0 ஹளரத் அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்: அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள், ‘எவருக்கேனும் துன்பம் நேரிட்டால் அவர் ஒருபோதும் மரணத்தை ஆசிக்க வேண்டாம். ஆனால், நிர்பந்தமான சூழ்நிலையில் பின்வருமாறு துஆ செய்யலாம். ‘யா அல்லாஹ்! இவ்வுலக வாழ்க்கை எனக்கு நன்மை அளிக்கும் வரை என்னை வாழச்செய். மரணம் எனக்கு நன்மை எனில் என்னை மரணிக்கச்செய்!’
0 ஹளரத் அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்: அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளினார்கள், ‘மரணத்தை வேண்டி துஆ செய்யவும் வேண்டாம். ஏனெனில் எவரொருவர் மரணமடைகிறாரோ (அதே சமயம்) அவருடைய செயல்களும் முடிந்து விடுகின்றன. முஃமினான அடியாருக்கு எந்த அளவு நீண்ட ஆயுள் கிடைக்குமோ அதே அளவு நற்செயல்களை அதிகமாகச் செய்வார்.’
0 ஹளரத் ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்: அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளினார்கள், ‘மரணத்தை நீங்கள் ஆசிக்காதீர்கள். ஏனெனில் மறுமை நாளின் நிலவரம் (அமளி) மிகவும் கடுமையானதாகும். மேலும் நற்பாக்கிவானின் அடையாளம் நீண்ட ஆயுளும், தவ்பா செய்ய – மன்னிப்புக் கேட்க தவ்ஃபீக்கும் கிடைக்கப் பெறுவதாகும்.’
0 ஹளரத் கைஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்: ‘நாங்கள் நபித்தோழர் கப்பாப் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை சந்திப்பதற்காகச் சென்றோம். அப்போது அவர்கள் உடல்நலம் குன்றியிருந்தார்கள். நோயின் காரணத்தினால் தமது மேனியில் ஏழு இடங்களில் (சிகிச்சைக்காக) சூடு போட்டிருந்தார்கள். அச்சயமயம் கப்பாப் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘மரணத்தை விட்டும் தடுத்திருக்காவிட்டால் நான் மரணத்தை வேண்டி துஆ செய்வேன்’ என்று கூறினார்கள்.
0 ஹளரத் உம்மு ஃபள்ல் ரளியல்லாஹு அன்ஹா அறிவிக்கிறார்கள்: ‘ஹளரத் அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் உடல்நலம் குன்றியிருந்தார்கள். அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம் தோழர்களுடன் ஹளரத் அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் நலம் விசாரிப்பதற்காக சென்றிருந்தார்கள். அச்சமயம் அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் மரணத்தை வேண்டலானார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘சிறிய தந்தையே! மரணத்தை ஆசிக்காதீர்கள். நீங்கள் நல்லவராக இருந்து நீண்ட ஆயுளையும் பெற்று அதிகமாக நற்செயல்களை புரிந்தீர்களாயின் அது உங்களுக்கு மிகச் சிறந்ததாகும். நீங்கள் தீயவராக இருந்து நீண்ட ஆயுளைப்பெற்று, பாவத்திலிருந்து தவ்பா செய்வதால் உங்களுக்கு இதுவும் மிகச்சிறந்ததாகும். ஆகவே மரணத்தை ஆசிக்க வேண்டாம்’ என்று கூறினார்கள்.