இறையோனின் பேரருளே!
திருவை அப்துர் ரஹ்மான்
ஒட்டியே வைத்ததுபோல் ஒரு கோடி முல்லை மலர்
கொட்டிக் கிடப்பதுபோல் கோலமிடும் வானத்தில்
வட்டில் நிறை சுடராம் வைரமணிக் கோளங்கள்
எட்டிப் பார்ப்பதெல்லாம் இறையோனின் பேரருளே!
மின்னும் பனிமுத்தில் மோகமெனும் வலைவீசி
பொன்னாய் ஒளிசிந்திப் போர்வீரன் போல வரும்;
கண்ணைக் கவர்ந்திழுக்கும் கதிரவனின் செங்கரங்கள்
மண்ணைப் படைத்தோனின் மாபெரிய பேரருளே!
மூன்றில் ஒருபகுதி முத்துவிளை கடல்சூழும்
தோன்றும் மீன்களினம் துள்ளிவிளை யாடிவரும்
நீந்தும் அலைக்கரங்கள் நிலம்பார்த்து நீண்டுவரும்
ஆன்றநற் சிறப்புடைய ஆண்டவனின் பேரருளே!
ஏரைப் பூட்டியவன் உழுதூன்றும் ஒருவித்து
பாரை மகிழ்விக்கப் பலநூறு கதிர்விளைக்கும்
சோறை யூட்டிடவே சுடுபசியை ஓட்டிடவே
நீரைப் படைத்தயிறை நிதங் காட்டும் பேரருளே!
பூவில் மணம் வைத்தான் போயமரும் வண்டுண்ண
நாவில் நீரூறும் நல்லசுவைத் தேன்வைத்தான்
ஆவில் பாலமைத்தான் அதில்நூறு பயன்வைத்தான்
காவில் கனிதந்தான் கருணையிறைப் பேரருளே!
கண்ணில் ஒளியமைத்தான் காட்சிபல கோடிவைத்தான்
பெண்ணின் கருவாழ்வில் பேசுமொழி உருசமைத்தான்
மண்ணில் மனிதகுலம் மாண்புடனே பயனடைய
எண்ணில் அற்புதங்கள் இறைதந்த பேரருளே!
பஞ்ச பூதங்களும் படைத்தவனின் பேரருளே
அஞ்சின் உறுப்புகளும் அவன் கருணைப் பேரருளே
செஞ்சொல் நாவன்மை தருமிறையின் பேரருளே
நெஞ்சின் நினைவுகளும் நேசனிறைப் பேரருளே!
நன்றி: முஸ்லிம் முரசு, மார்ச் 1987.