ஸைய்யது நிஜாமி ஷாஹ் நூரி பாகவி
வானம், பூமி அதற்கு இடையில் உள்ள அனைத்துப் பொருட்களின் இருப்பையும், இயக்கத்தையும் அதனைப் படைத்த அல்லாஹ்வே நிர்ணயித்துள்ளான். அதற்கொப்வே அவையனைத்தும் செயல்படுகின்றன. அதில் எவ்வித மாற்றமும் நிகழவில்லை.
சூரியன், சந்திரன் போன்ற கோலங்களின் இயக்கங்கள் ஒரே சீராக இருப்பதால்தான் குறிப்பிட்ட நேரத்தையும், மாதங்களையும், சீதோஷ்ண நிலைகளையும் நம்மால் நிர்ணயிக்க முடிகிறது. சூரிய சந்திர கிரகணங்களின் நிகழ்வுகள் பற்றி பல ஆண்டுகளுக்கு முன்பே கணித்துக் கூறவும் முடிகிறது.
தாது – தாவர வர்க்கங்களின் பெயர்களை சொன்ன மாத்திரத்தில் அன்று தொட்டு இன்று வரையில் அதன் இயல்புகள், தோற்றங்கள், நிறங்கள், ருசிகள், வாசனைகள் என அனைத்தும் அந்தப்பெயர்களுடன் சேர்ந்தே நம்மால் உணர முடிவதெற்கெல்லாம் ஒரே காரணம் அவைகளை என்ன நோக்கத்திற்காக அல்லாஹ் படைத்திருக்கிறானோ அதில் இம்மியளவுகூட மாற்றங்களை வெளிப்படுத்தாமல் அவை நின்றிலங்கிக் கொண்டிருக்கின்றன என்பதே ஆகும்.
ஆனால், ஆறறிவை அல்லாஹ்வினால் அருளப் பெற்றுள்ள மனிதன் மட்டும் தனது வாழ்வின் நோக்கம் உலகின் இன்பத்தை உச்சநிலையில் சுவைத்து உயிர்வாழ்வதுதான் என்று அவனே நிர்ணயித்துக் கொள்வதும், அதன்படி வாழ்ந்து மரிப்பது என்பதும் எப்படி சரியானதாக இருக்க முடியும்?
இவனது வாழ்வின் நோக்கத்தை நிரணயிக்கும் முழு உரிமை, படைப்பாளனாகிய அல்லாஹ் ஒருவனுக்கே சொந்தம். ஆகவே மனித வாழ்க்கையின் நோக்கத்தைப் பற்றி தனது வேதமான திருக்குரஆனில் கீழ்க்கண்டவாறு இரு கோணங்களில் அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.
‘அஃப ஹஸிப்தும் அன்னமா கலக்னாகும் அபஸா…’ – என்ன (மனிதர்களாகிய) உங்களை (எவ்வித நோக்கமும் நிர்ணயிக்கப்படாத நிலையில் உலகில் உயிர் வாழ்ந்து இதன் இன்பங்களை சுவைப்பதற்காக) வீணாக நாம் படைத்திருப்பதாக கருதிக் கொண்டிருக்கிறீர்களா? இறப்பிற்குப்பின் நம்மிடம் மீளக்கூடிய(வர்கள் என்ற உணர்வு அற்ற)வர்களாக (எண்ணிக்கொண்டு) இருக்கிறீர்களா?’ (அல்குர்ஆன் – 23:115) என்று அறிவுறுத்துகிறான். இதன் மூலம் ஏதோ ஒரு நோக்கத்துடனேயே மனித இனம் படைக்கப்பட்டிருப்பதை சொல்லாமல் சொல்லி அல்லாஹ் எச்சரிக்கிறான்.
மற்றோரிடத்தில் அந்நோக்கத்தை நேரடியாக தெளிவு படுத்தி கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறான். ”மனித-ஜின் (இனத்தை) நம்மை இபாதத் செய்வதற்காகவே அன்றி (வேறு எந்த நோக்கத்திற்காகவும்) படைக்கவில்லை.” (அல்குர்ஆன் – 51:56).
குறிப்பாக மனிதன் இறைவனின் இபாதத்திற்காகவே படைக்கப்பட்டிருக்கிறான் என்பதை இந்த இறைவசனம் மூலம் தெளிவாக்கியுள்ளான். அரபி இலக்கணப்படி ‘அபத’ என்ற மூன்று எழுத்து இதன் மூலக்கூறாகும். அகராதியில் ‘களஅ-த்ஜல்ல’ தன்னை தாழ்மைப்படுத்திக் கொள்வது மற்றும் ‘தாஅ’ அடிபணிவது ஆகிய அர்த்தங்கள் கூறப்பட்டுள்ளன. குர்ஆன் – ஹதீஸ் ஒளியில் ‘இபாதத்’ என்ற பதத்திற்கு ‘இன்கிஸார் – இஸ்திகாம்’ – ”இறைவனுக்கு முன்னால் தன்னை தாழ்மைப்படுத்திக் கொள்வது – தன்னை முழுமையாக அவனிடம் ஒப்படைத்துக் கொள்வது” என்ற விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
எனினும் இபாதத் எனும் பதத்திற்கு, தன்னை இறைவனுக்கு முன்னால் தாழ்மைப்படுத்திக் கொள்வது அவனிடம் சரணாகதியாகி தன்னை ஒப்படைத்து வாழ்வது என்ற தத்துவத்தை உணர்ந்து வாழ்ந்தால்தான் இஸ்லாம் கூறும் இபாதத்தை மேற்கொண்ட ஆபிதாக ஒரு மனிதன் ஆக முடியும். இவ்வித இபாதத்தை வாழ்வில் கடைப்பிடிப்பவனைத்தான் ‘ஆபித்’ என்று இறைமறையாம் திருக்குர்ஆன் கூறுகிறது.
‘வமன் அஹ்ஸனுதீனன் மிம்மன் அஸ்லம வஜ்ஹஹு லில்லாஹி வஹ{வ முஹ்ஸினுன்…’ – ”அல்லாஹ்விற்காக (அவனது சமூகத்தில்) தன்னை முழுமையாக சரணாகதியாக்கி முஹ்ஸினான நிலையில் (அல்லாஹ்வை பார்ப்பவனைப் போன்று அல்லது அவன் நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற உணர்வு உள்ளவனாக) அவனிடம் தன்னையே சமர்ப்பித்து (வாழ்ந்து) கொண்டிருப்பவனைவிட தீனால் மிக்க அழகானவர் யார் இருக்க முடியும்…” (அல்குர்ஆன் 4:125) என்ற அல்லாஹ்வின் அறிவிப்பின் மூலம் இதுவே தீனின் ஒப்பற்ற மிகமிக உயர்நிலை என்பது தெளிவாகிறது.
உள்ளத்தால் – உணர்வால் அல்லாஹ்வின் திருச்சமூகத்தில் நெருக்கத்தைப் பெருவது என்பது அல்லாஹ்வை அறிவது என்பதன் மூலம் மட்டுமே சாத்தியமாகும். இந்த உணர்வை பெற்றவரிலிருந்து வெளிப்படும் சொல்லால் – செயலால் ஆன இபாதத் என்னும் வணக்கங்கள்தான் உயிரோட்டமுள்ளதாக ஆகி இருக்கவும் முடியும் என்பது இந்த வசனத்தின் மூலம் அறியப்படும் அரிய கருத்தாகும். இந்த உணர்வைப்பெற பாலமாக அமையப் பெற்றிருப்பதுதான் அல்லாஹ்வைப் பற்றிய இறைஞான அறிவாகும். இந்த அறிவைப் பெற்று இபாதத் செய்வதற்காகவே மனித இனத்தை அல்லாஹ் படைத்திருக்கிறான் என்பது ஆணித்தரமான கருத்தாகும்.
இக்கருத்தை நாமாகக் கூறவில்லை.குர்ஆனின் வசனங்களுக்கான ஆழிய கருத்துக்களை விளக்கிக் கூறுவதில் மிக உயர்வான அந்தஸ்து பெற்றவர்களாக அக்கால ஸஹாபாப் பெருமக்களாலும், பிற்கால அறிஞர்களாலும் ஏகோபித்து ஏற்றுக் கொள்ளப்பட்ட அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களால் (இல்லாலி யஅபுதூனில் உள்ள) இபாதத் என்ற பதத்திற்கு (இல்லாலிய அரிஃபூன்) அல்லாஹ்வை அறிவதற்கே என்று பொருள் விளக்கம் தரப்பட்டுள்ளது. இதுவே பொருத்தமுள்ள தெள்ளத்தெளிவான பதப்பொருளாகும். ஏனெனில் இபாதத் என்பது சொல்லாலும் வெளிப்படும், செயலாலும் வெளிப்படும்.
இவ்வாறான இபாதத்தில் அனைத்துப் படைப்பினங்களும் அவையவைகள் தங்களின் நிலையில் இபாதத்தில் ஈடுபட்டு, செயல்பட்டுக் கொண்டே இருக்கின்றன. இதனை திருக்குர்ஆன் உறுதிப்படுத்துகிறது.
‘இம்மின் ஷைய்இன் இல்லா யுஸப்பிஹுபிஹம்திஹி…’ – ”ஏழு வானங்களும், பூமியும், அவற்றில் உள்ளவர்களும் அவனைத் இபாதத் செய்து கொண்டிருக்கின்றனர்; இன்னும் அவன் புகழைக் கொண்டு இபாதத் செய்தாத பொருள் (எதுவும்) இல்லை. எனினும் அவற்றின் இபாதத் செய்வதை நீங்கள் உணர்ந்து கொள்ளமாட்டீர்கள், நிச்சயமாக அவன் பொறுமையுடையவனாகவும், மிக மன்னிப்பவனாகவும் இருக்கின்றான்.” (அல்குர்ஆன் 17:44)
(நபியே!) நீர் பார்க்கவில்லையா? வானங்களிலும் பூமியிலும் உள்ளவையும், பறவைகள் (விண்ணில் தங்கள்) இறக்கைகளை விரித்(துப் பற்ந)த வண்ண்மாக நிச்சயமாக அல்லாஹ்வைத் தஸ்பீஹ{ செய்(து துதிக்)கின்றன் ஒவ்வொன்றும் தன் தொழுகையையும், (அல்லாஹ்வை) தஸ்பீஹு செய்யும் வழியையும் திட்டமாக அறிந்தே இருக்கிறது – அல்லாஹ்வும் அவை செய்பவற்றை நன்கறிந்திருக்கிறான். (அல்குர்ஆன் 24:41)
இதுபோன்ற வசனங்களில் மட்டுமல்ல, படைப்பினங்கள் அனைத்தும் ‘ருகூஉ’ செய்வதாகவும், ‘ஸஜ்தா’ செய்வதாகவும் பல்வேறு வசனங்களில் அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.
இவ்வாறான சொல்லால் – செயலால் ஆன அனைத்து (இபாதத்) வணக்கங்களிலும், படைப்பினங்கள் அனைத்தும் ஈடுபாடு கொண்டிருப்பதை அவைகளை படைத்த இறைவனே அறிவித்தபின், அதில் ஆட்சேபனை செய்வதற்கு அறவே வாய்ப்பு இல்லை.
அப்படியானால் அல்லாஹ்வின் பிரதிநிதியாக அறிவிக்கப்பட்டு, வானம் பூமியில் உள்ள அனைத்தையும் ஆள்வதற்கும் அனுபவிப்பதற்கும் படைக்கப்பட்ட மனிதன் மேலே விவரிக்கப்பட்ட சொல்லால், செயலால் ஆன இதே இபாதத் என்னும் வணக்கத்தில் ஈடுபடுவதற்காகத்தான் படைக்கப்பட்டிருக்கிறான் என்றால் இதில் மனிதனுக்கான எவ்வித பிரத்தியேக அம்சத்தையும் உணரமுடியவில்லை என்பதே உண்மை நிலையாகும்.
மேலும் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை (அவர்களின் சந்ததிகளான மனிதர்களை) பூமியில் பிரதிநிதியாக (கலீஃபாவாக) ஆக்கி படைக்க இருப்பதை மலக்குகளுக்கு முன் அல்லாஹ் கூறியபோது, (செயல்கள் உட்பட) சொல்லால் ஆன வணக்கத்தில் தாங்கள் சதா ஈடுபாடு கொண்டிருப்பதை அல்லாஹ்வின் சமூகத்தில் மலக்குமார்கள் பிரஸ்தாபிக்கவே செய்தார்கள். அவர்களின் அக்கூற்றுக்கு அல்லாஹ் முக்கியத்துவத்தை தரவில்லை.
ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களக்கு அனைத்து பெயர்களின் ‘இல்மை’ கற்றுத்தந்து, அதன் காரணத்தினால்தான் இம்மாபெரும் உயர்வுக்கு அவர்களை தேர்வு செய்திருப்பதாக அறிவித்தான். அதுமட்டுமல்ல! இந்த கல்வி ஞானம் அளிக்கப்பட்டதையும், அதனை மலக்குகள் கற்றுக்கொள்ளும் இயல்பில் அவர்கள் படைக்கப்பட்டிருக்கவில்லை என்பதையும் நிரூபித்தவன், கிலாஃபத் என்னும் பிரதிநிதித்துவம், ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு அளிக்கப்பட்டிருப்பதை மலக்குகள் ஏற்றக்கொண்டே ஆகவேண்டும் என்று அல்லாஹ் உத்தரவிட்டிருந்தால், அதுவே மலக்குகளை மறுக்காமல் ஏற்கச் செய்ய போதுமானது. ஆனால் அல்லாஹ் தனக்கு மட்டுமே செய்யப்படும் வணக்கங்களிலெல்லாம் உச்சநிலையை உறுதிப்படுத்த, தனக்காக சிரம் தாழ்த்தி பணிந்திடும் ஸஜ்தாவை ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு செய்திடும்படி மலக்குமார்களுக்கு உத்தரவிட்டான். அதன்படி மலக்குகளும் ஸஜ்தா செய்து ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் உயர்வை ஏற்றுக்கொண்டுவிட்டதை செயல்முறையில், வெளிப்படுத்தச் செய்து அல்லாஹ் தெளிவுபடுத்திவிட்டான்.
நன்றி: ஜமாஅத்துல் உலமா, மாத இதழ் – அக்டோபர் 2010