எவர் அல்லாஹ்வின் பக்கம் (மக்களை) அழைத்துக் கொண்டு ஸாலிஹான (நல்ல) செயல்களை செய்து கொண்டு நிச்சயமாக நான் முஸ்லிம்களில் நின்றும் உள்ளவன் எனக் கூறுகிறாரோ, அவரை விட அழகிய சொல் சொல்பவர் யார்? (அல்குர்ஆன் 41:33 )
அன்பிற் சிறந்த முஸ்லீம் சகோதர சகோதரிகளின் சீரிய சிந்தனைக்கு;
“சொல்லப்படும் கருத்துக்களை, செவி தாழ்த்திக் கேட்டு, அதில் நல்லவற்றைப் பின்பற்றும் என் அடியார்களுக்கு, (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக”. (அல்குர்ஆன் 39:17,18)
இந்த இறை மொழிக்கேற்ப, நேர்வழியைப் பின்பற்றுங்கள் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
“லாஇலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரசூலுல்லாஹ்” என்று கலிமாவின் அடிப்படையில், இஸ்லாமிய வாழ்வு வாழ விரும்பும் நாங்கள், இங்குள்ள அரேபியாவில் வாழ் முஸ்லிம்கள், மார்க்கத்தில் கடைப்படிக்கின்ற நடைமுறைகள் பழக்கவழக்கங்கள், செயல்பாடுகள் பற்றி, நாங்கள் பார்த்ததையும், கேட்டதையும், விசாரித்து அறிந்ததையும், நாங்கள் உங்கள் முன் எடுத்துச் சொல்லக் கடமைப்பட்டுள்ளோம்.
இங்கு எங்கு நோக்கினும் பள்ளிவாசல்கள், எங்கும் பாங்கின் இனிய நாதம்!
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்தில், சிலை வணக்கத்தையும் – கபுரு வணக்கத்தையும் தகர்த்தெறிந்து, ஓர் இறைக் கொள்கையை- தெளஹீதை நிலை நாட்டிய நாடான இங்கு, தர்ஹாக்கள் என்கிற பேச்சோ – மூச்சோ இல்லை. மக்களை அல்லாஹ்விற்கு இணை வைக்கும் செயல்களைக் செய்யத் தூண்டும் கூட்டம் இல்லை, தர்ஹாக்கள் பெயரால், சந்தனக்கூடு, திருவிழா, உண்டியல்கள் இல்லை. ஊதுவத்தி, பூமாலை, சாம்பிராணி, நெய்வேத்தியங்கள் இல்லை. சர்க்கரை, நேர்ச்சை என்பதில்லை. பாத்திஹா ஓதுபவர்கள் இல்லை. தங்கள் குறைகளை, அவ்வியாபாரிகளிடம் கூறினால், அவர்கள் தங்களுக்காக அல்லாஹ்விடம் சிபாரிசு – பரிந்துரை செய்வார்கள் என்று நம்பும் கூட்டம் இல்லை. காரணம்? இவை யாவும், அல்லாஹ்விற்கு இணை வைக்கும் ஷிர்க்கான காரியங்கள் என்பதை, இங்குள்ள அனைவருமே, குர்ஆன், ஹதீஸ்களை நன்கு படித்துணர்த்து, அதன்படி வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முதல் இறைநேசச் செல்வர்கள் ஈராக, அனைவருக்கும் நாம் மிகவும் கடமைப்பட்டுள்ளோம். ஏனெனில், அவர்கள் தூய இஸ்லாத்தை மக்களுக்குப் போதிப்பதற்காக, தங்கள் நாடு, வீடு, மனைவி, மக்கள், உற்றம், சுற்றம், அனைத்தையும் துறந்து, அல்லாஹ்வின் பொருத்தத்தை நாடி, நாடு விட்டு நாடு சென்று, சகிக்கவொண்ணாத இன்னல்களைத் தாங்கினார்கள். மக்கள் தீன் வழி செல்ல வேண்டும் என்பதற்காகவே மகத்தானத் தியாகம் செய்தார்கள்.
இறைநேசச் செல்வர்களுக்கு, அவர்களின் கபுருகளைக் கண்டால் ஸலாம் கூறி, அவர்கள் செய்த பாவங்களை மன்னித்தருள துவாச் செய்யவே ஏவப்பட்டுள்ளோம்.
வல்ல அல்லாஹ், அந்தத் தியாகச் செம்மல்களாம் இறை நேசச் செல்வர்களுக்கு சுவனபதியை அளித்து விட்டிருக்கிறான்.
தூய இஸ்லாத்தை நம் வாழ்க்கைப் பயணத்தில் வழிகாட்டும் ஒளி விளக்காக ஏந்திச் செல்வதே, அவர்களுக்கு நன்றி செலுத்துவது என்பதாகும்.
இறை நேசர்கள் பால் நமக்குள்ள கடமை, செலுத்த வேண்டிய நன்றிகுறித்து, அரபுலகில் வாழும் முஸ்லிம்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்கிறார்கள்; மார்க்கம் அறிந்திருக்கிறார்கள்.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “முன் சமுதாயங்கள், நபிமார்களுடைய, ஸாலிஹீன்களுடைய கபுருகளை வணக்க ஸ்தலங்களாக ஆக்கியிருந்தார்கள், உங்களுக்கு அதை நான் தடை செய்கின்றேன்.” (நஸயீ), “இறைவா! என்னுடைய கபுரை வணக்க ஸ்தலமாக ஆக்கி விடாதே” (அல்முஅத்தா), “நீங்கள் எனது கபுரை ‘உரூஸ்’ ஸ்தலமாக ஆக்கி விடாதீர்கள்” (அபூதாவூது) என்று தனது மரண வேளையிலும் மறக்காமல் இறைவனிடமும், மக்களிடமும் கேட்டுக் கொண்டுள்ளார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழி மொழி – வாய்மொழிக்கிணங்க இங்குள்ள மக்கள் கபுருகளை உயர்த்திக் கட்டவில்லை. தர்ஹாவை உண்டாக்கவில்லை. கபுருகளில் மண் குவித்து, அதன் மீது பூப்போடவில்லை; போர்வை கொண்டு மூடவில்லை. இது போன்ற அனாச்சாரங்கள் எதையும் செய்யவில்லை.
ஈமான் கொண்டு இஸ்லாத்தை ஏற்றுள்ள, ஆண்டி முதல் அரசன்வரையிலும், அனைவரும் அல்லாஹ்வின் முன்னிலையில் சமமே. நபிமார்களாயினும் அவ்லியாக்களாயினும் சரி, இறந்து விட்டால், அதற்குப் பின்பு, அவர்கள் பெயரால், தர்ஹா, உரூஸ், விழாக்கள் எதுவுமில்லை. இதை இன்றும் மதீனாவில் காணலாம்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும், முதல் இரண்டு கலீபாக்களான அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு, உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களும் மஸ்ஜிதுன் நபவியில் அடக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். மஸ்ஜிதுன் நபவியில், பர்லான தொழுகை முடிந்ததும், அம்மூவர்களுக்கும் ஸலாம் கூறப்படுகிறது: அங்கு யாருக்கும் புகழ் பாடப்படுவதில்லை; தேவைகளை யாரிடமும் கேட்பதில்லை. கபுரை மறைத்து கம்பிக் கதவுகள் உண்டு. அவைகளை யாரும் தொட்டுத் தடவுவதும் இல்லை; பரக்கத் வரும் என்று முத்தமிடுவதும் இல்லை. விபரம் தெரியாதவர்கள் அப்படிச் செய்ய நாடினால், அங்கு வாசலில் கண்காணிக்கும் இமாம்கள், அதிகாரிகள், அவர்களைத் தடுத்து, ஹராம் என்று எச்சரித்து அனுப்பி விடுவார்கள்.
மார்க்கத்திற்குப் புறம்பான செயல்களைத் தடுக்கிற நடவடிக்கைகளில் அரசும் மக்களும் சிறிதும் தயங்குவதே இல்லை.
மதீனாவிலுள்ள ஜன்னத்துல் பக்கீஉ என்ற கபுரஸ்தான், நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்திலிருந்து இன்றுவரை பொது கபுரஸ்தானாக இருந்து வருகிறது. இஸ்லாத்திற்காக தங்களின் இன்னுயிரை ஈந்து தியாகம் செய்த ஆயிரமாயிரம் ஸஹாபா பெருமக்கள் இங்குதான் அடக்கமாகியுள்ளனர்.
உதுமான் பின் அஃபான், அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வளர்ப்புத் தாயாம் ஹலீமத்துஸ் ஸஃதீய்யா, அவர்களின் மகனார் இப்ராஹீம், மகளார் உம்முல்குல்தும், மகளார் பாத்திமா ரளியல்லாஹு அன்ஹா மற்றும் எண்ணற்ற ஸஹாபாக்கள் இந்த ஜன்னத்துல் பக்கீஉ கபுரஸ்தானில் அடக்கமாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கே யாருக்குமே தரைக்கு மேல் கபுரு கிடையாது கோரி, தர்ஹா கட்டிடம் எதுவுமில்லை. பரந்த மைதானமாகவே உள்ளது; ஊதுபத்தி கொளுத்த, சந்தனம் பூசி மொழுக, பச்சைப் போர்வை போட, சர்க்கரை, பழம் வழங்க, பாத்திஹா ஓத வேலையுமில்லை; அதற்கு ஆளோ, லெப்பையோ, ஆலிமோ, ஹஜ்ரத்மாரோ அங்கில்லை. ஜியாரத் செய்ய வருவோர் வெறுங் கையுடனே வருகிறார்கள்; ஸஹாபாக்கள், ஷுஹதாக்களுக்கு ஸலாம் கூறுகிறார்கள்; அவர்களுக்காக இறையோனிடம் துவாச் செய்து திரும்புகிறார்கள். அவர்களிடம் எவரும் குறைகளைச் சொல்லி அழுது கேட்பது; அல்லாஹ்விடம் சிபாரிசு செய்யக் கோருவது இல்லை. மெளலிது, கந்தூரி, பாத்திஹா, நேர்ச்சை, உயிர்ப்பலி, மொட்டை போடல் ஆகிய அனாச்சாரங்கள் எதுவும் நடப்பதில்லை.
கபுரடி வணக்கம் – தர்ஹா வணக்கம் இங்கில்லையே! இது எப்படி? என்று அரபி மக்களிடம் கேட்டால், முன் சொல்லியிருக்கிற அனாச்சாரம் அனைத்தும் ‘ஷிர்க்’ என்றும் ‘பித்அத்’ என்றும் பதிலளிக்கிறார்கள்; அதற்கு ஆதாரங்களை குர்ஆன், ஹதீஸிலிருந்து எடுத்துக் காட்டுகிறார்கள். இறைவனது அடியார்களான அவ்லியாக்கள், தங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வார்கள் என்று நம்புகிறவர்களைத் தெளிவாக காபிர் என்று சொல்லி, அவர்கள் நரகவாதிகள் தான் என்று ஆணித்தரமாகக் கூறும் திருக்குர்ஆனின் வசனங்களை நம்முன் எடுத்து வைக்கிறார்கள்:
“இந்த காபிர்கள் அல்லாஹ்வாகிய நம்மை விட்டு விட்டு, நம்முடைய அடியார்களைத் தங்களுடைய அவ்லியாக்களாக எடுத்துக் கொள்ளலாம், என நினைக்கிறார்களா? நிச்சயமாக அப்படிப்பட்ட காபிர்களை உபசரிக்க, நாம் நரகத்தைச் சித்தப்படுத்தி வைத்திருக்கின்றோம்.” – (அல்குர்ஆன் 18 : 102)
“நிச்சயமாக அல்லாஹ்வையின்றி எவர்களை அவர்கள் (ஆண்டவர்களாக) அழைக்கின்றார்களோ, அவர்கள் உங்களைப் போன்ற அடியார்களே (உங்கள் கோரிக்கைகளை அவர்கள் நிறைவேற்றுகிறார்கள் என்று கூறுவதில்) நீங்கள் உண்மை சொல்லுபவர்களாக இருந்தால், அவர்களை நீங்கள் அழைத்துப் பாருங்கள்; உங்களுக்கு அவர்கள் பதிலளிக்கட்டும்.” – (அல்குர்ஆன் 7 : 194)
“நிச்சயமாக அல்லாஹ்வையன்றி எவர்களை அவர்கள் (ஆண்டவர்களாக) அழைக்கின்றார்களோ, அவர்கள் உங்களைப் போன்ற அடியார்களே (உங்கள் கோரிக்கைகளை அவர்கள் நிறைவேற்றுகிறார்கள் என்று கூறுவதில்) நீங்கள் உண்மை சொல்லுபவர்களாக இருந்தால், அவர்களை நீங்கள் அழைத்துப் பாருங்கள்; உங்களுக்கு அவர்கள் பதிலளிக்கட்டும்.” – (அல்குர்ஆன் 7: 194)
“நிச்சயமாக என் இரட்சகன் அல்லாஹ் தான், அவனே இவ்வேதத்தை அருள் புரிந்தான். அவன் நல்லடியார்களை இரட்சிப்பவனாகவும் இருக்கின்றான். ஆகவே அல்லாஹ்வையன்றி, எவற்றை நீங்கள் அழைக்கின்றீர்களோ அவை உங்களுக்கு எத்தகைய உதவியும் செய்ய சக்தியற்றவைகளாக இருக்கின்றன, நீங்கள் அவைகளை நேரான பாதையில் அழைத்த போதிலும், அவை செவியுறா. (நபியே) அவை உம்மைப் பார்ப்பதைப் போல் உமக்குத் தோன்றுகிறது. அவை உண்மையில் உம்மைப் பார்ப்பதே இல்லை. – (அல்குர்ஆன்: 196, 197, 198)
அல்லாஹ்வின் வேதத்தில் இல்லாத நிபந்தனைகளை இடும் மாந்தருக்கு என்ன கேடு நேர்ந்ததோ? அல்லாஹ்வின் வேதத்தில் இல்லாத நிபந்தனைகள் அனைத்தும் தள்ள வேண்டியவை. அவை நூறு ஷரத்துகளாயினும் சரியே.!
“எம்மால் ஏவப்படாத ஒரு அமலை ஒருவர் செய்வாரானால், அது அல்லாஹ்விடத்தில் மறுக்கப்பட்டதாகும்.” – என்பது நபி மொழிகளாகும். (அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, நூல்கள்: புகாரி, முஸ்லிம்)
“பித்அத் புரியும் ஒருவரது தொழுகை, நோன்பு, தர்மம், ஹஜ், உம்ரா, தியாகம், தீனுக்கான முயற்சிகள் , செலவுகள் அனைத்தும் அல்லாஹ்விடத்தில் ஒப்புக் கொள்ளப்பட மாட்டா. குழைத்த மாவிலிருந்து தலைமுடி எவ்வளவு இலகுவாக வெளியேற்றப்படுமோ அதே போல் பித்அத்காரன் இஸ்லாத்திலிருந்து வெளியேறுவான்.” (அறிவிப்பாளர் : ஹுதைபா ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: ஸுனன் இப்னுமாஜ்ஜா)
இத்தகு ஆதாரங்களை, அடுக்கடுக்காக குர்ஆன், ஸஹீஹான ஹதீஸ்களிலிருந்து எடுத்துத் தருகிறார்கள்.
அரபுவாழ் முஸ்லிம்கள், அல்லாஹ் ஒருவனுக்கு மட்டும் பயந்து பணிந்து, வணங்கி வாழ்கிறார்கள். நபிகள் நாயம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாழ்ந்து காட்டிய வழியைப் பின்பற்றி, கண்ணியமாகவும் செல்வச் செழிப்போடும் வாழ்கிறார்கள். இணை வைக்காத இம்மக்களுக்காக அல்லாஹ் தன் அருட்கொடையினை, அருள் மழையாகப் பொழிகின்றான். புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே!
இஸ்லாத்தின் ஐந்தாவது கடமையான ஹஜ்ஜை நிறைவு செய்து, மதீனா சென்று, நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அடங்கியுள்ள மஸ்ஜிதுந் நபவி சென்று ஜியாரத் செய்தும் திரும்பிய கண்ணியத்திற்குரிய ஹாஜிமார்களே! அரபு நாட்டில் (ஸவூதி அரேபியாவில்) பணியாற்றும் பாக்கியம் பெற்ற இஸ்லாமிய இளைஞர்களே! ஸவூதி அரேபியாவிலுள்ள இஸ்லாமிய மார்க்கக் கல்வி பயின்று, பட்டம் பெற்றுத் திரும்பிய மார்க்க அறிஞர்களே! நீங்கள் இங்கு பார்த்த மார்க்க விஷயங்களையும், தமிழ் மக்களுக்கு எடுத்துச் சொல்ல மிகவும் கடமைப்பட்டவர்கள் அல்லவா?
“நீங்கள் அறிந்து கொண்டே உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள்: உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள்.” (அல்குர்ஆன் 2: 42)
“அல்லாஹ்வின் பால் (மக்களை) அழைத்துக் கொண்டு, தானும் நல்லமல்களைச் செய்து கொண்டு, நானும் முஸ்லிம்களில் ஒருவன் என்பவனை விட, அழகிய சொல் சொல்லுபவன் யார்?” – (அல்குர்ஆன் 41: 33)
“என்னைப் பற்றி ஒரு விஷயம் தெரிந்தாலும் அதைப் பிறருக்குச் சொல்லி விடுங்கள்.” – (நூல்: புகாரி, திர்மிதீ)
“மார்க்கப் புறம்பான செயல் நடக்கக் கண்டால், முடிந்தால் கைகளால் தடுங்கள், முடியாவிட்டால் நாவினால் தடுங்கள், அதுவும் முடியாவிட்டால், உள்ளத்தால் வருந்தி ஒதுங்குங்கள். இது ஈமானின் கடைசி நிலையாகும்.” – (நூல்: முஸ்லிம், முவத்தா, அபூதாவூது, திர்மிதீ, நஸயீ)
அல்லாஹ்வுடைய, அவனின் தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய கட்டளைக்கிணங்க, நீங்கள் அனைவரும் ஒன்று கூடி, உண்மையான தூய இஸ்லாத்தை, நம் சகோதர முஸ்லிம்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள். நம் சமூகத்தில் மண்டிக் கிடக்கும் அனாச்சாரங்களையும், மெளட்டீக, மூடத்தனங்களையும் அல்லாஹ்வின் வேதம், ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் போதனை இரண்டையும் கொண்டு அகற்றித் தூய்மைப்படுத்துங்கள். நமது இந்தியாவில், சீர்கெட்டுச் சிக்கித் தவிக்கும் மார்க்கத்திற்கு, புத்துயிர் தாருங்கள். கபுரு வணக்கத்தைக் களைந்தெறியுங்கள். நீங்கள் அறிந்த தீனை சகோதரர்களுக்கு எடுத்து விளக்குவது என்ற மாபெரும் கடமை உங்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது என்பதை உணர்ந்து செயல்படுங்கள்.
அடுத்து புரையோடிப் போயிருக்கும் நோய் பெண்கள் ஜியாரத் செய்தல் ஆகும். தர்ஹாக்களெங்கும் பெண்கள் கூட்டம், அங்கே பேயாட்டம், எண்ணெய் ஊற்றுதல், 40 கிழமை வேண்டுதல், இரவு தங்குதல் – இப்படி இன்னும் பல.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் , “கபுருகளை ஜியாரத்துச் செய்யும் பெண்களையும், அங்கு விளக்கு கொளுத்துவோரையும், கபுரை வணக்க ஸ்தலமாக ஆக்குவோரையும் அல்லாஹ் சபித்து இருக்கிறான்” என்று அருளினார்கள். (அபூதாவூது, திர்மிதீ, நஸயீ)
பெண்கள், பொது கபுரஸ்தானுக்கும், பெரியார்கள் அடங்கியிருக்கும் தர்ஹாக்களுக்கும் செல்வது, முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது மகளார் பாத்திமா ரளியல்லாஹு அன்ஹா அவர்களையே, நீ கபுரஸ்தானுக்குச் சென்றிருந்தால், உனது தகப்பனின் பாட்டன் சுவர்க்கம் செல்லாதவரை நீ செல்ல முடியாது என்று கடுமையாக எச்சரித்த ஒரு நீண்ட ஹதீது அபூதாவூது, நஸயீயில் காணப்படுகிறது.
ஆனால், இந்தியாவில் நடப்பதென்ன, தமிழகத்தில் நாம் பார்க்கும் பெண்கள் கூட்டம் இரண்டு இடங்களில் நிரம்பி வழிகின்றது. ஒன்று சினிமா அடுத்து தர்ஹாக்கள். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்” என்று யாரை சபித்தார்கேளா, அந்தப் பெண்கள் தான் நாகூரிலும், ஏர்வாடி போன்ற தர்ஹாக்களிலும் பொங்கி வழிகின்றனர்.
தாங்கள் செய்வது நன்மையான செயல்கள் என்று எண்ணி நாசமான பாதையில் சென்று கொண்டிருக்கின்றனர். இதைக் கண்டும் கண்டிக்காமல், மார்க்க அறிஞர்கள் ஆதரிக்கும் கொடுமையும் இங்குதான் நடக்கினன்றது.
அல்லாஹ் கட்டளையிட்ட ஐம் பெருங்கடமைகளை நிறைவேற்ற மனமில்லாத தாய்மார்கள் கூட்டம், ஹராமெனத் தடுக்கப்பட்ட தர்ஹாக்களுக்குத் தவறாமல் சென்று வருகின்றனர். இது நன்மையான காரியம் என்று எண்ணுகிறார்கள் . அல்லாஹ் தனது வேதத்தில் தெளிவாக இவர்கள் அடையாளம் காட்டுகின்றான்.
“தங்களுடைய அமல்களில் பெரிய நஷ்டம் அடைந்தவர்களை நான் அறிவித்துக் தரட்டுமா? என்று (நபியே!) கேளும்” (அல்குர்ஆன் 18: 103) “அவர்கள் பாவமான கருமங்களைச் செய்து கொண்டு, மெய்யாகவே தாங்கள் மிக நல்ல காரியங்கள் செய்வதாக எண்ணிக் கொள்வார்கள். (அல்குர்ஆன் 18 : 104)
“இவர்கள் தங்கள் இறைவனின் வசனங்களையும், அவனது சந்திப்பையும் நிராகரித்து விட்டார்கள், அவர்கள் நற்செயல்கள் யாவும் அழிந்து விட்டன. மறுமை நாளில் அவர்களுக்காக எடைக் கோணலையும் நாம் நாட்டமாட்டோம்.” (அல்குர்ஆன் 18 : 105)
“அவர்கள் என்னுடைய வசனங்களையும், என்னுடைய தூதர்களையும், நிராகரித்துப் பரிகாசமாக எடுத்துக் கொண்டதன் காரணமாக நரகமே அவர்களுக்குக் கூலியாகும்.” (அல்குர்ஆன் 18 : 106)
அல்லாஹ்விற்கு மாறு செய்தவர்களை, அவன் கடுமையாக எச்சரித்தும், தாய்மார்கள் தர்ஹாக்களே தஞ்சமென ஓடுவது ஏன்?
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “மனிதனே நீ சொர்க்கத்தைத் தேடி அலையாதே! அது உன் தாயின் காலடியில் உள்ளது” என்று எந்தத் தாய்க்குலத்தைப் பார்த்துப் பெருமையுடன் சொன்னார்களோ, அந்தத் தாய்க்குலம்தான், நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் முஹப்பத் (அன்பு) எங்களுக்கு வேண்டாம்; லஃனத் (சாபம்) மட்டும் போதும் என்றெண்ணி, ஹராமென்று தடுக்கப்பட்ட தர்ஹாக்களுக்கு நேர்ச்சை செய்து ஓடுகின்றனர்.
இதைக் தடுக்க வேண்டிய குடும்பத்திலுள்ள ஆண்கள், பெண்களுக்கு உற்ற துணையாக உடன் சென்று தங்கள் பங்கிற்கு பாத்திஹா ஓதியும், கந்தூரி நடத்தியும், அவ்லியாக்கள் பெயரால் மொட்டையடித்து, அதைப் பெருமையாக ‘நாகூருக்குப் போய் வந்தேன்’, ஏர்வாடி சென்று வந்தேன், ‘பிரான்மலை ஏறி வந்தேன்’ என்று சொல்லி பக்தி பரவசமடைகிறார்கள்.
இது காலம் வரை ஷஹீதுகளையும், பெரியார்களையும் மெளத்தாக்களையும் தான் இறைவனுக்கு இணை வைத்தனர். ஆனால் இப்பொழுது மிருகங்களையும் சேர்த்து விட்டனர். தர்ஹாவில் வளர்த்த யானை செத்துப் போனால், அதற்கும் கபுர், யானை அவ்லியா கராமத் செய்கிறார் என்று சொல்லி, வசூல் செய்ய ஒரு கூட்டம் கிளம்பி விட்டது. 15 வருடங்களுக்கு முன்பு, ஏர்வாடி, காட்டுப்பள்ளி தர்ஹாவிற்குச் சென்றவர்கள் ஒரு சில கபுருகளைத்தான் பார்த்திருப்பார்கள். இன்று போய்ப் பாருங்கள். புதுப் புது கபுருகள் உண்டாகி இருக்கின்றன. பச்சைப் போர்வையும் பூவும் கண்ணைப் பறிக்கும். பாத்திஹா ஓதவென நிரந்தரமாக ஒருவர் இருப்பார். தவறாமல் உண்டியல்கள் இருக்கும். மார்க்கத்தின் பெயரால், மிகச் சுலபமாகச் சம்பாதிக்க முடியும் என்பதை அங்குள்ளோர் நன்கு புரிந்து கொண்டிருக்கிறார்கள். மார்க்கம் புரியாத நிலையில், சமுதாயத்தவர் நன்மையான, பரக்கத்தான செயல் என்று அவர்கள் உண்டியல்களை நிரப்புகிறார்கள்.
இன்னும் சில கைதேர்ந்த, தர்ஹா, கபுரு வியாபாரிகள், வசூலை அதிகப்படுத்த, புதுப் புது ‘டெக்னிக்’ களைக் கையாள்கிறார்கள். திருச்சிக்கு அருகே ஒடுக்கம்பட்டி தர்ஹா இருக்கிறது. இதில் அடங்கியிருக்கும் அவ்லியாவின் கபுரிலிருந்து மூச்சு வருகிறதாம்! போர்வை தூக்குகிறதாம்! இப்படி கதை கட்டி காசு சம்பாதிக்கிறார்கள். செத்தவர் யாராவது மூச்சு விட்டிருக்கிறாரா? இஸ்லாத்திற்குப் பொருந்துமா? விஞ்ஞானத்திற்கும் பொருந்துமா? கதை விடுவதிலும் ஒரு எல்லை வேண்டாமா? இந்தக் கதையளப்பை நம்பி மக்கள் கூட்டம் அலை மோதுகிறதே! சிந்தித்துப் பாருங்கள். உண்மையை விளங்குங்கள்.
இஸ்லாமிய சமுதாயத்தின் அறியாமையை மூலதனமாக வைத்து மார்க்கத்தின் பெயரால், அவ்லியாக்கள் பெயரால் சில முனாஃபிக் வியாபாரிகள் அமோகமாகக் காசு சம்பாதித்து வருகிறார்கள். இவர்களுக்கு, கஷ்டப்பட்டுத் தேடிய அரும்பாடுபட்டுச் சம்பாதித்த காசுகளை மக்கள் அள்ளிக் கொடுக்கிறார்கள்.
தொடர்ச்சிக்கு ‘‘Next” ஐ ”கிளிக்” செய்யவும்