அல்லாஹ்வின் அத்தாட்சிகள்
إِنَّا جَعَلْنَا مَا عَلَى الْأَرْضِ زِينَةً لَّهَا لِنَبْلُوَهُمْ أَيُّهُمْ أَحْسَنُ عَمَلًا ، وَإِنَّا لَجَاعِلُونَ مَا عَلَيْهَا صَعِيدًا جُرُزًا ‘
”அவர்களில் அழகிய நல்லறம் செய்பவர் யார் எனச் சோதிப்பதற்காக இந்தப் பூமியின் மேல் உள்ளவைகளை அதற்கு அலங்காரமாக நிச்சயமாக நாம் ஆக்கியுள்ளோம். மேலும் அதன் மேல் உள்ளதை வறண்ட மண்ணாகவும் நாம் ஆக்கக் கூடியவர்களே!’. (அல்குர்ஆன் 18:07,08)
இவ்விரு வசனங்களில் இரண்டு செய்திகள் அடங்கியுள்ளன. இறைவன் எத்தகைய ஆற்றல் மிக்கவன் என்பது ஒரு செய்தி! மனிதர்களுக்கு இவ்வுலகில் இன்பங்களை வாரி வழங்கியிருப்பது ஏன் என்பது மற்றொரு செய்தியாகும். இவ்வசனத்தில் தனது வல்லமையைக் கூற வெகு தொலைவுக்கு மனிதனை இழுத்துச் செல்லாமல் அவன் எந்த மண்ணில் வாழ்கின்றானோ அந்த மண்ணையே இதற்குக் களமாக்கிக் காட்டுகின்றான்.
எவ்வித கவர்ச்சியும் அலங்காரமும் இல்லாமல் கட்டாந்தரையாகக் கிடந்த பூமியின் மேல் மழையை விழச்செய்து அவற்றில் மரம் செடி கொடிகளை முளைக்கச் செய்கிறான்.இவ்வாறு முளைத்தவுடன் பூமிக்கு புதுப் பெண்ணின் கவர்ச்சி வந்து விடுகின்றது.இதை நாம் தான் செய்கின்றோம் என்று இங்கே சுட்டிக் காட்டுகின்றான்.திருக்குர்ஆனின் வேறு இடங்களில் இன்னும் அழுத்தமாகத் தனது இந்த ஆற்றலை மனிதனுக்குச் சுட்டிக் காட்டியிருக்கின்றான்.
”அவனே வானத்திலிருந்து மழையை இறக்கினான். அதைக் கொண்டு எல்லா வகையான புற்பூண்டுகளையும் நாம் வெளிப்படுத்துகின்றோம். அதிலிருந்து நாம் வித்துக்களை அடர்த்தியான கதிர்களாக வெளிப்படுத்துகின்றோம். பேரிச்சை மரத்தின் பாளையிலிருந்து வளைந்து தொங்கும் பழக்குலைகளும் இருக்கின்றன. திராட்சைத் தோட்டங்களையும் (பார்வைக்கு) ஒன்று போலவும் (சுவைக்கு) வௌ;வேறாகவும் உள்ள மாதுளை, ஜைத்தூன் ஆகியவற்றையும் (நாம் வெளிப்படுத்தியிருக்கின்றோம்) அவை (பூத்துக்) காய்ப்பதையும் பின்னர் கனிந்து பழமாவதையும் நீங்கள் உற்று நோக்குவீர்களாக – ஈமான் கொள்ளும் மக்களுக்கு நிச்சயமாக இவற்றில் அத்தாட்சிகள் அமைந்துள்ளன”. (திருக்குர்ஆன் 6:99)
”பந்தல்களில் படர விடப்பட்ட கொடிகளும் படர விடப்படாச் செடிகளும் பேரீச்சை மரங்களும் உள்ள சோலைகளையும் புசிக்கத் தக்க விதவிதமான காய், கறி தானியங்களையும் ஒன்று போலவும் வௌ;வேறாகவும் தோற்றமளிக்கும் ஜைத்தூன் (ஒலிவம்) மாதுளை ஆகியவற்றையும் அவனே படைத்தான். ஆகவே அவை பலனளித்தால் அவற்றின் பலனிலிருந்து புசியுங்கள். அவற்றை அறுவடை செய்யும் காலத்தில் அதற்குரிய (கடமையான) பாகத்தைக் கொடுத்து விடுங்கள். வீண்விரயம் செய்யாதீர்கள். நிச்சயமாக அவன் (அல்லாஹ்) வீண் விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை”. (அல்குர்ஆன் 6:141)
”இன்னும் பூமியில் அருகருகே இணைந்தாற்போல் பல பகுதிகளை (அமைத்து அவற்றில்) திராட்சைத் தோட்டங்களையும் விளைநிலங்களையும் கிளைகள் உள்ளதும் கிளைகள் இல்லாததுமான பேரீச்சை (வர்க்கத்தை)யும் (அவனே உண்டாக்கினான், இவையனைத்திற்கும்) ஒரே தண்ணீர் கொண்டு தான் பாய்ச்சப் பட்டாலும் அவற்றில் சிலவற்றை வேறு சிலவற்றை விட சுவையில் நாம் மேன்மையாக்கி இருக்கிறோம். நிச்சயமாக இவற்றில் உணர்ந்தறியும் மக்களுக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன”. (அல்குர்ஆன் 13:04)
”அதனைக் கொண்டே (விவசாயப்) பயிர்களையும் ஒலிவ (ஜைத்தூன்) மரத்தையும் பேரீச்சை மரங்களையும் திராட்சைக் கொடிகளையும் இன்னும் எல்லா வகைக் கனி வர்க்கங்களிலிருந்தும் அவன் உங்களுக்காக விளைவிக்கிறான். நிச்சயமாக இதில் சிந்திக்கும் மக்கள் கூட்டத்தாருக்கு (தக்க) அத்தாட்சி இருக்கிறது”. (அல்குர்ஆன் 16:11) ‘
”இன்னும் தூர் ஸினாய் மலைக்கருகே உற்பத்தியாகும் மரத்தையும் (உங்களுக்காக நாம் உண்டாக்கினோம்) அது எண்ணையை உற்பத்தி செய்கிறது. மேலும் (ரொட்டி போன்றவற்றை) சாப்பிடுவோருக்கு தொட்டு சாப்பிடும் பொருளாகவும் (அது அமைந்துள்ளது)”. (அல்குர்ஆன் 23:20)
”அவர்கள் பூமியைப் பார்க்கவில்லையா? அதில் மதிப்பு மிக்க எத்தனையோ வகை (மரம், செடி, கொடி) யாவற்றையும் ஜோடி ஜோடியாக நாம் முளைப்பித்திருக்கின்றோம்”. (அல்குர்ஆன் 26:07) ‘
”அன்றியும் வானங்களையும் பூமியையும் படைத்து உங்களுக்கு வானத்திலிருந்து மழையை இறக்கி வைப்பவன் யார்? பின்னர் அதைக் கொண்டு செழிப்பான தோட்டங்களை நாம் முளைக்கச் செய்கின்றோம். அதன் மரங்களை முளைக்கச் செய்வது உங்களால் முடியாது. (அவ்வாறிருக்க) அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? இல்லை! ஆயினும் அவர்கள் (தம் கற்பனை தெய்வங்களை அல்லாஹ்வுக்கு) சமமாக்கும் மக்களாகவே இருக்கிறார்கள்”. (அல்குர்ஆன் 27:60)
”அவர்கள் (இதையும்) கவனிக்கவில்லையா? – நிச்சயமாக நாமே வறண்ட பூமியின் பக்கம் மேகங்கள் மூலமாக தண்ணீரை ஓட்டிச் சென்று அதன் மூலம் இவர்களும் இவர்களுடைய கால்நடைகளும் உண்ணக் கூடிய பயிர்களை வெளிப்படுத்துகிறோம். அவர்கள் (இதை ஆய்ந்து) நோட்டமிட வேண்டாமா?”. (அல்குர்ஆன் 32:27) ‘
”பூமி முளைப்பிக்கின்ற (புற் பூண்டுகள்) எல்லாவற்றையும் (மனிதர்களாகிய) இவர்களையும் இவர்கள் அறியாதவற்றையும் ஜோடி ஜோடியாகப் படைத்தானே அவன் மிகவும் தூய்மையானவன்”. (அல்குர்ஆன் 36:36)
”நீர் பார்க்கவில்லையா? அல்லாஹ் வானத்திலிருந்து நீரை இறக்கி, அதனை பூமியில் ஊற்றுக்களில் ஓடச் செய்கிறான். அதன் பின் அதைக் கொண்டு வௌ;வேறு நிறங்களை உடைய பயிர்களை வெளிப்படுத்துகிறான். அப்பால் அது உலர்ந்து மஞ்சள் நிறமடைகிறதை நீர் பார்க்கிறீர். பின்னர் அதைக் கூளமாகச் செய்து விடுகின்றான். நிச்சயமாக இதில் அறிவுடையோருக்குப் படிப்பினை இருக்கிறது”. (அல்குர்ஆன் 39:21)
”(பூமியில்) விதைப்பதை நீங்கள் கவனித்தீர்களா? அதனை நீங்கள் முளைக்கச் செய்கிறீர்களா? அல்லது நாம் முளைக்கச் செய்கிறோமா?”. (அல்குர்ஆன் 56:63,64) கடவுள் என்று ஒருவன் இருக்கின்றான் என்பதற்கும் அவனது வல்லமைக்கும் மண்ணில் முளைக்கும் பயிர் பச்சைகள் மிகப் பெரும் சான்றாகவுள்ளதால் தான் இதை முக்கியத்துவத்துடன் அல்லாஹ் சுட்டிக் காட்டுகின்றான்.
இனிப்பான மாம்பழத்தை மாமரம் உற்பத்தி செய்கிறது என்றால் மாங்கொட்டையில் அந்த இனிப்பு இருக்கவில்லை. அது புதைக்கப்பட்ட மண்ணிலும் அந்த இனிப்பு இருக்க வில்லை. ஊற்றுகின்ற தண்ணீரிலோ வீசுகின்ற காற்றிலோ வெளிச்சத்திலோ இனிப்பு இருந்ததில்லை. ஆனாலும் மாம்பழங்கள் இனிக்கின்றன. இப்படிப் பல்வேறு சுவைகள் கொண்ட கனிகளை மனிதன் உண்ணும் போது அதைப் பற்றி சிந்தித்தால் ‘சூப்பர் பவர்’ உள்ள ஒருவன் ஆட்டிப் படைக்கின்றான் என்பதைச் சந்தேகமற அறிந்து கொள்வான். இலைகள், பூக்கள், காய்கள், கனிகளில் தான் எத்தனை வண்ணங்கள்! அந்த வண்ணங்கள் எப்படி வந்தன? என்றெல்லாம் ஆராயும் ஒருவன் கடவுளை மறுக்கவே மாட்டான். அடிக்கடி பார்த்துப் பழகியதால் நாம் இதை உரிய விதத்தில் சிந்திப்பதில்லை. மண்ணில் முளைத்தெழும் ஒவ்வொன்றிலும் கணக்கிட முடியாத அதிசயங்கள் புதைந்து கிடப்பதை இதனால் தான் நாம் சிந்திப்பதில்லை. எப்போதும் தூரத்தில் இருப்பது தான் நமக்கு அதிசயமாகத் தோன்றும். நம் பக்கத்தில் நிற்கும் அதிசயங்கள் அதிசயங்களாகத் தோன்றாது.
மனிதன் இதைச் சிந்திக்க மாட்டான் என்பதற்காகத் தான் இம்மண்ணின் மேல் உள்ளவற்றை மண்ணுக்கு அலங்காரமாக ஆக்கினோம் என்று அல்லாஹ் கூறுகின்றான். இதை மட்டும் கூறிவிட்டு நிறுத்திக் கொண்டால் கூட இதெல்லாம் இயற்கை என்று மனிதன் கூறி விடுவான். நாளை வறண்ட பாலைவனமாகவும் நாம் ஆக்குவோம் என்று சேர்த்துக் குறிப்பிடுகின்றான்.
உரிய நேரத்தில் உரிய அளவில் மழை பெய்த பிறகு இயற்கையாக முளைத்தன என்று கூறும் மனிதனே! உரிய நேரத்தில் மழை பெய்ததும் இயற்கையா? உரிய அளவில் மழை பெய்ததும் இயற்கையா? மேலப்பாளையத்தில் பெய்து விட்டு பாளையங்கோட்டையில் பெய்யாமல் இருந்ததும் இயற்கையா? காற்றும் குளிர்ந்து தரையும் குளிர்ந்து இதோ மழை வரப் போகின்றது என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது ராஜஸ்தான் பாலைவனத்தில் – அனலாய் கொதிக்கும் பூமியில் – மழையை விரட்டிச் சென்று பெய்விப்பவன் யார்?
இதற்கு இயற்கை என்று எவரும் காரணம் சொல்ல முடியாது அல்லவா? இதனால் தான் தனது வல்லமைக்கு பசுமையை மட்டும் சான்றாகக் கூறி நிறுத்திக் கொள்ளாமல் வறட்சியை ஏற்படுத்துவதும் நாம் தான் எனக் கூறி ஆப்பு வைக்கிறான். இந்த இடத்தில் ஏன் இத்தனை வருடங்களாக மழை பெய்யவில்லை என்ற கேள்விக்கு ‘இயற்கை’ என்று விடை கூற முடியாது. யாரோ ஒருவன் தான் இதற்குக் காரணமாக இருக்கின்றான் என்பது தான் இதற்கு விடையாக இருக்க முடியும்.
இறைவனை மனிதன் நம்ப வேண்டும், அதுவும் சிந்தித்து விளங்கி நம்ப வேண்டும் என்ற காரணத்தினால் தான் இந்த சின்னஞ்சிறு சொற்றொடருக்குள் சேர்த்துக் கூறிவிடுகின்றான்.
source: www.readislam.com