தபர்ருஜ் என்றால் என்ன?
‘பெண்கள் தங்களின் அழகு மற்றும் அலங்காரங்களை அந்நிய ஆடவருக்கோ அல்லது மஹர்ரமற்றவர்களுக்கோ (திருமணம் செய்ய ஆகுமான உறவினர்கள் மற்றும் பிறர்) வெளிக்காட்டுவதும், பொது இடங்களில் மேக்கப்புடன் தங்களை அலங்கரித்துக் கொண்டு தோன்றுவதும், அந்நிய ஆண்களின் இச்சையைத் தூண்டும் வேறு எந்த விதமான காரியங்களைச் செய்வது தபர்ருஜ் ஆகும்’
தபர்ருஜ் செய்வதனால் விளையும் தீமைகள்:
இமாம் அத்தாபி அவர்கள் தங்களின் ‘அல் கபாயிர்’ (பெரும் பாவங்கள்) என்ற நூலில் கூறுகிறார்கள்: ‘பெண்கள் சபிக்கப்படுவதற்கான மற்ற விஷயங்களில் மறைத்துள்ள தங்களுடைய அலங்காரத்தை வெளிக்காட்டுவதும், வெளியே செல்லும்போது வாசனை திரவியங்கள் உபயோகிப்பதும், வண்ணமயமான அல்லது சிறிய வெளிப்புற ஆடை அணிவதும் அடங்கும். தபர்ருஜ் என்பது இது அனைத்தையும் உள்ளடக்குகின்றது. மேன்மைக்குரிய அல்லாஹ் தபர்ருஜையும் அதைச் செய்யும் பெண்களையும் வெறுக்கிறான்’
தபர்ருஜ் மோசமானது:
அல்லாஹ்வின் தூதரவர்கள் தபர்ருஜை ஷிர்க், விபச்சாரம், திருட்டு போன்ற மற்ற மோசமான செயல்களுடன் சமமாக்கி சொல்கின்ற அளவுக்கு தபர்ருஜ் மோசமானது.
பர்தா அணிவதன் நோக்கம்:
ஒரு பெண் பர்தா அணிவதன் நோக்கம், தன்னுடைய உடல் பாகங்களையும், தன்னுடைய அழகு அலங்காரங்களையும் மறைப்பது தான். ஆனால் அந்த பர்தாவே வண்ணமயமானதாகவும், கண்ணைக் கவரக்கூடியதாகும் இருப்பின், அதை அணிவதின் நோக்கத்தையே அர்த்தமற்றதாக்கி விடுகிறது.
பர்தா அணியும் முறை:
அப்துல்லாஹ் இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்: ‘பர்தாவானது அதற்குக் கீழுள்ள ஆடைகளை மறைத்திட வேண்டும். ஒரு முஸ்லிம் பெண்மணி தொழும்போது உபயோகிக்கும் உடையும் இவ்வாறே இருக்க வேண்டும். மெல்லிய, உள்ளே உள்ளவைகளை காண்பிக்கக்கூடிய உடைகள் ஆண்களை கிளர்ச்சிக்குள்ளாக்குகின்றன. மெல்லிய உடையை அணியும் பெண்கள் உடை அணிந்தும் அணியாதவர்கள் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.
உடை அணிந்தும் அணியாதது போன்ற பெண்கள்:
இறுக்கமான அல்லது மெல்லிய உள்ளே உள்ளவைகளை காண்பிக்கும் அல்லது மறைப்பதை விட அதிகம் வெளிப்படுத்திக் காண்பிக்கும் உடைகளை அணிபவர்கள் உடை அணிந்தும் அணியாதது போன்றவர்களாவார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் சபிக்கப்பட்டவர்கள்:
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகின்றார்கள்: ‘உடை அணிந்தும் அணியாதது போன்றும் ஒட்டகத்தின் மிதிலைப் போன்று தங்களின் தலையில் ஏற்படுத்திக் கொண்டு பெண்கள் என் சமுதாயத்தில் தோன்றுவார்கள். அவர்களை சபியுங்கள். அவர்கள் சபிக்கப்பட்டவர்கள் ஆவார்கள்’ ஆதாரம்: தபரானி.
சுவர்க்கத்தின் நறுமணத்தைக் கூட நுகராத பெண்கள்:
மற்றொரு நபிமொழியில் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த பெண்களை (அதாவது மேற்கூறப்பட்ட பெண்களைக்) குறிப்பிட்டுக் கூறுகிறார்கள்: ‘அவர்கள் சுவர்க்கத்தில் அனுமதிக்கப்பட மாட்டார்கள். மேலும், அதன் சுகந்தத்தைக் கூட நுகர மாட்டார்கள். அதன் சுகந்தமோ நீண்ட தூரத்திற்கு பரவக்கூடியதாகும். அதாவது அவர்கள் சுவர்க்கத்தை விட்டு மிக அதிக தொலைவில் இருப்பார்கள்’ (ஸஹீஹ் முஸ்லிம்).
நாணம் விலகின் ஈமானும் விலகிவிடும்:
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ‘நாணமும் ஈமானும் ஒன்றோடு ஒன்று சேர்ந்ததாகும். ஒன்றை விட்டு ஒன்று விலகி விடுமெனில் மற்றொன்றும் அத்துடன் விலகிவிடும்’ (ஆதாரம்: ஹாக்கிம்)
பொது இடங்களுக்கு செல்லும்போது வாசனைத் திரவியங்களைப் பூசிக்கொண்டு பெண்கள் செல்லக்கூடாது:
பொது இடங்களுக்கு செல்லும்போது வாசனைத் திரவியங்கள் உபயோகிப்பதை ஒரு பெண் கண்டிப்பாக தவிர்ந்து கொள்ள வேண்டும். தங்கள் வீடுகளுக்கு அப்பால் வாசனைத் திரவியங்கள் உபயோகிப்பதை தடுக்கும் பல நபிமொழிகள் உள்ளன.
Posted by: Alikan Moosalkaheen