நாம் எல்வோரும் சுதந்திரத்தின் காற்றை விரும்பி நேசிக்கின்றவர்கள்தான். ஆனால், அதெற்கெல்லாம் ஓர் எல்லையை நமக்கு நாமே வரையறை வகுத்துக் கொண்டு இருக்கின்றோம் என்பதே உண்மை. இதனால் பல விஷயங்களில் நாம் அடிமைகளாகவே வாழ நேர்ந்து விடுகிறது.
இந்த நாடு ஆங்கிலேயரிடமிருந்து விடுதலையடைந்து அரை நூற்றாண்டைத் தாண்டி 13 ஆண்டுகள் ஆகிவிட்டது ஆண்டுதோறும் கொடியேற்றி, மிட்டாய் சாப்பாடு என்று முன்பு நாமோ அல்லது நம் முன்னோர்களோ அடிமைகளாக வாழ்ந்ததை மலரும் நினைவுகளாக்கி பூரித்துப் போய் நிற்கிறோம். இப்போது என்னமோ சுதந்திரக் கடலில் மூழ்கி முத்தெடுத்துக் கொண்டிருப்பதாகவும் எண்ணிக் களித்து வருகிறோம்.
ஆனால், மக்களிடம் நம்மை நாம் தான் ஆண்டு கொண்டிருக்கின்றோம் என்கிற உணர்வே பல சமயங்களில் இருப்பதில்லை. ஒன்று ‘எவன் ஆண்டால் எனக்கு என்ன? என்கிற ரீதியில் பதில் சொல்வார்கள். அல்லது ‘நம்ம தலைவர் ஆட்சி தாங்க நடக்குது.. பாருங்க நாட்டுல பாலாறும் தேனாறும் ஓடுது… !’ என்று தனது அபிமானத் தலைவனுக்கு ‘ஜிங் ஜாங்’ அடிப்பார்கள்.
இப்படி ‘ஜிங் ஜாங்’ அடிப்பது தான் மிகவும் சுகமானதாகவும், சுதந்திரமானதாகவும் நம்மில் பலருக்கு இருக்கிறது.
தலைவன் நாட்டுக்கு நல்லது செய்கிறானா? நடுநிலைமை தவறாமல் இருக்கின்றானா? நேர்மையாளன்தானா? என்கிற கேள்வியை எல்லாம் அவர்களிடம் கேட்கவே முடியாது. கேட்டால் அதையே நம்மிடம் திருப்பிக் கேட்பார்கள். ‘எவன்தான் நாட்டுல ஒழுங்கா இருக்கான்?’ என்பார்கள். எனவே ‘என் தலைவன் தான் சிறந்தவன்’ என்று தீர்ப்பும் கூறிவிடுவார்கள்.
அந்த தலைவனுக்கும் நம்ம ஆளுக்கும் எந்த தொடர்புமே இருக்காது. ஆனால் அவனுக்கு ‘ஜிங் ஜாங்’ அடிக்கிறதுலதான் எத்தனை சுகம்! அந்த தலைவன் கோடி கோடியாக என்பதைத் தாண்டி பில்லியன் கணக்கில் சொத்து சேர்ப்பதைக் கூட எண்ணி பூரித்துப் போய் விடுகின்றவனாக நம்மில் பலரை கண்டு கொண்டுதான் இருக்கிறோம்.
நாடு கொள்ளையடிக்கப்படுகிறது, நாம் சுரண்டப்படுகிறோம், என்கிற உணர்வே இல்லாமல் அதையே நமது சுதந்திர உணர்வாகவும் எண்ணி விடுகின்ற கூறு கெட்டத்தணத்தை நமக்குத் தருவது எது? நமக்குள் மறைந்து கிடக்கும் அடிமைத் தனம் தானே!
சிலபேர் விழிப்பு அடைந்தால் கூட ரொம்ப நோக்காக பதில் சொல்வார்கள். ‘அதுதான் நான் ஓட்டே போடவில்லை!’ என்பார்கள். ‘எவன் ஆண்டு என்ன ஆகப்போவுது?’ என்பார்கள். அதோடு அவர்கள் கடமை முடிந்து போய் விடுகிறது. பிறகு ‘எவனாவது வந்து எக்கேடு கெட்ட ஆட்சியை நடத்தினால் கூட என்ன பண்றது?’ என்று சொல்லிக் கொண்டே இருப்பார்கள்.
இப்படி கடமையை உதரித்தள்ளுகிற சுதந்திரத்தை மட்டும் கையில் வைத்துக் கொண்டு, அதிகார வர்க்கம் இழுக்கிற இழுப்புக்கு அடிமைகளாகிப் போய்விடுகிறோம் நாம். இன்னும் சில அதிமேதாவிகள் இருக்கிறார்கள். ‘இந்த கொள்ளைக்காரர்களுக்கு அந்த வெள்ளைக்காரர்களே மேல்!’ என்பதே அவர்களின் வாதமாக இருக்கும். அதுமட்டுமின்றி ‘பேசாமல் மீண்டும் அவர்கள் கையிலேயே நாட்டை கொடுத்து விடலாம்’ என்று கூறிவிட்டு தன்னுடைய சுதந்திரமான அறிவு ஜீவிதக் கருத்தை மெச்சிக் கொள்வார்கள்.
அதே ஆசாமியோடு வீட்டுக்குள்ளே போய் பக்கத்து வீட்டுக்காரன் ‘குடும்ப பட்ஜெட்’ போட்டுக் கொடுத்தால் நிலைமை விபரீதமாகிவிடும். ஆக, இவர்களின் சுதந்திரம் நான்கு சுவர்களுக்கு உள்ளே மட்டும்தான் இருக்கிறது. வெளியே அடிமைத்தனம்தான் மிஞ்சிக் கிடக்கிறது. நம்மை நம்பித்தான் இந்த நாடும், நாட்டுச் சதந்திரமும் வாழ்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் நாமோ, நாடு ஏதோ அன்னியப் பொருள் போலவும் வீடு மட்டும்தான் சொந்தப் பொருள் போலவும் கருதிக் கொண்டிருக்கிறோம்.
வீட்டில் திருடுபோனால் அந்த திருடனை கட்டி வைத்து உதைக்கின்றோம். நாட்டில் திருடுபோனால் அந்த திருடனை, இல்லையில்லை – அந்த தலைவனை மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர்த்தி விடுகிறோம். என்ன சுதந்திரமப்பா!
ஊருக்கு நான்கு பேர் நம்மிடம் கைகட்டி நிற்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். அதற்கேற்ப பந்தா காட்டிக் கொள்கிறோம். கொஞ்சம்போல் சுதந்திரத்தைச் சுவாசிக்க நிறைய அடிமைத்தனத்துக்கு ஆட்படுகிறோம். நமது நாட்டில் தனி மனித சுதந்திரம் வீட்டுக்குள்ளே மட்டுமே! பணி செய்யும் நிறுவனத்தில் அவர் கூனிக்குறுகி நின்றாக வேண்டும். முதலாளிக்கு பயந்தாக வேண்டும். அத்தனையும் அவருக்கு அத்துப்படிதான். அந்த நேரத்திலெல்லாம் அவரது சுதந்திரம் துயில் கொள்ள சென்றுவிடும்.
வீட்டில் அத்தனை மிடுக்கு காட்டியவரிடம் இத்தனை பணிவு இங்கே எப்படி வந்தது? அது ஒருவகை அடிமை சுகம் காண்பதே!
அதிக வேலை செய்ய நாம்தயாராக இல்லை. சோம்பேரித்தனம் நம்மை சோர்வடைய வைக்கிறது. துணிச்சலை கைகொள்ள நாம் தயாராக இல்லை. பயம் நம்மை ஆட்சி செய்கிறது. கடமையை நிறைவேற்ற நாம் முனைவதில்லை. அடிமைத்தனம் ஆட்கொள்கிறது.
எனவேதான் முட்டாள் தலைவனுக்கு கொடி பிடிக்கிறோம். திருடனை ஆட்சியில் அமர்த்துகிறோம். துதிபாடி சம்பாதிக்க முனைகிறோம். அடிமை வேலையையே தேடிச் செய்கிறோம்.
அடிமை வாழ்வுக்குள்ளே நம் சதந்திரத்தை நிர்ணயித்துக் கொள்கிறோம். புரிந்து கொண்டால் சரி.
நன்றி: அஷ்ஷரீஅத்துல் இஸ்லாமியா, மாத இதழ் ஆகஸ்ட் 2000