ஷஃபாஅத் ஓர் நற்பாக்கியம் (2)
மவ்லவி, ஓ.எம்.அப்துல் காதிர் பாகவி
1. நபிமார்கள் தயக்கம் காட்டியபோது
‘மறுமை நாளில் எல்லா மக்களும் உயிர்த்தெழப்படும்போது எல்லோரும் என்ன செய்வது? என்று தெரியாமல் கையைப் பிசைந்து கொண்டு நிற்பார்கள். சூரியன் தலை உச்சிக்கு அருகாமையில் தகதகத்துக் கொண்டிருக்கும். தங்களின் கேள்வி கணக்குகளை முடித்துக் கொண்டு சுவனமோ, நரகமோ சென்று விட்டால் தேவலாம் என்று தோன்றும். ஆனால் விசாரணை நடப்பதற்கான அறிகுறியையே அவர்கள் காணமாட்டார்கள்.எனவே எல்லோருமாகச் சேர்ந்து நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் செல்வார்கள்.
‘எங்கள் தந்தையே! உங்களை அல்லாஹ் சிறந்தவரென தேர்ந்தெடுத்துள்ளான். (அல்குர்ஆன் 3:33) எனவே எங்களுக்காக அல்லாஹ்விடம் சிபாரிசு செய்யுங்கள்’ என்று அவர்கள் கூறுவார்கள்.
‘தடுக்கப்பட்ட கனியை நான் உண்டது பற்றி அல்லாஹ் விசாரிப்பானே! என்று நான் பயந்து கொண்டிருக்கிறேன். எனவே நபி நூஹ் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களிடம் செல்லுங்கள்’ என்று நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் கூறிவிடுவார்கள். அதன்பின் அவர்கள் நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் வருவார்கள்.
‘சிறப்புமிக்க நபியே! இந்த பூமியில் உன்னை நம்பாதவர்களை விட்டு வைக்க வேண்டாம்! என்று தாங்கள் செய்த துஆவை அல்லாஹ் ஏற்றுள்ளான் (அல்குர்ஆன் 71:26) எனவே எங்களுக்காக அல்லாஹ்விடம் சிபாரிசு செய்யுங்கள்’ என்று அவர்கள் கூறுவார்கள்.
‘வெள்ளப் பிரளயத்தில் உலகமெல்லாம் அழிந்து கொண்டிருந்தபோது மக்களைப் பற்றிக் கவலைப்படாமல் நான் என் மகனைக் காப்பாற்ற வேண்டுமென அல்லாஹ்விடம் முறையிட்டேன். அது பற்றி அல்லாஹ் விசாரிப்பானே! என்று நான் அஞ்சிக் கொண்டிருக்கிறேன். எனவே நபி இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களிடம் செல்லுங்கள் என்று நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம் கூறிவிடுவார்கள்.
அதன்பின்; மக்கள் நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் செல்வார்கள்.
‘சிறப்புமிக்க நபியே! உங்களை அல்லாஹ் நேசராக ஆக்கிக் கொண்டுள்ளான். (அல்குர்ஆன் 4:125) எனவே நீங்கள் எங்களுக்காக சிபாரிசு செய்யுங்கள்!’ என்று கூறுவார்கள்.
‘நான் உலகில் வாழும்போது மூன்று தடவைகள் பொய் சொல்லியிருக்கிறேன். அவற்றைப் பற்றி அல்லாஹ் விசார்ப்பானே என்று நான் கவலையடைகிறேன். எனவே நபி மூஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களிடம் செல்லுங்கள்’ என்று நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கூறிவிடுவார்கள்.
அவர்கள் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் சென்று ‘சிறப்புமிக்க நபியே! உலகிலேயே அல்லாஹ் உங்களிடம் உரையாடியிருக்கிறான். (அல்குர்ஆன் 4:164) எனவே எங்களுக்காக நீங்கள் அல்லாஹ்விடம் சிபாரிசு செய்யுங்கள்’ என்று கூறுவார்கள்.
‘உலகில் வாழும்போது நான் ஒரு கொலை செய்திருக்கிறேன். அந்தக் கொலை பற்றி இறைவன் விசாரிப்பானே என்று அஞ்சிக் கொண்டிருக்கிறேன். எனவே நபி ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களிடம் செல்லுங்கள்’ என நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் பதிலுரைப்பார்கள்.
அவர்கள் நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் சென்று ‘நீங்கள் பிறவிக் குருடர்களுக்கு பார்வை வழங்கியிருக்கிறீர்கள். தொழுநோயாளியைக் குணப்படுத்தியிருக்கிறீர்கள். (அல்குர்ஆன் 5:110) எனவே எங்களுக்காக நீங்கள் அல்லாஹ்விடம் சிபாரிசு செய்யுங்கள்’ எனக் கூறுவார்கள்.
”என்னுடைய சமுதாயத்தவர் என்னையும் ஒரு கடவுளாக நினைத்து வணங்கியது பற்றி இறைவன் என்னிடம் விசாரணை செய்யவிருக்கிறான்.” (அல்குர்ஆன் 5:116) நான் அதுபற்றி கவலையடைந்துள்ளேன். எனவே நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் செல்லுங்கள்’ என நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கூறிவிடுவார்கள்.
இறுதியில் அனைவரும் ஹளரத் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வருவார்கள். ‘அண்ணலே, பெருமானாரே! நீங்கள் மனித குலத்தின் தலைவராக இருக்கிறீர்கள். எங்களுக்காக அல்லாஹ்விடம் சிபாரிசு செய்யுங்கள்’ என்று கூறுவார்கள். உடனே நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸஜ்தாவில் வீழ்ந்து அல்லாஹ்விடம் சிபாரிசு செய்வார்கள். அல்லாஹ் அவர்களின் சிபாரிசை ஏற்றுக் கொள்வான். (அறிவிப்பாளர்: அனஸ் ரளியல்லாஹு அன்ஹு, அவர்கள், நூல்: புகாரி, முஸ்லிம்)
2. அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மனநிறைவு எப்போது?
‘உமது இறைவன் உமக்கு பின்னர்வழங்குவான். அப்போது நீர் மனநிறைவு கொள்வீர்’ என்ற (அல்குர்ஆன் 93: 5) திருவசனம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சிபாரிசு பற்றிதாகும். அதாவது உம்மத்துகள் குறித்த அவர்களின் சிபாரிசை அல்லாஹ் ஏற்றுக் கொள்ளும் போது தான் அவர்கள் மனநிறைவு கொள்வார்கள்.
ஹளரத் அப்துல்லாஹ் பின் அம்ருபின் அல்ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு, அறிவிக்கிறார்கள், ‘ஒருநாள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம, ஈஸா அலைஹிஸ்ஸலாம ஆகிய இருவரையும் நினைவு கூர்ந்தார்கள். அவ்விருவரும் தனது சமுதாயத்தவரில் வழி தவறிப்போனவர் குறித்து கவலை தெரிவித்த திருவசனங்களையும் அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஓதினார்கள். (எனது இறiவா! அவர்கள் மக்களில் அதிகமானோரை வழிதவறச் செய்து விட்டார்கள். அவர்களில் என்னைப் பின்பற்றியோர் என்னைச் சார்ந்தோராவர். என்னைப் பின்பற்றாதோர் என்னைச் சாராதோராவர். நிச்சயமாக நீ மன்னிப்பவனும், அருள்மிக்கவனுமாவாய்) (நீ அவர்களை வேதனைப்படுத்தினால் நிச்சயமாக அவர்கள் உனது அடியார்கள். அவர்களை வேதனைப்படுத்தும் உரிமை உனக்குள்ளது. நீ அவர்களை மன்னித்துவிட்டால் நிச்சயமாக நீ கண்ணியமிக்கோனும், ஞானமிக்கோனுமாவாய்).
இவ்விரு வசனங்களையும் நினைவு கூர்ந்த அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது சமுதாயத்தோரில் வழி தவறிச்செல்வோர் பற்றி கவலைப்பட்டு அழுதார்கள். அப்போது அல்லாஹ் ஹளரத் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அழைத்து அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அழுகைக்கான காரணம் என்ன என்பதை அறிந்து வரக் கோரினான். பின்னர் அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அழைத்து ‘உமது சமுதாயத்தோர் குறித்து உம்மை நாம் மனநிறைவு அடையச் செய்வோம்! உமக்கு எந்தக் கவலையும் வேண்டாம்! என்று அல்லாஹ் கூறுகிறான்’ (நூல்: முஸ்லிம்)
3. வீட்டோ பவர்
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றுள்ளார்கள்: ‘ஒவ்வொரு நபிக்கும் தனித்தனமை பெற்ற ஒரு துஆ செய்யும் உரிமையை அல்லாஹ் வழங்கியிருந்தான். அந்த துஆவில் எதைக் கேட்டாலும் தருவதாக வாக்களித்திருந்தான். எல்லா நபிமார்களும் அந்த உரிமையைப் பயன்படுத்தி விட்டார்கள். ஆனால் எனது சமுதாயத்துக்கு சிபாரிசு செய்வதற்காக அதை நான் சேமித்து வைத்திருக்கிறேன்’ (அறிவிப்பாளர்: ஹளரத் அனஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி)
4. பெரும்பாவம் செய்தோருக்கும்
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றுள்ளார்கள்: ‘எனது சமுதாயத்தில் பெரும்பாவம் செய்தோருக்கும் எனது சிபாரிசு கிடைக்கும்’ (அறிவிப்பாளர்: ஹளரத் அனஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: அபூதாவூத்)
5. உலகப் பேரழிவு
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும், நண்பர்களும் தபூக் யுத்தத்திலிருந்து திரும்பும் வழியில் ‘அல்ஹஜ்’ அத்தியாயத்தின் இரு திருவசனங்கள் அருளப்பெற்றன. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நண்பர்களுக்கு அதை ஓதிக் காட்டினார்கள்.
‘மனித குலத்தோரே! உங்கள் இறைவனை அஞ்சிக் கொள்ளுங்கள். உலகப்பேரழிவின் அமளி மிகப் பயங்கரமான நிகழ்வாகும். அதைக் காணும் நாளில் குழந்தைக்குப் பாலூட்டிக் கொண்டிருக்கும் தாய் குழந்தையை விட்டும் பாராமுகமாகி விடுவாள். கருவுற்றிருக்கும் பெண் அரைகுறையாகக் குழந்தையைப் பிரசவித்து விடுவாள். மக்களையெல்லாம் போதையானவர்களைப் போன்று நீர் காண்பீர். ஆனால் அவர்கள் போதைப்பொருள் உபயோகித்தவர்களல்லர். எனினும் அல்லாஹ்வின் வேதனை மிகக் கடுமையானதாக இருக்கும்.’
இவ்விரு திருவசனத்தையும் ஓதக்கேட்ட நண்பர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். அந்த நாளின் சிரமங்களைப் பற்றியே சிந்திக்க ஆரம்பித்தார்கள். இதனால் பயணம் தடைபட்டது. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நண்பர்களின் நிலை கண்டு பிரயாணத்தை நிறுத்தக் கூறினார்கள். அவர்கள் அந்த இடத்திலேயே இரவில் தங்கினர்.
அதிகாலையில் நண்பர்களின் நிலை கண்டு அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் துணுக்குற்றார்கள். இரவு அடுப்பு பற்றவைக்கப்படவில்லை. நண்பர்கள் தூங்கியதாகவும் தெரியவில்லை. நண்பர்களிடம் வந்து, ‘நண்பர்கள! நான் இரவு அறிவித்த திருவசனம் உங்களையெல்லாம் கலக்கமடையச் செய்து விட்டதாக நினைக்கிறேன். இரவில் உங்களில் எவரும் உணவுண்டதாகத் தெரியவில்லை. தூங்கியதாகவும் தெரியவில்லை. அந்த நாள் பற்றிய செய்தி இன்னுமிருக்கிறது. அந்த நாளில் அல்லாஹ் ஹளரத் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை உயிர்த்தெழுப்பவான். கண் விழித்த ஹளரத் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள், ‘யா அல்லாஹ்! நரகத்திற்கு எத்தனை பேர்களை அனுப்பப் போகிறாய்? சுவனத்துக்கு எத்தனைப் பேர்களை அனுப்பப் போகிறாய்?’ என்று கேட்பார்கள். ‘ஆயிரத்துக்கு ஒருவரை சுவனத்துக்கு அனுப்பப் போகிறேன்’ என்று இறைவன் கூறுவான்.
அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இந்த மொழியைக்; கேட்ட நண்பர்கள் மேலும் அதிர்ச்சியடைந்தனர். ‘மன் யன்ஜு யா ரஸூலல்லாஹ் (அப்படியானால் யார் தான் நரக விடுதலை பெற முடியும்?)’ என்று கூறி அழுதனர்.
நண்பர்கள் கவலையுறுவதைக் கண்ட பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘கவலையடையாதீர்கள் இறுதி நாளில் புற்றீசல்போல் வெளிவர இருக்கின்ற ‘யஃஜூஜ் – மஃஜூஜ்’ என்ற இனத்தோரும் மனிதர்களாகவே கணக்கிடப்படுவர். அவர்கள் அனைவரும் நரகத்துக்குச் செல்வர். ஆதலால் ஆயிரத்தில் ஒருவருக்கு சுவனம் என்பது அதிர்ச்சியளிக்கும் விகிதாச்சாரமல்ல! எனவே நீங்கள் கவலையடையாதீர்கள்’ என்று கூறியவர்கள் மேலும், ‘சுவனத்துக்கு செல்பவர்களில் நான்கில் ஒரு பகுதியினர் நம்மவராக இருப்பார்கள்’ என நான் எதிர்பார்க்கிறேன்!’ என்றார்கள்.
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இந்த அறிவிப்பு, கவலையால் உறைந்து போயிருந்த அந்த நண்பர்களுக்கு இதயமளித்தது. எண்ணற்ற நபிமார்களின் சமூகத்தவர்கள் அனைவரும் மூன்று பகுதியைத்தான் பிடிக்க முடிந்தது. நமது ஒரு சமுதாயம் மட்டும் நான்கில் ஒரு பகுதியைப் பிடிக்க முடியும் என்ற செய்தி காதில் தேன் வார்க்கும் செய்தியல்லவா! எனவே அவர்கள் மகிழ்ச்சிப் பெருக்கில் தக்பீர் முழங்க ஆரம்பித்தார்கள். அந்த மலைப்பகுதியே எதிரொலித்தது.
நண்பர்களின் கரகோசத்தைக் கண்ணுற்ற நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘நண்பர்களே! சற்று இருங்கள்! சுவனத்தில் நான்கில் ஒரு பகுதியல்ல, மூன்றில் ஒரு பகுதி இடத்தை நாம் பிடிப்போம் என நான் நம்புகிறேன்’ என்றார்கள். நண்பர்களின் மகிழ்ச்சி மேலும் அதிகமானது. அதைக் கண்ட அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ‘இல்லை நண்பர்களே! சுவனத்தில் சரி பாதி இடத்தை நாம் பெறுவோம்! என்றார்கள். தக்பீர் ஒலி அதிகமாகவே அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மேலும் கூறினார்கள், ‘இல்லை! மூன்றில் இரு பகுதி இடத்தை நாம் பெறுவோம்! சுவனத்திற்கு பன்னிரெண்டு வரிசைகள் செல்கிறார்கள் என்றால் நம் மக்கள் எட்டு வரிசையினராக இருப்பர். அது மட்டுமல்ல, நமது சமுதாயத்தில் எழுபதாயிரம் பேர் கேள்வி கணக்கின்றி சுவனம் செல்வார்கள்.’
அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நற்செய்தியைச் செவியுற்ற ஹளரத் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ‘எழுபதாயிரம் நபர்களா?’ என ஆச்சரிமடைந்தார்கள். ‘இல்லை உமரே! அந்த எழுபதாயிரம் பேர்களில் ஒவ்வொருவருடனும் எழுபதாயிரம் பேர் கேள்வி கணக்கின்றி சுவனம் செல்வார்கள்’ என்று அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அறிவித்தார்கள். அப்போது ஹளரத் உகாஷத் பின் மிஹ்ஸன் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் எழுந்து ‘யா ரஸூலல்லாஹ்! அவ்வாறு கேள்வி கணக்கின்றி சுவனம் செல்வோரில் என்னையும் ஒருவராக அறிவியுங்களேன்!’ என்றார். ‘அன்த மின்ஹும்! (உங்கள் ஆசைப்படியே நீரும்; அதில் ஒருவராவீர்!’ என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அறிவித்தார்கள். அதைச் செவியுற்ற அன்சாரித் தோழர்களில் ஒருவர் எழுந்து தன்னையும் அவ்வாறு அறிவிக்குமாறு கேட்டுக் கொண்டார். ‘உகாஷா உம்மை விட முந்திவிட்டார்’ என்று கூறிய நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவருக்கு அவ்வாறு சொல்ல மறுத்துவிட்டார்கள்.
இந்த நபிமொழி அஹ்மது, திர்மிதீ ஆகிய நூல்களில் ஹளரத் இம்ரான் பின் ஹஸீன் ரளியல்லாஹு அன்ஹு வாயிலாக அறிவிக்கப்படுகிறது.
சுவனத்திற்குச் செல்வோரில் நான்கில் ஒரு பகுதியாக அறிவிக்கப்பட்ட நமது சமுதாயம் மூன்றில் இரு பங்காக உயர்வு பெற்றது அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஷஃபாஅத்தினால் அல்லவா!
ஆறு சந்தர்ப்பங்களில் அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஷஃபாஅத்
1. உயிர்தெழுப்பப்பட்ட மக்கள் மஹ்ஷர் மைதானத்தில் தீர்ப்பு வழங்கப் பெறாமல் தாமதப்படுத்தப்படுவார்கள். மறுமையின் சிரமத்தில் சிக்கித்தவிக்கும் மக்கள் ‘அரிஹ்னா வ லவ் இலன் நார் (நரகம் என்றாவது தீர்ப்பளித்து எங்களுக்கு நிம்மதியைத் தாருங்களேன்!’ என்று கதறுவார்கள். அந்த நேரத்தில் ‘சரி! நீங்கள் நரகம் செல்லுங்கள்!’ என்று சொல்லப்படும் தீர்ப்பு அவர்களுக்கு நற்செய்தியாக அமையுமாம். அந்த சூழ்நிலையை திருக்குர்ஆன் அரை வரியில் அழகாக படம்பிடித்து காட்டுகிறது.
”நிச்சயமாக எவர் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்துக் கொண்டும் நீதமின்றி நபிமார்களைக் கொலை செய்து கொண்டும், மனிதர்களிடத்தில் நீதமாக நடக்கவேண்டும் என்று ஏவுவோரையும் கொலை செய்து கொண்டும் இருக்கின்றார்களோ அவர்களுக்கு நோவினை மிக்க வேதனை உண்டு”” என்று (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக! (அல்குர்ஆன் 3: 21)
அது போன்ற சூழ்நிலையில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அனைத்து மக்களுக்கும் விரைவில் தீர்ப்பு வழங்கப்படுவதற்காக அல்லாஹ்விடம் சிபாரிசு செய்வார்கள். அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சிபாரிசு ஏற்றுக் கொள்ளப்பட்டு உடனடியாக தீர்ப்பு வழங்கத் துவங்கப்படும்.
2. சுவனத்திற்கு செல்லவிருக்கும் சிலருக்கு, அவர்கள் கேள்வி கணக்கு உட்படுத்தப்படக் கூடாது என்று அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சிபாரிசு செய்வார்கள். ஏற்றுக் கொள்ளப்படும்.
3. நரகம் கடமையாகிவிட்ட சிலருக்கு, அவர்கள் நரகத்திற்கு அனுப்பப்படக்கூடாது என்று அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சிபாரிசு செய்வார்கள். ஏற்றுக் கொள்ளப்படும்.
4. நரகத்திற்கு அனுப்பப்பட்டு விட்ட தனது சமூகத்தைச் சார்ந்த அத்தனை பேரும் அதிலிருந்து வெளியாக்கப்பட்டு சுவனத்துக்கு அனுப்பப்பட வேண்டும் என்று அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சிபாரிசு செய்வார்கள். அதுவும் ஏற்றுக் கொள்ளப்படும்.
5. சுவனத்திற்குச் சென்றுவிட்ட சிலருக்கு, அவர்களுக்கு இன்னும் தரமிக்க சுவனம் தரப்பட வேண்டுமென அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சிபாரிசு செய்வார்கள். அதுவும் ஏற்றுக் கொள்ளப்படும்.
6. நரகம் சென்று விட்ட ஈமான் கொள்ளாத சிலர் குறித்து, அவர்களின் வேதனை இலேசாக்கப்பட வேண்டுமென அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சிபாரிசு செய்வார்கள். அதுவும் ஏற்றுக் கொள்ளப்படும்.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஹளரத் இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, வினவினார்கள், ‘யா ரஸூலல்லாஹ்! தங்கள் சிரிய தந்தைக்காக தாங்கள் என்ன செய்வீர்கள்? அவர் உங்களுக்காக தனது சமூகத்தைப் பகைத்துக் கொண்டார். உங்களை அவர்களிடமிருந்து பாதுகாத்து வந்தாரரே!’
அதைச்செவியுற்ற அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள், ‘அவர் நரகத்தின் மேல்தளத்தில் விசாலமான பகுதியில் இடம்பெறுவார். நான் சிபாரிசு செய்யவில்லையாயின் நரகத்தின் கீழ்ப்பகுதியின் நெருக்கடியான இடத்தில் இடம் பெறுவார்.’ (அறிவிப்பாளர்: ஹளரத் இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி)
சிபாரிசு செய்ய உரிமை பெறும் மற்றவர்கள்
குர்ஆன்: குர்ஆனை ஓதி வருபவர்களுக்காக திருக்குர்ஆன் சிபாரிசு செய்யும்.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நவின்றார்கள்: ‘குர்ஆனை ஓதி வாருங்கள். மறுமை நாளில் தன்னை ஓதியவர்களுக்காக அது சிபாரிசு செய்யும். சூரத்துல் பகரா, சூரத்துல் ஆல இம்ரான் ஆகிய இரு ஒளி பொருந்திய அத்தியாயங்களை ஓதி வாருங்கள். அவ்விரண்டும் சிபாரிசு செய்யும்.’ (அறிவிப்பாளர்: ஹளரத் அபூ உமாமா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்)
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அறிவித்தார்கள்: ‘மறுமை நாளில், நபிமார்கள், ஆலிம்கள், ஷஹீதுகள் ஆகிய மூன்று வகையினர் சிபாரிசு செய்யும் உரிமை பெறுவார்கள்.’ (அறிவிப்பாளர்: ஹளரத் உதுமான் இப்னு அஃப்பான் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: இப்னு மாஜா)
வல்ல ரஹ்மான் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஷஃபாஅத்துக்கு அருகதை பெற்றவர்களாக நம்மை ஆக்குவானாக!
நன்றி: குர்ஆனின் குரல், ஜனவரி 2005