எம். எஸ். உதயமூர்த்தி
”தோல்வியே வெற்றிக்கு முதல்படி!” என்று சொல்லும்போது, ”தோல்வியைத் தழுவுங்கள்! தோல்வியை வரவேற்று மகிழுங்கள்!” என்று சொல்கிறோமா அல்லது வெற்றி பெறுவதற்கு தோல்வி அடைந்துதான் ஆக வேண்டும். எனவே, தோல்வியை எதிர் பாருங்கள்! என்று சொல்கிறோமா?
இல்லை! இல்லவே இல்லை! தயவு செய்து, அப்படி எண்ணி விடாதீர்கள்!
ஒரு காரியத்தில் வெற்றி – தோல்வியைக் கருதாது தொடர்ந்து ஈடுபட மனப்பக்குவமும், மன உறுதியும் தேவை.
“தோல்வியின் அடையாளங்கள் தென்படும் போது கொஞ்சம் பின்வாங்கி, நிதானித்து, மறுபரிசீலனை செய்யுங்கள்; அவகாசம் எடுத்துக் கொள்ளுங்கள்; வேறு பாதையில் முயலுங்கள்… ” என்று சொல்கிறார் யங். தோல்வியின் அடையாளம் காலம் கனிந்து வரவில்லை என்பதைக் காட்டுகிறது. காலச்சக்கரம் மறுபடியும் திரும்பும்.
தோல்வி நாம் செல்லும் பாதை சரியில்லை என்பதை சூசகமாகத் தெரிவிக்கிறது. அதை நாம் புத்திசாலித்தனமாக புரிந்து கொண்டு, உடனே, வேறு பாதையை ஆராய வேண்டும். மனதில் உற்சாகமான எண்ணங்களை எண்ணுவதன் மூலம், பிறருக்கு உதவும் எண்ணங்களை சிந்திப்பதன் மூலம், பழைய வெற்றிகளை நினைத்துப் பார்ப்பதன் மூலம் நாம் நம் மனதை வலிமைப்படுத்த முடியும். நமது மனம் நமக்குள் இருக்கும் ஒரு பகுதி. அதை நாம் நம் கைக்குள் வைத்திருக்க வேண்டும். நல்ல எண்ணங்கள், வெற்றியைப் பற்றிய நினைப்புகள், சந்தோஷமான அனுபவங்கள் இப்படிப்பட்ட எண்ணங்களை மட்டுமே மனதில் வைத்து நம் மனதை நம் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
தன்னம்பிக்கை இல்லாதவர்கள், கொஞ்சம் பலகீனமானவர்கள். பிறரிடம் யோசனை கேட்கும் போது அவர்கள் சர்வ ஜாக்கிரதையாக நடந்துகொள்ள வேண்டும்… ” யோசனை தான் கேட்கிறேன். ஆனால், எப்படி முடிவு செய்வது என்பது என் செயல்!” என்பதை அவர்கள் தங்களுக்குத் தானேயும், யோசனை சொல்பவரிடமும் தெளிவு படுத்தி விட வேண்டும். ஏனெனில், பிறர் யோசனையையும், முடிவையும் ஏற்று நடக்கும்போது, நாம் நம் சுயத் தன்மையை இழந்து விடுகிறோம்.
தன்னம்பிக்கையின்மையின், மறுபக்கம் கர்வம், தற்பெருமை, அகம்பாவம் என்ற குணங்கள், தன்னம்பிக்கையின்மை எத்தனை கெடுதலோ, அதே போலத்தான், என்னால் எல்லாம் முடியும்… ” மனது வைத்தேனானால். மறுபடியும் செய்து காட்டுவேன்… ” ” ஒரு தரம் புரிந்து கொண்டேனானால் போதும், விடமாட்டேன்! ” என்று சிலர் தன் திறமையைப் பற்றி அறிவுக்கு மீறிய கணிப்பு செய்வர்.
தன்னம்பிக்கை உள்ளவன், ஏன் அப்படி – நாம் நினைக்கிறபடி செய்து பார்க்க கூடாது என்று எண்ணுகிறான். அதையே இரவு, பகலாக நினைத்துக் கொண்டிருக்கிறான். இதன் விளைவாக தெளிவு பிறக்கிறது; அதை செய்து முடிக்கிறான்
உலகின் மகத்தான சாதனைகள் எல்லாம் சாதாரணத் திறமை படைத்தவர்களாலேயே பெரும்பாலும் சாதிக்கப்படுகிறது. அவர்களது வெற்றிக்குக் காரணம் விடாமுயற்சி தான். எதைக் கண்டும் சளைக்காத மனம். தொடர்ந்து அந்தக் காரியத்தில் மீண்டும், மீண்டும் ஊடாடும் மனப்பக்குவம்.
வெற்றி வரும் என்று நம்புங்கள்; திட்டமிடுங்கள்; உழையுங்கள். ஆனால், அதையும் மீறி தோல்வி ஏற்படுகிறதென்றால், இடிந்து போகாதீர்கள். தோல்வி ஏன் ஏற்பட்டது என்று காரணத்தை ஆராயுங்கள். அடுத்த முறை அப்படி தோல்வி ஏற்படாதவாறு உங்கள் திட்டத்தை அமையுங்கள்.
கையிலுள்ள பொருளை இழந்து தொழிலில் நஷ்டம் அடையும்போது மனிதன் தவிக்கிறான். ” இதிலிருந்து மீள்வேனா? ” என்று பயப்படுகிறான்
“நம்மிடம் இருப்பது நமது மனம்தான்! ” என்று தைரியம் சொல்லிக் மனதை உறுதிப் படுத்திக் கொண்டு, தன் முழுக் கவனத்தையும் செய்கிற தொழிலின் மீது திருப்புகிறான். பசியைப் பற்றி கவலைப்படு வதில்லை; தூக்கத்தைப் பற்றி அக்கறைப்படுவதில்லை; எடுத்த தொழில் ஒன்றே குறியாக உழைக்கிறான்; வெற்றி பெறுகிறான். தோல்வி என்ன செய்தது? நம்மிடமுள்ள ரோஷத்தைக் கிளப்பி விட்டது. நம்மிடமுள்ள தன் மானத்தின் தலையில் அடித்து நம்மை எழுந்து நிற்கச் செய்தது. நம்மை கேவலப்படுத்தி, அதன் மூலம் நம் கோபத்தைக் கிளப்பி, நம் மன உறுதியை வளர்த்தது. தோல்வி என்ற அனுபவம், தோல்வியைப் பற்றிய பயத்தைப் போக்குகிறது. ஒருமுறை ஓட்டாண்டி ஆனவன் – தோல்வி கண்டவன் – மறுமுறை தோல்வியைக் கண்டு, அவ்வளவு பயப்படமாட்டான். தோல்வியிலிருந்து எப்படி மீண்டு வருவது என்பதில்தான் குறியாயிருப்பான்.
தொழிலில் இறங்குபவர்கள் பத்தில் எட்டு பேர் தோற்றுப் போகின்றனர். இதற்குக் காரணம் பல. அனுபவமின்மை தான் முக்கிய காரணம். ஆனால், அதற்காக, “இனி தொழிலே செய்ய மாட்டேன்!” என்று விட்டு விடுகிறார்களா? சிறிது காலம் சென்றதும் மறுபடியும் முயல்கின்றனர். தொழிலில் இறங்குபவர்களில் யார் வெற்றி பெறுகின்றனர் என்று ஆராய்ந்ததில் வெற்றி பெற்றவர்கள் எல்லாம் முதல் இரண்டு முறை தோற்றுப் போயிருக்கின்றனர் என தெரியவந்தது.
எனவே, தோல்வி வந்ததென்றால் கலங்காதீர்கள். நீங்கள் சரியான பாதையில் தான் செல்கிறீர்கள்; ஆனால், தோல்விகளைத் தாண்டித்தான் போக வேண்டும், வெற்றி பெற.
முதல் வெற்றி சிலநேரம் நமக்கு ஒரு அசாதாரண நம்பிக்கையை ஏற்படுத்தி விடுகிறது. ” எடுத்ததெல்லாம் வெற்றியடையும் ” என்ற ஒரு போலி நம்பிக்கையை ஏற்படுத்தி விடுகிறது. நமது ஆணவத்தை வளர்த்து விடுகிறது.
தோல்வி ஏற்பட்டிருந்தால் ஒரு நிதானம் இருந்திருக்கும்; ஒரு பயம் – ஒரு கவனம் இருந்திருக்கும். ஒரு அடக்கம் ஏற்பட்டிருக்கும். அடக்கம், கவனம், நிதானம் – இவற்றை எல்லாம் தோல்விதான் தருகிறது. எனவேதான், தோல்வி ஒரு பாடம் என்று சொல்கின்றனர். தோல்வி நமக்கு பாடம் புகட்டுகிறது. மாறாக, வெற்றியில் நாம் எதையும் கற்றுக் கொள்வதில்லை – சரியான பாதையில் சென்றிருக்கிறோம் என்பதைத் தவிர அந்த உண்மைகூட வெற்றி பற்றி சிந்திக்கும்போது தான் புலப்படுகிறது. நீங்கள் ஒரு எழுத்தாளர். உங்கள் கதையோ திரும்பத் திரும்பத் திருப்பி அனுப்பப்படுகிறது.
நீங்கள் வேலைக்கு விண்ணப்பிக்கிறீர்கள். எல்லா இடங்களிலிருந்தும் வேலை இல்லை என்ற பதிலே கிடைக்கிறது.
தொழில் தொடங்குகிறீர்கள். பல எந்திரக் கோளாறுகள்! உற்பத்தி செய்ய முடியவில்லை.
அந்த நிலையில் நாம் என்ன செய்யலாம்?
ஒருமுறை ஒரு நண்பரின் தோட்டத்தைப் பார்க்கப் போனார் ஒரு தத்துவ ஞானி
தோட்டக்கார நண்பர் சொன்னார்… ” எல்லா மரங்களும் இங்கே காய்க்கின்றன. ஏனோ, இந்த ஒரு மரம் மட்டும் காய்ப்பதில்லை. நான் இதை வெட்டிவிடப் போகிறேன்! “
மறுநாள் காலை எழுந்த ஜே.கே, அந்த மரத்தின் அருகில் போய் நின்றார். தடவிக்கொடுத்தார். அந்த மரம் வெட்டப்படுவதை அவர் விரும்பவில்லை. அந்த மரத்துடன் பேசினார்.
“நீ அழகான மரம். நல்ல வயது. காய்க்க வேண்டாமா? பூக்க வேண்டாமா? நீ பூத்து மலரைக் கொடு; காய்த்துக் கனியாகு! ” என்று பேசி அன்புடன் தடவிக் கொடுத்தார். அந்த ஆண்டு முதன்முறையாக அந்த மரம் அமோகமாகக் காய்த்தது.
தோல்வி வரும்; உண்மைதான். ஆனால், அதை அன்புடன் அணுகுங்கள்; பேசுங்கள். வெற்றி வார்த்தைகளை பயன்படுத்துங்கள். உறவாடுங்கள். உடலிலே நோய் ஏற்பட்டாலும் சரி; சூழ்நிலை மோசமாக இருந்தாலும் சரி.
இந்த உலகில் எதுவுமே நிரந்தரமல்ல; தோல்வியும் நிரந்தரமல்ல.
எந்த கஷ்டம் வந்தாலும் சரி, அடுத்து என்ன செய்யலாம் என்று அமைதியாக யோசித்தோமானால் தெளிவு தென்படும், ஒரு யோசனை தோன்றும். அமைதியாய் இருங்கள், பொறுமையை கடைப்பிடிப்பது நல்லது.
உங்கள் மனம் மீண்டும் லட்சியத்தில் மிதக்கும். தன்னம்பிக்கையால் பூரிப்படையும்; தைரியத்தால் வலுப்பெறும்.
முயற்சிக்கு ஈடாக தன்னம்பிக்கை தரும் மருந்து வேறு ஏதும் இல்லை. கொஞ்சம் வாழ்க்கைக் கதவைத் தள்ளிப் பாருங்கள்! அது திறந்துதானிருக்கிறது. தன்னம்பிக்கையற்றவர்கள் முக்கியமான ஒன்றை மறந்து விடுகின்றனர். அது, ” வாழ்க்கை ஒரு வாய்ப்பு ” என்பது. நம்மை இவ்வுலகில் வாழுமாறு, வாழ்வை ரசிக்குமாறு, அனுபவிக்குமாறு காலத்தை நமக்குக் கடன் கொடுத்திருக்கின்றனர்.
எம். எஸ். உதயமூர்த்தி எழுதிய “உன்னால் முடியும்” கட்டுரையிலிருந்து