தொலைக்காட்சி விளம்பரங்களில் பெண்களை அபத்தமாக விளம்பரப் பொருளாக்கும் மடமை
[ இந்தியா விடுதலை அடைந்து 60 ஆண்டுகளாயிற்று. பெரும்பாலானோரிடம் கணினி, மடிக்கணினி, நவீன செல்போன்கள். பொருளாதாரப் புள்ளிகள் யாருக்கும் தெரியாமல் ஏறுகின்றன, இறங்குகின்றன. வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைக்க முடியாது, விண்வெளிக்கும் சென்றுவிட்டோம்.
பெண் விஞ்ஞானி, பெண் முதல்வர், பெண் காவலர், பெண் பிரதமர், பெண் குடியரசுத் தலைவர், பெண் ஆலோசகர்… இருந்தென்ன பயன்? பெண்களை அபத்தமாக விளம்பரப் பொருளாக்கும் மடமை மட்டும் இன்னும் மாறவில்லை.]
சந்தையில் கிடைக்கும் பொருள்களைப் பற்றிய தகவலைத் தெரிந்து கொள்ளும் முக்கியமான ஒன்றாக இருந்த விளம்பரம் இப்போது, நுகர்வுச் சந்தையில் விபரீதமான ஒன்றாக மாறிப் போயிருக்கிறது.
அதாவது, நுகர்வோருக்குத் தவறான தகவல்களைத் தருகின்றனர் என்பதையும்விட அதைப் பிற்போக்கான வழிமுறைகளில், மக்களின் மனதை – சிந்தனையைப் பாழ்படுத்தும் விதமாகத் தருகின்றனர் விளம்பர நிபுணர்கள்!
விளம்பரம் என்பது “முதலில் பார்க்க வைக்க வேண்டும், பார்ப்பவர்களைப் பேச வைக்க வேண்டும், பேச வைத்த பிறகு குறிப்பிட்ட அந்தப் பொருளை வாங்க வைக்க வேண்டும்’. இதுதான் இதுநாள் வரை சொல்லப்பட்டு வரும் இலக்கணம்.
ஆனால், நமது விளம்பரங்கள் பார்க்க வைக்கின்றன. பேச வைக்கின்றன, ஆனால், வாங்க வைக்கின்றனவா? சந்தேகம்தான். காரணம் பல. அவற்றுள் ஒன்று, இப்போதுள்ள நவீன விளம்பர உத்திகள் குறுக்குப் புத்தி கொண்டவைகளாக இருப்பதுதான்.
சம்பந்தமே இல்லாத காட்சிகள், சம்பந்தமே இல்லாத உரையாடல்கள், சம்பந்தமே இல்லாத பாத்திரங்கள், எல்லாமும் முடிந்து சம்பந்தமே இல்லாத ஒரு பொருளைக் காட்டி முடிக்கின்றனர். இது ஒரு புதுவகை என்று வியாக்யானம் செய்கிறார்கள்.
அதிலும், குறிப்பாக பெண்களை மையப்படுத்திய விளம்பரங்கள் இடையிடையே ஒன்றிரண்டு தடை செய்யப்பட்டு வந்தாலும், இப்போது கொஞ்சம் கூடுதலாக இருக்கின்றன.
காட்சிப்படுத்தப்படும் அனைத்து விளம்பரங்களிளும் 75% ஆனவற்றில் குளியலறை மற்றும் சமயலறை உற்பத்திப் பொருட்களுக்கே பெண் பயன்படுத்தப் படுகிறாள்.
56% ஆண் விளம்பரங்களில் பெண் வீட்டுப்பணிப் பெண்னாகவும் இல்லத்தரசியாகவும் காட்டப்படுகிறாள்.
அழகுசாதனப் பொருட்களின் பாவனை பற்றிக் காட்சிப்படுத்த – பெண்களின் தோற்றம் பயன்படுத்தப்படுகிறது.
சில விளம்பரங்கள் இயற்கைக்கு மாற்றமாக அதாவது குடும்பத்தை வழிநடாத்துபவளாகப் பெண்னையும் அவளுக்குக் கீழ்ப்பட்ட நிலையில் ஆணையும் சித்தரிக்கின்றன. இதனை நடைமுறையில் ஒரு பெண் கைக்கொள்வதன் மூலம் கணவனை மிஞ்சி தனக்கு விருப்பமான பொருட்களை தானே நுகரும் நிலை உருவாகின்றது. இது ஒரு வியாபாரத் தந்திரமாகவே காணப்படுகின்றது.
விளம்பரங்களின் ஒரு பக்கம் வியாபார நோக்கமென்றாலும் அதன் மறுபக்கம் எம்மால் அலட்சியம் செய்யப்படுகின்ற அவலட்சனமான பக்கமாகும். பெண்கள் இன்று வெறும் காட்சிப்பொருளாக்கப்பட்டு வருகின்றனர். விளம்பரங்களில் இது சர்வசாதாரணமாகக் காட்டப்படுகின்றது. குளியலறை என்றும் கடற் கரையென்றும் படுக்கை அறையென்றும் நகர்ப்புறம் என்றும் அனைத்து இடங்களிலும்பெண்னை உள்ளடங்கலாகவே விளம்பரம் அமைக்கப்படுகின்றது.
விளம்பரம் என்ற போர்வையில் பெண்கள் அக்குவேறு ஆணிவேறாகக் கூறுபோட்டுக் காட்டப்படுகின்றனர். உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை ஒவ்வொரு விளம்பரமும் பெண்னை அங்கமங்கமாகக் காட்சிப்படுத்துகின்றன. அழகுசாதனப் பொருட்களுக்கு இலகுவில் அடிமையாகுபவர்கள் பெண்கள் என்பதால் அவ்வாறு காட்சிப்படுத்தப்படுகின்றனர். உதாரணமாக செம்போ விளம்பரங்களுக்கு கூந்தலும் முகப்பூச்சு மற்றும் உதட்டுச்சாயங்களுக்கு முகமும் ஆபரணக் காட்சிகளுக்கு கழுத்து, கை, காது என்பனவும் பாதனி விளம்பரங்களுக்கு பாதமும் மற்றும் சவர்க்கார விளம்பரங்களுக்கு மேனியும், முழு உடலையும் ஆடைக் கண்காட்சி விளம்பரங்களுக்கும் பயன்படுத்துகின்றனர்.
ஒரு சில சந்தர்ப்பங்களில் இவ்வாறு ஆண்களைக் காட்டினாலும் அநேகமாக பெண்களே தோற்றுவிக்கப்படுகின்றனர். குறிப்பாக உடற்பயிற்சி இயந்திரங்களின் விளம்பரத்திற்கே பெண்னின் உடற்கவர்ச்சி முழுமையாகக் காட்டப்படுகின்றது.
ஆகமொத்தத்தில் இவ்வனைத்து விளம்பரங்களிலும் நுகர்வோனின் விருப்பு வெறுப்புக்கான வியாபாரப் பொருளாகவே பெண் காட்டப்படுகிறாள். “ஜீன் கில்போன்” என்பவர் “Beauty and the Beast of Advertising” என்ற தனது கட்டுரையில் இவ்வாறு குறிப்பிடுகிறார். “அதிகமான விளம்பரங்களில் பெண் என்பவள் ஒரு பாலியல் பொருளாகவே காட்டப்படுகிறாள். பெண்கள் ஆடைக்கண்காட்சிக்காக வைக்கப்படும் பொம்மைகளாகவே (Mannequin) நோக்கப்படுகின்றனர்” என்கிறார்.
“பெண்கள் வீட்டுவேலைகளில் ஈடுபடுவதனாலேயே அவர்களை வைத்து விளம்பரம் செய்யப்படுகின்றது” என்ற வாதம் மாறி “பெண்களின் உருவம் இருந்தால்தான் குறித்த பொருள் விற்பனையாகும்” என்ற எண்ணம் உருவாகியுள்ளது. அதனால்தான் பெண்களுக்கு எவ்விதத்திலும் சம்பந்தப்படாத அல்லது அவர்களால் பயன்படுத்த முடியாத ஒரு பொருளை விளம்பரப்படுத்தும் போதுகூட அதனோடு ஒரு பெண்ணின் தோற்றத்தையும் சேர்த்துவிடுகின்றனர்.
சில ஆண்டுகளுக்கு முன்பு இரு சக்கர வாகன விளம்பரம் ஒன்று தொலைக்காட்சிகளில் வெளியானது. அதில், படுத்திருக்கும் நிலையிலிருக்கும் பெண்ணைத் தழுவுவார் ஓர் ஆண். சிறிது நேரத்தில் அந்தப் பெண் இரு சக்கர வாகனமாக மாறுவார். இப்படியாக காட்சிப்படுத்தப்பட்டு ஒளிபரப்பான அந்த விளம்பரம், மகளிர் இயக்கத்தினர் எதிர்ப்புக் குரல் கொடுத்த பிறகு நிறுத்தப்பட்டது.
இன்னொரு விளம்பரம் தொலைக்காட்சிகளில் ஓடிக்கொண்டே இருக்கிறது. உடலில் பீய்ச்சிக் கொள்ளும் வாசனைத் திரவிய விளம்பரம் அது. அதைப் போட்டுக்கொண்டு நடக்கும் ஆணுடன் தெருவிலிருக்கும் பெண்கள் எல்லோரும் சேர்ந்து கொள்கிறார்கள். இதென்ன அபத்தம்?
தொலைக்காட்சி பார்க்கும் வாலிபர்கள் தமது வாழ்வில் இரண்டு வருடங்களை விளம்பரம் பார்ப்பதில் கழிப்பதாக ஒரு கணிப்பீடு சுட்டி நிற்கின்றது. பொதுவாக விளம்பரங்கள் அதனைப் பார்ப்பவர்களின் விருப்பு வெறுப்புகளிளும் நடத்தைக் கோலங்களிளும் ஆழமான தாக்கத்தை உருவாக்கிவிடுகின்றன. இன்று உற்பத்திப் பொருட்களைச் சந்தைப்படுத்த தொலைக்காட்சி விளம்பரங்கள் பெண்களை வெகுவாகப் பயன்படுத்துகின்றன.
இந்தியா விடுதலை அடைந்து 60 ஆண்டுகளாயிற்று. பெரும்பாலானோரிடம் கணினி, மடிக்கணினி, நவீன செல்போன்கள். பொருளாதாரப் புள்ளிகள் யாருக்கும் தெரியாமல் ஏறுகின்றன, இறங்குகின்றன. வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைக்க முடியாது, விண்வெளிக்கும் சென்றுவிட்டோம்.
பெண் விஞ்ஞானி, பெண் முதல்வர், பெண் காவலர், பெண் பிரதமர், பெண் குடியரசுத் தலைவர், பெண் ஆலோசகர்… இருந்தென்ன பயன்? பெண்களை அபத்தமாக விளம்பரப் பொருளாக்கும் மடமை மட்டும் இன்னும் மாறவில்லை.
ஆக விளம்பரங்களினால் ஏற்படும் பாதிப்புகளை மேற்கூறிய ஆய்வுகளிலிருந்து அறிந்துகொள்ளலாம். விளம்பரம் என்பது உற்பத்திப் பொருட்கள் குறித்து பொதுமக்கள் மத்தியில் ஆசையையும் ஆர்வத்தையுமூட்டி இலகுவாக விற்பனைசெய்ய பயன்படுத்தப்படுகிறது. விளம்பரம் மனித உள்ளத்தைக் கட்டுப்படுத்தி அவனது விருப்பு வெறுப்புகளைத் தீர்மானிக்கும் ஒரு கருவியாகவும் செயற்படுகிறது.
புதியன புகுதலாலும் பழையன கழிதலாலும் மனிதன் நவநாகரிகத்தின்பால் மூளைச்சலவை செய்யப்படுகிறான். இவ்வாறான விளம்பரங்களால் பெண்களின் தன்மானம் பாதிக்கப்பட்டு வெறுமனே காட்சிப்பொருளாக நோக்கப்படுகின்ற நிலைமை உருவாகிவருகின்றது. இவ்வாறு பல விபரீதங்கள் இன்றைய விளம்பரங்களில் காணப்படுகின்றன.
இதுபோன்ற கொடுமைகளை எப்படி ஜீரணித்துக் கொள்ள முடியும்?
கட்டுரை உதவி : தினமணி, அல்ஹஸனாத் மற்றும் உண்மை உதயம் சஞ்சிகைகள்