மவ்லவி, டி.ஜே.எம்.ஸலாஹுத்தீன் ரியாஜி
[ ஷரீஅத் வழிகாட்டுதலை ஒதுக்கிவிட்டு ஊர் கட்டுப்பாடு, ஜமாஅத் வழக்கம் என்ற பெயரில் பல கொடுமைகள் பரவலாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலை நீடித்தால் இஸ்லாத்திற்கு மிகப்பெரும் ஆபத்தும் விபத்தும் ஏற்படலாம். எனவே, ஷரீஅத்தையும், மார்க்கத்தையும் மீறி ஏற்படுத்தப்பட்டுள்ள ஊர் கட்டுப்பாடுகளையும் வழக்கத்தையும் எதிர்த்து போராடி ஒழித்துக்கட்டுவது அவசியத்திலும் அவசியமாகும்.
இன்றைய கால கட்டத்தில் இந்த அநியாயங்களை எதிர்த்து போராடி இஸ்லாத்தை நிலைநிறுத்த பாடுபடுவதுதான் மிகப்பெரும் ஜிஹாது.
சங்கைக்குறிய உலமாக்களும், ஷரீஅத் உணர்வு நிறைந்த சமுதாயப் பெருமக்களும் இந்த அறப்போருக்கு தங்களை தயார்படுத்திக் கொள்ளும்படி ஷரீஅத்தின் பெயரால் கேட்டுக்கொள்கிறோம்.]
முஸ்லீம்களின் வாழ்க்கை நெடுகிலும் ஷரீஅத்தின் அணுகுமுறைகளும், செயல்பாடுகளும் பின்னிப் பிணைந்திருக்க வேண்டும். ஷரீஅத்தை ஓரங்கட்டிவிட்டு முஸ்லீம் என்ற பெயரால் வாழவே முடியாது.
குடும்பத்திலும் முஸ்லீம் ஜமாஅத்துகளிலும் சில கட்டுப்பாடுகளை ஏற்படுத்தும்போது அது முற்றிலும் ஷரீஅத்தை தழுவியதாகவே இருக்க வேண்டும். ஷரீஅத் ஏற்றுக்கொள்ளாத, அனுமதிக்காத, ஒப்புதல் இல்லாத எந்தக் கட்டுப்பாடுகளையும் நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. அப்படி ஏற்றுக்கொண்டால் அது ஷரீஅத்தை மீறிய செயலாகும் என்பதுடன் அல்லாஹ் ரஸ_லின் கோபத்தில் கொண்டுபோய் சேர்த்துவிடும் என்பதில் சந்தேகமில்லை.
தென்மாவட்டத்தில் முஸ்லீம்கள் அதிகம் வாழும் ஒருகூரில் ஒருவர் ஒரு பெண்ணை நிகாஹ் செய்திருந்தார். அந்தப் பெண்ணின் நடைமுறைகள் எதுவும் கணவருக்கு ஒத்துவரவில்லை. சரி செய்வதற்கு எவ்வளவோ முயன்றார். சரிபட்டு வரவில்லை. வெளிநாட்டில் வேலை செய்யும் இவருக்கு மனைவியுடன் பெரும் தொல்லையாக இருந்ததால் மனைவியை ஊருக்கு அழைத்து வந்தார். இந்தப் பெண்ணையும் வைத்துக்கொண்டு மற்றொரு நிகாஹ் செய்துகொள்ள விரும்பினார். இந்தப்பெண்ணும் ஒப்புதல் அளித்தது. குடும்பத்தில் உள்ளவர்களும் இந்த முடிவை ஏற்றுக் கொண்டார்கள்.
ஊர் ஜமாஅத்தில் இந்த செய்தியைச் சொல்லி ஜமாஅத்தின் அனுமதியைக் கேட்டார். ஆனால், ஜமாஅத் அனுமதி கொடுக்க மறுத்துவிட்டது. முதல் மனைவிக்கு செய்ய வேண்டிய கடமைகளை முறையாகச் செய்து மற்றொரு நிகாஹ் செய்து கொள்வதற்கு ஷரீஅத் அனுமதிக்கும்போது ஜமாஅத்தின் அனுமதி தருவதற்கு ஏன் மறுக்கிறீர்கள்? என்று இவர் கேட்டிருக்கிறார்.
அதற்கு நிர்வாகிகள் ஷரீஅத் அது, இது என்றெல்லாம் பேசக்கூடாது என்று சொல்லி விட்டார்கள். இவர் வேறொரு ஊருக்குச்சென்று இரண்டாவது நிகாஹ் செய்து கொண்டார். இதையறிந்த ஊர் நிர்வாகிகள் ஊர் கட்டுப்பாட்டை மீறிவிட்டதாகச் சொல்லி கணிசமான தொகையை அபராதமாக விதித்து விட்டார்கள்.
சில ஆண்டுகளுக்குமுன் திருச்சியில் ஒரு வயோதிகர் – நல்ல வசதியான நிலையில் உள்ளவர் மூன்றவதாக ஒரு இளம்பெண்ணை நிகாஹ் செய்திருந்தார். அடுத்த சிலதினங்களில் அவர் இறந்துவிட்டார். இறந்துபோன கணவரின் சொத்திலிருந்து இவளுக்கும் பங்குண்டு என்று சொன்னபோது மூன்றாவது மனைவிக்கெல்லாம் பங்கு கொடுக்க முடியாது. இதுதான் எங்கள் குடும்பத்தின் நடைமுறை என்று சொல்லி பங்கு கொடுக்க மறுத்துவிட்டார்கள்.
கோவை மாவட்டத்திலுள்ள ஒருஊரின் மஸ்ஜிதில் ஒருநாள் ஸுபுஹு தொழுகை ஜமாஅத் முடிந்த நிலையில் தாமதமாக வந்த ஒரு மவ்லவி, தொழுகைக்கு பிந்தி வந்த சிலருக்கு ‘இரண்டாவது ஜமாஅத்’ தொழுகை நடத்தியிருக்கிறார். அப்போது அந்த பள்ளிவாசல் முத்தவல்லியின் மகன் இரண்டாவது ஜமாஅத் நடத்திய அந்த மவ்லவியை கடுமையாக சாடியிருக்கிறார். மவ்லவி தனது செயலுக்கு ஆதரவாக ஆதாரத்தையும், சட்டத்தையும் சொன்னபோது குர்ஆன், ஹதீஸ், மத்ஹப், மஸ்அலா சட்டம் என்பதெல்லாம் எனக்குத் தேவையில்லாதது. நிர்வாகம் கட்டுப்பாட்டை மீறி தனி ஜமாஅத் நடத்தியது தவறு என்று சொல்லியதுடன் மவ்லவியை அடிக்கவும் செய்திருக்கிறார்.
ஷரீஅத் வழிகாட்டுதலை ஒதுக்கிவிட்டு ஊர் கட்டுப்பாடு, ஜமாஅத் வழக்கம் என்ற பெயரில் பல கொடுமைகள் பரவலாக நடைபெற்று வருகிறது. இந்த நிலை நீடித்தால் இஸ்லாத்திற்கு மிகப்பெரும் ஆபத்தும் விபத்தும் ஏற்படலாம். எனவே, ஷரீஅத்தையும், மார்க்கத்தையும் மீறி ஏற்படுத்தப்பட்டுள்ள ஊர் கட்டுப்பாடுகளையும், வழக்கத்தையும் எதிர்த்து போராடி ஒழித்துக்கட்டுவது அவசியத்திலும் அவசியமாகும்.
இன்றைய காலகட்டத்தில் இந்த அநியாயங்களை எதிர்த்து போராடி இஸ்லாத்தை நிலைநிறத்த பாடுபடுவதுதான் மிகப்பெரும் ஜிஹாதாகும்.
சங்கைக்குறிய உலமாக்களும், ஷரீஅத் உணர்வு நிறைந்த சமுதாயப் பெருமக்களும் இந்த அறப்போருக்கு தங்களை தயார்படுத்திக் கொள்ளும்படி ஷரீஅத்தின் பெயரால் கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி: ஜமாஅத்துல் உலமா, மாத இதழ்