இரண்டாம் திருமணமும் இல்லாத கட்டுப்பாடுகளும்!
முகவை அப்பாஸ்
[ பெண்கள் விஷயத்தில் பலவீணமுள்ளவர்கள் – ஒரு மனைவியுடன் திருப்தியடையாதவர்கள் – உண்மையிலேயே இன்னொரு மனைவி தேவையுள்ளவர்கள் – இதுபோன்ற பலதாரமனம் செய்வதற்கான அவசியம் உள்ளவர்கள் வழிகெட்டு வாழ்கையை சீரழித்துக் கொள்வதற்கு பதிலாக-தீர்வாக பலதார மணம் செய்வதில் செய்வதில் தவறில்லை.
ஆனால் இக்காலத்தில் பலதார மணத்தின் அவசியத்தை நிர்ணயிப்பது மதமட்டுமல்ல. அவற்றை நிர்ணயிப்பது தம்பதிகளுகிடையேயான பரஸ்பர புரிதல் – இன்ப துன்பங்களில் எடுத்துக்கொள்ளும் பங்கு – விட்டுக்கொடுத்தல் – பகிர்தல் – அன்பு – பாசம் – அவர்களின் குழந்தைகளின் எதிர்காலத்தின் மீது காட்டும் அக்கறை.. போன்றவைதான்.
அதனால்தானோ என்னவோ இஸ்லாம் விதிவிலக்கான இந்த அனுமதியை தந்தும் – இரண்டாம்-மூன்றாம் திருமணம் செய்துகொள்ளும் இந்திய – தமிழ் முஸ்லிம்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. – பிறைநதிபுரத்தான் ]
மனிதனை படைத்த அல்லாஹ், அந்த மனிதனின் பலம்- பலவீனம் அனைத்தையும் உணர்ந்து மனிதனின் ஆசைகளுக்கு அனுமதியளிக்கும் அதே நேரத்தில், ஆசை அளவுகடந்து சென்றுவிடாமல் இருப்பதற்கான கடிவாளத்தையும் போடுகிறான். அந்தவகையில் ஆண்களுக்கு நான்கு திருமணம் வரை செய்வதற்கு அல்லாஹ் அனுமதியளிக்கிறான்.
பொதுவாக ஒருவனுக்கு ஒருத்தி என்று தத்துவம் கூறப்பட்டாலும், அது தத்துவத்திற்குத் தான் நன்றாக இருக்குமேயன்றி, நடைமுறை வாழ்க்கைக்கு பெரும்பாலும் ஒத்துவருவதில்லை. பெரும்பாலான ஆண்கள் ஒரு மனைவியோடு நிறுத்திக் கொள்வதாக வெளியில் காட்டிக்கொண்டாலும், ‘அன்அபிஷியல்’ ஆக பல பெண்களோடு தொடர்புடையவர்களாக இருப்பதைக் காணலாம். இதனால் பல்வேறு பிரச்சினைகளை சந்திப்பதை நாள்தோறும் பத்திரிக்கைகள் படம் பிடித்துக் காட்டுகின்றன.
மேலும், பிரபலமானவர்கள் கூட, ஒருவரை மனைவியார் என்றும் மற்றவரை துணைவியார் என்றும் சொல்லிக்கொண்டு வலம்வருவதைக் காண்கிறோம். இதெல்லாம் எதை உணர்த்துகிறது என்றால், பெரும்பாலான ஆண்களுக்கு ஒரு மனைவி என்பது போதுமானாதாக இல்லை என்பதைத்தான்.
எனவே இன்னொரு மனைவி தேவை என்று கருதுபவனுக்கு சட்டப்படி திருமணம் செய்ய சட்டம் குறுக்கே நின்றால், அவன் சட்டத்திற்கு புறம்பாக அந்த பெண்ணுடன் வாழ முற்படுகிறான். இப்படி இவன் சேர்த்து வைத்திருக்கும் பெண்ணை இவன் புறக்கணித்தால் அப்பெண்ணிற்கு ஜீவனாம்சம் சட்டப்படி கிடைக்காது என்பதுதான் இப்போதுள்ள நிலை. எனவே இஸ்லாம் இதற்கு அழகான தீர்வை சொல்கிறது. அதுதான் பலதார மணம்.
وَإِنْ خِفْتُمْ أَلاَّ تُقْسِطُواْ فِي الْيَتَامَى فَانكِحُواْ مَا طَابَ لَكُم مِّنَ النِّسَاء مَثْنَى وَثُلاَثَ وَرُبَاعَ فَإِنْ خِفْتُمْ أَلاَّ تَعْدِلُواْ فَوَاحِدَةً أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُكُمْ ذَلِكَ أَدْنَى أَلاَّ تَعُولُواْ
அநாதை(ப் பெண்களைத் திருமணம் செய்து அவர்)களிடம் நீங்கள் நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தீர்களானால், உங்களுக்குப் பிடித்தமான பெண்களை மணந்து கொள்ளுங்கள் – இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நன்னான்காவோ. ஆனால், நீங்கள் (இவர்களிடையே) நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தால், ஒரு பெண்ணையே (மணந்து கொள்ளுங்கள்), அல்லது உங்கள் வலக்கரங்களுக்குச் சொந்தமான (ஓர் அடிமைப் பெண்ணைக் கொண்டு) போதுமாக்கிக் கொள்ளுங்கள் – இதுவே நீங்கள் அநியாயம் செய்யாமலிருப்பதற்குச் சுலபமான முறையாகும். (அல்குர்ஆன்4:3)
இறைவனின் மேற்கண்ட அனுமதியை கொண்டு ஒரு முஸ்லிம் இரண்டாம் திருமணம் செய்ய முற்படுகையில், இன்றைய நவீன அறிஞர்கள் சிலர் அதற்கு பொருந்தாத சில கட்டுப்பாடுகளை விதிக்கிறார்கள். அதில் பிரதான கட்டுப்பாடு என்னவெனில், இரண்டாம் திருமணம் செய்யும் ஒருவன் முதல்மனைவியிடம் சொல்லிவிட்டுத்தான் செய்யவேண்டும் என்பது. அதற்கு அவர்கள் வைக்கும் ஆதாரம்;
وَكَيْفَ تَأْخُذُونَهُ وَقَدْ أَفْضَى بَعْضُكُمْ إِلَى بَعْضٍ وَأَخَذْنَ مِنكُم مِّيثَاقًا غَلِيظًا
அதனை நீங்கள் எப்படி எடுத்துக் கொள்வீர்கள்? உங்களிடமிருந்து அவள் உறுதியான வாக்குறுதி பெற்று ஒருவர் மற்றவருடன் கலந்து விட்டீர்களே! (அல்குர்ஆன்4:21)
இந்த வசனத்தை வைத்து, மனைவி கடுமையான உடன்படிக்கையை எடுத்துள்ளார். இந்த உடன்படிக்கையில், மனைவி கணவனைத் தவிர வேறு ஆனை நாடக்கூடாது என்பதும் , கட்டிய மனைவியைத் தவிர வேறு பெண்ணை நாடக்கூடாது என்பதும் இந்த ஒப்பந்தத்தில் அடங்கும். எனவே இரண்டாம் திருமணம் செய்யும் கணவன் முதல்மனைவியிடம் முன்கூட்டியே அதுபற்றி தெரிவிக்கவேண்டும் என்று கூறுகிறார்கள்.
உண்மையில் இந்த வசனம் திருமணத்தை ‘வாக்குறுதி’ என்று கூறினாலும், இந்த வசனம் சொல்லும் முழுக்கருத்து என்ன என்பதை பார்க்கவேண்டும். இதற்கு முந்தைய வசனம் இதுதான்;
وَإِنْ أَرَدتُّمُ اسْتِبْدَالَ زَوْجٍ مَّكَانَ زَوْجٍ وَآتَيْتُمْ إِحْدَاهُنَّ قِنطَارًا فَلاَ تَأْخُذُواْ مِنْهُ شَيْئًا أَتَأْخُذُونَهُ بُهْتَاناً وَإِثْماً مُّبِيناً
நீங்கள் ஒரு மனைவி(யை விலக்கி விட்டு அவளு)க்கு பதிலாக மற்றொரு மனைவியை (மணந்து கொள்ள) நாடினால், முந்தைய மனைவிக்கு ஒரு பொருட்குவியலையே கொடுத்திருந்த போதிலும், அதிலிருந்து எதையும் (திரும்ப) எடுத்துக் கொள்ளாதீர்கள் – அபாண்டமாகவும், பகிரங்கமாகப் பாவகரமாகவும், அதனை நீங்கள் (திரும்பி) எடுக்கிறீர்களா? (அல்குர்ஆன்4:20)
மேற்கண்ட இரு வசனங்களையும் பார்க்கும்போது இதன்மூலம் இறைவன் இடும் கட்டளை தெளிவானது. அதாவது, முதல்மனைவியை விவாகரத்து செய்து விட்டு, இரண்டாம் திருமணம் செய்யும் ஒருவன் முதல்மனைவிக்கு தந்த மஹரை ஒருபோதும் திரும்ப வாங்கக்கூடாது என்பதுதான்.
எனவே இதில் வரும் ‘வாக்குறுதி’ என்ற வார்த்தையை வைத்து தங்களின் வார்த்தைஜாலத்தை பயன்படுத்தி, ஒப்பந்தம் என்றும் அந்த ஒப்பந்தத்தில், மனைவி கணவனைத் தவிர வேறு ஆனை நாடக்கூடாது என்பதும் , கட்டிய மனைவியைத் தவிர வேறு பெண்ணை நாடக்கூடாது என்பதும் இந்த ஒப்பந்தத்தில் அடங்கும். எனவே இரண்டாம் திருமணம் செய்யும் கணவன் முதல்மனைவியிடம் முன்கூட்டியே அதுபற்றி தெரிவிக்கவேண்டும் என்று கூற வருவார்களானால், திருமண ஒப்பந்தப்படி அந்நியப் பெண்ணை நாடுவதற்குத்தான் தடையே தவிர; இன்னொரு பெண்ணை மணப்பதற்கு அல்ல எனபதையும் இவர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
மேலும், இரண்டாம் திருமணம் செய்யும் கணவன் முதல் மனைவியிடம் சொல்லிவிட்டுத்தான் திருமணம் செய்யவேண்டுமென்றால், அதற்கு நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ஒவ்வொரு திருமணத்தின் போதும் தமது முந்தைய மனைவியரிடத்தில் இவ்வாறு சொல்லிவிட்டுத்தான் செய்தார்கள் என்று ஆதாரத்தை வைக்கவேண்டும். ஆனால் அவ்வாறு வைக்கமுடியாது ஏனெனில், நபியவர்கள் போர்களத்திலும், பயணத்திலும் கூட சில மனைவியரை திருமணம் செய்துள்ளார்கள். எனவே இரண்டாம் திருமணம் செய்யும் கணவன் திருமணத்திற்கு முன்பே மனைவியிடம் சொல்லிவிட்டுத்தான் செய்யவேண்டும் என்ற வாதத்திற்கு எந்த ஆதாரமுமில்லை.
அதே நேரத்தில் முதல் மனைவியிடம் சொல்லாமல் திருமணம் செய்யும் கணவன், தனது இரண்டாம் மனைவியை, முதல் மனைவிக்கு தெரியாமல் ரகசியமாக குடும்பம் நடத்த அனுமதியில்லை. ஏனெனில் நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது வாழ்வில், ஒரு மனைவிக்கு தெரியாமல் இன்னொரு மனைவியோடு குடும்பம் நடத்தவில்லை. மாறாக இன்று எந்த மனைவியிடம் தங்குவார்கள் என்று அனைத்து மனைவியரும் அறியும் வகையில் நாட்களை ஒதுக்குவார்கள். எனவே இரண்டாம் திருமணம் செய்யும் கணவன், தனது இரண்டாம் மனைவியை முதல் மனைவி அறியும் வகையிலும், மற்றவர்கள் அறியும் வகையிலும் பகிரங்கமாக குடும்பம் நடத்த வேண்டும்.
அடுத்து இரண்டாம் திருமண விஷயத்தில் இன்னொரு புதுமையான ஃபத்வா வழங்கப்படுகிறது.
அது என்னவெனில், புஹாரியில் இடம்பெறும் 3110 வது ஹதீஸை ஆதாரமாக காட்டி, நபியவர்கள் தமது மகள் ஜைனப்ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் மனைவியாக இருக்கும் நிலையில் வேறு பெண்ணை மணக்கக் கூடாது என அபுல் ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் ஒப்பந்தம் செய்தார்கள் எனக்கூறி, இந்த அடிப்படையில் ஒரு ஆனை திருமணம் முடிக்கும் பெண், நான் மனைவியாக இருக்கையில் என்னைத் தவிர எந்த பெண்ணையும் அடுத்து மணம் முடிக்கக் கூடாது என நிபந்தனை விதிக்க மார்க்கத்தில் அனுமதியிருக்கிறது என்று கூறுகிறார்கள்.
அவர்கள் வைக்கும் ஹதீஸ் இதுதான்;
அலீ இப்னு அபீ தாலிப்ரளியல்லாஹு அன்ஹுஃபாத்திமா ரளியல்லாஹு அன்ஹா (உயிரோடு தம் மணபந்தத்தில்) இருக்கும் போதே அபூ ஜஹ்லுடைய மகளை (மணந்து கொள்ளப்) பெண் பேசினார்கள். (அந்த நேரத்தில்) இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அது குறித்து மக்களிடம் தம் இந்த மிம்பரில் (நின்றபடி) உரையாற்றியதை செவியுற்றேன். – அப்போது நான் பருவ வயதை அடைந்து விட்டிருந்தேன்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘ஃபாத்திமா என்னில் ஒரு பகுதியாவார். அவர் தன்னுடைய மார்க்க விவகாரத்தில் சோதனைக்குள்ளாக்கப்படுவார் என்று நான் அஞ்சுகிறேன்” என்று கூறிவிட்டு, பனூ அப்தி ஷம்ஸ் குலத்தைச் சேர்ந்த தம் மருமகனை – (அபுல் ஆஸ் இப்னு ரபீஉவை) – அவர் தம்மிடம் நல்ல மருமகனாக நடந்து கொண்டதைக் குறித்து (நினைவு கூர்ந்து) புகழ்ந்தார்கள். ‘அவர் என்னிடம் பேசியபோது உண்மையே சொன்னார். எனக்கு வாக்குறுதியளித்து அiதை எனக்கு நிறைவேற்றித் தந்தார். மேலும், நான் அனுமதிக்கப்பட்ட ஒன்றைத் தடை செய்யக் கூடியவன் அல்லன்; தடை செய்யப்பட்ட ஒன்றை அனுமதிக்கப்பட்டதென்று அறிவிக்கவும் மாட்டேன்;. ஆயினும், அல்லாஹ்வின் மீதாணையாக! இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மகளும் (அல்லாஹ்வின் பகைவனுடைய மகளும் (ஒரே நபருடைய மணபந்தத்தில்) ஒன்று சேர முடியாது” என்று கூறினார்கள்.
மேற்கண்ட ஹதீசை கவனமாக படியுங்கள். அதில் இவர்கள் கூறுவது போன்று,
அபுல் ஆஸ்ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் நபியவர்கள் அத்தகைய ஒப்பந்தம் எடுத்ததாக இவர்கள் மேற்கோள் காட்டும் ஹதீஸில் ஒரு வரி கூட இல்லை. எனவே திருமணத்திற்கு முன்பே கணவனிடம் ‘நான் மனைவியாக இருக்கையில் வேறு பெண்ணை மணக்கக் கூடாது என கணவனிடம் ஒப்பந்தம் செய்ய மார்க்கத்தில் எந்த அனுமதியும் இல்லை.
மேலும் பெரும்பாலான பெண்கள் (குறிப்பாக தமிழக முஸ்லிம் பெண்கள்) தான் இருக்கும்போது இன்னொரு பெண்ணை தனது கணவன் மணப்பதை விரும்பமாட்டாள். இவர்களின் ஃபத்வா படி பெண்கள் திருமணத்திற்கு முன்பே இத்தகைய ஒப்பந்தத்தை செய்ய முற்பட்டால், எந்த ஆணும் இரண்டாம் திருமணம் செய்யமுடியாது. ஆக அல்லாஹ் கொடுத்த அனுமதியை பறிக்கும் வேலையை இந்த ஃபத்வா கொடுப்பவர்கள் செய்கிறார்கள் என்று விளங்கிக் கொளவேண்டும். இந்த இடத்தில் ஒரு சந்தேகம் வரலாம். அப்படியானால் அபுல் ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பாரட்டியது ஏன் என்று.
அபுல் ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை நபியவர்கள் பாரட்டியது ஏன் என்பதற்கு, ரஹீக் என்ற வரலாற்று நூலில் விளக்கம் கிடைக்கிறது; பத்ருப் போரில் மக்கத்து நிராகரிப்பாளர்கள் தோல்வியைத் தழுவிக் கொண்டதனால், பலர் கொல்லப்பட்டனர், பலர் சிறை பிடிக்கப்பட்டனர். அவ்வாறு சிறை பிடிக்கப்பட்டவர்களில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மருமகனார் மற்றும் ஜைனப் ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் கணவனரான அபுல் ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களும் ஒருவராக இருந்தார்.
ஜைனப் அவர்களும் தமது கணவனாரை மீட்க தம் சார்பாக ஒருவரை பணயத் தொகையுடன் அனுப்பி வைத்திருந்தார்கள். அந்தப் பிரதிநிதி நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து, அபுல் ஆஸ் அவர்களை மீட்டுச் செல்வதற்கான பணயப் பொருளுடன் வந்தார். அந்தப் பணயப் பொருளைப் பார்த்தவுடன், நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உணர்ச்சி வசப்பட்டவராக அவரது முகம் கவலையால் வாடி சோகம் ததும்பி நின்றது.
ஆம், ஜைனப் ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் தம் கணவரை மீட்க, தமது தாயார் கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் இறப்பதற்கு முன் தனக்கு அளித்திருந்த நெக்லஸை பணயத் தொகையாக அனுப்பி இருந்ததே, நபிகளாரின் கவலைக்குக் காரணமாகும். முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம் தோழர்களை நோக்கிக் கூறினார்கள்:எனதருமைத் தோழர்களே, அபுல் ஆஸை மீட்பதற்காக ஜைனப் ரளியல்லாஹு அன்ஹா இந்தப் பொருளைப் பணயப் பணமாக அனுப்பி உள்ளார். நீங்கள் விரும்பினால், இவரை விடுதலை செய்து, இந்தப் பொருளையும் அவரிடம் திருப்பிக் கொடுத்து விடுங்கள். இல்லை எனில் நீஙகள் விரும்பியவாறு நடந்து கொள்ளலாம் என்றார்கள்.
நபிகளாரின் மனச்சுமையை கண்ட அண்ணலாரின் தோழர்கள், உங்கள் விருப்பப்படியே நாங்கள் செய்கின்றோம் என்று கூறி, அபுல் ஆஸ் அவர்களின் பணயத் தொகையைத் திருப்பிக் கொடுத்து விட்டனர். அபுல் ஆஸ் அவர்களை விடுதலை செய்வதற்கு முன், தன் மகள் ஜைனப் ரளியல்லாஹு அன்ஹா அவர்களை தன்னிடம் திருப்பி அனுப்பி விட வேண்டும் என்ற நிபந்தனையை, அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவருக்கு விதித்தார்கள்.
அவ்வாறே அபுல் ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களும் தனது மனைவி ஜைனப் ரளியல்லாஹு அன்ஹா அவர்களை நபியவர்களிடத்தில் திருப்பி அனுப்புகிறார்கள். அப்போது இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள், அவர் என்னிடம் கூறியதில், உண்மையுடனும், அவர் என்னிடம் சத்தியம் செய்ததில் வாய்மையுடனும் நடந்து கொண்டார் என்று கூறினார்கள்.
அபுல் ஆஸ்ரளியல்லாஹு அன்ஹு அவர்களை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பாராட்டியதற்கு காரணம் இதுதானேயன்றி, இவர்கள் கூறியது போன்று எந்த ஒப்பந்தமும் காரணமில்லை. அப்படியிருந்தால் நேரடியான ஹதீஸை முன்வைக்கட்டும்.
அதோடு, ஒரு வாதத்திற்கு இந்த நவீனவாதிகள் கூறுவது போன்று வைத்துக் கொண்டாலும், ஜைனப்ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் திருமணம் நபித்துவத்திற்கு முன்னால் நடந்ததாகும். இவர்கள் கூறியது போன்ற ஒப்பந்தத்தை நபியவர்கள் செய்திருந்தாலும், நபித்துவத்திற்கு முன்னால் நபியவர்கள் செய்ததை பின்பற்றலாம் என கூறுவார்களா..? இது கீழ்கண்ட வசனத்திற்கு முரணில்லையா..?
وَإِنْ خِفْتُمْ أَلاَّ تُقْسِطُواْ فِي الْيَتَامَى فَانكِحُواْ مَا طَابَ لَكُم مِّنَ النِّسَاء مَثْنَى وَثُلاَثَ وَرُبَاعَ فَإِنْ خِفْتُمْ أَلاَّ تَعْدِلُواْ فَوَاحِدَةً أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُكُمْ ذَلِكَ أَدْنَى أَلاَّ تَعُولُواْ
அநாதை(ப் பெண்களைத் திருமணம் செய்து அவர்)களிடம் நீங்கள் நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தீர்களானால், உங்களுக்குப் பிடித்தமான பெண்களை மணந்து கொள்ளுங்கள் – இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நன்னான்காவோ. ஆனால், நீங்கள் (இவர்களிடையே) நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தால், ஒரு பெண்ணையே (மணந்து கொள்ளுங்கள்), அல்லது உங்கள் வலக்கரங்களுக்குச் சொந்தமான (ஓர் அடிமைப் பெண்ணைக் கொண்டு) போதுமாக்கிக் கொள்ளுங்கள் – இதுவே நீங்கள் அநியாயம் செய்யாமலிருப்பதற்குச் சுலபமான முறையாகும். (அல்குர்ஆன்4:3)
அடுத்து, அபூஜஹ்லின் மகளை மணப்பதாக இருந்தால், எனது மகளை விவாகரத்து செய்துவிடு என்று அலீரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் கூறியதை ஆதாரமாக காட்டி, இரண்டாம் திருமணம் செய்யும் கணவனை பிரியும் உரிமை பெண்ணிற்கு உண்டு என்பதால் அந்த உரிமையை நபியவர்கள் இங்கு பயன்படுத்துகிறார்கள் என்றும் கூறி, இரண்டாம் திருமணம் செய்யும் கணவன், தான் இரண்டாம் திருமணம் செய்யப்போவதை முன்கூட்டியே மனைவியிடம் சொன்னால்தான், அவனது முதல் மனைவி விரும்பினால் இவனோடு வாழவும்- விரும்பினால் இவனை விவாகரத்தும் செய்யமுடியும் என்று ஒரு வாதத்தை வைக்கிறார்கள். கணவனின் இரண்டாம் திருமணத்தை காரணம் காட்டி ஒரு பெண் தனது கணவனை பிரியலாம் என்பதற்கும் இவர்கள் ஆதாரத்தை முன் வைக்கவேண்டும்.
அப்படியானால், அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் இரண்டாம் திருமணம் செய்ய நாடுகையில், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது மகளை விவாகரத்து செய்யக் கூறியதற்கு காரணம், நபியவர்கள் அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் திருமணத்திற்கு தடையாக நின்றதற்கு காரணம் அதே புகாரி 3110 ஹதீஸில் உள்ளது. மேலும், நான் அனுமதிக்கப்பட்ட ஒன்றைத் தடை செய்யக் கூடியவன் அல்லன்; தடை செய்யப்பட்ட ஒன்றை அனுமதிக்கப்பட்டதென்று அறிவிக்கவும் மாட்டேன்;. ஆயினும், அல்லாஹ்வின் மீதாணையாக! இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மகளும் (அல்லாஹ்வின் பகைவனுடைய மகளும் (ஒரே நபருடைய மணபந்தத்தில்) ஒன்று சேர முடியாது” என்று கூறினார்கள்.
அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் இரண்டாம் திருமணம் செய்ய நாடுகையில், தனது மகளை விவாகரத்து செய்யக் கூறியதற்கு காரணம் ‘விவாகரத்து உரிமையை’ நிலைநாட்ட அல்ல. மாறாக அல்லாஹ்வின் எதிரியின் மகளோடு ஒன்று சேர்ந்து வாழமுடியாது என்பதற்காகவே.
எனவே, இரண்டாம் திருமணம் தொடர்பாக இந்த நவீனவாதிகள் வழங்கும் ஃபத்வாக்கள் அல்லாஹ் வழங்கிய பலதாரமண உரிமையை பறிப்பதாகவும், கணவனின் மறுமணத்தை காரணம் காட்டி பெண்களை விவகாரத்து செய்ய தூண்டுவதாகவும் அமைந்துள்ளதை நம்மால் உணரமுடிகிறது.
எல்லாம் வல்ல அல்லாஹ், ஃபத்வாக்களை பாக்கெட்டில் இருந்து அள்ளிவீசும் நவீன வாதிகளுக்கு நேர்வழி காட்டுவானாக!
source: http://mugavaiexpress.blogspot.com/2010/10/blog-post_29.html