முஸ்லிம் என்ற போர்வையில், மக்களை வழி கெடுக்கும் தர்ஹா வியாபாரிகள், இம்மையில் கிடைக்கும், இணை வைக்கும் பாவத்தைச் சுமந்து கொள்கின்றனர். இவர்களுக்கு மறுமையில் என்ன கூலி தெரியுமா? அல்லாஹ் அதை மிகத் தெளிவாகக் கூறுகிறான்.
“எவர்கள் அல்லாஹ், வேதத்தில் அருளியவற்றை மறைத்து அதற்குக் கிரயமாக சொற்பத்தைப் பெற்றுக் கொள்கிறார்களோ, நிச்சயமாக, அவர்கள் தங்கள் வயிறுகளில் நெருப்பைத் தவிர வேறெதனையும் உட் கொள்ளவில்லை. கியாம நாளில், அல்லாஹ் அவர்களிடம் பேசவே மாட்டான். அவர்களுக்கு மிகக் கடுமையான வேதனையுண்டு.” – (அல்குர்ஆன் 2: 174)
இவர்கள் உண்மையான இஸ்லாத்தைக் காட்டாமல், கண்ட கதைகளை, அவ்லியாக்கள் பெயரால், அனாச்சாரங்களைத் திணித்து, இவர்கள் அவ்லியாக்களையும் அவமதித்து, இஸ்லாமிய சமுதாயத்தையும் நரக நெருப்பில் தள்ளத் துணிந்து விட்டனர்.
குர்ஆனின் பொருளை மக்களுக்கு விளக்காமல், நபி வாழ்ந்து காட்டிய வழி முறையை மறைத்து, மார்க்கத்தின் பெயரால் வழி கெடுத்ததன் காரணம், தங்கள் குடும்பம் பரம்பரை பரம்பரையாக வயிறு வளர்க்க வேண்டும் என்பதைத் தவிர வேறில்லை. அல்லாஹ் தனது திருக்குர்ஆனில், குர்ஆனையும் இறுதித் தூதரின் போதனை இரண்டையும் பின்பற்றி நடக்க கட்டளையிடுகிறானே அல்லாமல், குருட்டுத்தனமாக யாரையும் பின்பற்றச் சொல்லவில்லை.
உண்மையான மூமின், ” இறை வசனங்களே ஓதிக் காட்டப்பட்டாலும் கண்மூடித்தனமாகப் பின்பற்ற மாட்டான். (சிந்தித்துச் செயல்படுவான்)” என்று அல்லாஹ் தெளிவாகக் குறிப்பிட்டுச் சொல்லும் பொழுது (அல்குர்ஆன் 25 : 73) நாமோ அவர் சொன்னார், ஆலிம் சொன்னார், அறிஞர் சொன்னார், இமாம் சொன்னார் என்று கண்மூடித்தனமாக நம்பி, சிந்திக்காமல் தீய வழியில் சென்று கொண்டிருக்கின்றோம்.
நம் சமுதாயத்தில் ஆண்களும் , பெண்களும் நல்ல முறையில் குர்ஆனை ஓதி வருகிறோம். ஆனால் குர்ஆன் சொல்வது என்ன? அல்லாஹ் நமக்கு சொல்வதென்ன? என்று எத்தனை பேருக்குத் தெரியும்? விரல்விட்டு எண்ணி விடலாம். காரணம் அதன் பொருளை யாரும் சொல்லித் தரவில்லை. குர்ஆன் தமிழில் வந்ததே சமீப காலத்தில்தான். ஆக குர்ஆனின் விளக்கம் தெரியாமல் ஓதி வந்ததால் தான் மேலான பகுத்தறிவு சமுதாயம் கீழான நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது.
“பிஸ்மில்லாஹிர்ரஹ்மானீர்ரஹீம்” என்று சொல்லித்தான் எந்த சொல்லையும், செயலையும் துவக்குகின்றோம். இதன் பொருள் தெரிந்தால் நிச்சயம் நாம் கபுருக்குச் சென்று நமது தேவைகளை கேட்க மாட்டோம், அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல இறைவன்” என்று அறிந்தவர்களும் அதனை உணராமல் இறைவனை விட அருளை அளிப்பவர், அன்பு செலுத்துபவர் இந்த அவ்லியா என்று எண்ணி ஏமாந்து கொண்டிருக்கின்றனர்.
“ஆயிரத்து நானூறு ஆண்டுகள் ஆகியும் அணுவளவும் மாறிடாத அற்புத வேதம்” என்று பாட்டு படிக்கின்றோம். அதன் பொருளை படித்தோமா என்றால் இல்லை. இறைவனால் அருளப்பட்ட, அன்று முதல் இன்று வரை மனிதக் கரங்களால் மாசுபடுத்த முடியாத அற்புத வேதம் என்று உலகமே ஒத்துக் கொண்டுள்ளது. இஸ்லாமிய சமுதாயத்தை மேலான சமுதாயத்தவர்கள் என்று அல்லாஹ் சொல்கின்றான். (அல்குர்ஆன் 3 : 110)
அல்லாஹ்வால் கண்ணியப்படுத்தப்பட்ட நாம் இன்று பல பிரிவுகளாகி மொழி, மத்ஹபு, தரீக்கா பெயர்களால் பிரிந்து நமக்குள் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறோம். ஆளுக்கொரு அவ்லியாவை கொண்டு அல்லாஹ்விற்கு இணை வைக்கின்றோம்.
“தீனோரே நியாயமா? மாறலாமா? தூதர் நபி போதனையை மீறலாமா”? என்று பாட்டு படிக்கின்றோம். அதன்படி வாழக் கற்றுக் கொள்ளவில்லை. அது நமக்குக் கடினமாகத் தெரிகிறது.
ஆனால் ” நாளை விரட்ட மருந்தொன்றிருக்குது” …. என்றவுடன் உடனே நாகூருக்கு ஓடி வருகின்றோம். அங்கு செய்யும் “ஷிர்க்கான” செயல்கள் மகிழ்ச்சியைக் கொடுக்கின்றன.
ஐந்து வேளை தொழுங்கள் என்றால் அது கசப்பாக இருக்கின்றது. மார்க்கம் சொன்னபடி, அல்லாஹ்வின் குர்ஆன், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வழிமுறை இரண்டையும் மட்டும் பின்பற்றி இந்திய இஸ்லாமிய சமுதாயம் சென்றிருந்தால், இன்று இந்திய மக்கள் அனைவரும் இஸ்லாமியர் ஆகியிருப்பார்கள். ஆனால் நாம் மார்க்கத்தின் பெயரால் அடிக்கின்ற கூத்தைப் பார்த்துத் தான் அவர்கள் தயங்குகிறார்கள். அதனால் மதக் கலவரங்களால், பாதிக்கப்பட்டு கஷ்டப்படுகிறோம்.
“நீங்கள் எல்லோரும், அல்லாஹ்வுடைய (வேதமாகிய) கயிற்றைப் பலமாகப் பற்றி பிடித்துக் கொள்ளுங்கள், நீங்கள் பிரிந்து விடவேண்டாம்” என்று அல்லாஹ் (அல்குர்ஆன் 3: 103) கூறுகிறான். ஆனால் அந்த குர்ஆனை விட்டு விலகிச் சென்றதால் தான் இன்று பல பிரிவுகளாகப் பிரிந்து ஒற்றுமையின்றி, வலிமைகுன்றி மற்றவர்களால் நசுக்கப்படுகின்ற சமுதாயமாக இருக்கின்றோம்.
மேலும் சவூதி அரேபியாவில் பரக்கத் வரும் என்று யாரும் பூரியான் ஃபாத்திஹா ஒதுவதில்லை. கோழிக்கறி, ரொட்டி ஃபாத்திஹாவும் இல்லை.
உண்மையில் பூரியான் பாத்திஹாவில் செல்வம் வரும் என்றால் யாரும் வெளிநாடுகளுக்கு வேலை செய்ய வரவேண்டியதே இல்லை. நம் நாட்டிலும் யாரும் கஷ்டப்பட வேண்டிய அவசியமில்லை. ஒவ்வொரு வீட்டிலும் பூரி செய்து பாத்திஹா ஓதி செல்வத்தைக் கொட்டச் செய்யலாம். யாரோ ஒரு சில மார்க்க அறிவாளிகள்? தங்கள் (?) வயிறு வளர்ப்பிற்கு ருசியான உணவு வேண்டும் என்ற காரணத்தைத் தவிர வேறொன்றுமில்லை.
மக்கள் குர்ஆனை அறியாததால் பூரியான் ஃபாத்திஹாவிற்கு கடன்பட்டும், பயபக்தியோடும் மார்க்க புரோகிதர்களின் வயிற்றை நிரப்புகிறார்கள். குர்ஆன் தமிழ் மொழியில் விளக்கத்துடன் வந்து விட்டது. சமுதாயம் சிந்திக்கத் துவங்கிவிட்டால், இனி பூரியான் கேட்பவர்களுக்கு பூசை தான் கிடைக்கும். ஊர் மக்கள் பணத்தில் தின்று வளர்ந்தவர்களை ஊர் மக்களே திருத்த வேண்டும்.
நாம் உயிரோடு இருக்கும் பொழுது ‘பித்அத்’ ஆன காரியங்களையும், இணை வைக்கக்கூடிய காரியங்களையும் செய்கின்றோம். மனிதன் வயதாகி விட்டாலும், பின் தொடர்ந்து செய்யக் கூடிய 3ம்நாள், 7ம்நாள், 40ம்நாள் ஃபாத்திஹா என்று மார்க்கம் சொல்லாத பழக்கங்களையெல்லாம் ஏற்படுத்திக் கொண்டுள்ளோம். சவூதி அரேபியாவில் இது போன்று பாத்தியாக்கள் ஓதி யாரும் தங்கள் ஈமானையும், காசு பணத்தையும் இழப்பதில்லை. காரணம் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்திலேயே அவர்களது இரு மனைவிகள் மெளத்தாகி உள்ளனர். அருமை மகனார் இப்றாஹீம் ரளியல்லாஹு அன்ஹு மரணித்திருக்கின்றனர். எத்தனையோ ஸஹாபாக்கள் ஷஹீது ஆகி உள்ளனர். யாருக்குமே பாத்திஹா அவர்கள் ஓதியதில்லை.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செய்யாத, மாறாக கண்டித்ததைத்தான் நாம் மார்க்கத்தின் பெயரால் செய்து கொண்டிருக்கிறோம். இதற்கு இங்குள்ள ஆலிம்கள் முழு ஆதரவு கொடுத்து வருகின்றனர். காரணம் வருமானம் வரக்கூடிய வழியைப் புரிந்து கொண்டனர். மரணித்தவர்களுக்கு நாம் செய்யக்கூடிய ஒரே நல்ல காரியம் அவர்கள் செய்த பாவத்தை மன்னித்து சுவர்க்கத்திற்கு சொந்தக்காரர்களாக ஆக்கு யா ரஹ்மானே! என்று துவா கேட்பதுதான்.
பொது கபுரஸ்தானுக்குச் சென்று கேட்பது சிறப்பு, மரணம் நிச்சயமான ஒன்று என்று நமக்கு நாமே நினைவூட்டிக் கொள்ள நல்ல வாய்ப்பாகும். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இப்படித்தான் செய்து காட்டியுள்ளனர். நாம் நபி வழியை விட்டுவிட்டு, பிரைவேட் கபுரஸ்தானுக்கே (தர்ஹா) சென்று கொண்டு இருக்கின்றோம். இறந்தவர்களுக்காக எத்துணை ஆயிரம் செலவு செய்து எவ்வளவு பெரிய பாத்திஹா ஓதினாலும் அது நிச்சயமாக அவர்களுக்கு எந்த ஒரு பலனையும் தராது. அவர்கள் செய்த நல்ல அமல்கள் மட்டும் மறுமையில் அவர்களுக்கு நன்மையை கொடுக்கும். மற்றபடி நாம் ஓதும் பாத்திஹா நமக்கு பணச் செலவையும், கடனையும்தான் கொடுக்கும். இதில் உலக ஆதாயம் பெறுபவர்கள் தான் ஹஜ்ரத், ஆலிம்ஸாக்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறுகிறார்கள்
“வார்த்தையில் சிறந்தது அல்லாஹ்வின் வேதம், நடை முறையில் சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நடைமுறை, காரியங்களில் கெட்டது (நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சொல், செயல் அங்கீகாரம் இல்லாத) பித்அத்துகள், பித் அத்துகள் அனைத்தும் வழி கேடுகள், வழிகேடுகள் அனைத்தும் நரகில் சேர்க்கும். (அறிவிப்பவர் : இப்னுமஸ்வூத் ரளியல்லாஹு அன்ஹு, ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: புகாரி, முஸ்லிம், இப்னுமாஜ்ஜா)
கண்ணியமிக்க அன்புச் சகோதரர்களே!
அல்லாஹ் நமக்குச் சொல்லாத, நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டித் தராத புதுப்பழக்கங்களை ஏற்படுத்தி, நரக நெருப்பிற்கு நம்மை நாமே தயார் செய்து கொள்ள வேண்டாம். இமாம் சொன்னார், ஆலிம் சொன்னார். பெரியார் சொல்லியிருக்கிறார், அவ்லியா சொல்லியிருக்கிறார் என்று சொல்லி மக்களை வழி கெடுக்க ஒரு கூட்டம் எல்லா காலத்திலும் இருந்து கொண்டே இருக்கும். இவர்கள் சொல்வதை கேட்டு நஷ்டப்படுவதை விட, அல்லாஹ்வின் வேதம், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் போதனை, செயல்முறைகள் மட்டும் பின்பற்றி நேர்வழி செல்வோம். இதைத்தான் “(நபியே) சொல்வீராக: நீங்கள் அல்லாஹ்வை நேசிக்கக்கூடியவர்களாக இருந்தால், என்னைப் பின்பற்றுங்கள், அல்லாஹ் உங்களை நேசிப்பான்; உங்கள் பாவங்களையும் மன்னிப்பான், அல்லாஹ் மன்னிப்போனும், மிகவும் இரக்கம் உடையவனாகவும் இருக்கிறான்”. (அல்குர்ஆன் 3 : 31)
அல்லாஹ் நமக்கு உறுதி கொடுத்திருக்கும் நேர்வழியை விட்டு, போலிகளை நம்புவது மடமையல்லவா? சகோதரர்களே! சற்று சிந்தியுங்கள்!
நம்மை வழி கெடுக்கும் நாச சக்திகளை உதறித் தள்ளுவோம். அல்லாஹ் கொடுத்த ஐம்பெரும் கடமைகளை நிறைவேற்றுவோம். பொறுமை, சகிப்புத்தன்மையை கைக் கொள்வோம். நமது மனைவி, மக்களை தீன்வழியில் செல்ல நாம் வழிகாட்டுவோம். வரக்கூடிய இளைய சமுதாயம் சிறந்த உம்மத்தாக மாற நாம் மறை வழி சென்று நபி மொழி கேட்போம்!
கடைசியாக நாம் முடிவு செய்ய வேண்டியவை
1. நமக்குத் தேவை அல்லாஹ்வின் கிருபையா? அல்லது அவ்லியாக்களின் கிருபையா?
2. இறைமறை, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மொழிப்படி நடந்து இம்மை மறுமையில் வெற்றி அடைய விருப்பமா? அல்லது வழி கெடுக்கும் மார்க்க வியாபாரிகள் சொல்வதைக் கேட்டு நரக நெருப்பில் விழ விருப்பமா?
3. அனைவரும் முஸ்லிம் என்ற ஒரே கொள்கையில் ஒன்றுபட்டு வாழ்வோமா? அல்லது நமக்குள் பல பிரிவுகள் ஏற்படுத்தி நமக்குள் சண்டையிட்டு இம்மை மறுமையில் நஷ்டப்பட்டு வீழ்வோமா?
4. நாம் விரும்புவது அல்லாஹ்வின் பள்ளிவாயில்களா? அல்லது அனாச்சாரங்களை அறிமுகப்படுத்தும் தர்ஹாக்களா?
அன்புச் சகோதர, சகோதரிகளே! பொறுமையுடன் சிந்தியுங்கள்; சிந்திப்பவர்களுக்கெ வெற்றியுள்ளது.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அமுதமொழியை மீண்டும் நினைவூட்டுகிறோம்.
1. “உங்களிடையே இரண்டை விட்டுச் செல்கிறேன், அவற்றைப் பற்றிப் பிடித்திருக்கும் காலமெல்லாம் நீங்கள் வழி தவறவே மாட்டீர்கள். ஒன்று அல்லாஹ்வின் வேதம். இரண்டு எனது வழிமுறை.” (நூல்: முவத்தா)
2. “எனது உம்மத்தில் 73 பிரிவினர் தோன்றுவர். 72 பிரிவுகள் நரகம் புகுவர், 1 பிரிவு மட்டுமே சொர்க்கம் செல்லும், அவர்கள் இன்றைய தினம் நானும் எனது தோழர்களும் எவ்வாறு இருக்கிறோமோ அவ்வாறே இருப்பவர்கள்.” (அறிவிப்பவர்: முஆவியா ரளியல்லாஹு அன்ஹு, அம்ருப்னுல் ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: அபூதாவூது, திர்மிதீ)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இந்த ஒரு ஹதீஸை மட்டும் தெளிவாக படித்து சிந்தனை செய்து நேர்வழி நடந்தால் நிச்சயமாக அல்லாஹ் நம் அனைவர் பாவங்களை மன்னித்து சொர்க்கவாசிகளாக ஆக்கி அருள்வான்.
யா அல்லாஹ் நாங்கள் அறிந்தும், அறியாமலும், தெரிந்தும், தெரியாமலும் செய்த எல்லா பாவங்களையும் மன்னித்து உன் அருட்கொடையின் தலைவாயிலை திறந்து வைப்பாயாக! நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அறிவித்த 72 பிரிவுகளை விட்டும் எங்களை தடுத்து, உன்னை வணங்கி, வழிபட்டு, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நடைமுறையை கடைப்பிடித்து சொர்க்கத்திற்கு சொந்தக்காரர்களாகும் அந்த ஒரே ஒரு பிரிவில் எங்களையும் உலக முஸ்லிம்களையும் சேர்த்து விடு ரஹ்மானே!
சட்டத்திற்கொத்து வராதோர் சரியான மூஃமினாகார்.
உங்களில் எவரும் தமது விருப்பம், நான் கொண்டு வந்துள்ள சட்டத் திருத்தங்களைச் சார்ந்திருந்தாலன்றி (சரியான) மூமினாக மாட்டீர், என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (அப்துல்லாஹ் பின் அம்ரு ரளியல்லாஹு அன்ஹு, நூல்: ஷரஹுஸ்ஸுன்னா)
ஜாக்கிரதை! பொய்யர்கள், புரட்டர்கள்!
கடைசி காலத்தில் நீங்களும், உங்கள் மூதாதைகளும் கேள்விப்பட்டிராத (குர்ஆனுக்கும், ஹதீஸுக்கும் புறம்பான) விஷயங்களைப் பொய்யர்களும், புரட்டர்களும் உங்களிடத்தில் கொண்டு (வந்து சொல்ல) வருவார்கள். அவர்கள் விஷயமாக வெகு எச்சரிக்கையாயிருந்து கொள்ளுங்கள். (அவர்கள் குறித்து) நீங்கள் தடம் புரளவோ தடுமாற்றமடையவோ வேண்டாம். (அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்)
அந்நஜாத்: நவம்பர், 1987 – ரபிவுல் அவ்வல், 1408
جَزَاكَ اللَّهُ خَيْرًا : திருச்சி A. அப்துற் றஜாக், நெல்லை M.நூர்தீன், அறந்தாங்கி Y.அப்துல் நாசர், கீழக்கரை S.ஹலரத் அலி
source: http://www.annajaath.com/?p=320