ஜும்ஆ குத்பா உயிரோட்டமுள்ளதாகட்டும்!
பெரும்பாலான ஊர்களில் ஜும்ஆ குத்பாவை கிதாபை பார்த்து படிக்கின்றனர். அந்த காலத்தில் ஓரளவு மார்க்கக்கல்வி கற்றவர்கள்தான் மஸ்ஜிதுகளில் இமாமாக இருந்தனர். அத்தகையோருக்காக குத்பா கிதாப் இயற்றப்பட்டன. ஆனால், இன்றைக்கு அப்படிப்பட்ட நிலைமை இல்லை. பெரும்பாலான மஸ்ஜிதுகளில் மவ்லவிகள்தான் இமாமாகப் பணியாற்றுகின்றனர்.
இதில் வினோதம் என்னவென்றால் அவர்களில் சுயமாக அரபிகுத்பா நிகழ்த்துவதற்கு ஆற்றல் உள்ளவர்கள் கூட கிதாபைப்பார்த்து குத்பா ஓதுகின்றனர். பிரபலமான சில மதரஸாக்கள், ஜாமியாக்கள் போன்றவற்றின் முதல்வர்கள், பேராசிரியர்கள்கூட கிதாபைப்பார்த்து ஓதும் நிலைமை இன்னும் இருக்கிறது.
ஒருசில இமாம்கள் சுயமாக அரபிகுத்பா உரையாற்றுவது கேட்க இனிமயாக இருப்பதோடு, மொழி புரியாவிட்டாலும் அனைவரது கவனத்தையும் ஈர்த்திடும் வகையில் அமைகிறது. எனவே, மற்ற இமாம் பெருமக்களும் இந்த முறையைப் பின்பற்ற முயலவேண்டும். குத்பா தொகுப்பின் உரைகள் நீண்டதாக இருப்பதால் குத்பா முடிய அதிக நேரம் ஆகிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பு ஜும்ஆ குத்பாவில் தமிழ் பயான் கிடையாது. அரபிகுத்பா மட்டுமே நடைமுறையில் இருந்து வந்ததால் தொழுகை சீக்கிரம் முடிந்து விடும். இன்றைக்கு தமிழ் மற்றும் உருது பயானுக்காக அரைமணி முதல் முக்கால்மணி நேரம் வரை எடுத்துக் கொள்ளப்படுகிறது. பிறகு அரபி குத்பா, தொழுகை, துஆ எல்லாம் முடிவதற்கு அதிகமான நேரம் ஆகிவிடுகிறது.
தொழவரக்கூடியவர்களில் அலுவலகம் செல்வோர், வேலைக்குப் போவோர், பியாணத்தில் இருப்போர், உடல்நலம் பாதிக்கப்பட்டோர், வயது முதிர்ந்தோர், பிணியாளர் – வாய்வுத் தொல்லைக்கு ஆட்பட்டோர் என பல நிலையுடையோர் இருப்பர். எனவே ஜும்ஆ தொழுகையை விரைவாக முடிக்காவிட்டாலும் தாமதமாக முடிக்காமல் இருக்க ஆவன செய்ய வேண்டும்.
கிதாபைப் பார்த்து குத்பா உரை நிகழ்த்தும் பழக்கம் நடைமுறையில் இருந்து வருவதால் என்ன விளைவு ஏற்பட்டு இருக்கிறது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு இதோ:
ஒரு ஊரில் புதிதாக உருவாக்கப்பட்ட ஒரு பள்ளிவாசலில், முதலில் இருந்த இமாம் ஜும்ஆ குத்பாவை கிதாபைப் பார்த்து படித்து வந்தார். அவர் பணியில் இருந்து நின்றுவிட்ட பிறகு புதிதாக வந்த இமாம், சுயமாக அரபியில் குத்பா உரை நிகழ்த்தினார். ஜமாஅத்தார்களில் சிலர், ‘ஹஜ்ரத்! குத்பாவை கிதாபைப் பார்த்துத்தான் ஓதவேண்டும். முன்பிருந்த இமாம்கள் எல்லாம் அவ்வாறு தான் செய்தனர்’ என்று, ஏதோ இந்த இமாம் தவறு செய்துவிட்டதைப் போன்று பேசலாயினர். இமாம் என்ன செய்வார்? ‘நானும் அப்படியே செய்கிறேன்’ என்று அடுத்த ஜும்ஆவிலிருந்து கிதாபை கையிலெடுத்துக் கொண்டார்.
இப்படித்தான் சில அவசியமில்லாத காரியங்களையும், சம்பிரதாயங்களையும் நம்மவர்கள் வழமையாகச் செய்து வருவதால், பாமரமக்கள் அவைகளை சுன்னத் என்றும் வாஜிபான காரியம் என்றும் விளங்கிக் கொள்கின்றனர்.
நன்றி: மனாருல் ஹுதா, ஆகஸ்ட், 1999.