகும் என்பதாக திருக்குர்ஆன் விரிவுரையாளர்கள் அனைவரும் விளக்கம் தருகின்றனர். எனவே மேற்கண்ட வசனத்துக்கு இறையை மறுக்கும் எந்த ஆத்மாவுக்கும் எதையும் தடுத்துவிட முடியாது என்றே பொருள் கொள்கின்றனர்.
ஷஃபாஅத்தை எடுத்துரைக்கும் அல்குர்ஆனின் எட்டு வசனங்கள் இதோ:
‘அவனது உத்தரவின்றி அவனிடம் சிபாரிசு செய்பவர் யார்?’ (அல்குர்ஆன் 2:225)
‘அவன் திருப்தியடைந்தவர் அல்லாமல் மற்றவர்களுக்கு அவர்கள் சிபாரிசு செய்ய மாட்டார்கள்.’ (அல்குர்ஆன் 21:28)
‘அவனிடம் உத்தரவு பெற்ற பின்னே தவிர சிபாரிசு செய்பவர் எவருமிலர்.’ (அல்குர்ஆன் 10:3)
‘அந்த அருளாளனிடம் உடன்படிக்கை பெற்றவர் தவிர வேறு எவரும் சிபாரிசுக்கு உரிமை பெற மாட்டார்.’ (அல்குர்ஆன் 19:87)
‘அந்நாளில் அந்த அருளாளன் அனுமதியளித்தவர் தவிர மற்றவரின் சிபாரிசு பயனளிக்காது.’ (அல்குர்ஆன் 20:109)
‘அவன் எவருக்கு அனுமதி வழங்கினானோ, அவர்கள் தவிர மற்றவர் அவனிடத்தில் செய்யும் சிபாரிசு பயனளிக்காது.’ (அல்குர்ஆன் 34:23)
‘அவனை விடுத்து அவர்கள் வணங்குகிற தெய்வங்கள் சிபாரிசு செய்ய உரிமை பெற மாட்டார்கள். உண்மையைக் கொண்டு சாட்சியம் பகர்ந்தவர் தவிர’ (அல்குர்ஆன் 43: 86)
‘அவர்களின் சிபாரிசு, எதையும் பலன் தராது. அல்லாஹ், அவன் விரும்பியோருக்கு உத்தரவு வழங்கிய பின்;பே தவிர.’ (அல்குர்ஆன் 53:26)
ஷஃபாஅத் இன்றேல்…
‘நல்ல மனிதன் செய்திருக்கும் நல்லமல்கள் சுவனத்துக்கு உரிமை பெற போதுமானதாக இருக்காது. அல்லாஹ்வின் அருட்கொடைகளை நீர் எண்ணினாலும் எண்ணி மாளாது.’ என்று திருக்குர்ஆனின் (14:34), (16:18) வசனங்கள் கூறுகின்றன. எண்ணியே முடிக்க முடியாதபோது, அவ்வனைத்துக்கும் நன்றி செய்ய எவ்வாறு முடியும்? எனவே எவரும், இறைவனுக்கு முழுக்க நன்றி செலுத்தியிருக்க முடியாது. அல்லாஹ்வின் தயவும், தாராளத் தன்மையும் இல்லையாயின் சுவனம் செல்ல முடியாது.
தத்துவமேதை இமாம் கஸ்ஸாலி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் தனது ‘இஹ்யா’ எனும் நூலில் ‘அல்லாஹ் நமக்குத் தந்திருக்கின்ற ‘கண்’ணுக்கு நன்றி சொல்லவே நமது ஆயுள் போதாது’ என்று கூறுகிறார்கள்.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள், ‘அன்று சிலர் அல்லாஹ்வின் அருளால் சுவனம் செல்வார்கள். சிலர் ஷஃபாஅத்தால் சுவனம் செல்வார்கள்.’ (அறிவிப்பாளர்: ஹளரத் இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: தப்ரானி, பைஹகி)
பனூ இஸ்ராயீல் காலத்தில் நடந்த ஒரு நிகழ்வு
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பனூ இஸ்ராயீல் காலத்தில் நடந்த ஒரு நிகழ்வை எடுத்துரைத்தார்கள்.
‘ஒரு வணக்கசாலி தன் வாழ்நாள் முழுவதும் ஒரு மலையில் தவத்தில் ஈடுபட்டிருந்தார். அங்கிருந்த மாதுளை மரத்திலிருந்து தினமும் ஒரு கனியை பறித்து உண்பார். அருகிலுள்ள நீர்ச் சுனையிலிருந்து நீர் அருந்தவார். அதுவே அவரின் உணவாக இருந்து வந்தது. ஒருநாள் அவரும் மரணமடைந்தார். ‘எனது தயாளத்தால் சுவனம் செல்வாயாக!’ என்று அல்லாஹ் அவரிடம் கூறினான்.
அவருக்கு அது பேரதிர்ச்சியாக இருந்தது. ‘யா அல்லாஹ்! அப்படியானால் வாழ்நாளெல்லாம் நான் செய்த அமல்?’ என்று அல்லாஹ்விடம் அவர் வாதாடினார்.
உடனே அல்லாஹ்வக்கு கோபம் வந்துவிட்டது. ‘இவனை நரகத்துக்கு இழுத்துச் செல்லுங்கள்’ என்று அல்லாஹ் மலக்குகளுக்கு உத்தரவிட்டான். மலக்குகள் அவரை நரகத்துக்கு இழுத்துச் சென்றனர். செல்லும் வழியில் அவருக்கு தாகம் ஏற்பட்டது. தண்ணீர் கிடைக்குமாவென அவர் சுற்றுமுற்றும் பார்த்தார். அப்போது ஒருவர் தண்ணீர் விலை கூறி விற்றுக் கொண்டிருந்தார். அவரை அழைத்து தனக்கு தண்ணீர் தருமாறு கேட்டார் அந்த வணக்கசாலி.
‘இதற்கு உரிய விலை நீர் தரமாட்டீர்!’ என்று தண்ணீர் வியாபாரி கூறினார். ‘அப்படி என்னதான் விலை?’ என்று இவர் கேட்கவும், ‘நீர் வாழ்நாள் முழுவதும் செய்த நல்லமல்களின் நன்மை அனைத்தையும் இதற்கு விலையாகத் தரவேண்டும்’ என்று வியாபாரி கூறினார். அதை செவியற்று அதிர்ச்சியடைந்த வணக்கசாலி தனக்கு தண்ணீர் வேண்டாம் என்று கூறி மறத்துவிட்டார். ஆனால், அவர் நரகத்தை நெருங்க, நெருங்க அவரின் தாகம் அதிகரித்தது. நாவறண்டது. தண்ணீர் அருந்தாமல் அதற்குமேல் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாத நிலையை உணர்ந்தார். தன் அமல் அனைத்தையும் கொடுத்தாவது தண்ணீர் வாங்கி அருந்த வேண்டும் என்ற அவர் முடிவு செய்தார்.
அப்போது அந்த வழியாக சென்ற தண்ணீர் வியாபரியைக் கூப்பிட்டு தனது நன்மைகள் அனைத்தையும் கொடுத்து தண்ணீர் வாங்கி அருந்தினார். அப்போது அல்லாஹ் அவரை அழைத்தான். ‘உனது அமல் என்ன விலை போனது?’ என்று அவரிடம் கேட்டபின்பு – ஒருதடவை தண்ணீர் அருந்தும் அளவுதான் உனது அமல்களின் விலை என்றால், நான் காலமெல்லாம் சுனையிலிருந்து நீர் தந்தேனே! அவற்றுக்கு விலையான அமல் எங்கே? நான் தினமும் தந்த மாதுளம் பழத்துக்கு அமல் எங்கே?’ என்று அல்லாஹ் கேட்டான். அல்லாஹ்வின் கேள்விக்கணைகளுக்கு பதில்கூற முடியாமல் அந்த தவசாலி தத்தளித்தார்.
அவருக்கு உண்மையை உணரச் செய்த அல்லாஹ் அவரை மன்னித்து ‘நீ எனது அருள்கொண்டு சுவனம் செல்’ என்று மீண்டும் உத்தரவு பிறப்பித்தான். ‘ஆம் இறiவா! உனதருள் கொண்டே நான் சுவனம் செல்கிறேன்!’ என்று தவசாலியும் விண்ணப்பித்தார்.
அல்லாஹ்வின் அருளின்றி எவரும் சுவனம் செல்ல முடியாது என்பது உண்மையானால், அந்த அருளைப் பெருவதற்கு சிபாரிசு இன்றியமையாததாகிறது. கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சிபாரிசு செய்வதில் முதலாம் இடத்தை வகிக்கிறார்கள். அவர்கள் செய்யப்போகும் சிபாரிசுக்கு ஐந்து ஆதாரங்கள் பிரபலமானவை.
கட்டுரையின் தொடர்ச்சிக்கு ”Next” ஐ ”கிளிக்” செய்யவும்