வாஷிங்டன்: அமெரிக்கா அதன் நேச நாடுகளும் மற்றும் நேசமில்லாத நாடுகளும் தன் ஆட்சி, அதிகார அடக்குமுறையாலும், ஆணவத்தாலும் திரைமறைவில் செய்து முடித்த, இன்றும் செய்து கொண்டிருக்கும் கணக்கிலடங்கா கொலைபாதக செயல்களையும், கோடிக்கணக்கான ஊழல்களையும், பல ரகசிய ஆவணங்களையும் தன் இணைய தளம் மூலம் ‘விக்கிலீக்ஸ்’ எனும் இணையதளம் வெளியுலகிற்கு கசிய விட்டிருக்கிறது.
‘அடப்பாவி இவனா அவன்? இப்படி செய்தான்?’ என சாதாரன மக்களும் வியப்பால் தன் மூக்கில் கை வைத்து ஆச்சரியப்படும் பல அவலங்களையும், செய்து முடித்த பல கோடூரங்களையும் அவிழ்த்து விட்டிருக்கிறது இந்த விக்கிலீக்ஸ் இணையதளம்.
‘பல நாள் திருடன் ஒரு நாள் பிடிபடுவான்’ என்பது பழைய மொழியாக இருந்தாலும் அதை தன் கோடூர முகத்தால் அமெரிக்கா ஏகாதிபத்திய நாடுகள் அவ்வப்பொழுது புதுப்பித்துக்கொண்டிருக்கின்றன.
இன்னும் இந்த இணைய தளம் மூலம் என்னென்ன பூதங்கள் கிளம்பப்போகின்றனவோ? என்று தவறு செய்தவர்களுக்கு “குற்றமுள்ள மனசு குறுகுறுக்கும்” என்பது போல் புளியைக்கரைத்துக்கொண்டிருக்கிறது.
இந்தியா பற்றி மூவாயிரம் ஆவணங்கள் வெளியீடு: “விக்கி லீக்ஸ்’ இதன் மூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அது பற்றி விளக்கங்களை இன்னும் ஒரு சில நாட்களில் வெளிவரலாம். ”ஸ்பெக்ட்ராம்” மெகா-மகா ஊழலையும் கண்டுபிடித்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்கிறான் உண்மையான இந்தியக் குடிமகன்.
விக்கிலீக்ஸ் வெளியிட்ட அதிமுக்கியத்துவம் வாய்ந்த ஆவணங்கள்:
o அமெரிக்காவின் ராணுவ ரகசியங்கள், தூதரக நடவடிக்கைகள் உள்ளிட்ட அதிமுக்கியத்துவம் வாய்ந்த ரகசிய ஆவணங்களை வெளியிட்டு சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது விக்கிலீக்ஸ் இணையதளம்.
o அமெரிக்க வெளியுறவுத்துறை, உலகமெங்குமுள்ள 270 அமெரிக்க தூதரகங்கள், தூதரக துணை அலுவலகங்கள் இடையே ரகசியமாக பரிமாறப்பட்ட தகவல்களைத்தான் விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.
o இவற்றில் பெரும்பாலானவை கடந்த 3 ஆண்டுகளில் நடந்தவையாகும். ஈரானை தாக்குவதற்கு சவூதி ஆட்சியாளர்கள் அமெரிக்காவை தொடர்ந்து வலியுறுத்தியதாக ரியாதில் அமெரிக்க தூதரகத்தின் கடிதத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
o ஈரானின் அணுசக்தி திட்டத்தை எவ்வாறாயினும் தடுக்கவேண்டும் என சவூதி மன்னர் அப்துல்லாஹ் உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்ததாக சவூதி அமெரிக்க தூதரகம் அமெரிக்க வெளியுறவுத் துறைக்கு புரியவைத்ததாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
o அமெரிக்காவின் ஆதிக்கத்தை உறுதிப்படுத்துவதற்காக ஐ.நா தலைமையை கூட அமெரிக்க அதிகாரிகள் ரகசியமாக கண்காணித்ததாகவும் இந்த ஆவணங்கள் வெளிப்படுத்துகின்றன.
o பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படாமலிருப்பதற்காக செறியூட்டப்பட்ட யுரேனியத்தை பாகிஸ்தான் அணுசக்தி நிலையத்திலிருந்து திருடுவதற்கு கூட அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. உள்ளூர் ஊடகங்கள் இதில் தலையிடும் என்பதால் இந்த திருட்டு முயற்சி கைவிடப்பட்டது.
o வடகொரியாவை தாக்குவதற்கு தென்கொரியாவுடன் இணைந்து அமெரிக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக சீனாவிற்கு ஆசையூட்டி தங்களுடன் இணைய தென்கொரியா முயற்சித்தது.
o குவாண்டனாமோ சிறைக் கைதிகளை பல்வேறு நாடுகளுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டது. ஆனால், பல நாடுகளும் இதனை எதிர்த்தன.
o சர்வதேச அளவில் கூகிள் உள்ளிட்ட இணையதளங்களை ஹேக் செய்யவும், சைபர் துறையில் இதர தாக்குதல்களுக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சி அங்கீகாரம் அளித்தது.
o சீன அரசு நியமித்த சட்டவிரோத நிபுணர்கள் உலகநாடுகள், தலாய்லாமா, அமெரிக்க வர்த்தகர்கள் உள்ளிட்டோரின் சைபர் அக்கவுண்டுகளும், இணையதளங்களும் ஹேக் செய்தனர்.
o மனித உரிமை மீறலில் ஈடுபட்ட சி.ஐ.ஏ அதிகாரியை கைதுச் செய்யக்கூடாது என ஜெர்மனியை அமெரிக்கா மிரட்டியது. ஆப்கானில் ஜெர்மனியைச் சார்ந்த குடிமகன் ஒருவர் கொடுமைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
o ரஷ்ய அதிபர் புடினுக்கும் இத்தாலி பிரதமரும் வர்த்தக மன்னனுமான சிலிவோ பெர்லஸ் கோணிக்குமிடையேயான தொடர்பு. சிலிவோவிற்கு உதவுவதற்காக புடின் ஏராளமான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார்.
o ஆப்கான் துணை அதிபர் யு.ஏ.இக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பொழுது 5 கோடியே இருபது லட்சம் அமெரிக்க டாலர் கள்ள நோட்டுகளுடன் பிடிபட்டபொழுது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
o அமெரிக்கா ஈராக் மீது படையெடுத்து அந்நாட்டை தன் முழுக்கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த பிறகும் அங்குள்ள அப்பாவி பொதுமக்கள் உயிருக்கு பயந்து கூட்டம், கூட்டமாக தன் கைகளில் வெள்ளைக்கொடிகளை (சமாதானத்தின் சின்னமாய்) ஏந்தி அமெரிக்க ராணுவத்தை நோக்கி சரண் அடைய வந்தவர்களை கூட விட்டு வைக்கவில்லை. வானிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் அவர்களை ஈவு இரக்கமின்றி சுட்டு வீழ்த்தி இருப்பதையும் இந்த இணைய தளம் தெளிவாக படம் பிடித்து உலகுக்கு வெளியிட்டுள்ளது.
o அமெரிக்க அதிபர் முதற்கொண்டு அனைத்து அதிகார வர்க்கங்களும் இணைய தளம் மூலம் உலக ரகசியங்களை வெளியிட்ட ‘விக்கிலீக்ஸ்’ இணையதளத்தின் மீதும் அதன் உரிமையாளர் மீதும் முழு வீச்சில் நடவடிக்கை எடுக்க திசை திருப்பப்பட்டுள்ளார்களே தவிர தவறு செய்தவர்களை தண்டிக்க அல்ல.
o இது போன்ற உலக மகா தவறுகளையும், குற்றங்களையும் செய்தவர்கள் உலக சட்டத்தின் முன் ஒரு போதும் முறையே விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்படுவதில்லை. மாறாக ஊடகங்கள் மூலம் உலக நட்சத்திர அந்தஸ்த்தை பெற்று அதன் மூலம் மேலும் பல ஆதாயங்களை அடைந்து கொள்கின்றனர்.
o விக்கிலீக்ஸ் மொத்தம் 250000 ஆவணங்களை வெளியிட்டுள்ளது. இதில் 3038 ஆவணங்கள் டெல்லியிலுள்ளதாகும். 2278 காட்மாண்டுவிலுள்ளது. 3325 ஆவணங்கள் கொழும்புவிலிருந்தாகும். 2220 ஆவணங்கள் இஸ்லாமாபாத்திலுள்ளதாகும்.
விக்கிலீக்ஸ் இணையதள அதிபர் அஸன்ஜாவுக்கு எதிராக வழக்கு தொடர அமெரிக்கா முடிவு
இதற்கிடையில் சட்டவிரோதமாக அரசு ரகசிய ஆவணங்களை வெளியிட்டதன் பேரில் விக்கிலீக்ஸ் இணையதள ஸ்தாபகர் ஜூலியன் அஸன்ஜாவுக்கு எதிராக உளவுவேலைப் பார்த்ததாக வழக்கு தொடர அமெரிக்கா முடிவுச் செய்துள்ளது.
ரகசிய தகவல்களை வெளியிட்டதன் மூலம் அஸன்ஜா ஏதாவது குற்றவியல் சட்டங்களை மீறியுள்ளாரா என்பதுக் குறித்து ஆராய்ந்து வருவதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்ததாக வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
ரகசிய ஆவணங்களை கைவசம் வைத்திருக்கும் நபர்களைக் குறித்தும், அவற்றை விக்கிலீக்ஸிற்கு அளித்தவர்கள் குறித்த விபரங்களை எஃப்.பி.ஐ சேகரித்து வருகிறது. விக்கிலீக்ஸின் விளக்கங்கள் குறித்தும் விசாரணை நடந்துவருகிறது.
பெண்டகனின் தலைமையில்தான் இவ்விசாரணை நடைப்பெற்று வருகிறது. ராணுவ-சிவிலியன் சட்டங்களை மீறிய குற்றம் அஸன்ஜா மீது சுமத்தப்படுமா என்பதுக் குறித்து தெரியவில்லை.
இவ்வருட துவக்கத்தில் கைதுச் செய்யப்பட்டு விசாரணையை எதிர்கொண்டிருக்கும் அமெரிக்க ராணுவ உளவுத்துறை பகுப்பாய்வாளர் பிராட்லி மானிங் விக்கிலீக்ஸிற்கு ரகசிய ஆவணங்களை அளித்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
அமெரிக்க உளவுத்துறை சட்டப்படி தேசிய பாதுகாப்புத் தொடர்பான விபரங்களை சட்டத்துக்கு புறம்பாக கைவசம் வைத்திருப்பதும் அது தேசத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துமானால் அந்த நபர் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்.
ரகசிய விபரங்களை திருடுவதும் அதனை வெளியிடுவதும் குற்றச்செயல் என வெள்ளைமாளிகை ஊடக செயலாளர் ராபர்ட் கிப்ஸ் தெரிவிக்கிறார்.
விக்கிலீக்ஸ் வெளியிட்ட ரகசிய ஆவணங்கள் குறித்து விசாரணை நடந்து வருவதாகவும், அதன் முடிவை தற்போது தெரிவிக்க இயலாது எனவும் அமெரிக்க அட்டர்னி ஜெனரல் எரிக் ஹோல்டர் தெரிவிக்கிறார்.
ரகசிய தகவல்களை திருடியவர்களை கடுமையாக தண்டிப்போம் என அமெரிக்க அரசுச் செயலர் ஹிலாரி கிளிண்டன் கூறுகிறார். எதிர்காலத்தில் இத்தகையதொரு சம்பவம் நிகழாமலிருக்க பாதுகாப்புத்துறையிலும் வெளியுறவுத்துறையிலும் பாதுகாப்பு நடவடிக்கைகளை கடுமையாக்குவோம் என ஹிலாரி தெரிவித்துள்ளார்.
புகலிடம் அளிக்க தயார் – ஈக்வடார்
அதே சமயம் விக்கிலீக்ஸ் இணையதள அதிபர் ஜூலியன் அஸன்ஜாவுக்கு நிபந்தனைகளற்ற அபயம் அளிக்க தயார் என ஈக்வடார் நாடு அறிவித்துள்ளது. எவ்வித பிரச்சனைகளோ கட்டுப்பாடுகளோ இல்லாத வசிப்பிட வசதிகளை தயாராக இருப்பதாக ஈக்வடார் நாட்டு வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கின்றோ லூக்காஸ் அறிவித்துள்ளார்.
நாங்கள் அவரை ஈக்வடார் நாட்டிற்கு அழைக்கப் போகிறோம். அவர் இணையதளங்களில் மட்டுமல்ல பொது இடங்களிலும் அவர் வசமிருக்கும் தகவல்களை வெளியிட நாங்கள் அனுமதி வழங்குவோம் என லூக்காஸ் தெரிவித்தார்.
பல்வேறு நாடுகளின் தகவல்களை சேகரிப்பதின் இருண்ட மூலைகளில் வெளிச்சம் வீசும் அஸன்ஜா போன்றவர்களுக்கு எங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம் என லூக்காஸ் தெரிவித்தார்.
அமெரிக்க தூதரக அதிகாரிகளை உளவு வேலைக்காக ஈடுபடுத்துவது கவலையை அளிப்பதாக மேலும் அவர் தெரிவித்தார். தங்களின் வசமிருக்கும் ரகசிய ஆவணங்களில் 1621 ஆவணங்கள் ஈக்வடார் நாட்டின் தலைநகரான க்விட்டாவிலுள்ள அமெரிக்க தூதரகத்திலிருந்து அனுப்பப்பட்டவை என விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டிருந்தது.
ஈக்வடார் நாட்டின் இடதுசாரி அரசு அமெரிக்காவின் முக்கிய எதிரியாகும். 2009 ஆம் ஆண்டு சி.ஐ.ஏவுக்காக உளவுவேலைப் பார்த்ததாக குற்றஞ்சாட்டி இரண்டு அமெரிக்க தூதரக அதிகாரிகளை ஈக்வடார் வெளியேற்றியிருந்தது.
விக்கிலீக்ஸ் – துணிச்சலை பாராட்டலாம்
டிப்ளமேசி (Diplomacy) என்ற வார்த்தைக்கு ஐரோப்பிய மொழிகளில் கபடம், சதி, ஏமாற்று போன்ற அர்த்தங்கள் கொடுக்கப்படுகின்றன. தூதரக பிரதிநிதிகள் உள்ளத்தில் ஒன்று உதட்டில் வேறு வார்த்தைகளை புன்னகைமாறாத முகத்தோடு வெளிப்படுத்துவதில் அபார திறமைசாலிகள்.
இந்நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறையும், அந்நாட்டின் 270 நாடுகளைச் சார்ந்த தூதரகங்களும் தங்களிடையே பரிமாறிக்கொண்ட ரகசிய செய்திகளில் அந்நிய நாடுகளைக் குறித்தும் அந்நாடுகளின் ஆட்சியாளர்களைக் குறித்தும் அவமதிப்பான விமர்சனங்களையும் அவதூறுகளையும் காணும்பொழுது ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.
ஏறத்தாழ இரண்டரை லட்சம் ஆவணங்களை விக்கிலீக்ஸ் அமெரிக்காவின் கம்பீரமான கம்ப்யூட்டர் நெட்வொர்க்கை ஏமாற்றி வெளிக் கொணர்ந்துள்ளது. இவற்றில் 220 கம்பிவட தகவல்கள் மட்டுமே வெளியாகியுள்ளன. மீதமுள்ளவை வெளிவந்துக் கொண்டிருக்கிறது. தற்பொழுது வெளியிடப்பட்டவற்றில் அமெரிக்காவின் தூக்கத்தை கெடுக்கும் வகையில் அதிர்ச்சிகரமான தகவல்கள் ஒன்றுமில்லை.
வடகொரியாவின் கிம் ஜோங் இல்லை கைவிட்டுவிட்டு கொரியாவின் ஒருங்கிணைப்புக்கு சீனா தயார் என்ற தகவலும், பாகிஸ்தானின் அணுசக்தி மையங்களிலுள்ள செறியூட்டப்பட்ட யுரேனியத்தை அமெரிக்காவிற்கு கடத்த திட்டமிட்ட அந்நாட்டின் முயற்சியை பாகிஸ்தான் தடுத்தது என்ற தகவலும் புதியவையே.
ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் பதவியை பெறுவதற்கு இந்தியா உள்ளிட்ட நாடுகள் நடத்தும் முயற்சிகளை தடுப்பதற்கு அமெரிக்கா முயலும் என்பதில் எவருக்கு சந்தேகம் உள்ளது?
ஈரானை தாக்கி அழிக்க சில அரபு நாடுகள் ஏற்கனவே கங்கணங் கட்டிக்கொண்டுதான் உள்ளன. சர்வதேச தூதரக உறவுகளில் புறமுதுகில் குத்துவதும், வேட்டுவைப்பதும் வழக்கமானதாகும்.
ஃபலஸ்தீன் நாட்டிற்காக இடம்தெரியாமல் பேசும் அமெரிக்காதான் சியோனிஸ்டுகளின் ஆக்கிரமிப்பிற்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது. சுயநிர்ணய உரிமைக்கும், ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கும் ஏகபோக உரிமைப்பெற்ற சர்வதேச தூதராக தன்னை அறிமுகப்படுத்தும் அமெரிக்காதான் ஏகாதிபத்திய ஆட்சியாளர்களை பாதுகாத்து முஸ்லிம் உலகில் ஜனநாயகத்தை மலரவிடாமல் தடுத்துவருகிறது.
அமெரிக்க ராணுவ உளவுத்துறையைச் சார்ந்த ப்ராட்லி மானிங்கின் உதவியோடு விக்கிலீக்ஸின் ஸ்தாபகர் ஜூலியன் அஸன்ஜாவும் அவரது நண்பர்களும் அரசுகளின் கபட முகத்தை வெளிக் கொணர்ந்துள்ளனர்.
ரகசியத்தை கசியவிட்டதற்காக மானிங் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அஸன்ஜாவை கைதுச்செய்ய அமெரிக்கா தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. அவர் மீது உளவுவேலைப் பார்த்ததாக குற்றஞ்சுமத்தி வழக்குப்போட முயற்சிகள் நடக்கின்றன.
ராஜ ரகசியங்கள் என்ற பெயரில் நாட்டு குடிமக்களுக்கு தெரியாமல் எதனையும் மறைவைக்க இயலாது என்பது இணையதளத்தின் மூலம் கிடைத்த பலனாகும்.
அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட எதனையும் செய்யத்தயாரான நாடுகளுக்கு சவால் விடுத்துள்ளது விக்கிலீக்ஸ். ஆகையால், அதனை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
இரும்புக்கோட்டைக்குள் செய்து முடித்த பேரகசியங்களையும், சதித்திட்டங்களையும், அவலங்களையும் பாதுகாக்க முடியாத இந்த மனித வர்க்கம் (வல்லரசுகள்) படைத்தவன் முன் எப்படி தன் தவறுகளை மறைத்து விட முடியும்?
உலகம் இப்படியேச்சென்று கொண்டிருந்தால் கடைசியில் ‘பூனைக்கு யார் தான் மணிகட்டுவர்’? நிச்சயம் ஒரு நாள் கட்டப்படும் அது யுக முடிவு (கியாமத் நாள்) நாளாகத்தான் இருக்கும்.
source: தேஜஸ் மலையாள நாளிதழ் & பாலைவனத்தூது http://paalaivanathoothu.blogspot.com