மனைவியின் திறமையை மறுக்கும் ஆண்கள்!
மகிழ்ச்சியான வாழ்க்கைக்காகவும், கூடுதலான வருமானத்திற்காகவும் கணவரை போலவே வேலைக்கு செல்லும் பெண்கள் இன்றைய சூழ்நிலையில் அதிகம்.
வேலைக்குச் செல்லும் பெண்கள், தங்கள் திறமைக்கு ஏற்ற வாய்ப்புகளை அவர்களாகவே உருவாக்கிக் கொள்கிறார்கள். ஆனால், குடும்பத்தை நிர்வகிக்கும் குடும்பத் தலைவிகள் நிலைதான் தலைகீழ்! கணவன் உற்சாகப்படுத்தியதால் சாதித்தவர்களும் இவர்களில் உண்டு; கணவன் கண்டுகொள்ளாததால் ஏதோ வாழ்ந்துவிட்டு போனவர்களும் உண்டு.
அதனால், குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் மனைவியரின் மனதிற்குள் என்னென்ன திறமைகள் ஒளிந்து கிடக்கின்றன என்பதை அறிய வேண்டிய பொறுப்பு கணவர்களுக்கு வேண்டும்.
அதற்காக ஆராய்ச்சியெல்லாம் செய்யத் தேவையில்லை. யதார்த்தமான சூழ்நிலையில் கூட மனைவியின் திறமை பளிச்சிடலாம்.
‘மிதத்தல் விதி’யை கண்டுபிடித்த ஆர்க்கிமிடிஸ் யதார்த்தமான சூழ்நிலையில் தான் அதை கண்டறிந்தார். அவர் வாழ்ந்த நாட்டின் மன்னனின் பெயர் சைரகூஸ். புதிதாக தங்கக் கிரீடம் ஒன்று செய்து, அதை, தான் அணிந்து அழகு பார்க்க வேண்டும் என்பது மன்னரின் ஆசை. சில நாட்களில் தங்கக் கிரீடத்தை தயார் செய்து கொடுத்தனர், அமைச்சர்கள்.
தன்னுடைய விருப்பபடிதான் அந்த கிரீடம் தயார் செய்யபட்டு இருக்கிறதா? என்பதை தெரிந்து கொள்ள விரும்பிய மன்னன், அந்த தங்கக் கிரீடத்தின் ஒட்டுமொத்த அளவையும் தெரிந்து கொள்ள ஆசைபட்டார். ஆனால், அவருக்கு அதை எப்படி அளவெடுப்பது என்று தெரியவில்லை. அதுபற்றி யோசித்தவருக்கு குழப்பம்தான் மிஞ்சியது.
உடனே, ஆராய்ச்சியாளர் ஆர்க்கிமிடிசை வரவழைத்தார். நடந்த விஷயத்தை சொன்னார். மன்னர் சொன்னபடி பல நாட்கள் யோசித்துஸ யோசித்து, அவரும் குழம்பி போனதுதான் மிச்சம். கிரீடத்தின் வெளி அளவுகளை வேண்டுமானாலும் அளந்து விடலாம், மொத்த கொள்ளளவையும் எப்படி கண்டுபிடிப்பது என்று பரிதவித்தார்.
ஒருநாள் குளியலறையில் நீர் நிரப்பபட்டு இருந்த தொட்டிக்குள் அமர்ந்து குளிக்க ஆரம்பித்தார் ஆர்க்கிமிடிஸ். அப்போது சிறிதளவு தண்ணீர் தொட்டியில் இருந்து வெளியேறி கொட்டியது. அப்போதுதான் அவரது முளையில் அந்த ஐடியா பளிச்சிட்டது. தங்கக் கிரீடத்தின் மொத்த கொள்ளளவை கண்டுபிடிக்க உதவிய`மிதத்தல் விதி’யை கண்டறிந்தார்.
அந்த மகிழ்ச்சியில், குளியலறையில் இருந்து எழுந்த ஆர்க்கிமிடிஸ், தான் ஆடையின்றி இருப்பதைக்கூட மறந்து மகிழ்ச்சியில் மன்னரின் சந்தேகத்திற்கு தீர்வு சொல்ல ஓடினார் என்ற தகவலும் உண்டு.
ஆக, பல நாட்கள் குழம்பித் திரிந்த ஆர்க்கிமிடிஸ், நீர் நிரம்பிய தொட்டியில் குளித்ததால்தான் மிதத்தல் விதியை கடறிந்தார். அந்த சூழ்நிலை அவருக்கு யதார்த்தமாகவே அமைந்தது.
அதிர்ஷ்டம் எப்போதாவது ஒருமுறைதான் கதவைத் தட்டும். அதை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால், மீண்டும் அதிர்ஷ்டம் வராது என்பார்கள். அதுபோன்றதுதான், சாதனை படைக்க தேவையான சூழ்நிலைகளும். அதுபோன்ற சூழ்நிலைகளை ஒவ்வொரு கணவன்மார்களும், தங்களது மனைவியருக்கு ஏற்படுத்திக் கொடுத்தால், இல்லத்தரசிகளும் சாதனை அரசிகளாக ஜொலிப்பார்கள்.
என்ன செய்யலாம்?
சில பெண்கள் குடியிருக்கும் வீட்டை அழகாக அலங்கரித்து வைத்திருப்பார்கள். இவர்களிடம் கற்பனை நிறையவே கொட்டிக்கிடக்கும். அதை, எப்படி வெளியில் உபயோகிப்பது என்று தெரியாமல், வீட்டுக்குள்ளேயே சுற்றிச் சுற்றி வருவார்கள். அவர்களை சரியாக ஊக்கபடுத்தினால், `இன்டீரியர் டெகரேஷன்’ எனப்படும் உள்அரை அலங்காரத்தில் ஜொலிப்பார்கள்.
சிலர், தங்களது கற்பனைக்கு ஏற்ற பொருட்களை, குபையில் வீசப்படும் பொருட்களை பயன்படுத்தியே உருவாக்கி விடுவார்கள். இவர்களை கைவினை பொருட்கள் கண்காட்சி நடைபெறும் இடங்கள், கைவினை பொருட்கள் விற்கபடும் ஷோ ரும்களுக்கு அழைத்துச் சென்று ஊக்கபடுத்தினால் இன்னும் திறமைகளை வளர்த்துக் கொள்வார்கள். அந்த துறையில் தொழிலதிபராக வரக்கூடிய வாய்புகளும் உண்டு. சில இல்லத்தரசிகள் அதிகம் படித்தவர்களாக இருப்பார்கள்.
வேலைக்கு செல்லாத காரணத்தால் அவர்களது திறமைகள் அவர்களுக்குள்ளாகவே முடங்கிபோய் கிடக்கும். இவர்களிடம் ஆங்கில பேச்சாற்றல் திறன் இருந்தால், `ஸ்போக்கன் இங்கிலீஷ்’ வகுப்பு நடத்தவோ, அல்லது பிற பாடங்களுக்கு `டியுஷன்’ எடுக்கவோ ஊக்குவிக்கலாம்.
இன்றைய பெரும்பாலான இல்லத்தரசிகள் எம்ராய்டரிங், டெய்லரிங் ஆகியவற்றில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். எம்ராய்டரியில் எவ்வளவோ லேட்டஸ்ட் டிசைன்கள் வந்துவிட்டன. அந்த டிசைன் ஆடைகள், படங்கள் போன்றவற்றை இவர்களுக்கு வாங்கிக்கொடுத்து ஊக்குவிக்கலாம்.
டெய்லரிங்கிலும் அப்படித்தான். எந்தவொரு வித்தியாசமான ஆடைக்கும் மார்க்கெட்டில் நல்ல வரவேற்பு உண்டு. அதனால், அவர்களது கற்பனையை மெருகூட்டும் வகையில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கலாம்.
அவ்வப்போது மனைவியை சுற்றுலாத்தலங்களுக்கு அழைத்துச் சென்று மகிழ்விப்பது, அவரது மனதில் புதிய ஆரோக்கியமான எண்ணங்கள் தோன்ற வழிவகுக்கும். எதற்கும் ஒரு அங்கீகாரம் கொடுத்தால், உடனே உற்சாகம் பிறந்துவிடும். உங்கள் மனைவி செய்யும் சின்னச்சின்ன சாதனைகளைக் கூட பிரமாதமாய் வரவேற்றிடுங்கள். உங்களது இந்த வரவேற்பு, அவரை பல சாதனைகளைச் செய்யத் தூண்டும்.