1. வட்டிக்குக் கொடுப்போர் வீட்டில் ஒரு நல்ல நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விருந்து உண்பது ஹராமாகுமா?
2. ‘மனைவியை விட்டு ஆறு மாதத்திற்கு மேல் கணவன் பிரிந்திருக்கக் கூடாது’ என்று பெரியவர்கள் சொல்கிறார்களே! அப்படியா? அப்படியானால் நம்மவர்கள் வருடக்கணக்கில் வெளிநாடுகளில் தங்கி விடுகிறார்களே ஏன்?
3. முதியவர்கள் இளமை திரும்ப வராது என்று தெரிந்தும் எப்படி சந்தோஷமாக இருக்கிறார்கள்?
4. மாப்பிள்ளை வீட்டார் பெண்ணுக்குப் பேசப்படும் ரொக்கம் நகையுடன் சேர்த்து பெண்ணுக்கு பின்னர் சேரவேண்டிய சொத்தையும் (பெற்றோர் உயிருடன் இருக்கும் பொழுதே) பிரித்துக் கேட்கிறார்கள். இது முறைதானா? இதை தவிர்ப்பது எப்படி?
5. மனிதன் எப்போது முழுமையடைகிறான்?
6. மது அருந்தும் ஒருவர் ‘குத்பா’ ஓதலாமா?
7. மையத்து வீட்டிற்குச் சென்றால் அந்த மையத்து வீட்டை விட்டு புறப்படும்போது போய் வருகிறேன் என்று சொல்லிவிட்டு வரக்கூடாதாமே! அப்படியா?
8. வெளிநாட்டில் டிரைவராக இருக்கும் ஒருவர் காலையில் தன் சொந்த ஊரிலிருந்து புறப்பட்டு லுஹர், அஸர் தொழுகைகளை 200 மைல் தொலைவில் உள்ள இன்னொரு ஊரில் தொழுதால் எப்படி தொழ வேண்டும்?
9. குமருகள் வீட்டில் வைத்துக்கொண்டு ஹஜ் செய்யலாமா?
கேள்வி 1: வட்டிக்குக் கொடுப்போர் வீட்டில் ஒரு நல்ல நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விருந்து உண்பது ஹராமாகுமா?
பதில்: சந்தேகமில்லாமல் அது ஹராம்தான். முஸ்லீம் பெண் ஒருத்தி ஒரு காஜியிடம், ‘நான் என் கணவரோடு வாழ விரும்பவில்லை, விவாகரத்துப் பெற விரும்புகிறேன்’ என்று சொல்கிறாள். ‘என்ன காரணம்?’ என்று காஜி கேட்கிறார்.
‘என் கணவர் ஹராமான வட்டித் தொழில் செய்து வருகிறார். எனவே அவருடைய ஹராமான உணவை உண்டு அவரோடு நான் வாழ விரும்பவில்லை’ என்று அந்த பெண் காரணம் கூறினால் அந்த காஜி அந்தப் பெண்ணை அந்தக் கணவரிடமிருந்து விவாக விடுதலை பெற வைக்கலாம்.
வட்டி வாங்குகிற ஒரு கணவனின் உணவை அவனுடைய மனைவியே உண்பது ஹராம் என்கிறபோது மற்றவர்கள் அங்கே எப்படி விருந்துண்பது? வட்டி வாங்குபவனின் வீட்டு நிழலில் நிற்பதுகூட பாவம்தான்.
கேள்வி 2: ‘மனைவியை விட்டு ஆறு மாதத்திற்கு மேல் கணவன் பிரிந்திருக்கக் கூடாது’ என்று பெரியவர்கள் சொல்கிறார்களே! அப்படியா? அப்படியானால் நம்மவர்கள் வருடக்கணக்கில் வெளிநாடுகளில் தங்கி விடுகிறார்களே ஏன்?
பதில்: ஹளரத் கஅப் பின் ஸ_ர் என்ற தோழர் கலீஃபா உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் அருகே அமர்ந்திருந்தபோது பெண்மணி ஒருத்தி அஙகு வந்து தம் கணவரைப்பற்றி ‘என் கணவர் தம் வாழ்நாளை இரவும் பகலுமாக இறைவணக்கத்தில் கழிக்கின்றாரே தவிர என் உணர்வுகளை மதிப்பதில்லை!’ என்று கலீஃபா உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் முறையிட்டாள். உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தன்; அருகில் அமர்ந்திருந்த ஹளரத் கஅப் அவர்களிடம் நீதி வழங்குமாறு கட்டளையிட்டார்கள்.
வழக்கை ஆய்ந்த ஹளரத் கஅப் அவர்கள், அப்பெண்மணியின் கணவரை அழைத்து வரச் செய்து, ‘அல்லாஹ் நான்கு மனைவிகளோடு ஒரே காலத்தில் வாழ உமக்கு அனுமதி அளித்திருக்கிறான். முழுத்துறவு பூண அவன் உம்மை ஏவவில்லை. எனவே ஒரே மனைவி உமக்கிருப்பதால் நீர் நான்கு நாட்களுக்கு ஒருமுறை உம் மனைவியோடு இல்லறம் நடத்தியே ஆகவேண்டும். மற்ற மூன்று இரவுகளை உம் விருப்பப்படி இறைவணக்கத்தில் கழிக்கலாம்’ என்று தீர்ப்பு வழங்கினார்கள். அத்தீர்ப்பைக் கேட்டு மகிழ்ந்த கலீஃபா உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அவரை பஸ்ராவின் ஒரு பகுதிக்கு நீதிபதியாக அனுப்பினார்கள்.
அதெல்லாம் சரிதாங்க. அப்போதெல்லாம் வாழ்வதற்காக பொருளீட்டினார்கள். அப்ப அது சரி. இப்பொழுதோ நாம் பெரும்பாலும் பொருளீட்டுவதற்காகத் தானே வாழ்கிறோம். அதனால் நம் இளைஞர்களுக்கு தங்கள் இளமையைவிட எதிர்கால வளமே பெரிதாகிப் போய்விட்டது. அதனால்தான் அவர்களால் ‘கபில்து’ சொன்ன மறுநாளே புதுப்பெண்ணை விட்டு விட்டு இரண்டு வருடங்கள் கல்லாய் அரபு நாட்டில் நிற்க முடிகிறது.
அதிலே இன்னொன்னையும் யோசிக்கணும். நம்ம பொண்ணுங்களும் இரண்டு வருடங்களுக்குப் பிறகு கணவன் திரும்ப ஊர்வந்தாலும் அவன் ‘ரிட்டர்ன் டிக்கட்’டில் வரணும்னுதானே எதிர்பார்க்குறாங்க! ஆக இவர்கள் இளமையை முழுமையாக சம்பாதிக்க விட்டு விட்டு முதுமையில் வாழ எண்ணி முதுகைச் சாய்க்கிறவர்கள்.
சம்பாதிப்பதில் சாம்பலாகி விட்ட இளமையின் ஒருநாள் வீரியப் பொழுதையேனும் அந்த முதுமையில் அவர்களால் திரும்பப் பெறவே முடியாது. மனைவியின் உணர்வுகளை ஏங்க வைக்குமளவில் இறைவணக்கம் கூடத் தடையாகி விடக்கூடாது என்பது உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் காலத்து தீர்ப்பின் சாரமாகும். ஆனால் நாம்? ஒவ்வொருவரும் யோசித்தால் சுற்றுவட்டாரச் செய்திகள் புரியும்.
கேள்வி 3: முதியவர்கள் இளமை திரும்ப வராது என்று தெரிந்தும் எப்படி சந்தோஷமாக இருக்கிறார்கள்?
பதில்: இளமை எல்லோருக்கும் கிடைக்கும். முதுமை எல்லோருக்கும் கிடைக்குமா? முதுமையைத் தொடும் வரை வாழ்வோமா என்று நிச்சயமில்லாத நிலையில் இளைஞனே சந்தோஷப்படும் போது முதுமையைத் தொட்டு விட்ட பூரிப்பில் முதியவர்கள் சந்தோஷப்படுவது நியாயம்தானே!
ஆனால் இக்காலத்தில் எத்தனை முதியவர்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள்? முதியோர் இல்லத்திற்கு அனுப்பப்பட்டு விடுவோமோ என்ற அச்சத்தில் கூட வாழக்கூடியவர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள்.
முதுமையில் சந்தோஷமாய் இருக்கும் வாய்ப்பைப் பெற்றவர்கள் வாழ்த்துக்குரியவர்களே!
கேள்வி 4: மாப்பிள்ளை வீட்டார் பெண்ணுக்குப் பேசப்படும் ரொக்கம் நகையுடன் சேர்த்து பெண்ணுக்கு பின்னர் சேரவேண்டிய சொத்தையும் (பெற்றோர் உயிருடன் இருக்கும் பொழுதே) பிரித்துக் கேட்கிறார்கள். இது முறைதானா? இதை தவிர்ப்பது எப்படி?
பதில்: அப்படித் ‘தரமுள்ள’ மாப்பிள்ளை வாய்த்தால் அவனுக்குப் பெண் என்பவள் சொத்து சுகங்களக்கு அடுத்த பட்சம்தான். பெண் வீட்டாருக்கு மாப்பிள்ளையை நிதானித்துப் பார்த்து தேர்ந்தெடுக்க இப்போதெல்லாம் எங்கே அவகாசம் இருக்கிறது? ஆண் வடிவில் ஒரு மண்பொம்மை செய்து ஆடை அணிவித்து நிறுத்தினால்கூட இன்று அதற்கும்கூட விலை கொடுக்க மனிதர்கள் தயாராக இருக்கும்போது நியாயங்களைப்பேசி என்ன பிரியோஜனம்?
மாப்பிள்ளை முழு முட்டாளாயிருந்தாலும் பரவாயில்லை, கேடுகெட்ட குடும்பத்தில் பிறந்தவனாக இருந்தாலும் பாதகமில்லை, வெளிநாடு போய் வந்தவனா? கொடு பெண்ணை என்று ‘தரம்’ பார்க்கிற நேரத்தில் மாப்பிள்ளை எப்படி குணத்தையும், குடும்பத்தையும் பாதுகாப்பான்?;
பணமும் பணமும் சேர்ந்தால் கூட்டலும் கழித்தலும்தான் விடையாக வருமே தவிர, கூட்டும் களிப்பும் அங்கே கைகோர்த்துக் கொள்ளாது. நல்ல குணமுள்ள ஏழைப் பையனுக்கு மணமுவந்து பெண் கொடுக்கிற பெற்றோரைவிட, கவுரவமும் அந்தஸ்தும் பார்த்து பெண்ணுக்காக விலைக்கு வாங்கி வீட்டோடு கட்டிப்போடுகிற பெற்றோர்களே அதிகம்.
நபிமார்களின் வாழ்க்கையும் ஸஹாபாக்களிpன்; வாழ்க்கையும் நமக்கு டைம் பாஸ{க்கான சம்பவச் சிதறல்களாக மட்டுமே மாறிப்போனதால் இங்கே மாப்பிள்ளைகள் இரவில் குடை பிடிக்கிறார்கள். இதெல்லாம் பெண்ணை கொடுப்பதற்கு முன் யோசிக்க வேண்டிய விஷயங்கள்.
கேள்வி 5: மனிதன் எப்போது முழுமையடைகிறான்?
பதில்: அரைகுறையாக இல்லாதபோது.
கேள்வி 6: மது அருந்தும் ஒருவர் ‘குத்பா’ ஓதலாமா?
பதில்: ‘ரணம் முற்றி, சீழ் வடியும் ஒரு குஷ்டரோகியின் கையில் உருண்டை பிடித்த உணவை ஆரோக்கியமான மனிதன் உண்ணலாமா?’ என்று கேட்டால் எப்படி பதில் சொல்லவேகூட ஓர் அருவறுப்புத் தோன்றுமோ அப்படியிருக்கிறது இது.
கேள்வி 7: மையத்து வீட்டிற்குச் சென்றால் அந்த மையத்து வீட்டை விட்டு புறப்படும்போது போய் வருகிறேன் என்று சொல்லிவிட்டு வரக்கூடாதாமே! அப்படியா?
பதில்: ஷரீஅத் அப்படி எதையும் சொல்லவில்லை.
கேள்வி 8: வெளிநாட்டில் டிரைவராக இருக்கும் ஒருவர் காலையில் தன் சொந்த ஊரிலிருந்து புறப்பட்டு லுஹர், அஸர் தொழுகைகளை 200 மைல் தொலைவில் உள்ள இன்னொரு ஊரில் தொழுதால் எப்படி தொழ வேண்டும்.
பதில்: கஸராகத்தான் (சுருக்கித்தான்) தொழ வேண்டும். அது அல்லாஹ் அளித்த அருட்கொடை. வேண்டாம் என்று மறுக்கும் உரிமை யாருக்கும் இல்லை.
கேள்வி 9: குமருகள் வீட்டில் வைத்துக்கொண்டு ஹஜ் செய்யலாமா?
பதில்: ஹஜ் செய்வதற்கு குமருகள் இருப்பது தடையல்ல. குமரை நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும் என்பது தனிக்கடமை.
நன்றி: பதில்கள் – இஸ்லாமிய மாத இதழ் முஸ்லிம் முரசு