ஏன் குடை சாயவில்லை?!
[ பெண்கள் கருத்தரிக்கும்போது அவர்களது வயிற்றில் எடை கூடுகிறது. எப்படி அவர்களது உடல் முன்னேயுள்ள கூடுதலான எடையின் கனத்தில் முன் சரிந்து விழுந்துவிடாமல் தாங்கி பிடிக்கிறது? நியாயமான கேள்விதானே.
எடை எந்த பக்கமோ அப்பக்கம் தானே தராசு கூட சரிகிறது அல்லது சாய்கிறது. தள்ளுவண்டியில் எடை கூடிப்போனால் அது குடைசாய்வதில்லையா? அதுபோல ஏன் கருத்தரிக்கும் பெண்கள் எடை கூடுவதால் குடைசாய்வதில்லை என்பதுதான் மூன்று மனிதவியலாளர்களின் மண்டையை வாட்டிய கேள்வி.
கர்ப்பிணிப் பெண்கள் சரி, தொந்தியும் தொப்பையுமாய் அசைந்தாடி வரும் ஆண்கள் எப்படி குடை சாயாமல், எடையால் கவிழ்ந்து விடாமல் இருக்கிறார்கள்? அதானே, நியாயமான கேள்வி இல்லையா..?]
ஏன் குடை சாயவில்லை?!
பத்து மாதம் சுமந்திருந்து பெற்றாள்
பகல் இரவில் கண்விழித்து வளர்த்தாள்
வித்தகனாய் கல்வி பெற வைத்தாள்
மேதினியில் நாம் வாழ வழி வகுத்தாள்…
பொதுவாகவே தாய்மை பற்றி சொல்லும் போது பத்து மாதம் சுமந்து பெற்றாள் என்பதை தவறாமல் சொல்வதை நாம் அறிவோம். பத்து மாதம் தன் வயிற்றில் ஒரு புதுச்சுமையாய், கருவை சுமப்பது உண்மையில் அவ்வளவு ஒன்றும் எளிதானதல்ல. வேண்டுமானால் ஒரு 5 கிலோ எடையுள்ள பொருளை வயிற்றோடு சேர்த்து கட்டிக்கொண்டு ஒரு நாள் முழுதும் இருந்து பாருங்களேன். 24 மணி நேரமும் கொஞ்ச நேரம் கூட இறக்கி வைத்து அப்பாடா என்று பெருமூச்சு விட்டு ஆசுவாசப் படுத்திக்கொள்ள வாய்ப்பேயின்றி தொடர்ச்சியாக பத்து மாதம் வளர்ந்த மேனியிலுள்ள சுமையை தாங்கி நிற்பது வேடிக்கையானதல்ல.
இதையெல்லேம் ஏன் சொல்கிறோம் என்ற கேள்வி இப்போது எழக்கூடும். கேள்விகள் இல்லாவிட்டால் மனிதன் இன்றைக்கு இவ்வளவு வளர்ச்சியடைந்திருக்க மாட்டான். ஆனால் சில கேள்விகள் கொஞ்சம் வித்தியாசமானவை. அதிலும் குறிப்பாக இளமை பருவத்தில், அறிவுத்தேடலிலான உந்துதலில் நிறையவே கேள்விகள் எழுவதுண்டு. ஒரு சிலருக்கு அந்த சந்தேகங்கள் இன்றளவும் விடை தெரியா புதிராக தொடர்ந்துகொண்டிருக்கக்கூடும்.
புவியியல் பாடத்தில் புவிப்பரப்பு நேர் சமனாக இல்லை, குவியாடி போல, வளைந்த நிலையில் உள்ளது என்பதை விளக்க, கடலில் கப்பல் கண் பார்வையிலிருந்து மறைவதை படம் போட்டு காட்டினால், சரி கப்பல் வளைந்துள்ள பரப்பில் சென்றால், ஓரத்தில் சரிந்து விழுந்து விடாதா என்று ஆசிரியரை கேட்டவர்கள் நம்மிடையே இருக்ககூடும்.
பூமிதான் சுற்றிக்கொண்டிருக்கிறதே, விமானம் ஏன் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பறந்து செல்லவேண்டும்? மேலெழும்பி ஓரிடத்திலேயே மிதந்துகொண்டிருந்தால், பூமி சுற்றுவதற்கு ஏற்றபடி நாம் செல்லவேண்டிய இடம் வந்ததும் விமானம் தரையிறங்கலாமே? அடடா அதானே, என்று தங்களைத் தானே கேட்டுக்கொள்பவர்களுக்கு ஒரு பலே, நீங்கள் நம்மவர்.
பூமி ஒரு பந்துபோல உருண்டையாக இருக்கிறது. நிலமும் நீருமான பூமியை ஒரு முனையில் ஆழத்தோண்டி அடுத்த முனையை அடைய முடியுமா? 12,756.32 கி மீ விட்டம் கொண்டது பூமி. ஆக நீங்கள் ஒரிடத்தை தேர்ந்தெடுத்து 12750 கி மீ தோண்டினால் பூமியின் மறுபுறத்தை சென்றடையலாம். அப்படித்தானே? ஆனால் இது உண்மையில் சாத்தியமா?
இந்த வரிசையில் தான் நம்மில் பலருக்கும் தோன்றாத ஒரு கேள்வி, சில அறிவியலாளர்களுக்கு தோன்றியது. அது என்ன தெரியுமா…?
பெண்கள் கருத்தரிக்கும்போது அவர்களது வயிற்றில் எடை கூடுகிறது. எப்படி அவர்களது உடல் முன்னேயுள்ள கூடுதலான எடையின் கனத்தில் முன் சரிந்து விழுந்துவிடாமல் தாங்கி பிடிக்கிறது? நியாயமான கேள்விதானே. எடை எந்த பக்கமோ அப்பக்கம் தானே தராசு கூட சரிகிறது அல்லது சாய்கிறது. தள்ளுவண்டியில் எடை கூடிப்போனால் அது குடைசாய்வதில்லையா? அதுபோல ஏன் கருத்தரிக்கும் பெண்கள் எடை கூடுவதால் குடைசாய்வதில்லை என்பதுதான் மூன்று மனிதவியலாளர்களின் மண்டையை வாட்டிய கேள்வி.
எனவே இந்த மூவரும் சேர்ந்து இதை கண்டறிய முற்பட்டனர். இது தொடர்பான ஆய்வில் ஈடுபட்ட அவர்கள் இந்த கேள்விக்கு விடையும் கண்டறிந்துள்ளதாக நம்புகின்றனர்.
ஆண்களுக்கும் பெண்களுக்கும் உடலமைப்பில் காணப்படும் வேறுபாடுகளில் இந்த விடை ஒளிந்திருக்கிறது. பெண்களின் முதுகெலும்பின் கீழ் பகுதியிலுள்ள ஒரு எலும்பும், இடுப்புப் பகுதியிலுள்ள ஒரு மூட்டும் தான் அவர்களது உடலில் இந்த வியத்தகு அற்புதத்தை செய்ய உதவுகின்றன என்கிறார்கள்.
இந்த இவ்விரு மாற்றங்களும் மனித இனத்தின் பெண்களிடமும், மனிதனுக்கு முன்னோடியான ஆஸ்ட்ராலோபிதகஸ் என்ற இனத்தின் பெண்களிடமும் மட்டுமே காணப்படுவதாகவும், பரிணாம வளர்ச்சியின் இதற்கு முந்தைய இனங்களான சிம்பன்ஸிகள், குரங்குகள் ஆகியவற்றில் காணப்படவில்லை என்றும் அறியப்படுகிறது. ஆக நாலுகால் நடை நடந்த இனங்களுக்கல்ல, பரிணாம வளர்ச்சியின் மாற்றத்தில் இரண்டு காலில் நடைபழகத்தொடங்கிய இனங்களுக்கே இந்த வேறுபாடுகள் உள்ளன. பரிணாம வளர்ச்சியின் மகத்தான பொறியியல் செயல்பாடே இதுவாகும்.
இந்த ஆய்வு பற்றிய முடிவுகள் இயற்கை என்ற இதழில் வெளியாகியுள்ளன. அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தின் மனிதவியல் பேராசிரியர் லீசா ஷாபிரோ இந்த ஆய்வில் ஈடுபட்ட மூவரில் ஒருவர். இந்த மூவரில் கருத்தரித்தலை அனுபவம் மூலம் உணர்ந்தவர் இவர் மட்டுமே.
கருவை சுமந்திருக்கும் போது ஏகப்பட்ட இன்னல்களை எதிர்நோக்கவேண்டியிருக்கும். சட்டென எழுந்து நிற்க முடியாது, புரண்டு படுக்க முடியாது, வேகமாக நடக்கக்கூட முடியாது. சின்ன சின்ன விடயங்களுக்குக் கூட பிறரின் உதவி தேவைப்படும். இத்தகைய நிலையில் பரிணாம வளர்ச்சியின் அங்கமாக பெண்களின் உடலமைப்பில் முதுகெலும்பின் கீழ் பகுதியிலுள்ள ஒரு எலும்பு, இடுப்புப் பகுதியிலுள்ள ஒரு மூட்டு ஆகிவற்றிலான மாற்றங்கள் இல்லாவிட்டால் பெண்களது நிலை இன்னும் மோசமாகத்தான் இருக்கும் என்கிறார் லீசா ஷாபிரோ.
ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கேத்தரின் விட்கோம்ப்தான் பெண்களுக்கும் ஆண்களுக்குமிடையில் உள்ள அந்த உடலமைப்பு வேறுபாட்டை கூர்ந்து கவனித்து அறிந்தவர். உடலில் பின் பகுதியில் முதுகெலும்பின் கீழ் பகுதி எலும்புக்கும் இடுப்பு எலும்புக்கும் இடையிலான எலும்பு ஒன்று பெண்களுக்கு ஒரு முனையில் குறுகியும் மறு முனையில் அகன்றும் உள்ளது,
ஆண்களுக்கு ஒரே நீண்ட சதுரமாக இருக்கிறது. அவ்வண்ணமே இடுப்பெலும்பின் முக்கிய மூட்டு ஒன்று பெண்களுக்கு ஆண்களை விட 14 விழுக்காடு பெரிதாக காணப்படுகிறது. இந்த மாற்றங்களை அடிப்படையாகக் கொண்டு பொறியியல் ரீதியான சில சோதனைகள் செய்து பார்த்தபோது, இவை பெண்களை முன் பகுதியில் எடை கூடினாலும், குடைசாயாமல், கவிழ்ந்து விழாமல் தாங்கிக்கொண்டு நடக்க வழிசெய்கிறது என்பது கண்டறியப்பட்டது.
கருத்தரித்த பெண்கள் நாளுக்க நாள் கூடும் எடையோடு நடந்து செல்வதை பார்க்கத்தான் எளிதாக இருக்கிறது. அவர்கள் உண்மையில் ஒரு பெரும் சவாலையே எதிர்கொண்டு நடக்கின்றனர் என்கிறார் விட்கோம்ப். பரிணாம வளர்ச்சி, இந்த சவலை அவர்கள் தாங்கக்கூடிய அளவுக்கு மாற்றித் தந்திருக்கிறது. பழுதுபார்க்கும் கடையில் சிலவற்றை தட்டி, வெட்டி, ஒட்டி மாற்றியமைப்பது போல், பரிணாம வளர்ச்சியும் கொஞ்சல் தட்டி, உருட்டி செய்த இந்த மாற்றங்கள் உண்மையில் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. ஒரு சிறிய மாற்றம் எவ்வளவு பெரிய சவாலை சமாளிக்க உதவுகிறது என்று அங்கலாய்க்கிறார்கள் இந்த ஆய்வாளர்கள்.
இரண்டு கால்களால் நடப்பது மனிதனை மற்ற விலங்குகளிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. இரண்டுக்கு மாறிய நடைமாற்றம் எந்த விதத்தில் மனிதனுக்கு பயன் தருகிறது என்பது பல ஆய்வாளர்களிடம் கேல்வியாய் இருக்கிறது. ஆனால் இது பெண்களுக்கு குறிப்பாக கருவை சுமந்த பெண்களுக்கு வலியை, துன்பத்தையே தருகிறது எனலாம். நாலு காலில் நடக்கும் இனங்கள் தங்கள் கருத்தரிப்பை எளிதாக கையாள முடிகிறது. ஆக பரிணாம வளர்ச்சியிலான மனித உடலமைப்பின் மாற்றம், குறிப்பாக பெண்களின் பின் பகுதியிலான மாற்றம் இரண்டு கால்களால் நடப்பதிலான இழப்புகளை சரிகட்டவே என்கிறார், ஆய்வுக்குழுவின் மூன்றாவது நபரான டேனியல் லீபெர்மென்.
கர்ப்பிணிப் பெண்கள் சரி, தொந்தியும் தொப்பையுமாய் அசைந்தாடி வரும் ஆண்கள் எப்படி குடை சாயாமல், எடையால் கவிழ்ந்து விடாமல் இருக்கிறார்கள்? அதானே, நியாயமான கேள்வி இல்லையா..?
இதற்கு ஆண்களின் உடலின் பின்னிடுப்புப்பகுதியிலான தசைகள் ஈடுகொடுக்கின்றன என்கிறார்கள் இந்த ஆய்வாளர்கள். சிறிதோ பெரிதோ அளவுக்கு ஏற்றார் போல் முன்னிருக்கும் தொப்பைக்கு ஏற்றபடி பின் பகுதியில் தசைகள் அதிகரிப்பதை ஆண்களிடம் காணமுடிகிறது. உங்கள் முன்னிருப்பவரை பார்த்து தெரிந்துகொள்ளலாம் அல்லது உங்களையே பார்த்து தெரிந்துகொள்ளலாம். நான் கூட என் பின்னிடுப்புப்பகுதியை பார்த்துதான் இதை உறுதி செய்தேன்.
source: http://tamil.cri.cn/1/2008/01/07/62@65084_1.htm