அல்லாஹ் அல்லாதவற்றின் மீது சத்தியம் செய்வது கூடாது
அல்லாஹ் தன்னுடைய படைப்பினங்களில் தான் நாடியதைக் கொண்டு சத்தியம் செய்கிறான். ஆனால் மனிதர்களைப் பொருத்தவரையில் அல்லாஹ்வை விடுத்து மற்றவற்றைக் கொண்டு சத்தியம் செய்வது கூடாது. என்றாலும் பெரும்பாலான மக்களுடைய பேச்சுகளில் அல்லாஹ் அல்லாததைக் கொண்டு சத்தியம் செய்யும் வழக்கம் இருந்து வருகின்றது. எந்த மகத்துவம் அல்லாஹ்வுக்கே தவிர வேறு எவருக்கும் பொருந்தாதோ அத்தகைய மகத்துவம் சத்தியத்தில் உள்ளது.
இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்; ‘அறிந்து கொள்ளுங்கள். நீங்கள் உங்களுடைய தந்தையர் மீது சத்தியம் செய்வதை திண்ணமாக அல்லாஹ் தடை செய்திருக்கிறான். (உங்களில்) யாரேனும் சத்தியம் செய்வதாக இருந்தால் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்யட்டும். இல்லையென்றால் மௌனமாக இருக்கட்டும் என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்’ (நூல்: புகாரி).
இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு மேலும் அறிவிக்கிறார்கள்; ‘அல்லாஹ் அல்லாதவற்றின் மீது யார் சத்தியம் செய்கிறாரோ அவர் இணைவைத்து விட்டார் என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்’ (அஹ்மத்), ‘அடைக்கலப் பொருளின் மீது யார் சத்தியம் செய்கிறாரோ அவர் நம்மைச் சார்ந்தவரல்ல எனவும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்’ (அறிவிப்பவர்: புரைதா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: அபுதாவூத்)
எனவே கஃபா, அடைக்கலப் பொருள், உதவி, கண்ணியம், இன்னாருடைய பரகத், இன்னாருடைய வாழ்வு, நபியின் அந்தஸ்து, அவ்லியாக்களுடைய அந்தஸ்து, தாய், தந்தை, குழந்தைகள் இன்னும் இது போன்றவற்றின் மீது சத்தியம் செய்வது ஹராமாகும். யாரேனும் இவ்வாறு செய்து விட்டால் அதற்கான பரிகாரம் ஆதாரப்பூர்வமான நபிமொழியில் வந்துள்ளது போல ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ என்று கூறுவதாகும். ‘உங்களில் ஒருவர் சத்தியம் செய்யும் போது லாத், உஸ்ஸாவின் மீது சத்தியமாக (நமது நாடுகளில் முஹ்யுத்தீன் ஆண்டவர், ஷாஹுல் ஹமீது ஆண்டவர் மீது சத்தியமாக என்று கூறுவது போல) என்று கூறினால் அவர் ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ என்று கூறட்டும் என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்’ (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி).
இதே அடிப்படையில் இன்னும் பல ஹராமான, ஷிர்க்கான வார்த்தைகள் உள்ளன. சில முஸ்லிம்கள் அவற்றைக் கூறி வருகின்றனர். உதாரணமாக அல்லாஹ்வைக் கொண்டும் உன்னைக் கொண்டும் பாதுகாப்புத் தேடுகிறேன், அல்லாஹ்வின் மீது உன் மீதும் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்துள்ளேன், இது அல்லாஹ்வினாலும் உன்னாலும் தான் கிடைத்தது, அல்லாஹ்வையும் உன்னையும் தவிர எனக்கு வேறு யார் இருக்கிறார், எனக்காக வானத்தில் அல்லாஹ்வும் பூமியில் நீயும் இருக்கிறாய், அல்லாஹ்வும் இன்னாரும் இல்லையென்றால் இஸ்லாத்திற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, காலத்தின் கோலமே! – இன்னும் இதுபோன்ற காலத்தைத் திட்டும்படியான வாசகங்கள்.
உதாரணமாக கெட்டகாலம், நேரம் கெட்ட நேரம், காலத்தின் சூழ்ச்சி போன்ற வாசகங்கள். ஏனெனில் காலத்தைத் திட்டுவது அதனை படைத்த இறைவனைத் திட்டுவது போலாகும் – இயற்கையின் நாட்டம், படைப்பினங்களின் பெயருடன் ‘அப்து’ என்ற வார்த்தையைச் சேர்த்துக் கூறப்பட்ட பெயர்கள் – உதாரணமாக அப்துல் மஸீஹ், அப்துன் நபி, அப்துர் ரஸூல், அப்துல் ஹுஸைன். (அப்து என்பதன் பொருள் அடிமை ஆகும். அப்து என்பதை அல்லாஹ்வின் பெயர்களுடன் மட்டுமே சேர்க்க வேண்டும்.)
இதுபோல தவ்ஹீதுக்கு எதிரான நவீன சில வாசகங்களும், சொல் வழக்குகளும் உள்ளன. இஸ்லாமிய சோஸலிஸம், இஸ்லாமிய ஜனநாயகம், மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு, மதம் இறைவனுக்குரியது நாடு மக்களுக்கு உரியது, மொழி, இனவாதம், புரட்சி வாதம்.
மலிகுல் முலூக் (அரசர்களுக்கெல்லாம் அரசர்), காழியுல் குழாத் (நீதிபதிகளுக்கெல்லாம் நீதிபதி) என்ற வார்த்தைகளையும் இந்த அர்த்தத்திலுள்ள வார்த்தைகளையும் ஒரு மனிதருக்குச் சொல்வதும், அதுபோல ஸய்யித் (தலைவர், எஜமான்) என்ற வார்த்தையையும் அதே அர்த்தத்திலுள்ள வேறு வார்த்தைகளையும் – அது எந்த மொழியிலிருந்தாலும் சரி நயவஞ்சகனுக்கும் காஃபிருக்கும் சொல்வதும், இப்படியாகி விட்டதே! அப்படியாகி விட்டதே! இப்படி இருந்திருக்கக் கூடாதா! அப்படி இருந்திருக்கக் கூடாதா! இவ்வாறு இருந்திருந்தால், அப்படி இருந்திருந்தால், இப்படி நடந்திருந்தால், அப்படி நடந்திருந்தால் என்பன போன்ற அதிருப்தி, வருத்தம், கை சேதம் போன்ற அர்த்தங்களைத் தரக்கூடிய – ஷைத்தானிய செயலுக்கு வழி திறந்து விடக்கூடிய வார்த்தைகளைப் பயன்படுத்துவதும், இறைவா! நீ விரும்பினால் என்னை மன்னிப்பாயாக! என்று கூறுவதும் விலக்கப்பட்டவையாகும்.
இறைவனின் சத்தியம்
இறைவன் தன் சிருஷ்டிகளைக் கொண்டு ஏன் சத்தியம் செய்ய வேண்டும்?
அல்லாஹ் தன் சிருஷ்டிகளில் விரும்பியவற்றைக் கொண்டு மனிதர்களிடம் சத்தியம் செய்கிறான். மனிதர்களைப் பொறுத்தவரை சிருஷ்டிகளைக் கொண்டு மற்றொரு சிருஷ்டியிடம் அனுமதிக்கப்படாதது போல அவற்றைக் கொண்டு இறைவனிடத்திலும் சத்தியம் செய்வதில் ஷிர்க் நுழைந்து விடுகிறது. அல்லாஹ் தன் சிருஷ்டிகளைப் பாராட்டி அவற்றின் கௌரவத்தையும், அமைப்பையும், அவற்றைப் படைத்தல் இலேசான காரியமல்ல என்பவற்றையெல்லாம் எடுத்துக் கூறி அதன் காரணத்தினால் தன் ஏகத்துவத்தை உறுதிப் படுத்துகிறான். இவையனைத்தையும் ஏகத்துவத்தின் அத்தாட்சிகள் என்று தெரிவிப்பதற்காகவும் அவற்றைக் கொண்டு இறைவன் சத்தியம் செய்கிறான்.
ஆனால் மனிதன் சிருஷ்டியைக் கொண்டு சத்தியம் செய்யும்போது தன் தேவைகள் நிறைவேறுவதை மட்டும் இலட்சியமாகக் கொள்கிறான். பிறர் தன் சொற்களை மெய்ப்பிப்பதற்காக வேண்டி, அல்லது சாதாரண ஒரு பிரச்சினைக்குத் தீர்வு காண சிருஷ்டிகளைக் கொண்டு சத்தியம் செய்கிறான். இவ்விரு சத்தியங்களுக்கு மத்தியிலும் நீண்ட வேறுபாடுகள் உண்டு. எனவே தேவைகள் கிடைப்பதற்கு தன்னைப் படைத்த அல்லாஹ்விடம் அவனைக் கொண்டே கேட்பதுபோல படைப்பினங்களிடமும் அந்த அல்லாஹ்வைக் கொண்டு சத்தியம் செய்ய வேண்டும்.
ஒருவன் மற்றவனிடம் ‘இன்னதைக் கொண்டு சத்தியமாகக் கேட்கிறேன்’ என்று கூறினால் இக்கூற்று தவறாகும். இங்கே சத்தியம் செய்தவன் மீது (கஃப்பாரா) குற்றப்பரிகாரம் கடமையாகிறது. ஆனால் யார்மீது ஆணையிடப்பட்டதோ அவருக்கு குற்றமொன்றும் இல்லை என்று ‘அஇம்மத்துல் புகஹா’ என்னும் மார்க்க அறிஞர்கள் கூறியிருக்கின்றனர். ஒருவன் மற்றவனிடம் ‘இன்னாரைக் கொண்டு கேட்கிறேன்’ என்று கூறினால் இங்கு யார் மீதும் குற்றப்பரிகாரம் கடமையாகாது. இதிலிருந்து அல்லாஹ்விடத்தில் அவன் படைப்புகளைக் கொண்டு சத்தியம் செய்து கேட்டல் ஜாயிஸாகாது என்றும் தெளிவாகிறது. சத்தியம் செய்யாமல் படைப்புகளின் பொருட்டால் இறைவனிடம் வேண்டுவதினுடைய சட்டங்கள் பற்றி முன்னரே கூறப்பட்டு விட்டது.
ஒருவன் ‘அல்லாஹ்வின் மீது ஆணையாக இன்னதை நான் செய்வேன்’ என்றால் இங்கேயும் யாரும் கஃப்பாரா (குற்றப்பரிகாரம்) கொடுக்க வேண்டாம். மேலும் ஒருவன் ‘இறைவன் மீது சத்தியமாக நீ இதைச் செய்ய வேண்டும்’ என்று கூறிவிட்டு சத்தியத்திற்கொப்ப சத்தியம் செய்யப்பட்டவன் செயல்படவில்லையானால் இங்கே சத்தியம் செய்பவன் மீது குற்றப்பரிகாரம் கடமையாகும். எவர் பிரார்த்தனையின் வாக்கியத்தைக் கொண்டு கேட்கிறாரோ அவர் பிரார்த்தித்தவனுக்கு ஒப்பாகிறார்.
ஆனால் கீழ்வருவதற்கொப்ப அல்லாஹ்வின் மீது ஒருவன் சத்தியம் செய்வானென்றால், உதாரணமாக ‘இரட்சகனே! நிச்சயமாக நீ இதை எனக்குச் செய்துதர வேண்டுமென்று உன்மீது சத்தியம் செய்கிறேன்’ இம்மாதிரியான சத்தியங்கள் அனுமதிக்கப்படும். இவை அல்லாஹ்வைக் கொண்டு அவன் மீது ஆணையிடுதல் என்னும் தன்மையிலுள்ள சத்தியமே தவிர சிருஷ்டிகளைக் கொண்டு அல்லாஹ்விடம் சத்தியம் செய்யும் தன்மையில் உள்ளதல்ல. ஸலஃபுஸ்ஸாலிஹீன்களைச் சார்ந்த பராஃ இப்னு மாலிக்கும், மற்றவர்களும் இப்படி அல்லாஹ்வைக் கொண்டு அவன் மீதே சத்தியம் செய்து பிரார்த்தித்து இருக்கிறார்கள்.
மேலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக ‘இரண்டு பழைய துணிகள் அணிந்து தலைமுடிகள் சிதறி தூசுகள் படிந்து வாசல்களில் சென்றால் துரத்தப்படுகின்ற எத்தனை எத்தனையோ மனிதர்கள் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டால் அவர்களுக்கு அல்லாஹ் நிறைவேற்றிக் கொடுப்பான்’ என்று ஒரு ஸஹீஹான ஹதீஸில் வருகிறது.
மேலும் ஒரு ஹதீஸில் நபியவர்களை நோக்கி அனஸ் பின் நள்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ‘நாயகமே! உண்மையாக தங்களை நபியாக அனுப்பி வைத்த அல்லாஹ்வின் மீது ஆணையாக, அர்ருபைபுடைய முன்பல் உடைக்காமலிருக்கட்டும்’ என்று. இப்படிச் சத்தியம் செய்து வேண்டிக் கொண்டபோது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ‘அனஸே, பழிக்குப்பழி வாங்குவது இறைவனின் விதியாக இருக்கிறதே’ என்று. இதைக் கேட்டதும் மனிதர் அர்ருபைபை மன்னித்து விட்டார்கள். இதைக் கண்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘அல்லாஹ்வின் அடியார்களில் சிலர் அவன் மீது ஆணையிட்டால் அவன் அதற்கொப்ப நிறைவேற்றிக் கொடுப்பான்’ என்று கூறினார்கள். இவையனைத்தும் அல்லாஹ்விடத்தில் அவனைக் கொண்டு சத்தியம் செய்தலாகும். மாறாக படைப்புகளைக் கொண்டு அவனிடத்தில் சத்தியம் செய்வதல்ல.
ஆக்கம்: ஜாஃபர் அலீ
நன்றி: இஸ்லாம் குரல்