சமுதாய வளர்ச்சியில் பெண்களின் உண்மையான பங்களிப்பு!
டாக்டர் T.S. ஜாஃபர் ஸாதிக் M.S. வாணியம்பாடி
தற்போது பெண்கள் படித்துப் பல்வேறு பட்டங்களைப் பெறுகின்றார்கள். பல்வேறு துறைகளில் பாதம் பதிக்கின்றார்கள். அவர்களின் பாதங்கள் பதியாத துறையே இல்லை எனும் அளவிற்கு அவர்கள் வளர்ச்சியடைந்துள்ளார்கள். இவையெல்லாம் சமுதாய வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பு என நாம் பெருமிதம் கொள்கின்றோம்.
எனினும் மற்றவர்களின் பெருமிதத்திற்கு முற்றிலும் மாறான கோணம் இக்கட்டுரையில் ஆய்வு செய்யப்படுகிறது. ஏனெனில் இவற்றைப் ‘பெண்களின் வளர்ச்சி’ என வேண்டுமானால் கருதலாம். ஆனால் ‘இப்பங்களிப்பால் சமுதாயம் வளர்ந்துள்ளதா?’ என்பது ஒரு கேள்விக்குறியாக இருக்கின்றது.
உண்மையில் சமுதாய வளர்ச்சி என்பது எது? தனி மனிதர்களிடம் நிம்மதி, குடும்பத்தில் மகிழ்ச்சி, மனித சமுதாயத்தில் அமைதி’ – இவற்றை மக்களுக்கு அபரிமிதமாக அள்ளித்தரும் வளர்ச்சியே உண்மையான சமுதாய வளர்ச்சி ஆகும்.
இந்த வளர்ச்சிக்குப் பெண்கள் எத்தகைய அளவில் பங்களித்துள்ளார்கள்? என்ற கேள்வியை முன்வைத்து – ‘சமுதாய வாழ்க்கையில் இன்றையப் பெண்களின் பங்கேற்பு எத்தகைய விளைவுகளைத் தோற்றுவித்துள்ளது? என்ற உண்மையை வெளிச்சப்படுத்துவதற்காக – வேறு சில கேள்விகளையும் முன்வைக்கின்றேன்.
0 பொருளீட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள ஆண்களிடம் வேலையில்லாத் திண்டாட்டம் சமுதாய வளர்ச்சியா?
0 சமுதாயத்தின் பெரும்பாலான குழந்தைகள் தாயின் முழுமையான அரவணைப்பும், முழு நேர கவனிப்பும், தந்தையின் அக்கரையும், ஆசிரியர்களின் முறையான வழிகாட்டலும், மனிதர்களின் வாழ்வியல் நோக்கத்திற்கேற்ப அடிப்படைக் கல்வியளிப்பும் இன்றி தான்தோன்றித் தனமாக வளர்வதும், அவற்றின் விளைவாகச் சமுதாயத்தில் தீய செயல்களும், அக்கிரமச் செயல்களும், மானக்கேடான செயல்களும் மலிந்திருப்பதும் சமுதாய வளர்ச்சியா?
0 ‘நெருப்புக்கு அருகில் பஞ்சை வைத்தால் பஞ்சுக்கு அழிவு’ என்பது நியதியாக இருக்கும்போது… ஆண்களும் பெண்களும் இரண்டறக்கலந்து பழகுவதும், டேட்டிங் போவதும், இரவு கிளப்புகளில் நடனமாடுவதும், இறுதியில் இன்பத்தைச் சுவைத்துவிட்டு ஆண்கள் தப்பித்துக் கொள்ள பெண்களின் மீது துன்பத்திற்கு மேல் துன்பமாகக் கருக்கலைப்பும், இழிவும் விதியாவதும் சமுதாய வளர்ச்சியா?
0 சினிமா, மீடியா, விளம்பரம், அழகிப்போட்டி என்று அனைத்திலும் – அவர்களாலேயே தடுத்து நிறத்த முடியாத அளவிற்கு – பெண்கள் போகப் பொருளாக விற்கப்படுவது சமுதாய வளர்ச்சியா?
0 வரதட்சணையும், விவாகரத்துகளும், ஈவ் டீஸிங்குகளும், கற்பழிப்புகளும், இறுதியில் பெண்களின் தற்கொலைகளும், கொலைகளும் நாட்டில் அதிகரித்து வருவது சமுதாய வளர்ச்சியா?
0 வளர்கிறேன் என்ற பெயரில் வாழ்ந்து முடித்ததும் வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில் தனிமையிலும் ஆதரவில்லாமலும் விடப்படுவது சமுதாய வளர்ச்சியா?
இந்த வளர்சியெல்லாம் நமது நாட்டில் சமீப காலமாக வேரூன்றி வருகின்றன. ஆனால் இந்த வளர்ச்சியின் பின்விளைவுகளை முன்னோக்கிப் பார்ப்பதற்கு மேலைநாடுகள் ‘வாழும் சான்றுகளாக’ விளங்கி வருகின்றன. இவைதான் சமுதாய வளர்ச்சி என்றால் உலகளாவிய அளவில் பெண்கள் இந்த வளர்ச்சிக்காக நிறையவே பங்களித்துள்ளார்கள்!
இன்றைய சமுதாயத்தில் பெண்களின் இந்த வளர்ச்சி உண்மையில் சமுதாய வளர்சியல்ல. மாறாக மனித குலத்தை நிர்மூலமாக்கும் சமுதாய இகழ்ச்சி. தனக்கு இன்பம் கிடைத்தால் போதும் என்ற சுயநல வெறியை அகற்றிவிட்டுப் பிற ஆத்மாக்களின் நலனையும், எதிர்காலச் சந்ததிகளின் புனிதத் தன்மையையும், மனித வாழ்வியல் நோக்கத்தையும் கருத்தில் கொண்டு ஆய்வு செய்பவர்களுக்கு இந்த உண்மை நிச்சயம் விளங்கும்.
இப்பொழுது மற்றொரு கேள்வி: சமுதாய வளர்ச்சிக்காகப் பெண்கள் அளிக்க வேண்டிய நியாயமான உண்மையான பங்கு எது?
எந்தப் பங்களிப்பை அவர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக மறத்துவிட்டால் மனித சமுதாயம் இன்றையத் தலைமுறையுடன் முற்றிலும் அழிந்து போகுமோ…
எந்த பங்களிப்பை அவர்கள் ஒவ்வொருவரும் நிறைவேற்றவில்லை என்றால் மனித சமுதாயம் ஒழுக்கம் குன்றியும், மனித நேயமும், ஆன்ம நேயமும் இன்றி சீரழிந்து போகுமோ…
அவ்வாறு அழிந்து போகாமல் இருப்பதற்காகப் பெண்களின் மீது இயற்கையின் வாயிலாக இறைவன் விதித்துள்ள பங்களிப்புதான் சமுதாய வளர்ச்சிக்காகப் பெண்கள் அளிக்க வேண்டிய நியாயமான, உண்மையான பங்களிப்பாகும். அது அடுத்த தலைமுறையாக உருமாறும் பங்களிப்பாகும். அதுவும் அவர்கள் சான்றோர்களாக உருமாறும் வகையில் பங்களிப்பதாகும். அவர்களின் அத்தகைய பங்களிப்பில் தனி மனிதர்களிடம் நிம்மதியும், குடும்பத்தில் மகிழ்ச்சியும், மனித சமுதாயத்தில் அமைதியும் அபரிமிதமாக வளர்ச்சியடையும். இதுவே உண்மையான சமதாய வளர்ச்சி!
ஒரு உண்மையை யாரும் மறுக்க முடியாது. ஒரு பெண் போலீஸ்காரி இல்லையென்றால் யாரும் அழப்போவதில்லை. அவள் பிரதமராகவில்லை என்றாலும் யாரும் அழப்போவதில்லை. ஆனால் அவள் தாயாகிச் சான்றோர்களாகப் பகுபடவில்லையென்றால்.. மனித சமுதாயத்தின் அடுத்த தலைமுறை இரத்தக்கண்கணீர் வடித்து அழும்.
இயற்கை இதற்கொரு உதாரணத்தைக் கைவசம் வைத்திருக்கிறது. கருவறையில் ஒரு முட்டை கருவாக உருவாகவில்லையென்றால்… உலகின் கோடிக்கணக்கான கருவறைகள் மாதத்தில் மூன்று நாட்களுக்கு மேல் இரத்தத்தைக் கண்ணீராக வடித்து அழுவதை யாரும் மறுக்க முடியாது. இந்த உண்மை சமுதாய வளர்ச்சிக்குப் பெண்களின் பங்களிப்பு எது என்பதைத் தௌ;ளத் தெளிவாக எடுத்துரைக்கும் இயற்கைச் சான்றாகும்.
(குறிப்பு: ஒவ்வொரு பெண்ணும் இயற்கை நியதியின்படி அடுத்த தலைமுறையின் குழந்தைகளாகப் பகுபடுகிறாள். அக்குழந்தைகள் மனித குலத்தின் வாழ்வியல் நோக்கத்தை நிறைவேற்றவதற்காக அவள் அவர்களைச் சான்றோர்களாக வளர்த்தெடுக்க வேண்டும்.)
அவர்கள் தம் குழந்தைகளைச் சான்றோர்களாக உருவாக்குவதற்காக இயற்கை அறிவியலையும், குடும்ப அறிவியலையும், வேத அறிவியலையம் முழுமையாகக் கற்க வேண்டும். அவர்கள் சமுதாயத்தின் மற்ற குழந்தைகளையும் சான்றோர்களாக உருவாககுவதற்காக வாய்ப்புள்ள ஆசிரியப் பணியில் தம்மை அர்ப்பணிக்க வேண்டும். ஏனென்றால் இத்தகைய வளர்ச்சிக்கு அவர்களின் பங்களிப்பு இல்லையென்றால் சமுதாயத்தின் அனைத்து குழந்தைகளின் எதிர்காலமும் அழநேரிடும். இதைத் தவிர இன்னும் இரண்டு வளர்ச்சிகளில் பெண்களின் சேவை மிகவும் தேவையானதாகும். அவை நர்ஸிங் பணி மற்றம் மருத்துவர் பணி. ஏனென்றால் பெண்கள் பெறுவதற்காக மட்டுமின்றி பராமரிப்பதற்காகவும் வடிவமைக்கப்பட்டவர்கள்.
பிரமிப்பூட்டும் இன்னொரு உண்மை! உண்மையில் இன்றைய மனிதகுலத்தில் ஆண்கள் என்று எவரும் இல்லை. இங்கிருப்போர் அனைவரும் பெண்களே! அதாவது பெண்கள் பெற்றெடுத்த குழந்தைகளே! அத்துடன் அவர்களே வளர்த்து உலகிற்கு அர்ப்பளித்த மனிதர்களே! எனவே
‘அடுத்தடுத்த தலைமுறைகளை உலகில் இறுதிநாள் வரை பெற்றெடுப்பதும் அத்துடன் அவர்களைச் சான்றோர்களாக வளர்த்தெடுப்பதும்தான்’ சமுதாய வளர்ச்சிக்குப் பெண்கள் அளிக்க வேண்டிய முதலாவதும் முதன்மையானதுமான பங்கு.சான்றோர்கள் காணக்கிடைக்காத இன்றைய உலகில் அவர்களின் இந்த நியாயமான – உண்மையுடன் கூடிய பங்களிப்பு இன்றைய தினம் மிகப்பெரிய ஒரு தியாகமாகத் தேவைப்படுகின்றது என்பது மிகப்பெரும் உண்மையாகும்.
நன்றி: நர்கிஸ், மாத இதழ் ஆகஸ்ட் 2006