மறைமுகன்
கணவன் – மனைவி அன்பையும், அதன் ஆழத்தையும் உறுதிப்படுத்துவதில் வலிமையானது, ஒருவருக்கொருவர் அன்பளிப்பை வழங்குவதாகும். அதனை முன்னிறுத்தியே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள், ‘ஒருவருக்கொருவர் அன்பளிப்பு வழங்குங்கள். (அதன் மூலம்) ஒருவரையொருவர் அன்பு பாராட்டியவர்களாவீர்கள்’. (நூல்: புகாரி)
அன்பளிப்பின் விளைவு, பொருளின் விலை சார்ந்ததல்ல. அழகிய வடிவில் அமைந்த பொருளைத் தேர்வு செய்வதிலும் அதனை வழங்குவதின் தரத்திலும் அதன் விளைவு வெளிப்படுகிறது. அந்த அன்பளிப்புகள் செய்தியின் மூலம் அவ்விளைவு உண்டாகிறது. தம்பதியினரில் ஒருவருக்கொருவர் வழங்கிக் கொள்ளும் அன்பளிப்புகள் சுமந்து செல்லும் செய்திகள் பலவுள்ளன.
கணவன் – மனைவியிடையே அன்பை பெருகச்செய்து, கனிவை ஊற்றெடுக்கச் செய்யும் அன்பளிப்புகளில் சில விலைமதிப்பற்றவையாகும்.
ஒரு ரோஜாப்பூ வழங்குவது,
ஒருவரைப் பற்றி ஒருவர் கவிதை சார்ந்த வார்த்தைகளைக் கூறுவது,
மொழிதல் இல்லாத மொழியினால் விவரிப்பது,
ஒருவர் மீதான அன்பை மற்றொருவர் தன் கண்மொழி மூலமோ,
பிற சமிக்ஞைகளாலோ எடுத்துரைப்பது,
ஒரு பெண் தன் கணவனுக்காக தன்னை அலங்கரித்துக் கொள்வது,
வெளியிலிருந்து வரும் கணவனை நல்ல முறையில் வரவேற்பது,
கணவனின் வருகைக்கு முன்பே வீட்டை நறுமணம் கமழச் செய்வது போன்ற பல அம்சங்கள் உள்ளன.
கனிவில் நனைந்த ஒற்றைப் பார்வையும் விலைமதிப்பற்றதுதான்.
வார்த்தைகளால் விவரிக்க முடியாத உணர்வுகளையும், கருத்துக்களையும் அப்பார்வை எளிதில் உணர்த்தி விடுகிறது. தம்பதிகளுக்குள் அது காதல் பார்வையாக இருந்தாலும் கருத்துப்பார்வையாக இருந்தாலும் இல்லறத்திற்கு இனிமை சேர்ப்பதாகவே அமைகிறது.
தொலைபேசி உரையாடலும் இத்தகையதே! தன் வாழ்க்கைத் துணைவியின் உணர்விலும், உள்ளத்திலும், சிந்தனையிலும், இருப்பிலும் தான் இருந்து கொண்டிருப்பதை தொலைபேசி உரையாடல் உணர்த்தும் விதம் அழகானது. என்னதான் முக்கியத்துவம் வாய்ந்த பணியிலிருந்தாலும் தன் துணையை மறந்துவிடவில்லை என்பதை அதன் தம்பதியினர் தெரிவிக்கினர். தொலைபேசிக் குருஞ்செய்தியும் அத்தகையதே! குறிப்பாக, செய்தியின் வாசகத்தின் உண்மைத் தன்மை தம்பதியினரிடம் பெரும் விளைவை ஏற்படுத்துகிறது.
விலைமதிப்பற்ற அன்பளிப்பு வடிவங்களில் அர்த்தம் பொதிந்த, உண்மையான, இனிய புன்னகையும் ஒன்று. அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள், ‘உன் சகோதரனின் முகம் பார்த்து நீ (வெளிப்படுத்தும்) புன்னகையும் ஒரு தர்மமாகும்.’ (நூல்: ஹாகிம்) எனும்போது தம்பதிகளுக்குள் பரிமாறிக்கொள்ளும் புன்னகையும் ஒரு தர்மம் என்பதில் எவருக்கேனும் சந்தேகமா என்ன!
அப்புன்னகையும் மென்மையான சில வார்த்தைகள், பரிவான தொடுகைகள், மெல்லிய சீண்டல்கள், அர்த்தம் பொதிந்த முத்தம் போன்றவை தொடர்ந்தால் அதன் மூலம் தம்பதியினர், தன் மீதான தன் இணையின் ஆர்வத்தை புரிந்து கொள்ள எளிதாகுமே!
மனிதன், இயல்பாகவே பகரம் பெறும் சிந்தனை படைத்தவனாக இருப்பதால், அதுவே அன்பளிப்பு வடிவில் வழங்கப்படும்போது தன் இணையின் மீதான உண்மையான அன்பை அது உணர்த்திவிடுகிறது. விலைமதிப்பற்ற இந்த அன்பளிப்பு பொருளாகவோ, கணவன், தன் மனைவிக்காக வாழ்நாள் முழுக்க செலவழிப்பதாகவோ அமைகிறது.
சில சமயங்களில் கணவனுக்கு பொருளாதார நெறுக்கடி தோன்றும்போது மனைவி அவனுக்கு உதவும் விதமாக, தனக்குச் சொந்தமான செல்வத்திலிருந்து கடனாகவோ, கொடையாகவோ வழங்கும் விதத்தில் அமைகிறது. மனைவிக்கும், வீட்டுக்கும் செலவு செய்வது கணவன் மீதான கடமை என்றிருக்கும்போது மனைவி, மேற்கண்ட விதம் தன் கணவனுக்காக வழங்குவது, அன்பின் வழியானதேயாகும்.
அன்பளிப்பின் எளிய வடிவம், நறுமணப் பொருளான ஒரு ‘அத்தர்’ பாட்டிலாகவும் இருக்கலாம். சில சமயங்களில் தம்பதியரில் ஒருவர், மற்றவருக்கு வழங்கும் ஆடையாகவும் அது அமையலாம். அன்பளிப்பை, அதற்குப் பொருத்தமான வடிவத்தில் வழங்கப்படாவிட்டால், அதன்மதிப்பை இழந்துவிடும்.
தன் இணை, ஒரு அன்பளிப்பை திடீரென முன்னறிவிப்பின்றி வழங்குவது தம்பதியினரிடையே நற்பாக்கிய உணர்வைத் தோற்றவிக்கும். பூக்கள், நகைகள் போன்ற பயன்பாட்டுப் பொருளை மனைவிக்கு வழங்கும் அன்பளிப்பில் தேர்வு செய்வது, அன்பளிப்புப் பொருளுக்கு உரையாடுவதில் செலுத்தும் முக்கியத்துவத்தை, உரைமீது எழுதும் வாசகத்திற்கும் வழங்குவது ஆகியவை அன்பளிப்பின் மதிப்பை உயர்த்திவிடும். காலம் கடந்த பின்னும், காலமான பின்பும் நம் வாழ்க்கையின் வாசனையை இத்தகைய அன்பளிப்புகள் தான் நீடிக்கச் செய்கின்றன.
நன்றி: சிந்தனை சரம், மாத இதழ் மார்ச், 2010