“அந்த நோட்டில் என் பெயர் இருக்கிறதா?”
( சிந்திக்க வைத்த வாழ்க்கையை பற்றிய கதை )
அவள், ஒரு நடுத்தர வயது பெண்மணி. அமெரிக்காவில் வழக்கறிஞராக பணிபுரிகிறார். கம்பீரமான நடை, உடை, பாவனை. கையிலே ஒரு தோல் பை. வேகமாக முன்னுக்கு வந்து கொண்டிருக்கும் பெண்மணி, எடுப்பான முகம் அதிகாரமும், தெளிவும், உரிமையும் அவளை சுற்றி காற்றில் மிதப்பது போல் இருந்தது. காரிலிருந்து இறங்கினாள்; வீட்டுக்குள் வந்தாள். அவளது ஆறு வயது மகன், அம்மாவைக் கண்டு ஓடி வந்து கட்டி அணைத்துக் கொண்டான்.
“சாப்பிட்டாயா? பள்ளிக் கூடம் நன்றாக போயிற்றா?” என்று விசாரித்தாள். சோபாவில் உட்கார்ந்தாள். டெலிபோனை தன் பக்கத்திற்கு நகர்த்தி வைத்துக் கொண்டாள். தன் தோல் பையிலிருந்து டெலிபோன் விலாச நோட்டை எடுத்தாள். டெலிபோனை சுழற்றினாள், தலைமயிரைத் தள்ளியவாறு நிமிர்ந்து உட்கார்ந்தாள்.
o ”அம்மா!” என்றான் குழந்தை. “அம்மா போன் செய்யப் போகிறேன். நீ மாடிக்குப் போய் விளையாடு!” அம்மாவின் கட்டளை. பதில் பேசவில்லை பையன். மாடிப்படியில் பேசாமல் ஏறிக் கொண்டிருந்தான். திடீரென்று அவனுக்கு ஒரு யோசனை, ஒரு சந்தேகம், ஒரு ஆசை! “அம்மா! அந்தப் புத்தகத்தில் என்ன இருக்கிறது?” என்றான்.
o முக்கியமானவர்களின் விலாசம், பெயர் எல்லாம் இருக்கிறது. நான் இப்போது சிலருடன் பேச வேண்டும்!” என்றாள் அம்மா. “அந்த நோட்டில் என் பெயர் இருக்கிறதா?” என்று கேட்டான் தயங்கியபடி. இந்த சம்பவத்தைப் படித்த நான், அப்படியே ஸ்தம்பித்து விட்டேன் ஒரு கணம். “என்ன வாழ்க்கை இது? எதற்காக வாழ்கிறோம்?” என்ற கேள்வி மனதில். அத்துடன் அந்த பையனின் சோக முகமும் அங்கே தெரிந்தது!
o ”வேலைக்காக வாழ்கிறோமா அல்லது வாழ்வதற்காக வேலை செய்கிறோமா?” என்றொரு கேள்வி. வாழ்க்கை ஒரே ஓட்டம், ஒரே நெருக்கடி, போட்டி நிறைந்த உலகம்! “எனக்கு நேரமில்லை…” என்ற புலம்பல். “ஏன் ஓடுகிறேன் இப்படி?”
பிறர் என்னைப் பார்க்கும் போது, என் காரையும், வீட்டையும், என் தோல்பையையும், என் பேங்க் பேலன்சையும் பார்த்து அவர்கள் பிரமிக்க வேண்டும். இப்படி ஒரு ஆசை. இது என் ஜீவதாகம்; என் ஆசையும் இதுதான். என் ஆசையின் பின்னால் நான் ஓடுகிறேன்!
இந்த ஊரும், உலகமும் என்னை ஆசைகளால் முடுக்கி விட்டிருக்கிறது; ஓடுகிறேன்!
என் பையைப் பார்க்கிறேன். என் பேனா. எழுத ஒரு சாதாரண பேனா போதாதா? என் பையில் இருப்பது ஐரோப்பாவில் தயாரிக்கப்பட்ட மாண்ட் பிளாங்க்! வாழ்வில் இவையெல்லாம் தேவையா?
“இவை எல்லாம் அத்தியாவசியமா?”
கேள்வி மேல் கேள்விகள். “யாருமில்லை சாட்சியாக. மனமே கேள்வியாக!” என்ற கவிதை வரிகள் நினைவுக்கு வருகிறது. இதுதானா வாழ்க்கை?
சில நாட்களுக்கு முன் நான் சென்ற காந்திஜியின் அருங்காட்சியகம் என் கண்முன் சினிமா போல திடீரென ஓடியது.
என் எல்லைகளைப் பற்றி எனக்கு ஒரு திட்டம் உண்டா அல்லது அவ்வப்போது மனதில் பட்டதை வைத்து வாழ்வை ஓட்டிக் கொண்டிருக்கிறேனா? வருமானம் வாழ்வின் முக்கிய தேவைதான். ஆனால், அதுவே எல்லாம் அல்ல…
நம் வாழ்வில் நாம் பெருமைப்படும்படி செய்யும் சிறு, சிறு சாதனைகளில், உலகைப் புரிந்து கொள்வதில் ஊருக்கு உதவுவதில், மனித உறவில், அந்த மகிழ்ச்சியில் வாழ்க்கை நெறிகளில் தான் நமது நிரந்தர மகிழ்ச்சி இருக்கிறது. வருமானம் குறைவாக இருக்கும் போதும், அது போதுமானதாக இருக்கும் போதும், நாம் மகிழ்ச்சி கொள்ள வேண்டும்.
சம்பளம் இல்லாமல், நம் குடும்பத்தின் மனைவி என்ற ஒரு பெண் நம்மை நம்பி தன் வாழ்க்கையை நமக்காக அர்ப்பணித்திருக்கிறாள். தெய்வீக அன்புடன், நம் குழந்தைகள் என்ற அவர்களின் எதிர்காலம் பற்றிய கற்பனை, அதற்கான முயற்சி வாழ்வில் தான் எத்தனை, எத்தனை சந்தோஷங்கள், ஆனந்தங்கள் இருக்கின்றன.