பொற்கால ஆட்சியில்!
மவ்லவி K.K.U. காதர் வலி முஸ்தஃபா ஃபைஜி
அமீருல் முஃமினீன் ஹளரத் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ஆட்சி செய்து கொண்டிருந்த காலம் அது. அவர்கள் ஆட்சியில் மக்கள் நிம்மதியாகவும் அமைதியாகவும் வாழ்ந்து கொண்டிருந்தனர். அத்துடன் செழிப்புடனும் காணப்பட்டனர்.
இதையெல்லாம் நன்கு தெரிந்திருந்தம் கூட ஹளரத் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், இரவு நேரங்களில் தூங்குவதில்லை. மக்களுக்கு ஏதேனும் தேவைகள் ஏற்பட்டிருக்குமா? அல்லது யாரேனும் தீங்கிழைக்கப்பட்டிருக்கிறார்களா? என்ற கவலை அவர்களின் உள்ளத்தில் அடிக்கடி எழுகின்ற காரணத்தால் அவர்கள் தூங்காது – மாறுவேடம் பூண்டு தன்னை நாட்டின் அதிபர் என்பதைக் காட்டிக் கொள்ளாமல் நகரைச் சுற்றி வருவார்கள். இது அவர்களுடைய வழக்கம்.
அதுபோல் அன்று இரவும் நகரைச் சுற்றி வருகின்றார்கள் ஜனாதிபதி உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள். எங்கும் நிசப்தம். எல்லா பகுதியிலும் அமைதி! மக்கள் அனைவரும் நிம்மதியாக துயில் கொண்டிருந்தனர். இதைக்கண்டு நிம்மதிப் பெருமூச்சுடன் வந்து கொண்டிருந்த அவர்களை ஒரு குரல் திடுக்கிடச் செய்தது.
ஆம்! அமைதியான அந்த இரவு நேரத்தில் ஒரு மனிதர் ஏதோ பாடிக்கொண்டிருந்தார். கேட்பதற்கு சகிக்க முடியாத காம உணர்வுகளைத் தூண்டிவிடும் கவிதையை பாடிக் கொண்டிருந்த அம்மனிதரின் வீட்டை நோக்கி விரைகின்றார் கலீஃபா. அதை மேலும் கேட்பதற்கு மனம் பொறுக்காமல் அவ்வீட்டின் பின்புறத்திலுள்ள சுவற்றின் மீது ஏறி வீட்டின் உள்ளே புகுந்து விடுகிறார்.
அங்கு கண்ட காட்சி கலீஃபா உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை திடுக்கிடச் செய்கிறது. காரணம், அம்மனிதரின் முன்னால் மதுபானங்கள் இருந்தது. அதுமட்டுமின்றி ஒரு பெண்ணும் அவரருகில் அமர்ந்திருந்தாள். இதனைக் கண்ட கலீஃபா உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், ‘ஏய்! அல்லாஹ்வின் விரோதியே! பாவத்திலேயே மூழ்கிக் கிடக்கின்றாயே, இந்நிலையில் அல்லாஹ் உன் பாவத்தை மன்னித்து, மறைத்து விடுவான் என்று எண்ணிக் கொண்டாயோ!’ என ஆவேசத்துடன் கேட்டார்கள்.
தன்னைத் தட்டிக் கேட்பவர் கலீஃபா தான் என்பதை உறுதி செய்து கொண்ட அந்த மனிதர், ‘அமீருல் முஃமினீன் அவர்களே! அவசரப்பட வேண்டாம். ஆத்திரப்பட வேண்டாம். நான் அல்லாஹ்வுக்கு இந்த ஒரு முறைதான் மாறு செய்துள்ளேன், பாவம் புரிந்துள்ளேன். தாங்களோ என் விஷயத்தில் அல்லாஹ்விற்கு மூன்று காரியத்தில் மாறு செய்து விட்டீர்கள்’ என்று கூறியதும் அமைதியாகி விடுகிறார்கள் கலீஃபா உமர் ரளியல்லாஹு அன்ஹு
‘உண்மையான முஃமீன்கள் யாரெனில், அல்லாஹ்வைப் பற்றி கூறப்பட்டால் அவர்கள் உள்ளங்கள் (அச்சத்தால்) நடுங்கும். (அல்குர்ஆன் 8:2) என்ற திருமறையின் வசனத்திற்கேற்ப,
ஹளரத் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அமைதியுடன், அம்மனிதரிடம் சகோதரரே! ‘அம்மூன்று காரியங்களையும் அறிவியுங்கள்’ என்று கூற, வீட்டிலுள்ள அம்மனிதர். அமீருல் முஃமினீன் அவர்களே!
1. அல்லாஹ் குர்ஆனில் ‘நீங்கள் அடுத்தவர்களின் குறைகளை துருவித் துருவி ஆராய வேண்டாம்’ (அல்குர்ஆன் 49:12) என்று கூறுகிறான். தாங்களோ என் குறையைத் துருவித் துருவி ஆராய்ந்துள்ளீர்கள்.
2. ‘நீங்கள் வீடுகளுக்குள் (நுழையும்போது) பின்புறமாக(வோ மதில் வழியகவோ) செல்வது நல்ல செயலல்ல’ (அல்குர்ஆன் 2:189) என்று அல்லாஹ் கூறியிருக்க, தாங்களோ என் வீட்டின் பின்புறத்தின் மதில் வழியாக நுழைந்துள்ளீர்கள்.
3. ‘முஃமீன்களே! நீங்கள் அடுத்தவர்களின் வீடுகளில் நுழைய வேண்டாம். அப்படி நுழைய வேண்டுமெனில் அவர்களிடம் அனுமதி கேட்க வேண்டும். ஸலாமும் கூறவேண்டும்’ (அல்குர்ஆன் 24: 24) என்றும் அல்லாஹ் கூறியுள்ளான். ஆனால் தாங்களோ என்னிடம் அனுமதியும் கேட்காமல், ஸலாமும் சொல்லாமல் என் வீட்டில் நுழைந்து விட்டீர்கள் என்று அவர் கூறியதும்! ‘சகோதரரே என்னை மன்னித்து விட்டால் உம்மை நல்லவராக ஏற்றக் கொள்வேன்’ என்று ஜனாதிபதி உமர் ரளியல்லாஹு அன்ஹு
‘அமீருல் முஃமினீன் அவர்களே! நீங்களும் என்னை மன்னித்து விட்டால் நிச்சயமாக அல்லாஹ்வின்மீது ஆணையாக இதுபோன்ற தீமையான காரியங்களில் ஒருபோதும் ஈடுபடமாட்டேன்’ என்று அந்த மனிதரும் கேட்டுக்கொண்டார். உமர் கத்தாப் ரளியல்லாஹு அன்ஹு
இந்த வரலாற்று நிகழ்ச்சியை காணும்போது இப்படியும் ஒரு ஜனாதிபதியா? இப்படியும் ஒரு மனிதரா? ஜனாதிபதியை மடக்கிக் கேட்கும் மனிதர்களும் வாழ்ந்துள்ளார்களா? என்று நாம் வியப்படையலாம். இதுபோல் எத்தனையோ நிகழ்ச்சிகள் இஸ்லாமிய வரலாற்றில் இடம் பெற்றுள்ளன. ஆனால் இது போன்று இன்று காண முடியுமா? கற்பனைக் கூட செய்ய முடியாதே!
நன்றி: குர்ஆனின் குரல்: டிசம்பர் 1994