இஸ்லாத்தில் கட்டாயத் திருமணம் இல்லை!
அதிரை ஜமீல்
உலகம் முழுதும் வாழும் உயிரினங்களில் மனிதர்கள் மட்டுமே திருமணம் செய்து கொண்டு ஆணும் பெண்ணும் இணைந்து இல்லறம் நடத்துகின்றனர். அந்த ‘மனிதச் சடங்கு’ நமக்கெதற்கு என்ற போக்கில், தளை அறுத்த சில நவ நாகரீக மேற்கத்தியர்களும் எல்லாவற்றிலும் மேற்குப் பார்த்துப் பின்பற்றி ஒழுகும் சில ஆசியரும் அண்மைக் காலமாக, “திருமணம் என்பது தனிமனித சுதந்திரத்துக்குத் தளை” என்பதாகக் ‘கண்டு பிடித்து’ அதைப் பின்பற்றிப் ‘புரட்சி’யும் செய்து வருகின்றனர்.
மற்றும் சிலர் திருமணம் என்பது பெண்களின் மீதான அடக்குமுறைக்கு அடித்தளம் இடும் சமூகக் கட்டுப்பாடு என பெண்ணீயப் புரட்சியும் செய்கின்றனர்.
மனிதர்களிடையே பல்வேறு சமூகங்களில் நடத்தப்படும் திருமணங்களிலும் திருமணத்திற்குப் பின்னர் குடும்ப வாழ்வில் கடைபிடிக்கப்படும் பழக்கவழக்கங்களிலும் உள்ள தீமைகள் இவர்களின் கண்களைக் கட்டுகிறது. ஆனால் அத்தகையத் தீமைகள் எதுவும் இஸ்லாம் நடத்த விரும்பும் திருமணங்களில் நிழகச் சாத்தியங்கள் இல்லை என்பதுதான் உண்மை. முக்கியமாக இஸ்லாம், திருமணம் என்ற சமூகக் கட்டுப்பாட்டில் நுழைபவர்களுக்கான சட்டதிட்டங்களில் பெண்களை மிகுந்த கவனத்துடன் பாதுகாக்கிறது.
அதனை அறிந்துக் கொள்ள, இஸ்லாமியத் திருமணத்தில் மணமகளின் உரிமை நிலைப்பாடு என்ன என்பதைத் தெரிந்துக் கொள்வது கட்டாயமாகும்.விதிகளை ஒருகை விரல்களுக்குள் அடக்கி விடுமளவுக்கு எளிமையான இஸ்லாமியத் திருமணம் ‘விதிகளாக’ மட்டுமிருக்க, பெரும்பாலான முஸ்லிம்கள் நடத்துகின்ற திருமணங்கள், ‘இஸ்லாமியத் திருமண’ங்களிலிருந்து எவ்வளவு தூரம் விலகிப் போய் விட்டன என்பதைக் கண்கூடாகக் காணுகின்ற அவல நிலை, அங்கொன்றும் இங்கொன்றும் என்றில்லாமல் எங்கெங்கும் அண்மைக் காலம்வரை பரவிக் கிடந்தது.
அல்லாஹ்வின் பேரருளால் தமிழகத்தில் இப்போது அப்பரவல் ஓரளவு அருகி வருவது மகிழ்வுக்குரியதாம்; அல்ஹம்து லில்லாஹ்!இஸ்லாமியத் திருமணத்தின் நான்கு விதிகளுள் மணமக்களின் விருப்பத்தை அறிவதும் ஒப்புதல் பெறுவதும் தலையாய ஒன்றாகும். ஆனால், பெரும்பாலும் மணமக்களின் – குறிப்பாக – மணமகளின் விருப்பத்தை அறிந்து கொள்வதோ அவளின் ஒப்புதலைப் பெறுவதோ தேவையில்லாதது என்ற ஆதிக்கச் சிந்தனை, பெரும்பாலான முஸ்லிம் பெற்றோரிடம் இன்னும் வழக்கிலிருக்கிறது.
“கன்னி(வயது)கழிந்த பெண்ணை அவளுடைய (வெளிப்படையான) ஒப்புதல் பெறாமல் மணமுடித்துக் கொடுக்கக் கூடாது …” என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உத்தரவிட்டார்கள். (அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, பதிவு : புகாரி 4741)
திருமணத்திற்குப் பின் குடும்பங்களில் நடக்கும் – முக்கியமாகப் பெண்களின் மீது நடத்தப்படும் – கொடுமைகளில் கணவர்களின் துணை இருப்பதற்கான காரணங்களில் தலையாயது, திருமணத்திற்கு முன்னர் மணமகனைக் குறித்து மணமகளிடமும் மணமகளைக் குறித்து மணமகனிடமும் முழுமையான விபரங்கள் தெரிவிக்கப் படாமல், அவ்விருவரின் விருப்பம் அறிந்து கொள்ளாமலேயே கட்டிவைக்கப்படும் திருமணங்களினால் ஆகும் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
ஆனால், தனக்கு வரவிருக்கும் வாழ்க்கைத் துணைவனைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கும் அவனைத் தேர்வு செய்வதற்கும் ஒரு முஸ்லிம் பெண்ணுக்கு முழுச் சுதந்திரத்தையும் முற்றான உரிமையையும் இஸ்லாம் வழங்குகிறது.
“கன்னி(வயது) கழிந்த ஒரு பெண்ணின் திருமணத்திற்கு ஒப்புதல் வழங்குவதற்கு அவளின் குடும்பப் பொறுப்பாளரைவிட அவளே அதிக உரிமையுடையவள் ஆவாள் …” என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரையறுத்தார்கள். (அறிவிப்பாளர்: இபுனு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, பதிவு: முஸ்லிம் : 2545).
தன் மகள் பூப்பெய்திய அடுத்த மாதமே திருமணம் நடத்திவிடத் துடிக்கும் பெரும்பாலான பெற்றோர், அவளுடைய மனவிருப்பத்தை அறிய முற்படுவதில்லை.
“சின்னப் பெண்; அவளுக்கு என்ன தெரியும்? நாமாகப் பார்த்து செய்து வைத்தால் சரிதான்” என்ற ‘பொறுப்பான’ பெற்றோர்தாம் முஸ்லிம் சமுதாயத்தில் பெரும்பான்மை வகிக்கின்றனர்.
“குடும்பத்தார் திருமணம் செய்து கொடுக்கும் கன்னிப் பெண்ணின் விருப்பத்தை அவர்கள் பெற வேண்டுமா, வேண்டாவா?” என்று அல்லாஹ்வின் தூதரிடம் நான் கேட்டபோது, “ஆம்; பெறத்தான் வேண்டும்” என்று கூறினார்கள்.”அவள் (வெளிப்படையாகக் கூறுவதற்கு) வெட்கப் படுவாளே!” என்று நான் திருப்பிக் கேட்டதற்கு, “அவ்வாறெனில், அவளுடைய மெளனத்தை விருப்பமாகக் கொள்ளலாம்” என்று அல்லாஹ்வின் தூதர் விளக்கினார்கள். (அறிவிப்பாளர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, பதிவு : முஸ்லிம் 2544).
பெண்களின் விருப்பத்தை அறியாமல், அவர்களின் ஒப்புதல் பெறாமல் நடந்தேறுகின்ற பலத் திருமணங்கள் அவர்தம் இல்வாழ்க்கையில் விரும்பத் தகாத பல விளைவுகளை ஏற்படுத்துகின்றன.
“கணவனைப் பிடிக்காததால் புதுமணப்பெண் தற்கொலை” போன்ற தலைப்புச் செய்திகளின் ஆணிவேர், கட்டாயத் திருமணம்தான் என்பது திண்ணம்.பிறமதக் கலாச்சாரத்தை ஒத்து, “கல்லானாலும் கணவன்; புல்லானாலும் புருஷன்” என்ற கட்டுப் பெட்டிகளாகத் தன் பெண்மக்களை இஸ்லாம் பொய்வாழ்க்கை வாழப் பணிக்கவில்லை.கன்னி(வயது)கழிந்த பெண்ணாயிருந்த என்னை என் தந்தை (ஒருவருக்கு) மணமுடித்து வைத்தார்.
எனக்கு அதில் விருப்பமில்லை. எனவே, நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சென்று முறையிட்டேன். அந்த(க் கட்டாய)த் திருமணத்தை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “செல்லாது” என்று அறிவித்தார்கள். (அறிவிப்பாளர்: கன்சா பின்த் கிதாம் ரளியல்லாஹு அன்ஹா, பதிவு : புகாரி 4743).
வரலாற்றின் பொன்னேடுகளில் பொறிக்கப் பட்டுள்ள அண்ணலாரின் மேற்கண்ட இந்த அறிவிப்பு, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குப் பிற்றைக் காலத்திலும் பின்பற்றப் பட்டது:ஜஅஃபரின் பேத்தி ஒருவர், தனக்கு விருப்பமில்லாத ஒருவருக்குத் தன்னை மணமுடித்துக் கொடுக்கத் தன் பொறுப்பாளர் முடிவெடுத்தபோது, தனக்கு (அந்தத் திருமணத்தில்) விருப்பமில்லை என்பதை ஊர்ப் பெரியவர்களும் அன்சாரிகளும் ஜாரியாவின் மகன்களுமான அப்துர் ரஹ்மான் மற்றும் முஜம்மிஉ ஆகிய இருவருக்கும் தூதனுப்பித் தெரிவித்தார்.
“(அல்லாஹ்வின் தூதரின் ஆட்சிக் காலத்தில்) கன்சாவின் விருப்பத்திற்கு மாற்றமாக அவளுடைய தந்தை கிதாம் முடித்து வைத்தத் திருமணத்தை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செல்லாது என அறிவிப்புச் செய்தார்கள். (அந்த முன்மாதிரியைப் பின்பற்றி நாங்கள் தீர்ப்பளிப்போம்) அஞ்ச வேண்டாம்” என்று அவ்விருவரும் கூறியனுப்பினர். (அறிவிப்பாளர்: சுஃப்யான் ரஹ்மதுல்லாஹி அலைஹி, பதிவு : புகாரி – 6454).”
கணவனைப் பிடிக்காததால் புதுப்பெண் தற்கொலை” என்ற செய்திகளும் “கணவனின் கொடுமையினால் இரு குழந்தையின் தாய் தீக்குளிப்பு” போன்ற செய்திகளும் விருப்பமில்லாத கணவர்களிடமிருந்து பிரிந்து வாழ்வதை, அவர்கள் சார்ந்திருக்கும் சமூகம் அனுமதிக்காததால் ஏற்படுகின்ற விளைவுகள் என்பதைச் சொல்லித் தெரியவேண்டியதில்லை.
ஆனால் இஸ்லாத்தைப் பொருத்தவரை தான் விரும்பாத ஒருவருக்கு மனைவியாக வாழ்வைத் தொடர முடியாது என்ற நிலையில், ஒரு முஸ்லிம் பெண் எப்போது வேண்டுமானாலும் தன் கணவரிடமிருந்து பிரிந்து விடலாம்.
அவளுடைய முடிவில் – ஆட்சியாளர் உட்பட – எவரும் தலையிட முடியாது என்பது இதில் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய பெண்ணுரிமையாகும்: முகீஸ் என்ற பெயருடைய ஓர் அடிமை பரீராவின் கணவராவார். (முகீஸிடமிருந்து பிரிந்துவிட பரீரா முடிவு செய்தபோது) தன் தாடியில் வழிந்தோடும் அளவுக்குக் கண்ணீர் உகுத்து அழுதவாறு பரீராவின் பின்னால் அவர் சுற்றிச் சுற்றி வந்தது இப்போதும் என் கண்முன் நிழலாடுகிறது.
அப்போது, “அப்பாஸே! பரீராவிடம் முகீஸுக்குள்ள பிரேமையும் முகீஸின் மீது பரீரா காட்டும் வெறுப்பும் உமக்கு வியப்பாயில்லை?” என்று (என் தந்தையிடம்) அல்லாஹ்வின் தூதர் வினவினார்கள்.(முகீஸிடமிருந்து பரீரா பிரிந்துவிட்ட போது) “நீ அவரிடம் மீண்டு சென்றாலென்ன?” என்று பரீராவுக்கு அல்லாஹ்வின் தூதர் அறிவுறுத்தினார்கள்.
“அல்லாஹ்வின் தூதரே! எனக்கு இதைக் கட்டளையாகக் கூறுகின்றீர்களா?” என்று பரீரா கேட்டார்.அதற்கு, “இல்லையில்லை; பரிந்துரைக்கிறேன்” என அல்லாஹ்வின் தூதர் கூறினார்கள்.”எனில், அவரிடம் எனக்குத் தேவை எதுவுமில்லை” என்பதாக பரீரா தன் முடிவை இறுதியாக்கினார். (அறிவிப்பாளர் : இபுனு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, பதிவு: புகாரி – 4875).
முஸ்லிம்கள் தங்களது உயிரினும் மேலாக மதிக்கும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அப்பொழுது மதீனாவில் ஆட்சியாளராகவும் இருந்தார்கள் என்பதை இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். தனக்கு விருப்பமில்லாத கணவனோடு வாழ்க்கையைத் தொடர்வதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே பரிந்துத்தாலும் அதை ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயயமில்லை என்ற அளவிற்கு இஸ்லாம் பெண்ணுக்கு உரிமை வழங்கியுள்ளது போல் மனிதர்களுக்கிடையில் வெறெந்தச் சமூகத்திலும் பெண்ணுரிமை பேணப்படவில்லை என அறுதியிட்டுக் கூறலாம்.
உலகத்திற்குத் தற்பொழுது மிகத் தேவையான பெண்ணுரிமைகள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மறைவுக்குப் பின் இஸ்லாமிய வரலாற்றில் பேணப்பட்டு வந்துள்ளன. இப்பொழுதும் நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாழ்ந்த அரபு நாடுகளில் இவ்வுரிமை எவ்விதக் குறைவுமின்றி நடைமுறையில் உள்ளதைக் காண்கிறோம்.
ஆனால் மாற்றுமதக் கலாச்சாரத்தைத் தன்னுள் அடக்கிய தமிழக முஸ்லிம்களில் பலர் இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியுள்ள அத்தகைய உரிமைகளில் எவ்வித கவனமும் இன்றிப் பல நூற்றாண்டுகள் பயணித்து விட்டனர்.
அதில் மகுடமாகக் கடந்த 18 பிப்ரவரி 2008 நாளில் ஊடகங்களில் வந்தத் தலைப்புச் செய்தி, இந்திய முஸ்லிம் பெண்களுக்கு அவர்தம் உரிமையை மீட்டெடுத்துக் கொடுப்பதாக அமைந்துள்ளது.செய்தி இது தான்: “கட்டாய திருமணத்தை முஸ்லிம் பெண்கள் செல்லாது என அறிவிக்கலாம் – இஸ்லாமிய அமைப்புகள் அறிவிப்பு!”. அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். காலம் கடந்தெனினும் இறைச் சட்டம் மக்களிடையே நடைமுறைபடுத்தப்படுவது சமூகத்தில் மிகப்பெரிய நன்மை விளைவிக்கும் என்பதில் ஐயமில்லை.
அவர்தம் வழியறியாப் பயணம் மாற்றம் பெற்று, சரியான திசையில் செல்லும் காலம் வந்து விட்டது.
source: adiraipost.blogspot.com/…/blog-post_6000.html