ஹிந்து மதம் சகிப்புத் தன்மைப் பற்றி என்றுமே பெருமைப் பட்டிருக்கிறது. ஆனால் இன்று அதை நினைவு படுத்த வேண்டிய அவசியமேற்பட்டிருக்கிறது.
இஸ்லாம் பிற மதங்களின் பால் சகிப்புத்தன்மையைக் கடைப்பிடிப்பதில்லை. அது வாளின் உதவியுடன் வளர்ந்திருக்கிறது என்று ஹிந்துக்கள் பொதுவாக நம்புகின்றார்கள். அவர்களில், பெரும்பான்மையினர் முஸ்லீம் கொடுங்கோலர்களை – உதாரணமாக செங்கிஸ்கான், தைமூர், முஹம்மது கஜினி (கஜனவீ) ஆகியோரைக் குறிப்பிடுவார்கள்.
செங்கிஸ்கான் முஸ்லீம் அல்ல என்பது எத்தனைப் பேருக்குத் தெரியும்? மண்டை ஓடுகளை அடுக்கி உயரமான பிரமிடுகளைக் கட்டுவது தைமூருக்கு பிடித்தமான விளையாட்டு. அவன் இந்தியாவில் மட்டுமின்றி இஸ்லாம் செழித்து வளர்ந்த மேற்கு ஆசியாவிலும் அதைச் செய்தான் என்பது அவர்களுக்குத் தெரியுமா?
பாக்தாதிலிருந்த காலிஃப்பை கஜினி (கஜ்னவீ) முஹம்மது கொல்லப் போவதாக பயமுறுத்தியது அவர்களுக்குத் தெரியுமா? எந்த மதமும் கட்டாய மதமாற்றத்தால் வளர்ந்து விடவில்லை.
மேற்கு ஆசியாவிலும், ஆஃப்பிரிக்காவிலும் செழித்து வளர்ந்திருந்த கிறிஸ்தவ சமயப் பிரிவுகளுடன் ஒப்பிடும்போது இஸ்லாம் சகிப்புத் தன்மையைக் கடைப்பிடித்ததால்தான் ஆரம்ப காலத்தில் அது மாபெரும் வளர்ச்சி அடைந்தது என்பதை இஸ்லாமிய வரலாறுகள் எடுத்துக் காட்டுகிறது.
1602 ஆம் ஆண்டு ஸ்பெயினில் இருந்த சாரஸேன்கள் மீது ஆர்ச் பிஷப் குற்றம் சாட்டினார். என்ன குற்றம்? ‘துருக்கியர்களும், இதர எல்லா முஸ்லீம்களும் தம் குடிமக்களுக்கு அளிக்கின்ற மத நம்பிக்கை மற்றும் மனசாட்சி உரிமையை அவர்கள் போற்றுகின்றார்கள். சகிப்புத் தன்மையைக் கடைப்பிடிக்கின்றார்கள். ஆக மற்ற காரணங்களுடன் இதற்காகவும் ஸ்பெயினைவிட்டு அவர்களை வெளியேற்ற வேண்டும்!’ என்று ஆர்ச் பிஷப் பரிந்துரை செய்துள்ளார்.
ஹிந்து மதத்திலும், இஸ்லாம் மதத்திலும் உள்ள சகிப்புத் தன்மைகளுக்கு நிறைய உதாரணங்கள் உண்டு. ஒருவரையொருவர் புரிந்து கொள்ள முடியாததன் காரணம் அறியாமைதான். ஒவ்வொருவரும் மற்றவருடைய வரலாற்றைக் கற்க முயல்வோம். அடுத்தவருடைய கடந்தகால பண்பாடடை புரிந்து கொள்ள முயல்வோம்.
(டெல்லி நேஷனல் புக் டிரஸ்ட் இந்தியா வெளியிட்ட ‘நேருவின் போராட்டகால சிந்தனைகள்’ நூலிலிருந்து)