ஆண்கள் மணமுடிக்கக் கூடாத உறவுகள்
1. தாய், 2. மகள், 3. சகோதரி, 4.தாயின் சகோதரி, 5. தந்தையின் சகோதரி, 6. சகோதரனின் புதல்விகள், 7. சகோதரியின் புதல்விகள், 8. பாலூட்டிய அன்னையர், 9. பாலூட்டிய அன்னையின் புதல்விகள், 10. மனைவியின் தாய், 11. மனைவியின் புதல்வி, 12. மகனின் மனைவி, 13. இரு சகோதரிகளை ஒரே காலத்தில் மனைவியராக்குதல்.
பெண்கள் மணமுடிக்கக் கூடாத உறவுகள்
1. தந்தை 2. மகன் 3. சகோதரன் 4. தாயின் சகோதரன் 5. தந்தையின் சகோதரன் 6. சகோதரனின் மகன் 7. சகோதரியின் மகன் 8. பாலூட்டிய அன்னையின் கணவன் 9. பாலூட்டிய அன்னையின் மகன் 10. கணவனின் தந்தை 11. கணவனின் புதல்வன் 12. புதல்வியின் கணவன் 13. சகோதரியின் கணவனை, சகோதரியுடன் வாழும் போது மணப்பது ஆகியவை தடுக்கப்பட்டுள்ளன.
திருக்குர்ஆன் 4:23 வசனத்திலிருந்து இதை அறியலாம்.
உங்கள் அன்னையர், உங்கள் புதல்வியர், உங்கள் சகோதரிகள், உங்கள் தந்தையரின் சகோதரிகள், உங்கள் அன்னையின் சகோதரிகள், சகோதரனின் புதல்விகள், சகோதரியின் புதல்விகள், உங்களுக்குப் பாலூட்டிய அன்னையர், பால்குடிச் சகோதரிகள், உங்கள் மனைவியரின் அன்னையர், நீங்கள் தாம்பத்தியம் நடத்திய மனைவிக்குப் பிறந்த உங்கள் பொறுப்பில் உள்ள மனைவியின் புதல்விகள், ஆகியோர் (மணமுடிக்க) விலக்கப்பட்டுள்ளனர். நீங்கள் உங்கள் மனைவியருடன் உடலுறவு கொள்ளா(த நிலையில் விவாக ரத்துச் செய்து) விட்டால் (அவர்களின் புதல்விகளை மணப்பது) உங்களுக்குக் குற்றமில்லை. உங்களுக்குப் பிறந்த புதல்வர்களின் மனைவியரும், (விலக்கப்பட்டுள்ளனர்.) இரு சகோதரிகளை ஒரே நேரத்தில் மணந்து கொள்வதும் (விலக்கப்பட்டுள்ளது). நடந்து முடிந்ததைத் தவிர. அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான். (திருக்குர்ஆன் 4:23)
இரத்த சம்பந்தத்தால் யாரைத் திருமணம் செய்யக் கூடாது என்று மேலே நாம் குறிப்பிட்டோம். அன்னியப் பெண்ணிடம் பால் குடித்ததால் மேற்கண்ட உறவு முறை ஏற்படுமானால் அவர்களையும் மணக்கக் கூடாது.
அதாவது ஒரு பெண்ணிடம் ஒருவன் பாலருந்தி விட்டால் அவள் தாயாகி விடுகிறாள். இதன் காரணமாக அவளது சகோதரி சின்னம்மா அல்லது பெரியம்மா ஆகி விடுவார்கள். எனவே அவரையும் மணக்கக் கூடாது.
அவளது சகோதரன் அல்லது சகோதரியின் மகளையும் மணக்கக் கூடாது. பாலூட்டிய அன்னையை பெற்ற தாய் இடத்தில் வைத்துப் பார்த்தால் அவளது உறவினர்கள் நமக்கு மேற்கண்ட உறவு முறையுடையவர்களானால் அவர்களை மணக்கக் கூடாது.
இரத்த சம்பந்தத்தால் தடுக்கப்பட்ட உறவு முறைகள், பால் அருந்திய உறவு முறையிலும் தடுக்கப்பட்டதாகும் என்பது நபிமொழி. (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ், நூல்: புகாரி 2451, 4719)
இது தவிர ஒரு பெண்ணை மணந்து அவளுடன் வாழும் போது அவளது தாயின் சகோதரியையும் சேர்த்து மணக்கக் கூடாது. அது போல் மனைவியின் தந்தையின் சகோதரியையும் சேர்த்து மணக்கக் கூடாது.
மனைவி மரணித்து விட்டாலோ விவாகரத்து ஆகி விட்டாலோ மனைவியின் தாயுடைய சகோதரியை, மனைவியின் தந்தையுடைய சகோதரியை மணக்கத் தடையில்லை.
மேற்கண்ட பட்டியலில் பெரியப்பா, சித்தப்பாமார்களின் மகள்கள் இடம் பெறவில்லை. இதிலிருந்து பெரியப்பா, சித்தப்பாமார்களின் மகள்கள் அந்நியப் பெண்களே என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். அவர்களைத் திருமணம் செய்வது ஆகுமானதாகும்.
ஆனால் ஷாஃபி மத்ஹபினர் இதனை ஹராமாக்கி வைத்துள்ளனர். இதனை எந்த ஆலிம்களும் வெள்ளி மேடைகளில் கண்டித்து உரையாற்றுவது கிடையாது. யாராவது பேசினாலும் அவர்களை ஒரு விதமாக பார்க்கக் கூடிய நிலை தான் காணப்படுகிறது.