மறுமை! கதையோ, கற்பனையோ அல்ல…
‘சொர்க்கமாவது, நரகமாவது, ‘அதெல்லாம் சுத்த ஹம்பக்!’ ‘இந்த உலகம்தான் எல்லாமே! முடிந்தவரை சுகத்தை அனுபவி!’
‘இறைவன், மறுமை, கேள்விக் கணக்குநாள் இவையெல்லாம் சும்மா மக்களுக்கு பூச்சாண்டி காட்டுகிற வேலை…!’
‘மக்கி மண்ணோடு மண்ணாகிப் போன பிறகு மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பப்படுவோமா? கதை விடுவதற்கும் ஓர் அளவு இல்லையா?’
இப்படியெல்லாம் பேசக்கூடிய மக்கள் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் இருந்தார்கள். இன்றைய நவீன காலத்திலும் இருக்கிறார்கள்.
கடவுள், மதம் என்று இவர்களிடம் பேச்செடுத்தாலே போதும், ஏதோ ஓர் அற்பப் புழுவைப் போல நம்மை பார்ப்பார்கள்.
o மறுமையை மறுத்து,
o கேள்வி கணக்கு நாளை கேலி செய்து,
o சொர்க்கம், நரகம் என்பதையெல்லாம் கிண்டலடிக்கும் அன்பர்களை நோக்கி திருக்குர்ஆன் நிதானமாக – அழுத்தமாக சில செய்திகளை எடுத்துரைக்கிறது.
‘மறுமை இல்லையென மறுக்கிறீர்களே! அப்படியானால் மரணத்தைவிட்டு உங்களால் தப்பிக்க முடியுமா?’ என்று கேள்வி எழுப்பி, மரணத்தை குறித்து சிந்திக்கச் சொல்கிறது.
‘நீங்கள் உறுதிமிக்க கோட்டைகளில் இருந்தாலும் மரணம் உங்களிடம் வந்தே தீரும்’ (அல்குர்ஆன் 4 : 78) என்று இறைவேதம் அழுத்தமாகக் கூறுகிறது.
மரணத்திற்குப் பிறகு என்ன நடக்கும்? அதையும் இறைவன் தனது திருமறையில் அழகாகச் சொல்லியுள்ளான்.
‘இறந்து போனவர்களை இறைவன் (மண்ணறைகளில் இருந்து) எழுப்பியே தீருவான். பிறகு நீதி விசாரணைக்காக அவர்கள் அவனிடமே; கொண்டு வரப்படுவார்கள்’ (அல்குர்ஆன் 6 : 36)
அதாவது மரணம் எப்படி ஓர் எதார்த்த உண்மையோ அப்படி மரணத்திற்குப் பின்னுள்ள வாழ்வும் எதார்த்த உண்மையே என்று திருமறை சந்தேகத்திற்கு இடமின்றி கூறுகிறது.
‘இறுதித் தீர்ப்பு நாளில் ஒவ்வொரு சமூகமும் முழந்தாளிட்டு விழுந்து கிடப்பதை நிங்கள் பார்ப்பீர்கள். ‘வாருங்கள், உங்கள் வினைச்சுவடியைப் பாருங்கள்’ என்று ஒவ்வொரு சமுதாயத்தினரும் அழைக்கப்படுவார்கள். (அல்குர்ஆன் 45 : 28)
சரி, அது என்ன வினைச்சவடி?
அது ஒரு பதிவேடு. இந்த உலகில் மனிதன் செய்த ஒவ்வொரு செயலும் அதில் பதிவாகி இருக்கும். மறுமை நாளில் நல்லவர்களின் வினைச்சவடி அவர்களின் வலக்கரத்தில் கொடுக்கப்படும். தீயவர்களின் வினைச்சுவடி அவர்களின் இடக்கரத்தில் கொடுக்கப்படும். நல்லவர்கள் தங்கள் பதிவேட்டைப் பார்த்து மகிழ்ச்சியில் பூரித்துப் போவார்கள். தீயவர்களோ திகைப்பும் அச்சமும் கொண்டு, கிடைக்கப்போகும் தண்டனையை எண்ணி நடுங்கியவாறு இருப்பார்கள்.
இந்த இரு தரப்பினரின் நிலைமையையும் இறைமறை படம்பிடித்துக் காட்டுகிறது.
வலது கையில் பட்டோலை
”ஆகவே, எவருடைய பட்டோலை அவருடைய வலக்கையில் கொடுக்கப்படுமோ, அவர் (மகிழ்வுடன்), ”இதோ! என் பட்டோலையைப் படியுங்கள்”” எனக் கூறுவார்.
”நிச்சயமாக, நாம் உன்னுடைய கேள்வி கணக்கை, திட்டமாக சந்திப்பேன் என்று எண்ணியே இருந்தேன்.””
ஆகவே, அவர் திருப்தியான சுக வாழ்ககையில் – உயர்ந்த சுவர்க்கத்தில் இருப்பார்.
அதன் கனி(வகை)கள் (கைக்கு எட்டியதாக) சமீபத்திருக்கும்.
”சென்று போன நாட்களில் நீங்கள் முற்படுத்தி(யனுப்பி)ய (நல்ல அமல்களின்) காரணத்தால், நீங்கள் இப்போது மகிழ்வோடு புசியுங்கள்; இன்னும் பருகுங்கள்” (என அவர்களுக்குக் கூறப்படும்). (அல்குர்ஆன் 69 : 19.-24)
இடது கையில் பட்டோலை
”ஆனால் எவனுடைய பட்டோலை அவனுடைய இடக்கையில் கொடுக்கப்படுமோ அவன் கூறுவான்; ”என்னுடைய பட்டோலை எனக்குக் கொடுக்கப்படாமல் இருந்திருக்க வேண்டுமே!
”அன்றியும், என் கேள்வி கணக்கு என்ன என்பதை நான் அறியவில்லையே-
”(நான் இறந்த போதே) இது முற்றிலும் முடிந்திருக்கக் கூடாதா?
”என் செல்வம் எனக்குப் பயன்படவில்லையே!
”என் செல்வாக்கும் அதிகாரமும் என்னை விட்டு அழிந்து விட்டதே!”” (என்று அரற்றுவான்).
”(அப்போது) அவனைப் பிடித்து, பிறகு அவனுக்கு அரிகண்டமும் (விலங்கும்) மாட்டுங்கள்.””
”பின், அவனை நரகத்தில் தள்ளுங்கள். (அல்குர்ஆன் 69 : 25-31)
இந்தத் திருவசனங்களில் இருந்து என்ன தெரிகிறது? இந்த உலகமும், உலக வாழ்வும் எப்படி உண்மையோ அப்படியே மறமையும், மரணத்திற்குப் பின்னுள்ள வாழ்வும் உண்மையே! சொர்க்கம் – நரகம் என்பதெல்லாம் வெறும் கற்பனையோ, ‘பூச்சாண்டி’ காட்டும் விஷயமோ அல்ல. அவை நிதர்சனமான சத்தியங்கள்.
மறுமையில் நம்முடைய வினைச்சுவடியைப் பார்த்து நாம் மகிழ்ச்சி அடையும் அளவுக்கு இம்மையில் ஏக இறைவனை முழுமையாக நம்பி நற்பணிகளாற்றுவோம். ‘லா இலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்’
நன்றி: சொர்க்கத்தோழி மாத இதழ் மார்ச், 2010